மறையாதே என் கனவே-13,14,15,16,17

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-13

குரு கேட்ட கேள்வியில் கௌசியின் மனம் அதிர்ந்து, நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடி அறையில் இருந்த மெத்தையில் அப்படியே உட்கார்ந்தாள் கௌசிகா. அவன் கேட்ட கேள்வியில் உயிர் உறைந்து, உள்ளம் அதிர்ந்து நின்றாள்.

திருமணத்திற்கு முன்பு விக்னேஷுடன் பழகியது உண்டு. அவன், அவள் தோளில் கை போட்டதும் உண்டு. சிறுவயதில் இருந்து ஒன்றாக வளர்ந்ததால் அது இருவருக்குமே பெரிதாகத் தெரிந்ததில்லை. விக்னேஷும் தோளில் கை போடுவானேத் தவிர எல்லை மீறியது இல்லை.

அவனிடம் அப்படி எண்ணமும் கடுகு அளவிற்குக் கூட இருந்ததில்லை. அப்படி இருக்க குரு வக்கிரப் புத்தியுடன் கேட்டக் கேள்வி அவனின் மீதான வெறுப்பைக் காட்டியது. மனதில் தோன்றிய வெறுப்பை கண்களால் காட்டி அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ சளைக்காமல் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
"என்ன பாக்கற? அவன் உன் தோளில் கை போடறதும்... நீ அவனிடம் ஒட்டி உட்காறதும்... ஏன், அவனின் தட்டுல இருந்து எடுத்து நீ சாப்பிடறதுன்னு எல்லாத்தையும் பாத்திருக்கேன். அப்புறம், உன்னை ஒருத்தன் கையைப் புடிச்சதுக்கு ஹீரோவுக்கு கோபம் வந்துச்சு பார்...ப்பா..." என்று சொல்லக் கௌசி அவனையே பார்த்திருந்தாள் அகல விரிந்த பார்வையுடன்.

மின்னல் வேகத்தில் எழுந்தவள், "உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்" என்று ஆட்காட்டி விரலை நீட்டிக் கேட்டாள். அவளிடம் அவன் நடந்த விதமே அவளை மரியாதை இல்லாமல் ஒருமையில் அழைக்க வைத்தது.

"ஏய்ய்ய்... என்ன இதெல்லாம், கை நீட்டிட்டு... உன் வீட்டுல இப்படி எல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லித் தரலையா?" என்று கேட்டபடியே அவளின் ஆட்காட்டி விரலைப் பிடித்தவன், விரலை அப்படியேத் திருகி அவளின் கையை கீழே இறக்கக், கௌசி வலி தாங்க முடியாமல் துடித்தாள். ஆனால், அவனிடம் பலவீனத்தைக் காட்டக்கூடாது என்று எண்ணி கண்ணை வலியால் இறுக மூடினாளே தவிர கண்ணீரை வெளியே விடவில்லை.

அவளின் கையை விட்டான், "நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலைனாலும் நீ கேட்டதுக்கு நான் சொல்லியே ஆகணுமே?" என்றவன், "ம்ம்... என்ன கேட்ட, எனக்கு எப்படி எல்லாம் தெரியும்ன்னுதானே?" என்று கேட்டு குரோதமாக வாய்விட்டுச் சிரித்தான்.

அவன் சிரிப்பதைப் பார்த்தே கௌசிக்கு வயிறு பிசைந்தது. "எங்க இருந்து சொல்லலாம்..." என்றவன், "ஸ்கூல் படிக்கும்போதே நான் உன்னை பார்த்திருக்கேன். உன் பேச்சும் திமிரும்..." என்று கண்கள் இடுங்க அவளைப் பார்த்தவன்,

"என்னைத் திரும்பிப் பாக்காத பொண்ணுகளே இல்லடி.. ஆனால், உன் முன்னாடி நான் பலமுறை வந்தும் நீ என்னைப் பாத்ததே இல்ல... நல்ல திமிர்தான்" என்றான்.

அவள் தன்னை கண்டுகொள்ளாமல் இருந்ததில் அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு திமிராகத் தெரிந்தது. அவள் அடிக்கடி ஒரு புருவத்தைத் தூக்கிப் பேசுவது, கண்களைச் சுருக்கி யாரையாவது பார்ப்பது என்பதை திமிர் என்று எண்ணிக்கொண்டு இருந்தான் அந்த அடிமுட்டாள். அதுவும் இல்லாமல் சிறுவயதில் இருந்து தனது தோற்றத்திற்காகவும் பணத்திற்காகவும் பழகிய பலரைக் கண்டவனுக்கு இவளது சுபாவம் எரிச்சலை உண்டு பண்ணியது.

"அப்புறம் நீ பேசினாயே நான்சியிடம்... பேசினாயா, இல்ல இல்ல மிரட்டுனே... அந்த வயசிலேயே சீனியரை மிரட்டும் அளவுக்குத் திமிர்... அப்போதே எனக்கு தெரிஞ்சிருச்சு உனக்கு விக்னேஷ் மேல க்ரஷ்ன்னு..."

"அதுக்கு அப்புறம் நான் ஸ்கூல் முடிச்சு காலேஜ் படிக்க யூ.எஸ் போயிட்டேன். உன்னப் பத்தியும் உன் மூஞ்சியைப் பத்தியும் நான் மறக்கும் அளவிற்கு என் அழகில் மயங்கிக் கிடந்த கேர்ள்ஸ் அதிகம்" என்று அவன் அழகைப் பற்றி அவன் புராணம் அடித்துப் பேச, கௌசிக்கு அவனை முறைத்தபடியே உட்கார்ந்திருக்க, அவன் அவளைக் கண்டுகொள்ளவில்லை.

அவன் என்ன அழகு... வெறும் வெள்ளைநிறம் மற்றும் பணக்காரத் தோற்றம் அவ்வளவே. மற்றபடி விக்னேஷின் கம்பீரத்தின் கால்தூசிற்கு வரமாட்டான்.
"அப்புறம் உன்னை அடையார் தக்சினில்தான் மறுபடியும் பார்த்தேன். ஸ்கூல்ல இருந்ததுக்கு ஆளையே அசரடிக்கும் அழகுதான். உன்னைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். நீ, உன் அத்தை மகனோடு உட்கார்ந்து அடித்த கூத்தை"

"அப்போ கை கழுவ எந்திரிச்சு வந்தபோதுதான், நீயும் அங்க வந்த... நான் லெஃப்ட் கார்னர்ல நின்னதால நீ என்னை கவனிக்கல... ஆனா, நீ அந்தப் பொண்ணுங்ககிட்ட பேசுனது அவங்களை பதற அடிச்சு ஓட வச்சதுன்னு எல்லாத்தையும் கவனிச்சேன். அப்பவும் உன் திமிர் அடங்கலை, ஏனோ உன் அழகையும் திமிரையும் அடக்கி ஆள அன்னிக்குதான் தோனுச்சு... அதுக்கு அப்புறம்தான் உன்னை முழுசா ஃபாலோ பண்ணேன்.

அப்பப்பா உன் அத்தை மகனுடன் ரொம்ப நெருக்கம்தான். அப்போதான் அவன் நான்சியை காதலிச்சது தெரிஞ்சது. உனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்திருக்குமேடி... ச்சு, ச்சு... பாவம்தான்ல நீ... அதான் உனக்கு வாழ்க்கைத் தந்து அப்படியே என் எண்ணத்தை நிறைவேத்திக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் உனக்கு ஃபோன் பண்ணி ஐ லவ் யூ சொன்னதும் நான்தான். என்ன சொன்ன செருப்பால அடிப்பியா? ஆனால், இப்போ என் ப்ளான்தான் எல்லாமே சக்ஸஸ்" என்றபடி அவளின் தோளைத் தொட வந்தவனை விட்டு விலகி நகர்ந்தாள்.

"என் திமிரை அடக்க நீ யார்டா?" என்று தாங்கமுடியாத ஆத்திரத்தில் கத்தினாள் கௌசி. மற்றநேரமாக இருந்திருந்தால் அவளின் சத்தத்திற்கு அனைவரும் முழித்திருப்பார்கள். கல்யாண அசதியில் தூங்கிக்கொண்டு இருந்ததால் எவரும் அவள் சத்தத்தை உணரவில்லை.

"நானா... உன் கழுத்தில் தொங்கறதே சொல்லும் நான் யார்ன்னு" என்று பதில் சொல்ல கௌசி, அருவருப்பாக அவனைப் பார்த்தாள்.

"அந்தத் தகுதியும் உரிமையும் உனக்கு இதைக் கட்டி விட்டால் வந்துவிடுமா? ச்சி... நீ பேசிய பேச்சிற்கு எப்போதோ அதை இழந்துட்ட" என்று கோபமாகப் பேசியவளின் கண்கள் தீப்பிழம்பாய் ஜொலித்தது.

"நான் இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்கப் போறதில்லை..." என்று விறுவிறுவென்று நடந்து கதவைத் திறக்கப் போனவளை அவனின் சிரிப்பு தடுத்து நிறுத்தியது.

திரும்பி அவனை முறைக்க, "இப்போ போய் என்னன்னு சொல்லப் போற... சரி, இப்போ நீ போனவுடனே என்னாகும்ன்னு சொல்லட்டா? நீ, மாலை வரும்போது எல்லார் கண்லையும் கண்ணீர் கட்டுச்சே... அது இப்போ டேம் கணக்குல வரும். அப்புறம் உன் அப்பன் சுகர் பேஷன்ட்ல... ச்சு ச்சு... முக்கியமா இந்த விஷயம் தெரிஞ்சவுடனே போன ப்ளைட்லயே வேலையைத் தூக்கி எறிந்துவிட்டுத் திரும்பி வந்திடுவான் உன் அருமை அத்தை மகன்" என்று சொல்லிச் சிரிக்க சற்று முன்பு தோன்றிய ஆத்திரம், தைரியம் எல்லாம் வடிந்து அப்பா, விக்னேஷிடம் சென்றது.

அவளின் பலவீனத்தை நன்கு அறிந்து வைத்திருந்தவன் மேலே பேசினான். "உன்னால போக முடியாதுடி. என்ன முறைக்கற... ம்ம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன சொன்னே... தகுதி இல்லை, உரிமை இல்லைன்னா... எல்லாத்தையும் இப்போ என்னன்னு தெரிஞ்சிக்கப் போற" என்று மதுவின் போதையோடு சேர்ந்து, மாதுவின் போதையும் அவனை ஆட்கொள்ள அவளை வெறி பிடித்தவன்போலப் பிடித்து அருகில் இழுத்தான்.

அவன் கைபட்டதில் துள்ளி விலகியவள், தீச்சுட்டார் போல விலகி அறைக்குள் ஓட, அந்த வெறிபிடித்த நாயோ அவளை பிடித்துவிட்டது. கத்தத் தொடங்கியவளின் வாயைப் பொத்தியவன் அவளை கட்டிலில் சாய்த்து தானும் கட்டிலில் ஏறினான்.

அதுவரை இருந்த சுயமரியாதையைக் கூட விட்டவள், "என்னை விட்டுவிடு ப்ளீஸ்..." என்று இருகைகளையும் கூப்பிக் கதறத் தொடங்க, அவனுக்கு அவளின் அழுகை பார்த்து மனம் இறங்கவில்லை. மாறாக அவளின் திமிர் அடங்கி தன்னிடம் கெஞ்சுகிறாள் என்று எண்ணியவன் மேலும் அவளைத் துன்புறுத்த எண்ணியவன் அவளின்மேல் படர அவளுக்கு உடல் எல்லாம் திகில் பரவியது.

அவனை எதிர்த்துத் திமிறிப் போராடியவளை, அவனின் செயல்கள் தோற்கடிக்க அவளது அச்சம், அழுகை, பயம், கதறல் என எல்லாம் அந்த அறையில் எதிரொலித்தது. ஆனால்,அவளின் உணர்ச்சிகள் எதற்கும் செவி சாய்க்காமல் அவனின் வெற்றியை நிலைநாட்டி, அவளை போதும் போதுமெனத் துன்புறுத்திவிட்டே அவளை விட்டான் அந்தக் காமூகன்.

அவனின் காரியத்தை முடித்துக்கொண்டு அவன் உறக்கத்திற்குச் செல்ல, கௌசிகா தான் உணர்விருந்தும் ஜடமாய்க் கிடந்தாள். கண்ணீர் மட்டும் கண்களில் இருந்து வழிந்து தலையணையை நனைத்தது. போர்வையை எடுத்துத் தன்மேல் சுற்றியவள் குளியலறைக்குள் புகுந்தாள். ஷவரைத் திறந்து நின்றவளின் கண்ணீர் ஷவரின் தண்ணீரை மீறியும் பெரிய மணிகளாய் கன்னங்களில் வழிந்தோடியது.

தன்னால் அவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையில் கையை சுவற்றில் நன்கு குத்திக் கோபத்தைக் காட்டினாள். உடல்வலி தாக்க அப்படியே குளியல் அறையில் இருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவள் அழத் தொடங்கினாள்.

'கடவுளே முதல்நாளே இப்படி என்றால்? வரப்போகிற நாட்கள் எப்படி இருக்கும்' என்று எண்ணியவளுக்கு அச்சம் வந்து உடலைத் தின்றது. 'மனிதத்தன்மையே இல்லாமல் இருப்பவனிடம் என்ன சொல்லிப் புரியவைக்க முடியும். இன்று நடந்த பேச்சுவார்த்தைகளும் செயலுமே போதும் அவனின் குணத்தைச் சொல்ல...
இனிக்க இனிக்கப் பேசி எல்லோரையும் எப்படி நம்ப வைத்துவிட்டான் பாவி' என்று மனதிற்குள் அவனை சாபமிடாமல் இருக்க முடியவில்லை அவளால்.

அழுதழுது இருந்தவளுக்கு உடல் தண்ணீரில் நனைந்து இருந்ததால் நடுக்கம் எடுக்க, ட்ரெஸிங் ரூமிற்கு வந்தவள் ட்ரெஸிங், ரூமிற்கும் பெட்ரூமிற்கும் இடையில் இருந்த கதவைத் தாழிட்டாள். அப்போது தான் கண்ணாடியைப் ஏதேச்சையாகப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

கன்றியிருந்த கன்னமும், சுற்றியிருந்த போர்வைக்கு மேல் தெரிந்த வெற்றுத் தோளிலும் கழுத்திலும் இருந்த ரத்தக் காயங்களும் அவளை அதிர வைத்தது. கூடவே தன்னிரக்கத்தில் கண்ணீரும் வழிய தன் பெண்மை இப்படி ஒரு நாயிடம் பறிபோனதை நினைத்து உதட்டைக் கடித்து அழுதாள்.

சிறிதுநேரம் அழுதபடி நின்றவள் கண்களைத் துடைத்துகொண்டு தன் தலைவிதியை நொந்தபடியே அங்கிருந்த ட்ராலியில் இருந்த தன் துணி ஒன்றை எடுத்து உடுத்தினாள். ட்ராலியை மூடும்போது தான் தன் டைரியைப் பார்த்தாள் கௌசிகா. கண்ணீருடன் அதை எடுத்தவள் ட்ராலியின் அருகிலேயே சம்மனமிட்டு அமர்ந்து டைரியை எடுத்து மடியில் வைத்து, அதைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள். திறந்து பார்க்க அதில் ஒருபேனா இருப்பதை கண்டவள், தன்மனதில் தோன்றியதை எழுதினாள்.

'மிருகமாய்ப் பிறந்திருந்தால்
காட்டில் என் இஷ்டத்திற்கு
வாழ்ந்திருப்பேன்...
ஆமையாய்ப் பிறந்திருந்தால்
என்னைக் காத்துக் கொண்டாவது
வாழ்ந்திருப்பேன்...
ஆணாகப் பிறந்திருந்தால்
வீட்டினரை அடக்கியாவது
வாழ்ந்திருப்பேன்...
பிறக்காமலே இருந்திருந்தால்
நிம்மதியான ஆன்மாவாகத்
திரிந்திருப்பேன்...
பெண்ணாய்ப் பிறந்ததால்தான்
என்னவோ
உரிமம் என்ற பெயரில்
பெரியவர்களின் ஆசியோடு
ஒருவனின் காமத்திற்கு கல்யாணம்
என்ற பெயரில்
இறையாகிக் கொண்டிருக்கிறேன்'

மனம் உடைந்து கண்ணீர்கள் சிதற எழுதியவள் முதலில் எழுதியக் கவிதையை திருப்பிப் பார்க்க எத்தனித்த மனதை அடக்கி டைரியை மூடி ட்ராலியில் வைத்தாள்.

பின் எழ நினைத்தவளுக்கு அப்போதுதான் உடம்பின் வலி அவளுக்கு மயக்கத்தைத் தருவது தெரிந்தது. செவி எல்லாம் அடைப்பது போல உணர்ந்தவள் மெல்ல தள்ளாடியபடியே வந்து படுக்கையின் ஓரத்தில் படுத்தாள். அடுத்து அவளைச் சிந்திக்கவிடாமல் ஆட்கொண்டது தூக்கமா மயக்கமா என்று அவளுக்கேத் தெரியவில்லை.

அடுத்தநாள் காலை எழும்போதும் கௌசிக்கு முடியவில்லை. பயத்திலும் உடல் வேதனையோடு சேர்ந்து மன வேதனையிலும் காய்ச்சல் வந்து அவளைப் பிடித்திருந்தது. எழுந்து உட்கார்ந்தவள் குளியல் அறைக்குள் புகுந்து முகத்தைக் கழுவி பல் துலக்கி விட்டு வெளியே வர அப்போதுதான் குரு உள்ளே நுழைந்தான். காலை எழுந்தவள் அவன் இருக்கிறானா இல்லையா என்று கூடப் பார்க்கவில்லை. பார்க்கவும் அவள் விரும்பவில்லை.

அவளைப் பார்த்தவன் ஒரு ஏளனப் பார்வையோடு அவளைப் பார்த்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து விட்டான். கௌசிக்குத் தான் காய்ச்சல் அதிகம்போல இருந்தது. உடலில் காய்ச்சலின் சூடு ஏறுவதை அவளால் உணர முடிந்தது.

ட்ரெஸிங் ரூமிலிருந்து வெளியே வந்தவனிடம் வாய் விட்டுக் கேட்டு விட்டாள். "எனக்கு காய்ச்சல் அடிக்குது... என..." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் ஆரம்பித்தான்.

"அதுக்கு நான் என்ன பண்ணனும்?" என்று இளக்காரமாகச் சிரித்தபடிக் கேட்டவனிடம் அவள் பதில் பேசவில்லை. மனதில் வந்த கெட்ட வார்த்தைகளால் அவனை உள்ளேயே திட்டித் தீர்த்தவள் குளியல் அறைக்குள் புகுந்து விட்டாள்.
குளித்து முடித்து அவள் ட்ரெஸிங் ரூமிலிருந்து வெளியே வந்தபோது அவள் செல்போன் அடிக்க, அதைச்சென்று அவள் எடுப்பதற்குள் குரு எடுத்துவிட்டான்.

எடுத்தவன் "ஆங்...சொல்லுங்க பெரியம்மா" குரு.

ஃபோனில் பேசிய ஜெயாவின் குரல் நன்கு கேட்டது கௌசிக்கு. அத்தையின் குரல் கண்ணீரை வரவழைக்க அதை அடக்கியபடி நின்றவள் அவனிடம் இருந்து ஃபோனைப் பறிக்க முயற்சி செய்தாள். ஆனால், அவளை ஒரேபிடியில் அடக்கியவன் அவளைப் பேசாமல் நிற்க வைத்தான். காய்ச்சல் உடலில் அவளாலும் எதுவும் போராட முடியவில்லை.

"கௌசி இருக்காளாபா" ஃபோனின் வழியாக ஜெயாவின் குரல்.

"அவள் குளிச்சிட்டு இருக்காளே பெரியம்மா" என்று தேன் ஒழுகப் பேசினான்.

"ஓ... இல்லை நாங்க அங்க வரோம், அதான்..." என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அவன் பேசினான்.

"பெரியம்மா, நாங்க வெளியில போறோம். அப்புறம் பிசினஸ் சைட்ல விருந்து அதுஇதுன்னு நிறைய இருக்கு" என்றவன்,
"நீங்கள் இப்போது வந்தாலும் சரியா பேச முடியாது. பேசாமல் ஒரு நான்குநாள் கழித்து வாங்க" என்று சொல்ல ஜெயாவின் குரலே கம்மி ஆகிவிட்டது.

பிறகு என்ன பேசினாரோ சிரித்தபடி ஃபோனை வைத்தவன், அதைத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். ஃபோனைக் கௌசி கேட்கவும் இல்லை. வீட்டினர் யாரிடமாவது பேசினால் அல்லது யாராவது இங்கு வந்தால், தன்நிலை அறிந்து கொள்வார்கள் என்று எண்ணியவள் எதுவும் பேசவில்லை.

"கீழே போலாம்" என்றவன் அவள் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துப் போகாத குறையாக இழுத்துக் கொண்டு போனான்.

கீழே வந்தவர்களிடம் நீலவேணி, "குரு வாப்பா சாப்பிடலாம்" என்று அழைக்க, கௌசியை அவர் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. குருவும் அவளின் கையை விட்டுவிட்டு போய் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

சாப்பாட்டை செய்துவிட்டு ஓயாமல் கூப்பிடும் அப்பா, அத்தைகளின் முகம் ஞாபகம் வர உதடு துடித்தது கௌசிக்கு. கௌசி பசி தாங்கமாட்டாள் என்று சொல்லும் மாமாக்களின் முகமும் ஞாபகம் வந்தது. தன் சுயமரியாதையை அந்த அம்மாளிடம் விடவும் அவளுக்கு மனம் இல்லை.

பேசாமல் சென்று சோபாவில் அமர்ந்து நியூஸ் பேப்பர் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டாள். ஆனால், ஒரு எழுத்தைக் கூடப் படிக்கவில்லை. கண்களில் நீர் திரையிட்டு பேப்பரில் இருந்த எழுத்துக்களை மறைத்தது.

"ஏம்மாமா... நீ சாப்பிடவில்லையா?" என்றபடி பூஜையறையில் இருந்து வந்த குருவின் அப்பா தேவராஜ் கேட்டார்.

ஏதோ தனித்து விடப்பட்டது போல இருந்தவளுக்கு அவரின் பரிவான குரல் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. "இல்லை அங்கிள்... நான்" என்று அவள் சமாளித்து முடிப்பதற்குள் அவர் முகத்தைக் கவனித்தவர் அவளிடம் கேள்வியை தொடுத்தார்.

"ஏன்மா முகமெலாம் சிவந்திருக்கு?" என்று வினவ, குருவும் அவன் அன்னையும் அப்போதுதான் டைனிங்ஹாலில் இருந்து அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

"அது... அது வந்து அங்கிள் ரொம்ப ஃபீவரிஸா இருக்கு" கௌசி.

"சரி... வாம்மா... வந்து சாப்பிடு, அப்புறம் நான் மாத்திரை தரேன்... சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ!" என்று கூறியவர் அவளையும் சாப்பிட அழைத்தார்.

"கௌசி இங்க உட்காரு" என்று உரிமை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் கையைப் பற்றி குரு, அவளை அவன் பக்கத்தில் உட்கார வைத்தான். பெரியவர்கள் முன்னிலையில் எதுவும் காட்ட மனமில்லாமல் உட்கார்ந்தாள். அவன் சாப்பிட்டு விட்டு எழுந்து கை கழுவச் செல்ல, அப்போது தான் ஒரு வாயை எடுத்து வாயில் வைத்தாள்.

திரும்பி வந்து அவள் பக்கத்திலேயே உட்கார்ந்தவன், "ஹே! இதையும் சாப்பிடு உடம்புக்கு நல்லது" என்று அவுலை எடுத்து அவள் தட்டில் வைத்தான்.
வந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியவள் எதுவும் பேசாமல் உண்ண, "இந்தா... பாயில்ட் எக்... இதையும் சாப்பிடு... உடம்புக்கு நல்லது" என்று அவள் உடம்பையே அவன் குத்திக்காட்டிச் சொல்ல கௌசிக்குப் புரிந்துவிட்டது.

அவனை ஏறிட்டுப் பார்க்க, "புரிந்ததா? நீ சாப்பிட்டு நல்லா உடம்ப வச்சு இருந்தா தானே எனக்கு நல்லது" என்று சொல்ல வாயில் போன அவன் வீட்டுச் சாப்பாடு உமட்டலைத் தர, எழப்போனவளை கையால் பற்றி பார்வையாலேயே மிரட்டி அமர வைத்துவிட்டான்.

ஒவ்வொரு வாயும் சாப்பிடும் போது விஷத்தைப் போல இருந்தது அவளுக்கு. அவள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்த பின்னரே அவளை விட்டான் அவன். அவன் சென்ற பின் அறைக்கு வந்தவள் ஓங்கரித்துக் கொண்டு பாத்ரூமை நோக்கி ஓடினாள். சாப்பிட்டது எல்லாம் வந்துவிட வலிமையில்லா உடலையும் மனதையும் வைத்திருந்தவளுக்கு கண்ணீர் வந்தது.

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்து கதவைத் திறந்தவள் பணிப்பெண் நிற்பதைப் பார்த்து, "என்ன?" என்று வினவினாள்.

"பெரியய்யா உங்ககிட்ட இந்த மாத்திரையைத் தர சொன்னாங்க" என்று காய்ச்சலுக்கு உண்டான மாத்திரையுடன் தண்ணீர் பாட்டிலையும் எடுத்து வந்தாள்.

"ம்ம்" என்ற தலை அசைப்போடு மட்டும் வாங்கிக் கொண்டவள், அந்தப் பெண்ணைத் திருப்பி அனுப்பிவிட்டு கதவைச் சாத்திட்டு மாத்திரையைப் போட்டு தண்ணீரை ஊற்றி விழுங்கினாள்.

மாத்திரையைப் போட்டுவிட்டுப் படுத்தவள் மதியம் மூன்று மணிக்கே எழுந்தாள். பசி வயிற்றைக் கிள்ள போய் சாப்பிடவும் அவளுக்குப் பிடிக்கவில்லை... இந்த வீடே மூச்சை முட்டுவது போல இருந்தது அவளுக்கு. தன்னுடைய லேப்டாப்பை எடுக்க நினைத்து ட்ரெஸிங் ரூமிற்குச் சென்றவள், ட்ராலியில் இருந்த தன் லேப்டாப்பை எடுத்தாள்.

எடுத்துவிட்டுத் திரும்ப எத்தனித்தவள் ஏதோ நெருட திரும்பி குருவின் துணிகள் இருந்த வார்ட்ரோபைப் பார்த்தாள். அது திறந்து கிடக்க அங்கு வைக்க சம்மந்தமில்லாத டப்பாக்கள் மற்றும் சில பேப்பர்ஸைப் பார்த்தவள் லேப்டாப்பை ட்ராலியின் மேல் வைத்துவிட்டு அந்த வார்ட்ரோபைச் சோதித்தாள்.

அதில் இருந்த மாத்திரைகளைப் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அங்கு இருந்த சில ரிப்போர்ட்ஸை எடுத்துப் பார்த்தவள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டாள். 'என் திமிர் செயலுக்கா இவன் இப்படி நடக்கிறான்?' என்று தெரிந்தவளுக்கு அவனின் உண்மைகள் அவனது இடத்தில் பல்லைக் காட்டிக் கிடந்தன. ஆம்... அது குருவின் ரிப்போர்ட் தான்.

அவன் சைக்காட்ரிக் டாக்டரிடம் ஒருவருடமாக எடுத்து வரும் சிகிச்சைக்கான ரிப்போர்ட். மாதாமாதம் போய் வந்த ஒவ்வொரு ரிப்போர்ட்ஸையும் பார்த்தவளுக்கு அவன் இன்னும் குணமாகவில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. தலையில் கை வைத்து நின்ற இடத்திலிருந்து அப்படியே மடங்கி உட்கார்ந்து விட்டாள்.

அவள் ஒன்றும் குருவைப் பற்றி யோசிக்கவில்லை. சினிமாக்களில் வருவது போல அவனைத் திருத்திவிடும் எண்ணமும் அவளுக்கு இல்லை. ஆசைப்பட்டு மணந்து வந்தவனாக இருந்தால் திருத்தலாம். அல்லது அவளின் உணர்வுகளின் எண்ணத்தைப் புரிந்து நடந்தவனாக இருந்திருந்தால் உறுதுணையாக நிற்கலாம். ஆனால் இவனோ?

அவளின் உணர்வுகளைச் சாகடித்து மிருகமாய் அல்லவா நேற்று நடந்து கொண்டான். அவனிடம் எப்படி அவளுக்குக் இரக்கம் தோன்றும். ஒரு வருடமாய் சிகிச்சை பெற்றும் இப்படி இருப்பவனை யார் திருத்த முடியும்? இப்போது கௌசி யோசித்துக்கொண்டு இருந்தது அவள் வாழ்க்கையைப் பற்றிதான். இனி என்ன செய்வது என்பதை விட, இனி என்ன செய்ய முடியும் என்று யோசித்தவளுக்கு தன் வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்றிருந்தது.
'சைக்கோ' என்று தெரிந்தும் அவனிற்கு திருமண ஏற்பாடு செய்த அவனின் பெற்றோரின் மீது அவள் கோபம் திரும்பியது. நேராக அதை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள். குருவின் அப்பா மட்டுமே அங்கு இருக்க, அவரின் முன்னால் வந்து நின்றவள் அந்தப் பேப்பர்ஸை அவரிடம் நீட்டி, "என்ன அங்கிள் இது?" என்று வினவினாள்.

அவளைப் பார்க்க முடியாமல் முகம் அவமானத்தில் கன்றி தலைக் குனிந்திருந்தவரிடம், "உங்க பெண்ணுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பாத்திருப்பீங்களா? இல்லை தெரிந்திருந்தால் கட்டித்தான் கொடுத்திருப்பீங்களா?" என்று அவரிடம் கோபமாகக் கேட்டாள்.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்மா... அந்த ஆபிஸ் அறைக்கு வா" என்றுவிட்டுப் போக கௌசி அவரின் பின் சென்றாள்.

உள்ளே சென்று அவருக்கு எதிராக உட்கார்ந்தவள், "சொல்லுங்க அங்கிள்... என்ன சொல்லி சமாளிக்கப் போறீங்க?" என்று விரக்தியுடன் வந்த நக்கலில் கேட்டாள்.

"அது பொய் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், இது எனக்கே கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்தான் தெரியும். நீ சந்தேகமாகப் பார்த்தாலும் அதுதான் உண்மை. என் மனைவி, மகள் யாருக்குமே தெரியாது. நான் சுயநலமாக நடந்து கொண்டேன்தான். ஆனால், நீ இதை திருத்திவிடுவாய் என நினைத்தேன்மா" என்றவரின் குரல் கரகரத்தது.

"உங்க மகன் குடிகாரனோ ஊதரியோ இல்லை திருத்த... ஹீ இஸ் எ பேஷண்ட்... அதுவும் இன்னும் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு குணமாகாத பேஷண்ட்... என் வாழ்க்கையையே நீங்க அழிச்சுட்டீங்க" என்று கோபமாகப் பேசியவளிடம் எழுந்து வந்தவர், அவள் எதிர்பாராத சமயம் காலில் விழுந்து விட்டார்.

இதை எதிர்ப்பார்க்காத கௌசியும் எழுந்து பின்னால் நகர்ந்து விட்டாள்.
"உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்மா. தயவுசெய்து வெளியில் சொல்லி விடாதே!" என்று கெஞ்ச, கௌசி அவருக்கே திருப்பி அடித்தாள்.

"அதை நான்தான் சொல்ல வேண்டும். தயவுசெய்து நீங்கள் இந்த உண்மை என் வீட்டில் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றவள், கண்ணீரை விட்டபடி அந்த அறையை விட்டு வெளியேறி மேலே குருவின் அறைக்குள் புகுந்துவிட்டாள்.

'எவ்வளவு அதிர்ச்சியையும் வலிகளையும் தான் ஒருத்தி தாங்குவாள்?'

அன்று வந்த இரவிலும் முந்தைய இரவைப் போலத் தொடர கௌசி கதிகலங்கிப் போனாள். ஒருபெண்ணை எப்படி எல்லாம் உடலாலும் மனதாலும் நோகடிக்க வேண்டுமோ அதைச் செய்தான் குரு. கிட்டத்தட்ட டார்ச்சர் செய்தான் அவளை. மேலும் தொடர்ந்த இரண்டு நாட்களில் உடலும் மனமும் ஓய்ந்து சோர்ந்தது.

ஒருநாள் மாலை வந்தவனைப் பார்க்க அஞ்சி அவள் முகத்தைத் திருப்ப, "நான் இரண்டுநாள் பிசினஸ் மீட்டா வெளில போறேன்" என்றவன்,

"பார்ராரா... ரொம்ப சந்தோஷமா...மூஞ்சியெல்லாம் ப்ரைட் ஆகிற மாதிரி இருக்கு..." என்றவன் ஒரு மர்மப் புன்னகையுடன் தொடர்ந்தான்.

"நான் இரண்டுநாள் அப்புறம் வந்திருவேன். நம்ம ஹனிமூன் போகப் போறோம். புதுசா கல்யாணம் ஆயிருக்குல" என்று சிரித்தவனைப் பார்க்கச் சகிக்கவில்லை கௌசிகாவிற்கு.

பிறகு கிளம்பிச் சென்று விட்டான். வீட்டினரின் ஞாபகம் வந்து அவளின் இதயத்தைத் துளைத்து எடுத்தது. அப்பாவிடமே சென்று வாழ்நாள் முழுதும் அவர் பாதுகாப்பிலேயே வாழ மனம் துடித்தது.

மேலும் இந்த மூன்று நாட்களில் குரு அவளின் உடம்பிற்கு அலைந்ததும், அவளின் அழகைப் பற்றி பேசி பேசி அவளை விக்னேஷுடன் சேர்த்தி வைத்து இழிவாகப் பேசியதும் காதைப் புளிக்க வைத்ததும், அவளால் வாழ்க்கையில் மறக்க முடியாத நரக வேதனை.

திருமண வாழ்க்கையில் எவ்வளவு கனவுகளைச் சுமந்து கோட்டை கட்டியவளுக்கு இப்போது அந்த வாழ்க்கையே கசந்தது. மேலும் அவன் ஹனிமூன் என்று சொல்லிவிட்டுப் போக, அவளுக்கு உயிரையே மாய்த்துக் கொள்ளலாம் என்று இருந்தது. போகிற இடத்தில் பேசாமல் செத்துவிடலாம் என்று எல்லாம் தோன்றியது.

யோசித்துக் கொண்டு இருந்தவள் அப்போது தான் மணியைப் பார்த்தாள். நைட் பதினொன்றரை ஆகி இருந்தது. படுத்தவளுக்கு வழக்கம் போலத் தூக்கம் வராமல் பல நினைவுகள் வந்து தொண்டையை அடைத்தது.

தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்வாழ்வில் சுதந்திரமாய்த் திரிந்ததை எண்ணியவளுக்கு கண்களில் இருந்துக் கண்ணீர் வழிந்தது.

யோசித்து யோசித்தே காலை ஏழு மணியாகிவிட்டது அவள் தூங்கவும் இல்லை.
தன் சிந்தனைகளில் இருந்தவளை, “ஓ…” வென்று நீலவேணி (குருவின்அம்மா) கத்திய கதறல் பதறியடித்து எழ வைத்தது. பயந்து எழுந்தவளை மேலும் அவர் கத்திய கத்தல்கள் காதில் விழ அவசரமாக எழுந்து கீழே சென்றாள். கீழே அவசரமாக வந்தவள் தன்னை நீலவேணி ஆத்திரமாக முறைப்பதைக் கண்டு அப்படியே நின்றாள்.

எதற்கு இந்த முறைப்பு? இப்படி ஒரு கோபம்?
 

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-14

நீலவேணியின் கோபம் சுத்தமாகப் புரியவில்லை கௌசிகாவிற்கு. அவர் தன்னை ஆத்திரமாக முறைப்பது அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பல அதிர்ச்சிகளைக் நான்கு நாட்களில் கண்டவளுக்கு இனி என்ன என்று நெஞ்சம் படபடத்தது.

ஆம்... அவளின் தலையில் மட்டும் இல்லை. எல்லோரின் தலையிலும் இடி தான் விழுந்தது.

"பாவி! நீ வந்த நேரம் எம் பையன் உயிரே போயிருச்சேடி" என்று கத்தி அழ, கௌசிகா அப்படியே இறங்கி வந்த படியிலேயே உறைந்து நின்றுவிட்டாள்.

"ராசி கெட்டவளே... உன் ஒன்னுமில்லாதக் குடும்பத்திலிருந்து பெண் வேண்டாம்னு சொன்னேன்... கேட்டானா என் மகன்" என்று கௌசியைத் திட்டியபடி அழ, தேவராஜ்தான் மனைவியை அதட்டினார்.

"பார் வேணி, குரு போய்ச் சேர்ந்ததுக்கு அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? நம் பையன் விதி அவ்வளவுதான்" என்று அவரும் அழ, குருவின் பெற்றோர் இருவரும் அழுதனர்.

அப்படியே படியில் உட்கார்ந்த கௌசிகா தலையில் ஒரு கையை தலையில் வைத்தபடி அமைதியாகக் கண்ணீரை உதிர்த்தாள். எதற்கு இந்த அழுகை என்று அவளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. ஆனால், குருவிற்காக மட்டும் அவள் கண்ணீர் இல்லை என்பது நிச்சயம். அதற்கென, 'அவன் சாவட்டும்' என்றும் அவள் நினைக்கவில்லை.

அவளின் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது எல்லாம் அவளின் குடும்பம். இதை எப்படித் தாங்குவார்கள். சீரும் சிறப்புமாக அனுப்பி வைத்தவர்களை நினைக்கையில் நெஞ்சை யாரோ அடிப்பது போல இருந்தது. இந்தம்மா சொன்ன மாதிரி அவள் ஒன்றும் ஒன்றுமில்லாதவள் இல்லை.
குரு குடும்பத்தின் கோடிக்கணக்கான சொத்திற்கு யாரைப் பார்த்தாலும் அவருக்கு அப்படித்தான் தோன்றும். கௌசியின் தந்தை நடுத்தர வர்க்கத்தினரின் செலவுகளை மீறி சிறப்பாகவே மகளுக்குச் செய்து அனுப்பினார். ஆனால், என்ன ப்ரயோஜனம்?

அவருக்காகத் தானே குருவைப் பற்றித் தெரிந்தும் எல்லாவற்றையும் மறைத்து அவள் இருந்தது. அவளுக்கேத் தெரியும் குருவின் டார்ச்சரில் தானாகவே சில நாட்களில் செத்துவிடுவோம் என்று. இல்லை என்றால் இன்னும் கொஞ்ச நாளில் இந்த பந்தத்தில் இருந்து வெளியே வந்துவிடுவோம் என்றும் எண்ணினாள்.
அதற்கும் தயாராகவே இருந்தாள் அவள். அவன் தொடுவது கம்பளிப்பூச்சி மேலே ஊருவதை விட அருவருப்பாக உணர்ந்திருந்தாள் அவள். தன் குடும்பம், அப்பா, விக்னேஷை நினைத்து விக்கியது அவள் மனம். தன் வாழ்க்கை கேள்விக்குறி ஆனதை மறந்து தன் குடும்பத்தாரைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தாள் சுயநலமற்ற அந்தப்பாவை.

விஷயமறிந்து வினித்ரா அவளது கணவன் குழந்தையோடு முதலில் வந்துசேர அவளும், அவள் அன்னையையும் தந்தையையும் கட்டிக்கொண்டு அழுதாள். கௌசி இருந்ததை அவளும் கவனிக்கவில்லை. அன்னையோடு சேர்ந்து அண்ணனின் பிரிவை எண்ணி அழுது கரையவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

உதய்குமார் (வினித்ராவின் கணவன்) தான், மேலே நடக்கவேண்டிய காரியங்களைப் பார்க்க ஜீஎச்சிற்கு கிளம்பினான். ஆக்ஸிடென்ட் கேஸ் என்பதால் அங்கு கொண்டு சென்றனர் முதலில். மேற்கொண்டு நடந்த வேலையை உதய்குமார் எடுத்து நடத்தினான்.

குருவின் மரணச் செய்தியை அறிந்த கௌசியின் குடும்பமே ஆடிவிட்டது. முதலில் செய்தியை அறிந்தது ஜீவாதான். பெரியவர்களுக்கு முதலில் சொல்லவேண்டாம் என்று நினைத்த உதய்குமார் முதலில் ஜீவாவிற்கு செய்தியைத் தெரிவிக்க, ஜீவா அப்படியே உறைந்து விட்டான். அவன் புதியாய் திறக்கப்போகும் கம்பெனிக்காக, கோயம்புத்தூர் கிளம்பிக் கொண்டிருந்தனர் ஜீவாவும் மதியும்.

அந்தச் சமயத்தில் உதய்குமார் ஃபோன் செய்து செய்தியைத் தெரிவிக்க, ஜீவா பாறை போல அப்படியே நின்றுவிட்டான். அவனைப் பார்த்த மதி, "ஏன் ஜீவா? என்ன ஆச்சு?" என்று சற்றுப் பதட்டத்தோடு வினவ,

"மதி, குரு ஆக்ஸிடெண்ட்டில்..." என்றவனுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க, அதற்குமேல் அவனால் எதுவும் பேசமுடியாமல் கண்களில் நீர் கோர்த்தது. சிறியவயதில் இருந்து கூடவே வளந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா என்று மருகினான் அவன்.

மதி என்ன என்று ஜீவாவிடம் விசாரிக்கும்போதே சமையலறை கதவிற்குப் பக்கத்தில் உள்ள ப்ரிட்ஜில் மாவை எடுக்க வந்த ஜெயா... மருமகளின் குரல் கேட்டு என்ன என்று கவனித்தபடி மாவை எடுத்தார்.

ஜீவா சொன்ன செய்தியைக் கேட்டு மதி உறைய, ஜெயா அப்படியே மாவு டப்பாவைத் தவறவிட்டார். டப்பா விழுந்த சத்தத்தில் ஜீவாவும் மதியும் சமையல் அறைக்கு விரைய தரையில் உட்கார்ந்தபடி அழ ஆரம்பித்து விட்டார் ஜெயா.

"அய்யோயோ... என் தங்கத்துக்கு இப்படி நடக்கவா கட்டிக் குடுத்தோம்?" என்று அடித்துக்கொண்டு அழ, மதிக்கும் அடக்கமாட்டாமல் கண்களில் கரை புரண்டு வந்தது.

பத்துநிமிடம் அப்படியே நின்ற ஜீவா, அடுத்து ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்தான். முதலில் தன்தந்தைக்கு சதாசிவத்திற்குப் போனைப் போட்டவன் அவருக்கு விஷயத்தைத் தெரிவித்தான். அடுத்து தன் சித்தப்பா செந்தில்நாதனுக்கு (விக்னேஷின் தந்தை) தெரிவித்தான்.

பதறிப் போனவரிடம், "சித்தப்பா, இப்போ எது பேசவும் டைம் இல்ல... அங்க அவள் என்ன நிலைமைல இருக்காளோ, நீங்க சித்தியைக் கூட்டிட்டு இங்க வாங்க சித்தப்பா. உங்க எல்லாருக்கும் கேப் புக் பண்ணித் தரேன் போயிருங்க. நான் மாமாகிட்ட எதாவது சொல்லிக் கூட்டிட்டு வரேன்... வரும்போதே சொன்னால் தாங்கமாட்டார்" என்ற ஜீவாவின் குரல் கரகரத்தது.

அவன் சொல்வதும் சரிதான் என்று ஒத்துக்கொண்ட செந்தில்நாதன் மனைவியிடம் அப்படி இப்படி என்று சொல்லி, அவரின் அக்கா வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்தவர் தன் அக்காவின் தோற்றத்தைக் கண்டு, அக்காவின் கணவருக்குத் தான் என்னவோ என்று நினைக்க சதாசிவம் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார். சுமதிக்கு என்ன என்றே புரியவில்லை.

"ஏன்?" என்று கேட்டவருக்கு வார்த்தையே அதற்குமேல் வரவில்லை. தன் மனைவி சுமதியின் தோளைப் பற்றிய செந்தில்நாதன் அனைத்தையும் கூற சுமதியும் அழுக ஆரம்பிக்க, ஜீவா கேப் வந்தவுடன் அவர்களை ஏற்றிவிட்டு தன் மாமா வரதராஜனைப் பார்க்கச் சென்றான்.

"வா ஜீவா... என்ன நீ மட்டும் வந்திருக்க மதி வரலையா?" என்று கேட்டவரின் குரலில் இருந்த சிறிய சோகத்தை அவன் அறிந்தான். ஆமாம் அவரும் அவரின் செல்லப் பெண்ணிடம் பேசி நான்கு நாட்கள் ஆன வருத்தத்தில் இருந்தார்.
ஆனால், மகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று குருவிடம் இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனுக்கு ஃபோன் செய்தபோது அவன் சொன்னது அவருக்கு நிம்மதியாகவே இருந்தது.

"மாமா..." என்று ஜீவா ஆரம்பிக்க, "இருப்பா... சுகர் டேப்ளட் மறந்திட்டேன். கௌசி பாப்பா இருந்திருந்தால் ஞாபகப்படுத்தியிருப்பா" என்று பெருமூச்சு விட்டபடி அவர் எழுந்து சென்று மாத்திரையைப் போட, ஜீவாவிற்கு மனதில் தோன்றிய வலியை பல்லைக் கடித்து கட்டுப்படுத்தினான்.

"ம்ம்... மதி வரலையா ஜீவா? இரண்டு பேரும்தானே வரதா சொன்னீங்க, கிளம்பியாச்சா?" என்றபடி வந்து ஜீவாவிற்கு எதிரில் உடகார்ந்தார்.

"இல்லை மாமா... அடுத்தவாரம் ஆயிருச்சு நாங்க கிளம்பற டேட்" என்றவன் கரகரத்தத் தொண்டையை சரி செய்துகொண்டு, "மாமா கௌசிக்கு காய்ச்சலாம்... உங்களைப் பார்க்கpdமாம். வாங்க, நம்ம இரண்டுபேரும் போயிட்டு வந்திடலாம்" என்று தன்னால் முடிந்த அளவு குரலை நிதானமாக வைத்துப் பேசினான்.

"என்ன ஆச்சு? யார் சொன்னா?" என்று கேட்க, ஜீவா தடுமாறிக் குரு சொன்னதாக சொல்லி அவரைக் கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

செல்லும் வழியில் கௌசியைப் பற்றியே பேசிக்கொண்டு வந்த வரதராஜனின் சொல் எதுவும் ஜீவாவின் செவியை எட்டவில்லை. மாறாக கௌசியின் சிரித்த கபடமற்ற முகமே ஞாபகம் வந்தது.

மதி, சுமதி, ஜெயா, சதாசிவம், செந்தில்நாதன் சென்று பார்க்கையிலும் கௌசி அதே படியில்தான் உட்கார்ந்திருந்தாள். உள்ளே சென்று அத்தைகள் கட்டிக்கொண்டு அழ, அவளின் கண்களில் கண்ணீரே இல்லை. முகம் இறுகி கண்ணில் கருவளையங்கள் வந்து இருந்தவளைப் பார்க்க ஜெயா தவறவில்லை.
தலையில் கை வைத்து இறுக அமர்ந்து இருந்தவளைப் பார்த்து அனைவருக்கும் பயமாகி விட்டது. மதி, அத்தை, மாமா என அனைவரும் அவளை உலுக்க அப்படியே அமர்ந்திருந்தாள். கடைசியில் குருவின் அப்பா தேவராஜ் வந்து அழைத்துப் பார்த்தும் வெறித்த பார்வையுடன் அப்படியே அமர்ந்திருந்தாள்.

"பாப்பா..." என்று கடைசியாக ஒலித்த தந்தையின் குரல் அவளை சுயநினைவிற்குத் திருப்பியது. வீட்டிற்குள் நுழையும்போதே ஜீவா விஷயத்தைச் சொல்ல தன்மகளை நோக்கி விரைந்தார்.

தன் தந்தையைக் கண்டவள் நான்கு நாட்களாக அடக்கி வைத்திருந்த மொத்தத்தையும் வெளிப்படுத்தினாள். "அப்பாபாபா..." என்று ஓவென
பெருங்குரல் எடுத்து கதறியவள், தன்தந்தையைக் கட்டிக்கொண்டு அவரின் மார்பில் மேல் சாய்ந்து கட்டிக்கொண்டு அழ, அங்கிருந்த அனைவருக்கும் கௌசியைப் பார்த்து நெஞ்சில் சொல்லமுடியாத துயரம் எழுந்தது.

அழுதாள்... அழுதாள்... மூச்சை இழுத்து இழுத்து தந்தையின் மார்பின் மீது சாய்ந்து ஆக்ரோசத்துடன் அழுதவளைப் பார்க்க அனைவரும் பயந்துவிட்டனர்.
அவளின் நிலையை உணர்ந்த வரதராஜனும், "பாப்பா... பாப்பா..." என்று அழைத்து விலக்கப் பார்க்க அவள் கையோ தந்தையின் சட்டையை இறுகப் பற்றி இருந்தது.

"இங்க பாரு... கௌசிமா" என்று அவளை, வலுக்கட்டாயமாகத் தன் மேல் இருந்து விலக்கினார்.

"என்னால முடியலப்பா" என்று மூச்சை இழுத்துக் தொய்ந்த குரலில் கூறியவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள். மயங்கிச் சரிந்து விழுகையில் அவளது மாங்கல்யமும் வரதராஜன் சட்டை பட்டனில் சிக்கித் தரையில் அறுந்து விழுந்தது.

"கௌசி..." என்று கூவி விட்டார் வரதராஜன். ஜெயா மதியைத் தவிர, "என்னால முடியலப்பா" என்று கௌசி சொன்ன வாக்கியத்தைக் குருவின் மறைவில் என்று நினைத்தனர் அனைவரும்.

அவள் மயங்கி விழுந்ததில் அனைவரும் திடுக்கிட, அதற்குள் குருவின் விஷயம் கேள்விப்பட்டு துக்கம் தெரிவிக்க வந்த அவனுடைய சைக்காட்ரி டாக்டர் அனைவரையும் விலக்கி அவளைச் சோதித்தார். நல்லவேளை ஹாஸ்பிடலில் இருந்து அவர் வந்திருந்ததால் அவரிடம் சில தேவையான மருந்துகள் இருந்தது. பிறகு அவர் சொல்ல அங்கு பக்கத்தில் இருந்த அறையில் அவளைக் கிடத்தினர்.

"அதிர்ச்சி தான்... இன்ஜக்ஷன் போட்டிருக்கேன். டோண்ட் டிஸ்டர்ப் ஹெர்... அவங்களே எந்திருப்பாங்க" என்று விட்டு, அவர் துக்கம் தெரிவித்து விட்டு சென்றுவிட்டார். சந்தியாவையும் அழைத்து வந்தான் ஜீவா கல்லூரிக்குச் சென்று.

கௌசி மறுபடியும் கண்களைத் திறக்கையில் குருவின் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டிருந்தது. கௌசிக்குச் செய்த பாவத்திற்கு ஒருபக்க உடல் நசுங்கி இருந்தான். முகத்தைக் கூட உடல்கூறு செய்து தரும்போது மூடிவிட்டனர். ஆனால், எதை உணரும் நிலையில் அவள் இல்லை. ஏதோ ஒரு வெற்றிடம் அவளின் மனதை ஆக்கிரமித்தது. எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் அவனின் உடல் எடுத்துச் செல்லப்பட, நாட்களும் இரண்டு நாட்கள் ஓடின.

கௌசி ஜெயாவின் மடியில் படுத்தபடி இருந்தாள். நீலவேணி வந்து அவளின் முன்னால் ஒருஜூஸ் டம்ளரை, 'நங்'கென வைத்தார். வைத்ததில் கண்ணாடி டம்ளராக இருந்திருந்தால் கண்டிப்பாக உடைந்திருக்கும். தன்கணவரின் வற்புறுத்தலில்தான் கொண்டு வந்தது நீலவேணி. இல்லையென்றால் கௌசியை திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டார்.

"ஒன்னுமில்லாம வந்தவளுக்கு இனி வாழ்வுதான்" என்று அனைவருக்கும் கேட்கும்படியே முணுமுணுக்க ஜெயாவிற்கு கோபம் வந்துவிட்டது.

"கொஞ்சம் நில்லுங்கமா... இந்த மாதிரி நீங்க, எங்க பெண்ணை பேசற வேலை எல்லாம் வச்சுக்காதீங்க" என்றார் முறைப்பாக.

"அப்புறம் இந்த வீட்டைக் கெடுத்த மூதேவியை ஆரத்தி எடுக்க முடியுமா?" என்று சொல்ல சுமதியும் வெகுண்டு எழுந்தார்.

"என்னமா பேசுற நீ? கொஞ்சம் வார்த்தையை அளந்துபேசு... இல்லைனா நடக்கறதே வேற" சுமதி எகிறினார். விட்டால் அடித்திருப்பார். ஆனால், அண்ணன் என்ன சொல்லுவாரோ என்று கோபத்தை அடக்கினார்.

"என்ன... என் வீட்டுல இருந்துட்டு என்னையே அதிகாரமா, நான் என்ன இல்லாததையா சொன்னேன்? இவள் ராசி கெட்டவதான்... இவ பொறந்தநேரம் இவ அம்மாகாரியும் செத்துட்டா... இவ வந்தநேரம் தான் எம்புள்ள போயி சேர்ந்துட்டான். இவள கூட்டிட்டுக் கிளம்புங்க... இங்கையே இருந்து சொத்த அமுக்கலாம்னு பாக்கறீக்களா?" என்று கத்த அதைவிட ஆங்காரமும் ஆத்திரமாய் ஒலித்தது வரதராஜனின் குரல்.

"யாரைப் பாத்து ராசி கெட்டவன்னு சொன்ன... அவ எங்க வீட்டு மகாலட்சுமி... அவ பொறந்த அன்றே என் மனைவி போயிட்டாதான். உண்மைதான், இல்லைனு சொல்லல... ஆனா, அவ கர்ப்பம் ஆன காலத்திலேயே மருத்துவர் ஒரு எலும்பு இடுப்பில் அதிகப்படி வளர்ந்ததாகவும், ஆபத்துதான் என்றும் சொன்னார். அது அவள் விதி... ஆனால், அவள் போன பிறகும் என் மகள் அனைவருக்கும் ராசி ஆகிப்போனாள். உம் புள்ள போனது அவன் விதி. இதே நான் சொல்லட்டா, உம் புள்ளைய கட்டுனதாலதான் எம் மகள் இப்போது தாலி இல்லாம நிக்கறானு" என்று நீளமாகப் பேசி நீலவேணியின் வாயை அடைத்தவர்,

"சொத்தா... அது யாருக்கு வேணும். தேவராஜ் அவர் கேட்டுக் கொண்டதுக்கு ஆகத்தான் என்பெண்ணை இங்கே இரண்டுநாள் விட்டுவிட்டு சென்றேன். நீங்கதான் வந்து என் பொண்ணக் கேட்டிங்களே தவிர நாங்களா உங்களிடம் வந்து நிற்கவில்லை... என்மகள் இப்போதும் என் மகள்தான்" என்றவர் தன் மகளிடம் திரும்பினார்.

"கௌசி, நீ போய் உன்னுடைய எல்லா உடமைகளை எடுத்துட்டு வாம்மா... நாம கிளம்பலாம்" என்று வரதராஜன் அழுத்தமாகச் சொல்ல தேவராஜ் அவரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அவரின் மனைவி பேசியது தன்மகளை அல்லவா. அதனால் அவர் எதையும் கேட்டவில்லை. அண்ணன் பேசிய பேச்சு சரியென்று படவே ஜெயாவும் சுமதியும் அமைதியாய் நின்றனர்.

கௌசியை வீட்டிற்கு கூட்டி வரும்போதே ஃபோனில் விஷயத்தைத் தெரிவிக்க, மதி, ஜீவா,செந்தில்நாதன், சதாசிவம் ஏற்கனவே வரதராஜன் வீட்டிற்கு வந்தனர். போனவாரம் கல்யாணம் ஆகிச் சென்றவள் போன வேகத்திலேயே சுவரில் அடித்தப் பந்தைப்போல வீட்டிற்கு வந்தது எல்லோருக்கும் தாங்கமுடியாத துயரத்தைத் தந்தது.

அவர்களைப் பொறுத்தவரை குருவுடன் அவள் காதல் மனைவியாக வாழ்ந்திருக்கிறாள் இந்த நான்குநாட்களில் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர், ஜெயா, மதியைத் தவிர. ஜெயாவிற்கு கௌசியின் தோற்றமே எதையோ சொல்ல, அவர் அவளிடம் எதையும் கேட்க மனம் வராமல் இருந்தார்.
மதிக்கும் அவள் இஷ்டப்பட்ட கல்யாணம் இல்லை என்று தெரியும். இருந்தாலும் இந்த நிலைமை அவளை மிகவும் பாதித்திருக்கும் என்று நினைத்திருந்தாள்.

ஒருவாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் என நாட்கள் கடந்து குருவின் இழப்பு முடிந்து ஒருமாதம் ஆயிற்று. தேவராஜ் கௌசியின் எதிர்காலத்திற்கு கொடுத்த, அதாவது அவளுக்கு முறைப்படி குடுத்தத் தொகைகளை வேண்டவே வேண்டாமென்று ஒன்றாகச் சொல்லி விட்டனர் கௌசியும் வரதராஜனும்.

கௌசிக்கு கடந்த ஒருமாத காலமாக நாட்களைக் கடத்துவது அவளது அறையில் மட்டும்தான். அந்த கொடூர நினைவுகளிலேயே அவள் மனம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. கண்களை மூடினால் கண்முன் வரும் கோர சம்பவங்களை அவளால் மறக்கவே முடியவில்லை. அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்துக் கொண்டிருந்தது எல்லா சம்பவங்களும். அவளை மாற்ற எவ்வளவு முயற்சி செய்தும் தோற்றனர் அனைவரும். ஜெயாவும் சுமதியும் மாறிமாறி கௌசியுடன் இரவில் இருந்தனர்.

ஜீவாவிற்கும் தொழிலில் சில குளறுபடிகள் ஏற்பட, அவன் கோவை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், மதி தான் கௌசியுடன் சிலநாட்கள் இருந்து வருவதாக சொல்லி ஜீவாவை அனுப்பி வைத்தாள். தன்மனைவிக்கு தன்குடும்பத்து மேலுள்ள அக்கறையில் நெகிழ்ந்த ஜீவா. அவளை முழுமனதுடன் சென்னையில் விட்டுவிட்டு கோவை சென்றான்.

காலையில் சீக்கிரம் எழும் கௌசி இப்போதெல்லாம் பதினொரு மணிக்கே எழுந்தாள். கண்களைச் சுற்றிய கருவளையமும் எப்போதும் பரட்டை முடியுமாக பார்க்க, எல்லோரும் அவளிடம் பேச்சைக் கொடுத்து பேச முயன்றனர்.

எல்லாம் குளத்தில் இருந்த கல்லைப் போல உள்ளே சென்றதே தவிர கௌசி எதையும் வாயைத் திறந்து சொல்லவில்லை. ப்ரௌனியுடன் உட்கார்ந்து அதன் தலையை நீவி விடுவாளே தவிர வேறு எதுவும் அவள் செய்வதில்லை.

ஒருநாள் கோயிலிற்குச் சென்று, தன் பாரத்தையும் சோகத்தையும் கடவுளிடம் வைத்து விட்டு வந்த ஜெயா, அண்ணனின் வீட்டிற்குச் சென்றார். அண்ணன் வீட்டிற்கு வந்தவர் அண்ணன் இல்லாததைக் கண்டார். 'சரி எங்காவது ஏதாவது வாங்கச் சென்றிருப்பார்' என்று நினைத்தவர் கௌசிக்கு விபூதியை வைக்க எண்ணி அவளது அறைக்குள் சென்றவர் அவள் நின்றிருந்தக் காட்சியைக் கண்டு, "கௌசிசிசி..." என்று அதிர்ச்சியில் கத்திவிட்டார்.

அத்தையைக் கண்டவள் கையில் இருந்ததைப் பின்னால் மறைக்க கையில் சூடுதாங்காமல் எரிந்து கொண்டிருந்த நியூஸ் பேப்பரைக் கீழே விட்டாள். அவள் அருகில் சென்ற ஜெயா, 'பளார்', 'பளார்' என்று இரண்டு அறைகள் விட்டுத் தானும் அழ ஆரம்பித்து விட்டார்.

"பாவி, இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு போகவா உன்னை எல்லோரும் வளர்த்தோம்" என்று அவளைப் பிடித்து உலுக்கி அழ கௌசி தந்த பதில் அவர் இன்னும் அதிர்ந்தார்.

"நான் ஒன்னும் சாகறக்கு இதைப் பத்த வைக்கல அத்தை... எனக்கு இந்த மூஞ்சி வேண்டாம்னு தான் தீ வைக்கப் போனேன்" என்று அசராமல் சொன்னவளை ஜெயா, 'ஆஆ'வெனப் பார்த்தார்.


"என்னடி... என்னப் பேச்சு பேசறே நீ? நீ வாழ்ந்த அந்த நாலுநாள் வாழ்க்கைக்காக இப்படி எல்லாத்தையும் வெறுத்து ஒதுக்கணுமா? நீ புடிக்காம கல்யாணம் பண்ணாலும் அந்தப் பையன் குரு இறந்தது உனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்... அதுக்குன்னு இப்படிப் பண்ணுவியா?" என்று கண்ணீருடன் அதட்டினார்.

"என்ன அத்தை சொன்னீங்க? நான் வாழ்ந்த வாழ்க்கையா, நான் சந்தோஷமா இல்லைனாலும் நிம்மதியா இருந்திருப்பேனு நினைச்சீங்களா..." என்று ஏளனப் புன்னகை உதிர்த்தவள்,

"இதான் அத்தை நான் வாழ்ந்த வாழ்க்கை" என்று தன் நைட்டியின் மேல் மூன்று பட்டனைக் கழட்டிச் சொல்ல அவளின் கழுத்திலும் கழுத்திற்கு கீழ் இருந்த பகுதியையும் பார்த்தவர் அப்படியே சிலையென நின்றுவிட்டார்.

அவர் கண்ட இடத்தில் இருந்த காயங்களின் தடயத்தைக் கண்ட ஜெயாவிற்கு அந்த வயதிலும் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்து உதறியது உடம்பு. இப்பவே இப்படி என்றால் ஒருமாதத்திற்கு முன்பு காயம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தவருக்கு ஈரக்குலையே ஆடிவிட்டது.

"இது மட்டுமில்லை அத்தை... இன்னும் உடம்பு பூராவும் இருக்கு. அதை பாத்தா தாங்க மாட்டீங்க" என்று நைட்டியை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்து அழுதாள்.

"அவன் ஏன்டி உன்னைய இப்படிப் பண்ணினான்?" என்று கேட்டவரிடம் அனைத்தையும் கொட்டினாள் கௌசி.

பள்ளியில் அவன் தன்னை கவனித்தது... மறுபடியும் ஹோட்டல் தக்சினில் பார்த்து, அப்புறம் ஃபாலோ செய்தது, கல்யாணத்தன்று இரவு நடந்த பேச்சு வார்த்தைகள்... அவளையும் விக்னேஷையும் சேர்த்து வைத்துப் பேசியது... தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது என ஒன்றுவிடாமல், அனைத்தையும் சொல்லியவள், விக்காவைத் தான் காதலித்ததை மட்டும் சொல்லவில்லை.

நிமிர்ந்து தன் அத்தையைப் பார்த்தவள், "அத்தை... அவன் என்னை... என்னை..." என்று சொன்னவளுக்கு அதற்குமேல் சொல்ல வரவில்லை. எப்படி சொல்லவென்று தெரியவில்லை.

"அத்தை அவன் என்னை... செக்ஸ் டார்ச்சர் பண்ணான் அத்தை" என்று அத்தையைக் கட்டிப்பிடித்தவள் கதறி அழுக ஆரம்பித்தாள். "அவன், என் அழகு, உடம்புன்னு... காதுலையே கேக்க முடியாத வார்த்தைகள் எல்லாம் சொன்னான் அத்தை. அதான், எனக்கே என் மூஞ்சியை இப்போதெல்லாம் பிடிக்கலை அத்தை. பார்க்கவே அருவருப்பா இருக்கு... அதனாலதான் மூஞ்சிக்குத் தீ வச்சிக்கலாம்னு" என்று சொல்ல, வந்தவளின் வாயை ஜெயா தன் கை கொண்டு மூடினார்.

"வேணான்டி... எதுவும் சொல்லாத இதுக்கு மேல... கேக்கற எனக்கே உயிர் போற மாதிரி இருக்கு... பாவி பய... நாசமா போறவன்... உனக்கு பண்ணப் பாவத்துக்குத் தான் நாய் சீக்கிரம் செத்து ஒழிஞ்சிட்டான்..." என்றவர் கௌசியின் அழுகை இன்னும் குறையாததைக் கண்டு அவளைச் சமாதானம் செய்தார்.

"நீ எதுக்கும் கவலைப்படாத தங்கம்... நாங்க எல்லாம் இருக்கோம் உனக்கு" என்று சமாதானம் செய்து அழுகையில் அரற்றிக் கொண்டிருந்தவளைத் தூங்க வைத்தார்.

இவள் இங்கு இப்படி என்றால் அங்கு கனடாவில் ஒருத்தன் இவளை விட இரண்டு மடங்குத் துன்பத்தில் இருந்தான். ஆனால், அதை யாரும் அறியவில்லை.
 
  • Wow
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-15

கௌசிகாவின் பிறந்தநாள் அடுத்து வந்த சில தினங்களில் தான் விக்னேஷ் நான்சியைச் சந்தித்தது. முதலில் ஹைதராபாத்தில் வேலையில் இருந்தவள் சென்னைக்கு மாற்றல் கிடைக்க இங்கு வந்து ஒரு ப்ளாட் எடுத்துத் தங்கியிருந்தாள்.

வேலையில் சேர்ந்த அன்றுதான், அவள் விக்னேஷைப் பல வருடம் கழித்து சந்தித்தது. முதலில் விக்னேஷிற்குமே அவளை அடையாளம் தெரியவில்லை. அவளாக வந்து பேசியபோதுதான் அவனுக்கு நினைவு வந்தது.

பிறகு, வந்த நாட்களில் இருவரும் நட்பாக, நான்சி அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றாள். ஒருநாள் இருவரும் கான்டினில் உட்கார்ந்திருக்கையில் தன் பேச்சை ஆரம்பித்தாள்.

நான்சி, "விக்னேஷ்..."

"சொல்லு நான்சி..." போனில் கௌசிகாவிற்கு மெசேஜ் செய்தபடி.

"உன்கிட்ட ஒன்னு சொல்லனும் விக்னேஷ்... கொஞ்சம் ஃபோனைக் கீழே வைக்கிறியா?" அதிகாரக் குரலில்.

அந்தக் குரலில் அவனுக்கு எரிச்சல் மண்டினாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் ஃபோனை வைத்துவிட்டு கேட்டான். "சொல்லு கௌசி..." என்று நாக்கைக் கடித்துக் கொண்டவன், "சாரி நான்சி சொல்லு... கௌசிக்கு மெசேஜ் பண்ணிட்டு இருந்தேனா அதான்" என்றான் சாதாரணமாக.

கௌசியின் பேரைக் கேட்டதும் பொங்கி வந்த ஆத்திரத்தை மறைத்தவள் முகத்திலும் எளிதாக அதை மறைத்து விக்னேஷிடம் சிரித்து வைத்தாள்.

"விக்னேஷ் ஐ ஸ்டில் லவ் யூ..." என்று டேபிளின் மேல் இருந்த கையைப் பிடிக்க விக்னேஷ் ஒருநிமிடம் தடுமாறித்தான் போனான். அவனும் நான்சியின் அழகில் விழுந்து கிடந்தது உண்மைதான்.

"அழகு என்பதற்காக?"

கல்கி எழுதிய பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி கூடத்தான் அழகு. ஆனால், அந்தப் பாம்பின் விஷத்தன்மையை மறந்த பெரிய பழுவேட்டரையர் அவள் அழகில் மதியை இழந்த மாதிரி விக்னேஷின் மதியும் அங்கு சற்று சறுக்கத்தான் செய்தது.

அடுத்து... அவள் காதலை ஏற்றுக் கொண்டான் விக்னேஷ். ஆனால், கௌசியின் மேல் கனன்று கொண்டிருந்த நெருப்போ நான்சியைத் தூங்க விடாமல் செய்தது. விக்னேஷை தன் பேச்சைக் கேட்கும் பொம்மையாக ஆக்க நினைத்தாள் அவள்.

அதற்கெல்லாம் ஆடுபவன் அவனா? அவள் அழகில் மயங்கினானே தவிர அவன் மூளையை ஒன்றும் அவன் கழட்டி வைக்கவில்லை.

"கௌசி ஏன் உங்க கூடயே இருக்கா விக்னேஷ்... எப்போமே உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு, என்ன இது?" என்று ஒருநாள் விடாமல் கௌசி அவனை ஃபோனில் கூப்பிட்டபோது தன் விஷத்தைக் கக்கினாள்.

"இங்க பாரு நான்சி... உன்கிட்ட டைம் ஸ்பெண்ட் பண்ணலைனா ஏன்னு கேளு. அதவிட்டுட்டு கௌசிகிட்ட பேசறது, நான் வெளில போறத பத்தி பேசறது எல்லாம் வச்சுக்காதா... என் கேர்ள் ஃப்ரண்டா இருந்தாலும் பீ இன் யுவர் லிமிட்ஸ்" என்று முகத்தில் அடித்த மாதிரி அவன் பேச அதிலிருந்து அதைப் பற்றி வாயைத் திறக்கவில்லை அவள்.

அதற்கு என்று நான்சியும் தன் எண்ணத்தைக் கை விடவில்லை. அவள் கௌசியை எப்படியாவது அழ வைக்க வேண்டும். அவளது சந்தோஷத்தைக் குலைக்க வேண்டும் என்ற வில்லத்தனத்தில் இருந்தாள். மொத்தத்தில் அவள் விக்னேஷைக் காதலிப்பதை விட அவளுக்கு கௌசியின் மேல் இருந்த பழிவெறி அதிகமாக இருந்தது. அதனால் விக்னேஷிடம் தன்னிரக்கத்தைச் சம்பாதித்தாள் அவள்.

"ப்ளீஸ் விக்னேஷ், என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க... நானே அம்மா அப்பாவை விட்டு இங்கே இருக்கேன். ஐ ஃபீல் லோன்லி! எனக்கு இங்க உங்களை விட்டா யார் இருக்கா? ஐ லவ் யூ விக்னேஷ்... ஐ மிஸ் யூ" என்று பேசிப்பேசியே அவனைத் தன் பக்கம் இழுத்தாள்.

அவ்வப்போது கண்ணீரையும் காட்டினாள். அதனால் தான் அவளோடு வீடு வரை சென்று அவளுடன் அவன் சிலநேரம் பொழுதைக் கழித்தது. அதை தனக்கு சாதகமாக ஆக்கி விக்னேஷைத் தன் மோகப்பிடியில் இழுக்க முயற்சிக்க, அதில் அவன் நேர்மை தவறாமல் இருந்தான். விக்னேஷ் இம் என்று இருந்தால் அவனோடு எதற்கும் துணிந்திருப்பாள் நான்சி.

அவனின் வளர்ப்பு முறையே அவனை அவளிடத்தில் நெருங்க விடாமல் வைத்தது. உண்மையைச் சொல்லப்போனால் அவளிடம் அவனிற்கு அப்படித் தோன்றவில்லை. மாறாக, அவள் அப்படித் தன்னிரக்கத்தை சம்பாதிக்கும் போதெல்லாம் ஒரு ஓரத்தில் அவனுக்கு எரிச்சலும் வெற்றிடமும் மண்டியது.

விக்னேஷும் முதலில் குடும்பத்திடம் மறைக்க எண்ணியவன் முதலில் ஜீவாவிடம் சொன்னான். "ஜீ, ப்ளீஸ் கௌசிகிட்ட நானே சொல்லிக்கிறேன்... அவ அழுவாடா" என்று சொன்னான் விக்னேஷ்.

அவள் அழுவாள் என்று தெரிந்தவனுக்கு அவள் ஏன் அழுவாள் என்றுத் தெரியவில்லை. அதற்கு பொஸசிவ்னஸ் என்ற காரணத்தை அவனே கற்பித்து வைத்தான்.

இதோ அவன் கௌசியிடமும் தன் குடும்பத்திடமும் சொல்லிவிட்டு கனடா கிளம்பியவன், நான்சியிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று அவளது ப்ளாட்டிற்குச் சென்றான். அங்கேதான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
நான்சியின் ப்ளாட்டிற்குச் சென்றவன் நாலவது மாடியில் இருக்கும் அவளது வீட்டிற்குள் செல்ல, லிப்டில் இருந்து வெளியே வரும்போதே நான்சியின் குரலும் இன்னொருவனின் குரலும் கேட்டது. ஆனால், இருவரும் கத்திக்கொண்டு இருந்தனர்.

"இங்க பாரு... ஹைதராபாத்தில் இருக்கும் போது உன்ன லவ் பண்ண... இப்போ இல்ல போதுமா?" என்று சொல்ல, விக்னேஷ் முதலில் அவளின் கத்தல் கேட்டு வாசலிற்கு ஓடி வந்தவன் கடைசியில் அவள் சொன்ன வாக்கியத்தில் அப்படியே நின்று விட்டான்.

"அப்போ நீ என்ன ஏமாத்திட்டேல்ல" என்று ஆதங்கமாய்க் கேட்டது அவன் குரல்.

"ஆமாம்" இரக்கமே இல்லாமல் வந்தது நான்சியின் குரல்.

"நீ இங்க யாரையோ லவ் பண்றேன்னு கேள்விப்பட்டேன், அது உண்மையா, அதுக்காகத் தான் என்ன அவாய்ட் பண்றயா?" என்று அப்பாவியாய் கேட்க, முதலில் திணறியவள் அடுத்துசொன்ன பதிலில் அவன் மட்டும் இல்லை விக்னேஷும் அதிர்ந்தான்.

"இங்க பாரு... எனக்கு அல்ரெடி மேரேஜ் பிக்ஸ் ஆன மாதிரி தான். உனக்கே தெரியும் என் மாமா பையன் திவாகர்... சும்மா டேட் பண்றவனை எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது" என்றவள்,

"சும்மா பேசிபேசி டைம் வேஸ்ட் பண்ணாத... எனக்கு டென்ஷன் ஆகுது. தயவுசெய்து வெளில போ" என்றவள் உள்ளிருந்து கதவிடம் வந்து கைகாட்ட, அப்படியே நின்றுவிட்டாள். காரணம் வெறி கொண்ட வேங்கையாய் விக்னேஷ் கோபத்தில் கண்கள் சிவப்பேறி நின்றிருந்தான்.

அந்த நேரத்தில் விக்னேஷ் வருவான் என்று தெரியும். ஆனால், ஹைதராபாத்தில் இருந்த வந்தவனைப் பார்த்து எரிச்சலாகிப் போனவள் அனைத்தையும் கொட்ட அப்போது வந்த விக்னேஷிற்கு எல்லாம் விளங்கியது.

விக்னேஷ் இரண்டு மாதத்திற்குள் வருவதற்குள் அப்பா அம்மா என்னை நம்புகிறார்கள் என்று புலம்பி விலகி விடலாம் என்று நினைத்தவளுக்கு அவனை இங்கு இப்போது கண்டவுடன் தொண்டை எல்லாம் கவ்வியது பயத்தில்.
அவளைப் பொறுத்தவரை கௌசியை பழி வாங்கிவிட்ட மாதிரிதான் இஷ்டம் இல்லாத கல்யாணத்தில் தள்ளி விட்டு. இப்போது அவன் சென்ற சமயம் சுலபமாக விலகி விடலாம் என்று எண்ணியவள் கையும் களவுமாக மாட்டி விட்டாள்.

அவள் கையைக் காட்டிய பக்கம் வந்த ஹைதராபாத்காரனும் விக்னேஷ் நிற்பதைப் பார்த்தே விக்னேஷ் யார் என்று புரிந்து கொண்டு, இனி நீ அவ்வளவுதான் என்ற பார்வையை நான்சியிடம் வீசிவிட்டு சென்றுவிட்டான்.

ஒவ்வொரு அடியாய் விக்னேஷ் அழுத்தமாய் எடுத்து வைத்து உள்ளே செல்ல நான்சியின் கால்கள் தானாகப் பின்னே நகர்ந்தது. கை முஷ்டிகள் இறுக அவள் அருகில் சென்றவன் கையை எடுத்து கழுத்தை நெறிக்கச் சென்றுவிட்டான் கோபத்தில்.

பின் என்ன நினைத்தானோ கையை இறக்கி விட்டு, "ச்சீ... உன்ன மாதிரிப் பழகுறவளுக்கு காசுக்கு வரவ எவ்வளவோ மேல்" தன் மனதில் எழுந்த வார்த்தையை அவளிடம் தீயாய் வீசிவிட்டு வெளியே விறுவிறுவென்று சென்று விட்டான்.

அவனுக்குக் கோபம் தலைக்கு ஏறியதே தவிர வருத்தமோ மனதில் வலியோ இல்லை. ஆனால், கோபம் மிதமிஞ்சி இருந்தது. அறிவிழந்து அவளிடம் மயங்கிக் கிடந்த மூளையைச் சரி செய்தவன் தான் வந்த கேப்பில் ஏறி ஏர்போட்டிற்குச் சென்றான்.

ஏர்போட்டிற்கு வந்து தன் டீம் மேட்ஸுடன் இணைந்தவனுக்கு ஒன்றும் பெரிதாய் எதுவும் மனதை அலட்டவில்லை. செக்கிங் எல்லாம் முடிந்து தன் ஃபோனை ப்ளைட் மோடில் போட்டுவிட்டு ப்ளைட்டில் உட்கார்ந்தவன் அப்போதுதான் தன் மொபைலை எடுத்தான். அவனுடன் வந்த டீம் மேட்ஸிற்கு முன்னால் சீட் கிடைக்க இவனுக்கு மட்டும் பின்னால் சீட் கிடைத்திருந்தது.
மொபைலை எடுத்து அன்லாக் செய்தவன் உள்ளே இருந்த வால்பேப்பரைப் பார்த்தான். அவனும் கௌசியும் அவள் பிறந்தநாள் அன்று ரெஸ்டாரண்ட் முன் நின்று கடைசியாக எடுத்த செல்பி. பார்த்தவனுக்கு அடி மனதில் இருந்து துக்கம் தொண்டையை அடைக்க அவனுக்கு அது என்ன உணர்வு என்றே தெரியவில்லை.

"என்ன தம்பி... கேர்ள் ப்ரண்ட் விட்டு பர்ஸ்ட் டைம் அப்ராட்டா... இப்போ எல்லாம் வாட்ஸ்ஆப் வீடியோ கால், ஸ்கைப்ன்னு இருக்கு... இருவது வருசத்துக்கு முன்னாடி இதெல்லாம் இல்லாம என் வயசுல இருக்கவங்க ரொம்ப சிரமப்பட்டோம். டோன்ட் வொர்ரி தம்பி... எல்லாம் சரி ஆயிரும்" என்று பக்கத்தில் இருந்தவர் பேச்சுக் கொடுக்க விக்னேஷிற்கு உடம்பில் ஷாக் அடித்தது போல இருந்தது.

அவன் தனக்குள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் கிடைத்தது. அன்று விக்னேஷ் கல்யாணம் செய்துகொள் என்று முழுமனதோடு ஒன்றும் பேசவில்லை. மாமா சொன்னதிற்காகத்தான். அன்று, கௌசி அழுது கொண்டே சென்றதில் நான்சியை அப்படியே விட்டுவிட்டு வந்தது ஏன் என்று இப்போது புரிந்தது.

மற்றும் குரு, கௌசியின் கழுத்தில் தாலி கட்டியபோது ஏன் அப்படி தான் வெறித்த நிலையில் இருந்தோம் என்று இப்போது அவனுக்குப் புரிந்தது. மேலும் தாலி கட்டியவுடன் கௌசி கண்ணீருடன் நிமிர்ந்ததில் அவன் அடிபட்டுத்தான் போனான். மற்றும் அவளின் தோளில் குரு இன்று கைபோட்ட போது அவனை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தன்னை அறியாமல் ஏன் எழுந்தது என்பதை இப்போதுதான் உணர்ந்தான்.

"அய்யோ..." என்று தலையைப் பிடித்து உட்காரந்து விட்டான் விக்னேஷ். கண்களில் கண்ணீர் வர அடக்க முயன்றவன் தோற்றுப்போனான். இரண்டு சொட்டுக் கண்ணீர் தன் ஜீன்ஸை நனைக்க கண்ணை மறைத்து வெளியே பார்த்த வண்ணம் தலையைத் திருப்பிக் கொண்டான். சொல்ல முடியாத துயரம் நெஞ்சைத் தாக்க கண்ணீரை அடக்கியவனின் தலை நரம்புகள் எல்லாம் புடைத்தன. அவன் உட்கார்ந்திருந்தானே தவிர எங்கெங்கோ சென்று அவனின் ஜீவன் கௌசியின் இடத்தில் சென்று நின்றது.

'மடையன்மடையன்' கூடவே இருந்த தேவதையை விட்டுவிட்டேனே என்று தன்னைத்தானே திட்டி அதட்ட மட்டுமே அவனால் முடிந்தது. ஆனால், இப்போது என்ன செய்ய முடியும். அவள் தான் இன்னொருவனின் மனைவி ஆயிற்றே என்று நினைத்தவனின் மனம் மரண ஓலமிட்டது. அப்போதும் தன்காதலை உணர்ந்தானே தவிர அவளின் காதலை அவன் உணரவில்லை.

எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்றவன் கண்களை அழுத்தமாகத் துடைத்தான். கண்கள் சிவப்பேறி தன்னைப் பார்ப்பதற்கே அவனிற்கு முடியவில்லை. அவனின் சப்தநாடியும் அடங்கியது அவள் இல்லாத வெறுமையை உணர்ந்தவனுக்கு. அடுத்தவன் மனைவியை நினைப்பது கூடப் பாவம் என்று நினைத்தவன் மனதில் விழுந்த அடியுடனே கனடா வந்தடைந்தான்.

அதற்குள் நான்சி விக்னேஷ் விஷயம் ஆஃபீஸில் பரவி கனடாவில் விக்னேஷுடன் இருந்த டீம் மேட்ஸ் வரை வந்து சேர்ந்தது. எல்லோரும் அவனைப் பார்க்கும் பார்வையில் எழுந்த ஆத்திரத்தை அடக்கியபடி ப்ராஜெக்ட்டில் கவனத்தைச் செலுத்தினான். கௌசிக்கு அழைக்கலாமா என்று நினைத்தவன், ‘வேண்டாம்... கூப்பிட்டா அவளை மறப்பது கஷ்டம்’ என்று நினைத்து அதைக் கை விட்டான்.

ஆனால், நான்கு நாட்களில் ஜீவா போன் செய்து விஷயத்தைச் சொல்ல விக்னேஷ் மனதில் வெண்ணீரை யாரோ ஊற்றியது போல ஆகியது. முகம் எல்லாம் வெளுத்து வியர்த்து நின்றவனை பக்கத்தில் இருந்த யாரோ நிதானத்திற்கு கொண்டு வர, அவரிடம் இருந்து நழுவி யாருமில்லாத ஒரு இடத்திற்கு வந்தான்.

"ஜீ... என்னடா சொல்ற?" எனக் கேட்டவனின் குரல் கரகரத்தது.
ஜீவா சொல்லி முடிக்க, "நான் இப்போதே கிளம்பி வறேன் ஜீ..." என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்று தன் கம்பெனியை கான்டாக்ட் செய்து கேட்டவனுக்கு, அவர்களின் பதில் ஆத்திரத்தைக் கிளப்பியது.

"நீங்க இப்போது வர முடியாது, வேலை எல்லாம் முடிந்துதான் வர முடியும். நாங்க, நீங்க வர அனுமதிக்க முடியாது" என்று அந்தக் கார்ப்ரேட் விஷமிகள் சொல்ல விக்னேஷ் அவர்களிடம் பாய்ந்தான்.

"எனக்கு இந்த வேலை வேண்டாம். நான் இந்த ப்ராஜெக்ட்டில் இருந்து விலகறேன்" என்று சொல்ல, மேலும் அவன் தலையில் இயலாமையை இறக்கியது அந்த நிறுவனம்.

"ஓகே... பட், நீ இப்போதே ப்ராஜெக்ட்டை முடிக்க வேண்டும், இல்லை என்றால் அந்த நஷ்டத்திற்கான பணத்தை வந்து தர வேண்டும், இல்லை என்றால் ஜெயில்தான்" என்று செக்கை வைத்தான் விக்னேஷிற்கு.

"முடியாது. நான் கிளம்பி வரேன்... உன்னால் ஆனதைப் பாத்துக்க" என்று ஃபோனை வைத்தவன் தன் குடும்பத்திற்கு ஃபோனைப் போட்டு விஷயத்தைச் சொல்ல, வரதராஜன் உட்பட எல்லோரும் அவன் வருவதை மறுத்தனர்.
அவன் எவ்வளவு ஆசையாக சென்றான் என்பது அவர்களுக்கே தெரியும். அதையும் மீறி கிளம்பி வருகிறேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தவனை வரதராஜன் அடக்கினார்.

"மாமா, உங்களுக்கு புரியுதா? அவ உங்களுக்கு மட்டும் மகள் இல்லை, என் கூடவே வளர்ந்தவ... அவளை இந்த நிலையில் விட்டுட்டு என்னால இங்கக் கிடக்க முடியாது" என்று கத்தியவனை வரதராஜன் தன் பேச்சால் அடக்கினார்.

"வந்துரு விக்னேஷு... வந்து, இங்க உட்கார்ந்து எங்களோட அழு! உனக்கு அந்தப் ப்ராஜெக்ட் கிடைச்சதுல உன்னவிட, எங்களை விட அதிகமாக சந்தோஷப் பட்டது கௌசிதான்... நீ வந்தா அவ என்ன சந்தோஷப்படுவாளா? அவளால வந்துட்டன்னு இன்னும் அழுகதான் செய்வாள். நான் சொல்றத சொல்லிட்டேன் வரதா இருந்த வந்துரு விக்னேஷ்" என்று வரதராஜன் கோபத்தில் அவனிடம் இரைய ஃபோனை வைத்துவிட்டான்.

நாட்கள் சென்றது. மதிக்குப் ஃபோன்செய்து அவ்வப்போது கௌசியின் நிலையைக் கேட்டறிந்தான். அவன் எவ்வளவோ ஃபோன் செய்தும் அவள் எடுக்கவில்லை. தினமும் முப்பது கால்ஸ்... ஐம்பது மெசேஜ்... என்று வழக்கம் தவறாமல் அனுப்பினான்.

வரதராஜன் மாமாவிற்கு ஃபோன் செய்து அவளிடம் கொடுக்கச் சொல்ல அவள் பேச மறுத்தாள். ஒன்றுக்கும் அவள் ரெஸ்பான்ஸ் செய்யாமல் போகவே சென்னையில் இருக்கும் மதியை நாடினான் விக்னேஷ்.

கௌசியின் நிலையே வேறு. நான்கு நாட்களில் புருசனைக் கொன்று விட்டாள் என்று அக்கம் பக்கத்தின் இருந்தவர்கள் பேச்சில் நொந்தாள். ‘ராசி இல்லாதவள்’, ‘அய்யோ காலையில் அவள் முகத்தைப் பார்த்துவிடக் கூடாது’, ‘இவள் ஆடின ஆட்டம் என்ன?’ என்று சில கழிசடைகள் பேச்சு கௌசியை வெளியே போகவே அஞ்ச வைத்தது. அவளையே இன்ஃபீரியர் காம்ப்ளக்ஸில் தள்ளியது. தனக்கு மெய்யாகவே ராசி இல்லையோ என்று எண்ணி மருகினாள்.

ஒருநாள், "மதி கருவுற்றிருக்கிறாள்... வீட்டிற்கு வா கௌசி!" என்று ஜெயா அத்தை அழைக்க, தான் முதலே போகவேண்டாம் என்று எண்ணியவள்,
"நான் நாளை வரேன் அத்தை" என்று போனை வைத்துவிட்டு மதிக்கும் ஜீவாவிற்கும், "கங்கிராட்ஸ் ஃபார் தி நெக்ஸ்ட் லெவல்" என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்துப் படுத்துவிட்டாள். அடுத்த நாள் தனக்குக் கிடைக்கப் போகும் அவமானத்தை அறியாமல்.

அடுத்தநாள் காலை எழுந்து குளித்துவிட்டு ஒருலைட் கலர் சுடிதாரை அணிந்துகொண்டு மதியைப் பார்க்கச் சென்றாள் கௌசி. வரதராஜன் தான் மாலை பார்க்க வருவதாகச் சொல்லவே, அவள் மட்டும் கிளம்பினாள். அத்தை வீட்டிற்குள் அவள் நுழைய எதிரே காலேஜிற்கு கிளம்பி வந்த சந்தியா இவளைப் பார்த்து தலைகுனிந்தாள்.

"காலேஜ் கிளம்பியாச்சா சந்தியா?" என்று கௌசி வினவ, அவளின் பதிலின் தொனியே வேறு மாதிரி இருந்தது.

"பாத்தா தெரியலை..." என்று வெறுப்புடன் கூறியவள், "காலங்காத்தால நேருல வந்துட்டு சை..." என்று முணுமுணுத்து விட்டுப் போக, கௌசி அடிபட்ட பறவையாய் விக்கித்து நின்றாள்.

சந்தியா சொன்னது அவளுக்குக் கேட்காமல் இல்லை. கௌசிக்கு கேட்க வேண்டும் என்றுதான் சந்தியா அப்படிச் சொன்னது.

"அட... வா கௌசி!" என்று ஜீவாவின் குரல் கேட்க முகத்தைச் சமாளித்து ஜீவாவிடம் புன்னகைத்தாள் கௌசி. வாழ்த்துக்களைத் தெரிவித்தவள் மதியிடமும் வாழ்த்தைத் தெரிவித்தாள்.

கௌசிகா, "நீ எப்போ வந்த ஜீ?"

"நான், நேத்து மதி சொன்ன உடனே கிளம்பிட்டேன் கௌசி... மார்னிங் 6.40க்கே வந்துட்டேன்..." என்றவன், "மாமா எங்கே?" எனக் கௌசியிடம் கேட்டான்.

"அப்பா... ஈவ்னிங் வரேன்னு சொல்லிட்டாரு ஜீ" என்றாள் கௌசி. அவளின் அமைதி ஜீவாவையும் தாக்கியதும் உண்மைதான்.

"வாடிம்மா... எப்படி இருக்க?" என்று நன்றாக இழுத்து ஸ்ருதியுடன் கேட்டபடி வந்தார் மதியின் தாயார் பரமேஸ்வரி. நேற்று ஜீவா கிளம்பியபோது அவனுடன் மதியின் குடும்பமும் கிளம்பி வந்திருந்தது.

கௌசிகா, "நல்லா இருக்கேன் பெரிம்மா... நீங்க எப்படி இருக்கீங்க... பெரியப்பா வரலையா?"

"ம்ம் நல்லா இருக்கோம்... மதி அப்பா கோயிலுக்குப் போயிருக்காரு" என்றவரின் பார்வை கௌசியை மேல் இருந்து கீழ் வரை இளக்காரமாய் அளந்தது.

அவரின் பார்வையில் கௌசியின் மனம் நத்தையாய்ச் சுருங்கியது. மேலும் மதியின் அண்ணன் சுதாகரன் தன்னைப் பார்க்கும் பார்வை அவளைக் கொன்றது. கல்யாணம் ஆகாதபோது வேறு. ஆனால், கல்யாணம் முடிந்து இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் தன்னை அவன் தப்பான பார்வையில் பார்ப்பது கௌசிக்கு அருவருப்பை மூட்டியது.

எல்லோரும் காலை சாப்பிட கௌசிதான் சாப்பிட்டுவிட்டுத் தான் வந்ததாகச் சொல்ல அவளைத் தொந்திரவு செய்யாமல் அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு வந்த பரமேஸ்வரி கௌசியிடம், "உன்கிட்ட பேசணும்" என்றார்.

"சொல்லுங்க பெரிம்மா"

"இங்க வேணாம்... வா அங்க போவோம்" என்று மாடிப்படி அருகில் கூப்பிட கௌசியும் அவர் பின்னேயே சென்றாள்.

"ஏம்மா... உனக்குக் கொஞ்சம் ஆச்சும் இங்கிதம் இருக்கா? நல்ல விஷயம் சொல்லி எல்லோரும் இங்க வந்திருக்கோம்... இந்த நேரத்தில நீ இங்க வரலாமா? சரி உன் அத்தை கூப்பிட்டாலும் நீ இரண்டுநாள் கழிச்சு வரலாம்ல... அதுவும் இல்லாம புருசன் பொண்டாட்டி ரொம்பநாள் அப்புறம் பாக்கறாங்க... நீ இருந்தா, நல்லா இருக்குமா... அதுவும் புருசனை முழுங்கிட்டு..." என்று முடிப்பதற்குள் ஆங்காரமாய் வந்தது சுமதியின் குரல்.

"போதும் நிறுத்துமா..." கத்திய கத்தலில் அரண்டே விட்டார் பரமேஸ்வரி. மதி கருவுற்றிருக்கிறாள் என்ற விஷயம் அறிந்து சுமதியும், செந்தில்நாதனும் வருகை தந்தனர். வாசலில் செருப்பை விடும் போதுதான், பரமேஸ்வரி கௌசியிடம் பேசுவது சுமதிக்கும் செந்தில்நாதனிற்கும் கேட்டது. அவரது பேச்சைக் கேட்ட இருவருமே கொதித்து விட்டனர்.

சுமதியின் குரல் கேட்டு வெளியே வந்த அனைவரும் அங்கு நின்றிருந்த பரமேஸ்வரி, கௌசி, செந்தில்நாதன், சுமதியை மாறிமாறி பார்த்தனர்.

"இங்க பாரும்மா... இது என் அக்கா வீடு, அதை முதல்ல ஞாபகம் வச்சிக்க... என்னமோ உன் வீடு மாதிரி எங்க புள்ளைய இப்படிப் பேசற? இதையே வேற எவளாவது பேசிருந்தான்னா வாயைத் தச்சிருப்பேன்"

ஜெயா, "சுமதி என்ன ஆச்சு"

சுமதி நடந்ததைச் சொல்ல எல்லோருக்குமே கோபம் வந்தது. "ஏம்மா... உனக்கு அறிவே இல்லையா... நீயும் ஒரு அம்மா தானே அவளுக்கு... அவளை அப்படி சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு?" என்று மதி தன் தாயிடம் சீறினாள்.

"ப்ளீஸ் ஸ்டாப் இட்" என்று கௌசி கத்த அனைவரும் அமைதி ஆயினர்.

பின் மதியிடம் திரும்பியவள் அமைதியாக, "மதி, அவங்க சொன்னதுல்ல என்ன தப்பிருக்கு? அவங்க நிலமைல இருந்து பார்த்தா... உன் மேல இருக்க அக்கறைலதான் சொல்லிருக்காங்க... அவங்களைத் திட்டாதே" என்றவள்,
"அம்மா இருந்திருந்தா எனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்" என்ற கௌசி, பரமேஸ்வரியிடம் திரும்பி கைகளைக் கூப்பி, "சாரி பெரிம்மா" என்றவள் அங்கிருந்து இரண்டு நிமிடத்தில் கிளம்பி விட்டாள்.

முருகானந்தம் வந்தவுடன் தாய் செய்ததை தந்தையிடம் மதி சொல்ல, மனைவியை அவர் கடித்தெறிந்து விட்டார் வார்த்தைகளால். பின் அவர் அனைவரிடமும் மன்னிப்பைத் தெரிவித்து விட்டு மனைவியையும் மகனையும் கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டார்.

"அம்மா!" என்ற வீட்டு வேளையாளின் குரலில் ஜீவா, சதாசிவம், ஜெயா, மதி,செந்தில்நாதன், சுமதி அனைவரும் திரும்பினர்.

"மனசு கேக்கல... அதான் சொல்றேனுங்க... தப்பா நினைக்காதீங்க... கௌசி பாப்பா அதுக்காக மட்டும் போகலங்க... வந்து... காத்தால பாப்பா வந்தப்போ, நம்ம சந்தியா பாப்பா..." என்று தொடங்கியவர், சந்தியா காலையில் கௌசியை இகழ்ந்துரைத்ததைப் போட்டு உடைத்தார்.

அவ்வளவு தான், மாலை வீடு திரும்பிய தங்கையை ஜீவாவின் கரம், பதம் பார்த்தது. சந்தியா என்ன என்று சுதாரிப்பதற்குள் ஜெயா அவளை வார்த்தைகளால் வெளுவெளு என்று வெளுத்து விட்டார்.

"ஏன்டி? மதி அடுத்த வீட்டுப் பொண்ணுதானே... அவளுக்கு இருக்கிற அக்கறை உன்கிட்ட கொஞ்சம் இருந்திருந்தா... கௌசியை அப்படிப் பேசிருப்பயா? ச்சி... இந்த புத்தி எங்க இருந்துடி வந்துச்சு உனக்கு?" என்று கௌசியின் நிலையை முழுதாக அறிந்து குமுறிய ஜெயா, வயது மகள் என்றும் பாராமல் அவளை அடித்து விட்டார்.

மாலையில் மதியைப் பார்க்க வந்த வரதராஜன் உள்ளே நடந்த அனைத்தையும் கேட்டுவிட்டார். அவர் வந்ததைக் கண்ட ஜீவா தலையைப் பிடித்துக் கொள்ள சதாசிவம் தான், "உள்ளே வாங்க மச்சான்" என்று அழைத்தது.

உள்ளே வந்து உட்கார்ந்தவர், "வாழ்த்துக்கள் ஜீவா, மதி" என்று முயன்று தன் குரலை மகிழ்ச்சியாக வைத்துச் சொன்னார்.

"வந்து... நம்ம முறைப்படி... அதான் வாங்கி வந்தேன்" என்று ஒரு பவுன் தங்கக்காசை மதியின் கையிலும் ஜீவாவின் கையிலும் வைத்துத் தர, எல்லோருக்கும் அந்த வீட்டில் கூசிவிட்டது. அவர் நினைத்திருந்தால் தங்கைகளை எப்படியோ என்று விட்டிருக்கலாம்.

ஆனால், இன்று வரை முறை அதுஇது என்று எல்லாவற்றையும் செய்யும் மனிதனிடம் அவர்களால் மூஞ்சியைக் கூட சரியாகப் பார்க்க முடியவில்லை. அதுவும் இந்த நிலைமையில் அவர் இருக்கும் கஷ்டத்திற்கு இது அதிகம் தான்.

"சரிப்பா... நான் கிளம்பறேன்" என்று வரதராஜன் எந்தரிக்க, எல்லோருக்கும் மிகவும் தர்ம சங்கடமான நிலை ஆனது. சமாதானத்திறகாகக் கூட யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

"சந்தோஷமா சந்தியா... ஆனா, நீ இந்த அளவுக்கு பிகேவ் பண்ணுவன்னு நினைக்கல... படிச்ச பொண்ணு தானே நீ? பாத்தீல... நீ இப்படி பண்ணியும் உன் மாமா எதுவும் பேசாமல் அவரோட முறைய பண்ணிட்டு போயிட்டாரு... அதுதான் அவர். கௌசியும் வேற எதுவும் பேசாமல் போயிட்டா... இப்போதாவது புரிஞ்சுக்க" என்று சதாசிவம் மகளை அதட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.

வீடு வந்த வரதராஜன் உள்ளே நுழைய செந்தில்நாதன் முன் அறையில் உட்கார்ந்திருந்தார். சுமதி சமையலறையில் இருந்தார். கௌசி வழக்கம் போல் அவள் அறையில் அடைந்து கிடந்தாள். கௌசி காலை ஜெயா வீட்டில் இருந்து கிளம்பிய கால் மணிநேரத்தில் அவர்களும் மனம் கேட்காமல் இங்கேயே வந்தனர்.

உள்ளே வந்து சட்டையின் மேல் இரண்டு பட்டன்களைக் கழட்டியபடி உட்கார்ந்தவர், செந்தில்நாதன் அருகில் அப்படியே கண்மூடி அமர்ந்தார். அவருக்கு மனம் எல்லாம் தொய்ந்தது போல இருந்தது. தன்னை யார் என்னசொன்னாலும் தாங்கிக் கொள்வார். ஆனால், தன் மகளை... என்று நினைக்கும் போதே தன் இயலாமையால் அவரின் மனம் வலித்தது.

மூடிய கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்க்க, "மச்சான்..." என்ற செந்தில்நாதனின் அழைப்பில் கண்ணைத் திறந்தார்.

"சொல்லுங்க மாப்பிள்ளை" என்றார் வரதராஜன் கண்களை மூடியபடியே.

"நம்ம கௌசியை எங்க வீட்டுக்கு அனுப்பி வைங்க" என்றார் செந்தில்நாதன்.

"அவ வந்தானா கூட்டிட்டு போங்க மாப்பிள்ளை... எப்போமே அந்த அறைக்குள்ள தான் அடஞ்சு கிடக்கா" என்றார் கண்களைத் திறந்து செந்தில்நாதனைப் பார்த்துத் தொய்ந்த குரலில்.

"இல்லை மச்சான்... நான் அவள மருமகளா என் வீட்டுக்கு அனுப்பி வைங்கன்னு கேக்கறேன்" என்று கேட்க, வரதராஜனுக்கு நா எழவில்லை.

"நீங்க..." என வரதராஜன் இழுக்க,

"ஆமாம் மச்சான். நம்ம விக்னேஷிற்குத்தான் கேட்கிறேன்" என்று செந்தில்நாதன் சொல்ல அவரின் கையைப் பிடித்துக் கொண்டார் வரதராஜன்.

"ஆமாண்ணே... அந்தப் பொம்பளை என்னப் பேச்சு பேசுனா தெரியுமா? அப்புறம் அந்த சந்தியா கழுதை, என்ன வாயி அதுக்கு இப்பவே... அதுவும் இல்லாம எனக்கு அவ, எங்க கூட வரது நல்லதுன்னு தோனுது" என்றார் சுமதி.

"எந்தப் பொம்பளை? என்ன ஆச்சு?" என்று பரமேஸ்வரி பேசியதை அறியாத வரதராஜன் கேட்க, சுமதி அனைத்தையும் கூறினார். வரதராஜனிற்கு இப்போது கோபம் வந்தது. அந்தப் பொம்பளை யார் என் மகளைப் பேச என்று குமுறினார்.

"சுமதி, விக்னேஷ்கிட்ட கேட்டிங்களா? அவனைக் கேட்காம" என்று வரதராஜன் கேட்க சுமதி குறுக்கிட்டார்.

"அண்ணா... அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவன்தான் அடுத்த வாரம் வரான்ல" என்று பேச்சை முடித்தார் சுமதி. ஊருக்கு வரும் எண்ணத்தில் சீக்கிரமே வேலையை முடித்திருந்தான் விக்னேஷ்.

அந்த நேரம் மனம் கேட்காமல் அண்ணன் வீட்டிற்கு வந்தனர் ஜெயாவும் சதாசிவமும். பின்னாடியே ஜீவாவும் மதியும் வந்தனர். ஜெயா தன் அண்ணனிடம் நடந்ததிற்கு மன்னிப்புக் கேட்க வரதராஜனோ, "விடுமா... நீ என்ன பண்ணுவே" என்று முடித்துக் கொண்டார்.

பின் விஷயத்தை அறிந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால், விக்னேஷும் சம்மதம் தெரிவித்து விட்டான் என்று சுமதி சொல்லியபோது ஜீவாவும் மதியும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

‘நான்சியிடம் என்ன சொல்லுவான்?’ என்று இருவர் மனதிலும் எழுந்தது.
பின் அவன் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.

அப்போது தான் அறையைத் திறந்து வெளியே வந்த கௌசி அனைவரையும் கவனித்தாள். காய்ச்சல் வேறு வந்திருந்தது அவளுக்கு காலையில் நடந்ததை மனதில் போட்டு அரற்றி. முகம் எல்லாம் காய்ச்சலால் வீங்கி இருக்க,அனைவரும் அவளை பரிதாபமாகப் பார்ப்பது வேறு அவளை வாட்டியது. வந்து அவர்களுடன் எதுவும் பேசாமல் அமர்ந்தவள் தன் பக்கத்தில் இருந்த சுமதியின் தோளில் காய்ச்சல் தாங்காமல் கண்மூடி அமர்ந்தாள்.

"கௌசி" மெதுவாக அழைத்தார் வரதராஜன். அவள் ஒருமாதமாக எந்தச் சத்தத்துக்கும் பயப்படுவதே அதற்கு காரணம்.

"சொல்லுங்கப்பா" என்றாள் முடியாத குரலில். "ரொம்ப முடியலையா பாப்பா... ஹாஸ்பிடல் போகலாமா?"

"இல்லப்பா... சாப்பிட்டு டாப்ளட்ஸ் போட்டா சரி ஆகிரும்பா" என்று காய்ச்சல் குரலில் சொன்னாள்.

"ம்ம்... பாப்பா, அடுத்த வாரம் உனக்குக் கல்யாணம்... விக்னேஷ் கூட" என்று வரதராஜன் சொல்ல, கௌசி காய்ச்சலையும் மறந்து அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.
 
  • Wow
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-16

"முடியாதுப்பா... முடியவே முடியாது" என்று கத்தினாள் கௌசி கண்ணீருடன்.

"இல்லம்மா... நீ ஒத்துக்கிட்டு தான் ஆகணும். குருவை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பி" அவர் சொல்ல, கௌசிக்கு செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல இருந்தது.

"அப்பா, என்னால... வேண்டாம் ப்பா... விக்னேஷ் இதுக்கு சம்மதிக்க மாட்டான்" என்றாள். அவன் நான்சியைக் காதலிப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறாள் கௌசி. மதியும் ஜீவாவும் கூட.

"விக்கிக்கு சம்மதம்தான். அடுத்தவாரம் வர்றான் கௌசி" என்று சுமதி சொல்ல, கௌசிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

'தனக்காகத் தான் ஒத்துக் கொண்டிருப்பான். மற்றபடி அவனுடைய காதலை மறந்து எப்படி... ச்சீ' என்று நினைத்தவள், தன் தந்தையிடம் பேச்சை வளர்த்தாள்.

"அப்பா, யார் ஒத்துக்கிட்டா என்ன... நான் ஒத்துக்க மாட்டேன்... இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கவே மாட்டேன்" என்று பைத்தியம் பிடித்தவள் போலக் கத்த, ஜீவா அவளருகில் எழுந்து சென்று கௌசியை நிலைக்குக் கொண்டு வந்தான். இல்லை, கொண்டு வர முயற்சி செய்தான். மதி கௌசியையும் அவள் அழுகையையும் கோபத்தையும் கண்டு அப்படியே விக்கித்து நின்றாள்.கௌசிக்கு இப்படிக் கோபப்படத் தெரியுமா என்று.

"கௌசி இங்க பாரு... கன்ட்ரோல் யுவர் செல்ஃப்" ஜீவா கத்தி அதட்ட கௌசி அப்படியே நின்றாள்.

"ஜீ, என்னால முடியாது ஜீ... ப்ளீஸ், நீயாவது சொல்லேன்..." என்று இருகைகளையும் கூப்பியபடிச் சொல்ல, அவளது கையைப் பிடித்துக் கீழே இறக்கியவன்,

"எ... என்ன கௌசி, கையெல்லாம் எடுத்துக் கும்பிடறே? ப்ளீஸ் கௌசி... உன் நல்லதுக்குதான் சொல்றாங்க புரிஞ்சிக்கோ! எல்லார் முடிவுக்கும் ஒத்துக்க... இந்த ஒருடைம் கௌசி" என்று ஜீவாவும் பெரியவர்கள் பக்கம் இருந்து சொல்ல, கௌசி ஜீவாவின் கையை உதறித் தள்ளினாள். விக்னேஷை உள்ளே இழுக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை. அடுத்த கல்யாணம் என்ற வார்த்தையே அவளிற்குக் கசந்தது.

"என் வாழ்க்கையைக் கையில் எடுக்க உங்கள் எல்லோருக்கும் யார் ரைட்ஸ் தந்தது" என்று இந்தக் கல்யாணம் நடக்கக்வே கூடாதென்ற ஆத்திரத்தில் கௌசிகா வார்த்தைகளை விட, வரதராஜனின் கரம் கௌசியின் கன்னத்தில் இறங்கியது.

ஏற்கனவே காய்ச்சலில் இருந்தவள் இப்போது தன் தந்தை அறைந்த அறையில் கீழே விழுந்தாள். தன் தந்தையா தன்னை அடித்தார் என்பதை உணர்ந்தவள் ஏறிட்டு அவளைப் பார்க்க தன்தந்தை கோபத்தில் நிற்பதைப் பார்க்க அப்படியே நடுங்கி விட்டாள்.

"இவங்களுக்கு உரிமை இல்லையா? யாரைப் பார்த்து என்ன கேள்வி கேக்கறே..." என்று கர்ஜித்தவர்,

"உன்னை சின்ன வயதில் தூக்கி வளர்த்தவங்க, இவர்கள பார்த்து இப்படி பேச உனக்கு வெட்கமாக இல்ல... சொல்ற பேச்சைக் கேட்டு இருக்கிறதுனா இரு... இல்லனா என் கண் முன்னாடி நிக்காதே! எவ்வளவு நாள்தான் நானும் எவ்வளவு கஷ்டத்தைத் தாங்குறது? நானும் சாதாரண மனுஷன்தான்" என்று என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் வரதராஜன் கோபத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

தந்தையின் கோபமும் வார்த்தைகளும் உடலை நடுங்கச்செய்ய, நடுங்கி கீழே கிடந்தவளை ஜெயா சென்று அணைத்துக் கொண்டார். "என்னண்ணா நீங்க? இப்படியா அடிப்பீங்க புள்ளைய.. உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எங்களுக்கும் இருக்குண்ணே... நீங்க இவ மேல கை வைக்காதீங்க" என்று நடுங்கிக் கொண்டிருந்த கௌசியை தன் தோளோடு அணைத்துச் சொன்னவர் அழுதேவிட்டார்.

கௌசியின் வார்த்தைகள் அங்கு யாரிடமும் செல்லவில்லை. இப்படியே அவளை விட முடியாது என்று எண்ணியவர்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டனர். ஜெயாவிற்கும் விக்னேஷ் அவளை மாற்றுவான் என்ற நம்பிக்கையில் கௌசியைத் தேற்ற முயன்றார்.

ஆனால், விரக்தியில் இருந்த கௌசியின் மனமோ எதையும் ஏற்கவில்லை. எல்லோரிடமும் பேசுவதை நிறுத்தினாள். தன் அன்னையை நினைத்து ஊமையாய் மனம் அழுதது. அவர் இருந்திருந்தால் இந்நேரம் என் மனதைப் புரிந்திருப்பார் இல்லையா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். பிறந்ததில் இருந்து அன்னையை நினைத்து அழாதவள், ‘அம்மா, அம்மா’ என்றே கிடந்தாள்.

"பேசாமல் என்னையும் உன்கூட கூடிட்டு போயிருக்கலாம்ல மா" என்று வந்த இரவுகளில் அழுதழுது தலையணையை நனைத்தாள்.

"டேய் விக்னேஷ்..." என்று ஓடிச்சென்று ஒன்றரை மாதம் கழித்து பார்த்த விக்னேஷைக் கட்டிக் கொண்டான் ஜீவா. கௌசியைத் தவிர எல்லோரும் ஏர்போட்டிற்குச் சென்றிருந்தனர். குடும்பத்தினரை பார்த்தவன் முகத்தில் சுரத்தே இல்லை. அவன் கண்கள் இன்னொருத்தியைத் தேடி ஏமாந்தது.

எல்லோரும் நேராக வரதராஜனின் வீட்டிற்கு வர, வீடு திறந்து கிடக்க ப்ரௌனி கட்டிய இடத்தில் இருந்து அதுக்கும் இதுக்கும் ஓடி கழுத்தில் கட்டியச் சங்கிலி அறுந்துபோகும் அளவிற்கு குரைத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் உள்ளே சென்று கௌசியைத் தேட அவளின் சுவடே இல்லை. ஒரு வெள்ளைக் காகிதம் மட்டும் இருந்தது அவளின் படுக்கையின் மேல்.

எடுத்துப் படித்த விக்னேஷின் முகம் இறுகியது. ஜீவாவின் கையில் கொடுத்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து விட்டான். அதில் இருந்தது இதுதான், ‘ஸாரிப்பா... நீங்க இனி என் கஷ்டத்தைத் தாங்க வேண்டாம்ப்பா, என்னால முடியலப்பா... என்னை யாரும் தேடி வராதீங்க... வந்தால் உயிரை விடவும் யோசிக்க மாட்டேன்’ என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தாள் கௌசி.

எழுதி வைத்துவிட்டு கௌசி சென்ற இடம் கம்பம். எங்கே போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவள் சங்கரலிங்கம் ஐயா நியூஸ் பேப்பரில் கொடுத்த செய்தி மூளையில் மின்னல் அடிக்க நேராக கம்பம் சென்றாள். அவளைப் பொறுத்தவரை விக்னேஷை இக்கட்டில் இருந்து தப்பிக்க வைத்து விட்டாள்.
அவளால் விக்னேஷ் நான்சியுடன் திருமணம் செய்து வாழ்வதை பார்க்க முடியாது. அந்தளவு தனக்கு பரந்த மனப்பான்மை இனி வராது என்று நினைத்தாள். மேலும் தன்தந்தைக்கு இனி தன்னால் எந்த பாரமும் வேண்டாம் என்று தான் கிளம்பினாள்.

அவள் கிளம்பிவிட்டாள். ஆனால், அதற்குமேல் தான் அங்கு யாராலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. விக்னேஷ் இந்த வேலையால்தான் எல்லாம், அந்தப் பேயைச் சந்தித்தது, கனடா சென்றும், கௌசிக்காக வர முடியாமல் இருந்து, மறுபடியும் இழந்தது என்று வேலையையே விட்டுவிட்டான். அவனிடம் எல்லோரும் கேட்டும் அவன் யாரிடமும் எதுவும் மூச்சு விடவில்லை.

ஜீவாவிடம் மட்டும் நான்சியின் விஷயத்தைச் சொல்லி இருந்தான். மதியின் காதிற்கும் அது சென்றது. "அப்போ அவள லவ் பண்ணியிருந்தா, கௌசியைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுக்க மாட்டாருல" என்று மதி குத்தியபோது ஜீவா, "மதி... கௌசி போன கோபத்துல அவனை குறை சொல்லாதே" என்று அதட்டினான்.

"எப்படி ஜீவா? உன்னாலையும் விக்னேஷ்னாலையும் இப்படி இருக்க முடியுது. நம்ம கல்யாணத்திற்கு எப்படி என் அப்பாகிட்ட பேசினா... அப்புறம் நம்மள விட சந்தோஷமா இருந்தது அவதான். அன்னைக்கு வரதராஜன் சித்தப்பா அவளை அடிச்சு, அவ அழுது நடுங்குனது என் கண்ணு முன்னாடியே இருக்கு ஜீவா. எனக்கு இந்த டைம் அவளை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி இருக்கு... ஸீ இஸ் எ வெரி குட் ஃப்ரண்ட் அண்ட் சிஸ்டர் டூ மீ... என்னால உங்கள மாதிரியும்விக்னேஷ் மாதிரியும் சுயநலமா இருக்க முடியல" என்று நான்கு மாதமான மகவோடு அழுத மனைவியைப் பார்க்க பாவமாக இருந்தது. ஜீவாவும் விக்னேஷும் மதி சொன்னது போல இருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் கௌசியைத் தேட முயற்சி செய்துகொண்டு இருந்தனர்.

அடுத்து வந்த மாதத்தில் செந்தில்நாதன் மாரடைப்பால் இறந்துவிட மேலும் குடும்பமே கலங்கியது. விக்னேஷும் இனி அடுத்து என்ன என்று பார்த்தான். அவனால் சென்னையிலேயே இருக்க முடியவில்லை. முதலில் அந்த இடத்தில் இருந்து நகர நினைத்தவன் எல்லோரின் முன்னிலையில் தன் அன்னையிடம் அது பற்றிப் பேசினான்.

"அம்மா, இந்த ஊரே எனக்குப் பிடிக்கவில்லை. நம்ம வேற ஊருக்குப் போனா என்ன?" என்று கேட்டான்.

"ஆமா விக்கி... என்னாலயும் இங்க இருக்க முடியலை, உங்கப்பா ஞாபகமாகவே இருக்கு. வேற எங்காவது போய் விடலாம்" என்று அழ, "பேசாமல் கோயம்புத்தூரே வந்திருங்க" என்று ஜீவா சொல்ல விக்னேஷும் சம்மதித்தான்.

"மாமா, நீங்களும்தான்" என்று விக்னேஷ், வரதராஜனைப் பார்த்துச் சொல்ல அவர் மறுத்தார்.

"இங்கையே இருந்து என்ன பண்றதா உத்தேசம் மாமா உங்களுக்கு... உங்களை விட்டுட்டு போற அளவுக்கு என்னை என்ன சுயநலவாதின்னு நினைச்சீங்களா? என் மேல் நம்பிக்கை இருந்தா என் கூட வாங்க மாமா" என்று சொல்ல அவரால் மறுக்க முடியவில்லை.

எதுவும் சென்னை ஞாபகம் வேண்டாம் என்று நினைத்த விக்னேஷ் தன் அன்னையின் சம்மதத்துடன் அனைத்தையும் விற்றான். வரதராஜனும் வீட்டை விற்றார். ஆனால், விற்ற பணத்தில் எதையும் விக்னேஷ் உபயோகிக்கவில்லை. அதை அன்னை பெயரிலும் மாமா பெயரிலும் டெபாஸிட்செய்து விட்டான்.

அடுத்த இரண்டு வாரத்தில் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தவன் அங்கு இங்கு என அலைந்து லோன் போட்டு, கூடவே தான், நான்கு வருடம் சம்பாதித்த சேவிங்ஸில் இருந்து தான் அந்த போட்டோகிராப்பி ஸ்டியோவை ஆரம்பித்தது. கூடவே நிறைய கடைகளுக்கு விளம்பரமும் செய்து தந்தான். அதில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரம் ஹிட் ஆக அவனுக்கு நிறைய ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தது. பெரிய பெரிய கல்யாணத்திற்கும் ஆர்டர்கள் வந்தது.

கோயம்புத்தூர் வந்து வீடு பார்த்தவன் சிட்டிக்குள் பார்க்காமல் சிட்டிக்கு வெளியில் கிணத்துக்கடவில் வீடு பார்த்தான். அப்போதுதான், தன் வீட்டிற்குப் பின்னால் இருந்த மகாலிங்கம் அய்யாவின் அறிமுகம் கிடைத்தது. வயது வித்தியாசம் பாராமல் இருவருக்கும் ஒரு நட்பு இழையோட, சிறிதுநாளில் இயற்கை விவசாயம் பற்றி இருவரும் தங்கள் பேச்சைத் திருப்ப, "உனக்கு அதில் விருப்பமாப்பா?" என்று கேட்டார் மகாலிங்கம்.

"இருக்கு தாத்தா, அதைப் பத்தி படிச்சிருக்கேன். ஆனா முழுசாத் தெரியாது" என்று சொன்னான்.

"என் நிலத்தில் நான் சிலநாளுக்கு முன், இயற்கை விவசாயம் செய்ய எல்லாம் கெமிக்கல் இல்லாமல் இயற்கை முறைப்படி மாற்றினேன். ஒருவருடம் ஆச்சு மாத்தி... பேசாமல் நீ பண்ணேன் விக்கா! நான் உனக்கு ஹெல்ப் பண்றேன் எல்லாத்துலையும்" என்று சொல்ல,

"தாத்தா அது உங்க இடம்... நான் எப்படி?" என்றான்.

"சரிப்பா... இரண்டுபேரும் பண்ணலாம். வர வருமானத்தில் பாதி பாதி சரியா? நீ சும்மா என் நிலத்தில விவசாயம் பண்ண வேண்டாம்" என்று சொல்ல, சரி என்று சம்மதித்து இருவரும் சம்மதித்து இரண்டு வருடமாக சாதித்து வருகின்றனர்.

ஜீவாவும் ஒரு சிறிய நிறுவனத்தை நிறுவி முதலில் தடுமாறியவன் பின்பு கால் ஊன்றி நின்றான். இன்னும் தளரவில்லை.

***

இன்று...

காலையில் கண் விழித்த கௌசி எழுந்து வெளியே வர, ஜீவா தூங்கிக் கொண்டு இருக்க, விக்னேஷைத் தேடிக்கொண்டு வெளியே வந்தாள். அவன் பல் விலக்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு அவளும் அவள் வேலையைத் தொடங்கினாள்.

வேலைகளை எல்லாம் முடித்து, லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்தவள் வெளியே வர ஜீவா, "ஏய் நீ இன்னும் ரெடி ஆகலையா?" என்று கேட்டான்.

"ரெடி ஆகிட்டேன் ஜீ"

"என்ன இது, எதுமே ரெடி ஆன மாதிரி இல்லையே நீ?" ஜீவா. அவள் பழைய கௌசி என்ற நினைவிலேயே அவன் கேட்டான். ஏனெனில், அப்படி ஒப்பனை செய்பவள் இப்படி ஒரு ஒப்பனையும் இல்லாமல் நின்றது ஜீவாவை அப்படிக் கேட்கச் செய்தது.

அவன் கேள்வியைப் புரிந்து கொண்டக் கௌசி, "இல்ல ஜீ... இப்போ எல்லாம் இப்படித்தான் ரெடி ஆவேன்..." என்றுவிட்டு பெட்டிகளை எடுக்க விக்னேஷும் ஜீவாவும் எல்லாப் பைகளையும் தூக்க, கௌசி அந்த மஞ்சள்நிற ட்ராலியை மட்டும் வைத்திருந்தாள் கையில்.

சங்கரலிங்கம் அய்யா வீட்டில் அவரிடமும் அவர் மனைவி மற்றும் பிரபுவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினர் மூவரும். கிளம்பும்போது கவிதாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொன்னவள் சுரேஷையும் நேரில் வரச் சொல்லி, சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

தேனி வந்து மதுரை பஸ் ஏற, "ஏன் ஜீ? மதுரைல என்ன வேலை?" என்று கேட்டாள்.

"இல்ல கௌசி... நாம ப்ளைட்லையே போயிரலாம், அப்பதான் சீக்கிரம் போவோம். இல்லைனா பஸ் மாறிமாறி நீ டையர்ட் ஆயிருவ" என்று சொல்ல முன்னாடி சென்று கொண்டிருந்த விக்னேஷ் இருவரையும் திரும்பி முறைத்தான்.

"நீங்க இரண்டுபேரும் இப்படிக் கதை பேசிட்டு வந்தா... நாளைக்குதான் கோயம்புத்தூர் போய் சேருவோம்" என்று திட்ட, இருவரும் அவனுடன் இணைந்து நடந்தனர்.

மதுரையை அடைந்து கோயம்புத்தூர் ப்ளைட் ஏறி கோயம்புத்தூரை அடையும் போது மணி இரண்டு ஆகியிருந்தது. கேப்பை புக் செய்து, ஜீவாவின் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் வீட்டிற்குள் நுழையும்போதே வெளிவந்த மதி கௌசியைக் கட்டிக் கொண்டாள்.

"வா கௌசி, வா..." என்று மதி வாய் நிறைய அழைக்க, கௌசியின் உள்ளம் அவளது அன்பில் உருக ஆரம்பித்தது உண்மைதான்.

உள்ளே அழைத்துச் சென்ற மதி, "நீ ப்ரஷ் ஆகிட்டு வா கௌசி... நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்",

"இல்ல மதி, எனக்குப் பசி இல்ல... கொஞ்சம் தலைவலிக்கற மாதிரி இருக்கு... டீ வேணாப் போட்டு தா மதி"

"சரி" என்று மதி செல்ல, உள்ளே சென்ற கௌசி முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வர, "நீங்க தா... சிட்டியா?" என்ற கேள்வியில் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த கௌசி யார் என்று பார்க்க, பெட்டில் வியாஹா தூக்கக் கலக்கத்தில் கண்களைக் கசக்கியபடி அவளைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.
ஃபோட்டோவில் பார்த்த வியாஹா முகம் ஞாபகம் வர அவள் அருகில் சென்ற கௌசி, "என்ன கேட்டீங்க?" எனக் கேட்டாள்.

"நீங்க தா சிட்டியா?" என்று தன் அழகானச் சிப்பி இமைகளை மூடித் திறந்து தூக்கக் கலக்கத்தில் இருந்தபடியே கேட்க, அவளை அள்ளி வைத்துக் கொஞ்சத் தோன்றிய மனதை அடக்கினாள்.

"ஆமா நான் தான் சித்தி..." என்று வியாஹா நுனிமூக்கில் தன் ஆள்காட்டி விரலை வைத்து அவளுக்கு வலிக்காத வண்ணம் நிமிண்டினாள்.

"நீங்க ஊருக்கு போயிட்டு வந்துட்டீங்ங்களா... பெர்ய ஸ்கூல் முடிஞ்சா..." என்று கையை விரித்து மழலையில் கேட்க கௌசி விழித்தாள்.

"அதெல்லாம் சித்தி முடிச்சாச்சு... நீ எந்திரி, அப்பாவும் சித்தாவும் வந்தாச்சு" என்றபடி மதி உள்ளே வர, சித்தப்பா அப்பா என்றதும் வியாஹா கத்திக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

"அவகிட்ட உன் போட்டோ காமிச்சு சின்ன வயசுல இதான் சித்தின்னு சொல்லும் போதெல்லாம், எப்போ வருவேன்னு கேப்பா கௌசி... நான், நீ பெரிய ஸ்கூல் அதாவது காலேஜ் போயிருக்கன்னு சொல்லி வச்சிருந்தேன்" மதி புன்னகை முகத்துடன்.

"தேங்க்ஸ் மதி"

"எதுக்கு தேங்க்ஸ் கௌசி... உன்னப் பத்தி மறக்காம சொன்னதுக்கா? உன்ன எங்களாலேயே மறக்க முடியாது கௌசி. அதான் இப்போ எல்லோரும் ஒன்னு ஆயிட்டோம்ல... ஃப்ரீயா இரு கௌசி" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

வெளியே வந்த கௌசிக்கு மதி டீயைத் தர, கௌசி கப்பை காலி செய்தாள். "கௌசி, நீ விக்கி கூட ஹாஸ்பிடல் போ... நான் ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்திடறேன்" என்று ஜீவா சொல்ல, தலையை ஆட்டிய கௌசி விக்னேஷை பார்த்தாள். அவனோ அவனிற்கும் பேச்சுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல இருந்தான்.

ஜீவா தன் காரில் கிளம்ப அப்போதுதான் வெளியில் வந்த விக்னேஷிற்கு தான் ஹாஸ்பிடலிலேயே கடைசியாகத் தன் பைக்கை நிறுத்தியது ஞாபகம் வந்தது.

"நீங்க வேணும்னா... என் ஸ்கூட்டிய எடுத்துட்டுப் போங்க விக்னேஷ்" என்று மதி புரிந்தவளாய்ச் சொல்ல,

"இல்ல மதி. பைக் ஹாஸ்பிடல்ல இருக்கு... ஸோ ஆட்டோல போயிட்டு பைக் எடுத்திட்டு வந்திடறேன்" என்றான் விக்னேஷ்.

"ஒரு நிமிஷம் விக்னேஷ், நைட் இங்கயே கௌசியைக் கூட்டிட்டு வாங்க... சாப்பிட்டு விட்டு அப்படியே அங்க யார் இருக்காங்களோ அவங்களுக்கும் டிபன் எடுத்துட்டு போயிருங்க" என்று மதி சொல்ல தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

ஆட்டோ பிடித்தவன் ஏறு என்றபடி கையை கௌசியிடம் காட்ட, கௌசி எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்தாள். ஏறி அமர்ந்தவளுக்கு அப்பாவின் எண்ணம் ஆக்கிரமிக்க ஏனோ இதயம் படபடத்தது.

மூன்றரை வருடம் கழித்து பார்க்கப் போகிறாள். அவரைத் தன்னால் எதிர்கொள்ள முடியுமா என்று நினைத்தவளுக்கு முகம் கன்றியது. ஏதோ தோன்ற முகத்தைத் திருப்பியவள் விக்னேஷ் அவளைப் பார்ப்பதை உணர்ந்தாள். அவள் பார்ப்பது தெரிந்தும் அவளையே அவன் பார்க்க, அந்தப் பார்வையின் அர்த்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது விழி வீச்சைத் தாங்காது முகத்தை வெளியே திருப்பிக் கொண்டாள்.

ஹாஸ்பிடல் வந்து இறங்கும் போதே கௌசிக்கு கால்கள் உடம்பெல்லாம் ஏதோ செய்தது. அவர்களை எதிர்கொள்ள முடியுமா என்று தோன்றி கைகள் நடுங்கின. உதட்டிற்கு மேல் வியர்த்தது. விக்னேஷை தொடர்ந்தவள் அவன் செல்லும் அறைக்குள் செல்ல ஒருநிமிடம் தயங்கி நின்றவள், கால்களை நகர்த்தி முன்சென்றாள். அண்ணனுடன் பேசிக் கொண்டு ஜெயா மட்டும் இருந்தார்.

கௌசியைப் பார்த்த ஜெயா, "கௌசி..." என்று கண்கள் விரிய அழைக்க, வரதராஜனும் தங்கையிடம் இருந்து, பார்வையைத் திருப்பிப் மகளைப் பார்த்தார். தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நிற்க, விக்னேஷும் ஜெயாவும் அவர்களுக்கு தனிமை தந்து வெளியே சென்றனர்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய உதட்டைக் கடித்துக் கொண்டு தந்தையைப் பார்க்க, அவரோ வேதனையோடு மகளின் தோற்றத்தைப் பார்த்தார். அவள் இருந்ததிற்கும் இப்போது இருப்பதிற்கும், ஜீவாவின் மனதில் எழுந்த அதே எண்ணம் மனதில் எழுந்து தாக்கியது.

"கௌசிமா..." என்று அழைக்க, அவ்வளவு தான். பெட்டில் இருந்த தன் அப்பாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் கௌசி. அறுவை சிகிச்சை செய்த உடம்பால் காலை டக்கென்றும் நகர்த்த முடியவில்லை. "மன்னிச்சிருங்கப்பா..." என்று நெற்றியை அவர் காலின் மேல் வைத்து அழுதவளை அவரால் பேசவே முடியவில்லை.

"கௌசிமா... இங்க வா" என்று அவர் கூப்பிட, அவர் அருகில் செல்ல கௌசியின் கையைப் பிடித்தவர், "இனிமேல் அப்பாவை விட்டுப் போக மாட்டீல?" என்று கேட்க வலமும் இடமும் தலையை ஆட்டினாள் கௌசி.

"ஸாரிப்பா..." என்று மறுபடியும் கேட்க, "அப்பா கூடவே இனி இரு பாப்பா அதுவே போதும்" என்றார்.

"சரி... வெளியில் உன் அத்தையும் விக்னேஷும் நிக்கறாங்க பாரு... உள்ள வர சொல்லு" என்று வரதராஜன் சொல்ல இருவரையும் அழைத்தாள்.

"பாப்பா"

"சொல்லுங்கப்பா"

"அப்பாவிற்கு ஒரு கடைசி ஆசைடா"

"அப்பா", "மாமா", "அண்ணா" என்று ஒரு சேர கௌசி, விக்னேஷ், ஜெயா மூவரும் அதட்டினர்.

"இல்லடா நான் சொல்லிடறேன், அப்பா அன்னிக்கு உன்கிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன், ரொம்ப ஸாரி..."

"அதெல்லாம் இல்லப்பா... விடுங்க" கௌசி சங்கடமானக் குரலில்.

"இல்லடா... நீ இல்லைன்னு சொன்னாலும் அதுதான் உண்மை. அந்த நிலையில் உன் மனசை புரிஞ்சுக்கலையோனு தோனுது. கொஞ்சம் உனக்கும் ஒரு இடைவெளி தந்திருக்கனும். உன்ன அப்படியே விட என்னால முடியாது பாப்பா... நீ இல்லாம இத்தனை நாள் நான் இருந்ததே பெரிசு... இதோ இவன் மட்டும் இல்லைனா என்னைக்கோ போயிருப்பேன்" என்று விக்னேஷைக் காட்டிப் பேசினார்.

"இங்க பாரு கௌசிமா... நீ என் கூடயே இருக்கறன்னு சொல்ற, அப்பாக்கு ரொம்ப சந்தோஷம்தான். நீ அதை விக்னேஷைக் கல்யாணம் செஞ்சிட்டு இருந்தா எனக்கு இன்னும் நிம்மதிடா..." என்று சொல்ல, கௌசி தன் கையைப் பிடித்திருந்தத் தந்தையின் கையைப் பார்த்திருந்தாளே தவிர வேறு எதுவும் பேசவில்லை.

"எனக்கு சம்மதம் மாமா... நீங்க வீட்டுக்கு வந்து பத்து நாட்களில் கல்யாணம்" என்று சொல்ல கௌசி உறைந்து நின்றாள்.

அவள் ஏதோ பேச வாயெடுக்க, "கௌசி நீ வந்த உடனே டாக்டர் பேசனும்ன்னு சொன்னாரு... பர்ஸ்ட் என்கூட வா!" என்று விக்னேஷ் அழைக்க அவனுடன் வெளியில் வந்தாள்.

வெளியே வந்தவளிடம், "இங்க பாரு, அவரு சொல்றதுக்கு தலைய ஆட்டு... அவரு பாடி கண்டிஷன் அப்படி" என்று டாக்டர் சொன்னதைச் சொல்லியவன், "மறுபடியும் சுயநலமா இருக்காதே" என்று வார்த்தைகளைக் கடித்துக் துப்பினான்.

ஜெயா அன்று இரவு அண்ணனுடன் இருப்பதாகச் சொல்லி, பிடிவாதமாகத் தான் தந்தையோடு இருப்பதாகச் சொன்ன கௌசியை விக்னேஷுடன் அனுப்பி வைத்தார். பைக்கில் ஏறி ஒரு பக்கமாக அமர்ந்தவள் யோசனையிலேயே வந்தாள்.

ஜீவாவின் வீடு வந்தவுடன் இறங்க, ஜீவா வெளியே வந்தான். "நான் இப்பதான் வரலாம்ன்னு கிளம்பிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க... பாப்பாவைத் தூங்க வைக்க லேட் ஆயிருச்சு" என்றான் ஜீவா.

"இல்லடா பரவாயில்லை, மாமா ரெஸ்ட் எடுக்கறாரு... நீ போக வேண்டாம்" என்றுவிட்டான் விக்னேஷ்.

உள்ளே நுழைய மதி ரெடியாக டிபன் எல்லாம் வைத்திருக்க நான்குபேரும் சாப்பிட்டனர். அப்போது தான் ஞாபகம் வந்தவளாக, "சந்தியா எங்கே?" எனக் கேட்டாள் கௌசிகா.

"அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு... இன்னும் மூனு மாசத்துல குழந்தையே பொறக்கப்போகுது" என்று மதி சிரித்துக் கொண்டே, சொல்ல கௌசிகா புன்னகையை மட்டும் உதிர்த்தாள்.

"சதா மாமா எங்கே?" எனக் கேட்டாள் மறுபடியும்.

"அவரு ஒரு முக்கியமானவங்க கல்யாணத்திற்காக பழனி வரை போயிருக்காரு, நாளை வந்துடுவார்" என்று ஜீவா சொன்னான்.

நால்வரும் வந்து ஹாலில் அமர, "ஜீவா, மாமா வீட்டிற்கு வந்ததுக்கு அப்புறம் எனக்கும் கௌசிக்கும் கல்யாணம். சிம்பிளா நம்ம மருதமலையிலேயே வச்சிக்கலாம்" என்றான். ஏற்கனவே தன் அன்னை ஃபோன் பண்ணித் தெரிவித்துவிட்டதால் ஜீவாவும் மதியும் அவ்வளவு அதிர்ச்சி முகத்தில் காட்டவில்லை.

"யாரைக் கேட்டு நீ முடிவு பண்ண?" என்று கௌசியின் குரல் ஆத்திரத்தில் ஒலித்தது.

"நீ வாயை மூடுனா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..." விக்னேஷ்.

கௌசி, "நான் ஏன் வாயை மூடணும், ஆளாளுக்கு என் வாழ்க்கையைக் கையில் எடுத்துட்டு ஆடுவீங்களா?"

"ஆமா, உனக்கு இஷ்டம் இருந்தாலும் இல்லைனாலும் நீ இதுக்கு ஒத்துக்கிட்டு தான் ஆகணும்"

"முடியாது"

"சுயநலவாதி" என்று பல்லைக் கடித்தான் விக்னேஷ்.

"யாரு நானா... நீதான்டா சுயநலவாதி" என்றாள் ஆத்திரத்தில். பின் ஏதோ ஞாபகத்திற்கு வர, "ஆமாம்... நான்சி..." என்று இழுத்தாள் மூவரையும் பார்த்து.

"அதெல்லாம் முடிஞ்சு போச்சு எப்பவோ... இப்போ அது இங்கே தேவை இல்லாதது. நீ கல்யாணத்திற்கு ஒத்துக்கறே டாட்" என்றான்.

"வாய்ப்பே இல்ல, என்னை ஏன் எல்லோரும் டார்ச்சர் பண்றீங்க... அடுத்தவங்களோட ஃபீலிங்ஸைக் கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியாதா?" என்று குரல் கரகரக்க சொன்னவளை மதி சமாதானம் செய்ய வர,

"இல்லை மதி, அப்பாவும் ஹாஸ்பிடல்ல இப்படித்தான் பேசுனாரு... எல்லாருக்கும் அவங்கவங்க சந்தோஷம் தான் முக்கியமாத் தெரியுது. என்னுடைய நிலையை யாருமே புரிஞ்சிக்க மாட்டிறாங்க... சுயநலவாதிகள்" என்று சொல்ல அவளின் கையைப் பிடித்த விக்னேஷ் தரதரவென்று பக்கத்தில் இருந்த அறைக்கு இழுத்துச் சென்றான். அவன் அவளை இழுத்துச் செல்வதில் கௌசி மட்டுமல்ல ஜீவாவும் மதியுமே திகைத்தனர்.
 
  • Like
  • Love
Reactions: Malar and Sowmiya

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-17

விக்னேஷ் இழுத்துச் சென்று கதவைப் பூட்டும் சத்தம் கேட்டு மதி திகைத்து கதவைத் தட்டச் செல்ல, "மதி..." என்று தன் கணவன் ஜீவாவின் குரலில் திரும்பினாள்.

அவனோ வலமும் இடமும் தலையை ஆட்டி, "விடு... அவன் பேசுனா தான் இவ சரிப்பட்டு வருவா" என்று அழுத்தமானக் குரலில் முடிக்க, கணவனின் பேச்சை மீறாமல் இருவரும் ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்தனர்.

உள்ளே இழுத்துச் சென்றவன் அவளைத் தள்ளி கதவைத் தாழிட்டு திரும்ப, "கதவைத் திற" என்று கௌசி கோபமாகச் சொன்னாள். அவ்வளவு தான் அவனது கோபம் பொறுமை எல்லாம் பறந்தது. ஒரே அறையாக அறைந்து விட்டான்.

அவன் அறைந்த திகைப்பில் அவனை அவள் ஏறிட்டு பார்க்க, "ஏய்! யாரடி சுயநலவாதின்னு சொன்ன மாமாவையா... அவரா சுயநலவாதி உன் மனசாட்சிய தொட்டு சொல்லு?" என்று உறுமியவனைப் பார்க்க கௌசிக்கு பயம் வந்தது உண்மைதான்.

பயத்தில் உறைந்து நின்றவளின் தோளை அருகில் பற்றி இழுத்தவன், "உன்னப் போய் கேட்கிறேன் பார்... அதுசரி உனக்குல்லாம் மனசாட்சி இருக்கும்ன்னு நினைச்ச நான் ஒரு மடையன். ஆனா, சொல்றேன் கேட்குக்க மாமா ஒன்னும் சுயநலவாதி இல்ல... நீதான் சுயநலவாதி... நீதான் இந்த உலகத்திலேயே சுயநலவாதி" என்று கத்த கௌசிக்கும் கோபம் வந்தது.

"யாரு நானா? ஏன்டா ஓடினவ ஓடினவன்னு சொல்றியே... உங்க எல்லாரோட சுயநலம்தான்டா என்னைய ஓட வச்சுது. இப்போ கூட எல்லாரும் சுயநலமாதான் பிஹேவ் பண்றீங்க... இதே அந்த நான்சி இந்நேரம் உன்னுடன் இருந்திருந்தா நீயெல்லாம் என்ன மனுசியாவே மதிச்சிருக்க மாட்டே" என்று பொரிந்து தள்ளினாள்.

"ஓஹோ... நீ நல்லா இருக்கணும்ன்னு நினைச்ச நாங்க எல்லாம் சுயநலவாதியா? ரைட்ரா... அப்புறம் என்ன எல்லாம் வச்சிருக்க அதையும் சொல்லு" என்றான் நக்கலாக.

"உனக்கு எல்லாம் எகத்தாளமாகத் தான் இருக்கும்... அடுத்தவங்க சூழ்நிலைல இருந்து பார்த்தா உங்க எல்லாருக்குமே புரியும்" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"மாமா இப்படி அவரு சூழ்நிலையை மட்டும் உன்னை மாதிரி நினைச்சிருந்தா... நீ இந்நேரம் இப்படி பேசியிருக்க மாட்டேடி" என்று அழுத்தமாகச் சொன்னவனைக் கௌசி பார்வையை விளங்காமல் நோக்க, அதுதான் சான்ஸ் என்று அவன் மடை திறந்த வெள்ளமானான்.

"என்னப் பாக்கற? எதையுமே யோசிக்க மாட்டையா நீ எல்லாம்... ஏன்டி, அத்தை இறந்த அப்புறம் நீ பச்சக் குழந்தை... அவருக்கு அப்போ 33 வயசு, அந்த வயசுலதான் ஒரு ஆம்பிளைக்கு எல்லா ஃபீலிங்சும் அதிகமா இருக்கும் தெரியுமா? அவரு நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாம். இல்லைனா வேற மாதிரி பொம்பளைங்க கிட்ட போறானுகள அந்த மாதிரி கூட போயிருக்கலாம்.

அந்த வயசுல தன்னோட எல்லா சந்தோஷத்தையும் அடக்கிட்டு... அத்தை போன சோகத்தையும் உன்ன பாத்துக்க தெரியாம தவிச்சு தவிப்பையும் உனக்குல்லாம் தெரியுமாடி? நாலு வயசுல இருந்த எனக்கு இன்னும் அதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு. எனக்கு தெரிஞ்சு இப்போ வரைக்கும் அவரு மனசுல இருக்கிறது அத்தையைத் தான்.

அவரு மனசாலையும் உடலாலையும் தொட்ட முதல்பொண்ணும் கடைசிபொண்ணு அத்தை தான். மனசாலயும் உடலாலயும் சுமந்த பொண்ணு நீதான். அவர உன்னால புரிஞ்சுக்க முடியலைல... கல்யாணத்துக்கு முன்னாடி மட்டும் என்ன சந்தோஷமாவே இருந்தாரு?

என் அம்மா பெரியம்மான்னு சந்தோஷமா சுத்தித் திரிய வேண்டிய வயசுலையும் எல்லா கஷ்டத்தையும் சுமந்து எல்லாத்தையும் கரைசேத்தி, இதெல்லாம் நினைச்சு பாத்தா அந்த மனுஷனை நினைக்க எனக்கே பாவமா இருக்கு. நான் புரிஞ்சுகிட்ட அளவுக்குக்கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா கௌசி..." என்று நீளமாகப் பேசியவனைக் கண் இமைக்காமல் பார்த்தாள். அவன் பேசிய ஒவ்வொன்றும் உண்மைதான் என்று அவளுக்கும் தெரியும்.

"இங்கபாரு கௌசி... உனக்கும் எனக்கும் கல்யாணம், நீ ஒத்துக்கிட்டுதான் ஆகணும்" விக்னேஷ் அழுத்தமாக.

"ச்சீ, அசிங்கமா பேசாதே..." படபடத்தவள், "எ... என... எனக்கு... கல்யாணம் ஒன்னுதான் குறைச்சல்" என்றாள் முணுமுணுப்பாக.

"அசிங்கமா பேசறானா!" என்று விழித்த விக்னேஷ், "ஏய்! நான் என்னடி அசிங்கமா பேசறேன்?" என்று சீறினான்.

"பின்ன... நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ... என்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொல்ற?"

"ஆமா, நீ கல்யாணம் பண்ணி வாழ்ந்தது ஒரு வாழ்க்கையாடி... நாலேநாள் வாழ்ந்தது எல்லாம் கல்யாணமாடி? கோவத்த கிளறாதே!"

"நாலு நாளோ, நாலு வருசமோ... என்னால எதையும் மறந்துட்டு நார்மலா இருக்க முடியாதுடா"

"குருவை நீ இன்னும் மறக்கலையா?" என்ற விக்னேஷின் கேள்வியில் கௌசிக்கு வாந்தி வராதா குறைதான். அவனை எப்போது அவள் நினைத்தால் மறப்பதற்கு. அவனை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று விக்னேஷின் மனம் சோர்ந்தது.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காதவள், "இங்க பாரு... சில விஷயத்தை நீயாதான் புரிஞ்சுக்கணும்" என்றாள் மறைமுகமாக.

"சொன்னாதானடி புரியும்"

தலையில் அடித்தவள், "பசங்களுக்குத் தனக்கு வர பொண்டாட்டி..." என்று நிறுத்தியவள் அவனிடம் எப்படி எந்த வார்த்தைகளை பயன்படுத்தி புரிய வைப்பது என்று யோசித்தாள்.

"ம்ம், தனக்கு வர பொண்டாட்டி?" விக்னேஷ் புருவ முடிச்சுடன்.

யோசித்தவள் பின், "தனக்கு வரப் பொண்டாட்டி... வெர்ஜினா இருக்கனும்னு நினைப்பாங்க... அது எல்லாருக்கு நேச்சரும் கூட... சோ அதான் சொல்றேன்" என்றாள்.

அமைதியாக இருந்தவனை ஏறிட்டுப் பார்க்க விக்னேஷின் கண்களோ கோபத்தில் பளபளத்தது. "ஏய்! என்னை என்ன அவ்வளவு சீப்பானவன்னு நினைச்சிட்டயாடி... ஏன்டி, நான் என்ன 15 வயது பையனா? இது எதுவும் தெரியாமல் நிற்க... இங்க பாரு இதெல்லாம் நான் எதுவும் நினைச்சு யோசிச்சுக் கூடப் பாக்கலடி. நீயா சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் என் மைன்ட்ல வருது"

"இல்லடா... நான் உன் வாழ்க்கையில் வந்தால், நான் உன்கூட சந்தோஷமா வாழ முடியாது. நீயும் சந்தோஷமா இருக்க முடியாது. சொல்றத புரிஞ்சிக்கோ... ஏன்டா, என்ன ஓப்பனா எல்லாம் சொல்ல வெக்கற" என்று முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

"முடியாதுன்னு மனசுல வச்சிட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கீல நீ" விக்னேஷ் கோபமாக.
"இல்லடா... நீ வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க"

"எனக்கு, என் மாமன் பொண்ணுதான் நல்ல பொண்ணு. அதுவும் இல்லாம என் வாழ்க்கையில அடுத்தவள சொருகுற வேலை எல்லாம் பாக்காத நீ" குறுஞ்சிரிப்புடன்.

"டேய் மரமண்ட... உனக்கு சொல்றது புரியுதா இல்லையா? எந்த ஒரு ஆம்பளையும் தன்பொண்டாட்டிக்கு அவன்தான் எல்லாம் சொல்லித் தரனும்னு நினைப்பான்" என்று கத்த, விக்னேஷ் சாதாரணமாக அதே சிரிப்புடன் நின்றிருந்தான்.

காரணம் மறுத்தாலே தவிர குருவை நான் மறக்கவில்லை என்று அவள் சொல்லவே இல்லை. ஏன் குருவை ஞாபகப்படுத்திய போது கூட அவள் அழவில்லை. அவன் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்பதற்காகவே அழுகிறாள்.

அவன் காதல் கொண்ட மனது அவளை இந்த முறை இழக்க விரும்பவில்லை. அவள் சொன்னக் காரணத்தை அவன் கடுகளவிற்கும் பொருட்படுத்தவில்லை. அவளை ஒரு தடவை பிரிந்து அனுபவித்த வேதனைகளே போதும் என்று நினைத்தான்.

அவள் காதின் அருகில் குனிந்தவன், "ஓ... நீ அப்படி சொல்ல வர்றீயா? பரவால கௌசி... எனக்கு எதுவும் தெரியாது. நீ எனக்கு சொல்லித்தா..." என்று ஹஸ்கி வாய்சில் சொல்ல, திகைத்து நின்றவள் அருகிலிருந்த அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

"ச்சை... கருமம்... நான் என்ன சொல்றேன், நீ என்னடா பேசறே?" என்று முறைத்தவள், "ஆமாம் +2 படிக்கும்போதே லேப்டாப்ல அந்த மாதிரி படம் வச்சிருந்தவனுக்கு நான் சொல்லித் தரனுமாம்... ஹேர்ருரு..." என்று முணுமுணுத்தாள்.

"ஏய்! உனக்கு எப்படித் தெரியும் என் லேப்ல இருந்தது. அப்போ நீ பாத்திருக்க? ஹம்..." என்று கையைக் கட்டிக் கொண்டு விசாரணை செய்ய கௌசிக்கு முகம் எல்லாம் சிவந்து விட்டது. அதை மறைக்க முயற்சிக்க விக்னேஷ் அதைக் கண்டும் கொண்டான்.

"விளையாடுனது போதும் விக்கி. உனக்குப் புரியதா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறயா? என்னால முடியாதுடா"

"போதும் நிறுத்து கௌசி! நான் இதுக்கு மேலேயும் எதுவும் பேச விரும்பல... நான் ஒன்னும் எடுத்தோன்ன குடும்பம் நடத்தக் கூப்பிடுல உன்ன... என்னால உன்ன மாத்த முடியும்னு நம்பிக்கை இருக்கு. நீயும் சீக்கிரம் மனசை மாத்திட்டு என்னோட குடும்பம் நடத்தற வழியைப் பார். அதே மாதிரி எஸ்கேப் ஆகலாம்ன்னு நினைக்காத... உன்னக் கண்டுபிடிக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்ல இந்த உலகத்துல..." என்று திட்டவட்டமாகச் சொன்னவன் கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றான்.

கௌசிதான் அப்படியே நின்றுவிட்டாள். அவளின் பிரச்சனையை அவனிடம் சொல்லவே அவளிற்கு குன்றலாக இருந்தது.

வெளியே வந்த விக்னேஷைப் பார்க்க ஜீவாவிற்கும் மதிக்கும் அதிசயமாக இருந்தது. காரணம் அவன் முகத்தில் தெரிந்த பிரகாசம்தான். மற்றும் அவன் உதட்டில் உறைந்திருந்த புன்னகை.

"என்னடா... ஒளிவட்டமா இருக்கு?" என்று ஜீவா கேட்க விக்னேஷ் சிரித்தான்.

"ஆமாடா, எப்படியோ கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டா..." என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

கண்கள் விரிய விக்னேஷைப் பார்த்த மதியிடம், "என்ன மதி, இப்பவும் என்னைப் பார்த்து மனசுக்குள்ள திட்டுவியா?" என்று விக்னேஷ் கேட்க, மதி திடுக்கிட்டாள்.

"இல்லையே... நான்..." என்றவளின் பேச்சில் இடை புகுந்தான் விக்னேஷ்.

"போதும் போதும்... கௌசி மேல இருக்க ஃப்ரண்ட்ஷிப்ல என்னைய, நீ வறுத்து எடுக்கிறது உன் பார்வையிலேயே மூன்று வருஷமாத் தெரியும்" என்றான் விக்னேஷ்.

மதி, "திடீர்னு ஏன் இந்த மாற்றம் விக்னேஷ்?"

விக்னேஷ், "ஏன், மாற்றம் கூடாதா மதி?"

"இல்லை... இத்தனை நாள் நாங்க சொன்னபோது எல்லாம் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ திடீர்னு சொல்றீங்களே, அதான் கேக்கறேன்" மதி.

"ஓ அதுவா... இதோ இங்க நிக்கறான்ல இவன்... என் அண்ணன்" என்று ஜீவாவைச் சுட்டிக் காட்டியவன், "இவன மாதிரி கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கு பயந்து கொஞ்சம் நடுங்கலாம்ன்னு ஆசையா இருக்கு அதான் அண்ணி" என்றான் விக்னேஷ் பவ்யமாக.

அவனுக்கு ஜீவா-மதி காதலிக்க ஆரம்பத்திலிருந்தே அதான் வேலை. பெயரைச் சொல்லிக் கூப்பிடுபவன் அவ்வப்போது வேண்டுமென்றே நக்கலாக அண்ணா, அண்ணி என்பான்.

"ஆங்ங்ங்!" என்று விக்னேஷை முறைத்தவள் ஜீவாவிடம் திரும்பி, "என்ன நான் உங்களை பயப்படுத்தி வச்சிருக்கேனா... நீங்க அண்ணன் தம்பி எல்லாம் எல்லோரையும் அதிகாரத்துல வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" என்று பொரிந்த மதி, "சரி சரி... நான் கௌசியிடம் பேச வேண்டும்" என்று அறைக்குள் சென்றுவிட்டாள்.

மதி சென்றபின் விக்னேஷிடம் ஜீவா, "டேய் என்ன திடீர்னு... எனக்கு உன் பிகேவியர் எங்கயோ ஏதோ இடிக்குதே?" என்று யோசிக்க,

"அய்யோ! அப்படி எல்லாம் இல்லிங்க அண்ணா... நீங்க உங்க மூளையை எப்போதும் போல ஃப்ரெஷ்ஷா வச்சிருங்க" என்று மரியாதைத் தந்து கிண்டலடித்தான்.

"கௌசி, ஐ’ம் ஸோ ஹாப்பி" என்று உள்ளே நுழைந்த மதி, கௌசியைக் கட்டிப் பிடித்தாள். கௌசியின் உடம்பு விறைப்பாகவே இருந்ததை உணர்ந்த மதி, மேலும் அவள் எதுவும் பேசவில்லை என்பதை உணர்ந்து அவளிடம் இருந்து விலகி முகத்தைப் பார்த்தாள். கௌசியின் முகத்தில் ஏராளமான குழப்ப ரேகைகள்.

"ஏன் கௌசி ஒரு மாதிரி இருக்க?" என்று மதி கேட்டாள். ஏதோ யோசனையிலேயே இருந்தவள் மதியின் கேள்வியில் விழித்து, "ஒன்றுமில்லை மதி" என்று மறைத்தாள்.

"என்ன ஆச்சு கௌசி? நீ ஒன்னு இல்லைன்னு சொல்லும்போதே ஏதோ இருக்குன்னு தெரியுது"

"நீங்களாவது விக்னேஷ் கிட்ட இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுங்களேன் மதி. அவன் பாட்டுக்கு முடிவு பண்றான்"

"ஏன் கௌசி, இதுல என்ன இருக்கு?" மதி சாதாரணமாக.
"மதி, என்ன பேசறே நீ... நான் அல்ரெடி கல்யாணம் ஆகி..." என்று ஆரம்பிக்க மதி இடை புகுந்தாள்.
"அதனால் என்ன கௌசி? குரு விதி அவ்வளவு தான் போய் சேர்ந்துட்டான். அதற்காக நீ வாழ்க்கை ஃபுல்லா தனி மரமா உட்காரணும்மா..." என்று நியாயமான கேள்வியை முன் வைத்தாள்.

"எனக்கு ராசி இல்லை மதி... என்னால விக்னேஷிற்கு ஏதாவது ஆயிடப்போகுது" என்று கண் கலங்கினாள் கௌசி. அவள் பழசை எதுவும் மறக்கவில்லை.சந்தியா பேசியது தன் அன்னை பேசியது எவ்வளவு பாதித்திருக்கு என்பதை மதி உணர்ந்தாள்.

"ஏய்ய் கௌசி... நீ எல்லாம் ஐடி வேலையில் இருந்தாய் என்று வெளில சொல்லிடாதே... இந்தக் காலத்தில வந்து ராசி அது இதுன்னு" என்று மதி அதட்டி சமாதானம் செய்ய முயற்சிக்க கௌசி மேலே பேசினாள்.

"அது இருக்கோ இல்லையோ, ஆனா, என்னாலன்னு பயந்து பயந்தே நான் செத்திருவேன் மதி. அதுவும் இல்லாமல் அவன் நான்சியைத் தானே லவ் பண்ணான். எனக்காக ஏதோ சொல்ற மாதிரி இருக்கு அவன் அவள விட்டுப் பிரிஞ்சிட்டன்னு சொல்றது" என்றாள் கௌசிகா.

"உனக்கு நடந்தது எதுமே தெரியாதா?" எனக் கேட்டாள் மதி புருவ முடிச்சுடன்.

"ஏன்? அப்படி என்ன ஆச்சு மதி?" என்று கேட்ட போதே, ஏதோ அடைப்பது போல இருந்தது கௌசிகாவிற்கு.

நான்சியை ஏர்போட்டிற்குச் செல்லும் முன் விக்னேஷ் அவளைப் பார்க்கச் சென்றபோது அங்கு நடந்த சம்பவங்கள், பின் கனடா போனபின் வர முடியாமல் சிக்கியது, இங்கு வந்த அப்புறம் நீயில்லாத அதிர்ச்சி, அப்புறம் செந்தில்நாதன் அவரின் இறப்பு, பின் சென்னையை விட்டு வந்தது என்று ஒன்றுவிடாமல் மதி சொல்லி முடித்தாள்.

"செந்தில் மாமா... இறந்துட்டாரா?" என்று கேட்க கௌசியின் கண்களில் கண்ணீர் உருண்டோடியது.

"ஆமாம் கௌசி" மதி கௌசியின் தோளை ஆறுதலாகப் பற்றிய படி.
சிறிய வயதில் இருந்து தந்தைக்கு நிகராகத் தன்னைத் தூக்கி வளத்தவரின் இழப்பில் கூட இருக்க முடியவில்லையே என்று தன்மேலே கோபம் கொண்டவளுக்கு கண்கள் கரித்தது.

"விக்னேஷை நாங்க கல்யாணம் பண்ண சொல்லி எவ்வளவோ அதுக்கு அப்புறம் கம்பெல் பண்ணோம் கௌசி. விக்னேஷ்தான் அந்தப் பேச்சை எடுத்தாலே எரிஞ்சு எரிஞ்சு விழுந்தாரு... ஆனா, நீ வந்த அப்புறம் தான் எல்லாமே ஓகே ஆயிருக்கு மதி... நீ வீட்டை விட்டுப் போன அப்புறம் போன சந்தோஷம் இப்போ அப்படியே திரும்பி வருது. நீயா கௌசி ராசி இல்லாதவ... எனக்கு தெரிஞ்சு வரதராஜன் சித்தப்பா சொன்ன மாதிரி நீ மகாலட்சுமி கௌசி" என்றாள் மதி.

ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாளே தவிர எதுவும் பேசவில்லை. ஆனால், அவள் மனதில் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது. விக்னேஷ் குடும்பத்திற்கும் தன் தந்தைக்காக மட்டும் தான் கல்யாணம் செய்கிறான் என்று.

"இங்கேயே கௌசி இன்னிக்கு இருக்கட்டுமே" என்று வெளியே வந்து பேசிக்கொண்டிருந்த விக்னேஷிடம் கேட்க, "இல்ல மதி அவ வரட்டும்... அங்க அம்மா இவளை இன்னிக்கே பாத்து ஆகனும்ன்னு உட்கார்ந்திருக்காங்க" விக்னேஷ்.

"சரி லக்கேஜ் எல்லாம் இருக்கு பாரு... பேசாமல் காரை எடுத்திட்டுப் போ" ஜீவா.

விக்னேஷ், "அப்புறம் உனக்கு?"

ஜீவா, "நாளைக்கு காலையில், நான் லேட்டா தான் போவேன் டா... நீ 9.30க்கு வந்து காரை விட்டுட்டு அப்புறம் பைக்கை எடுத்திக்கோ"

விக்னேஷ், "சரி ஜீ"

விக்னேஷும் ஜீவாவும் லக்கேஜை காரில் எடுத்து வைக்க கௌசியும் மதியும் பேசிக் கொண்டு நின்றிருந்தனர்.

"கௌசி போகலாம்" என்று விக்னேஷ் சொல்ல கௌசி அவனுடன் புறப்பட்டாள்.
இருவரையும் அனுப்பிவிட்டு வந்த மதி உள்ளே நுழைந்து கதவைச் சாத்திவிட்டு திரும்ப ஜீவா அவளை அணைத்தான். கணவனின் திடீர் அணைப்பை எதிர்பாராதவள் அவனின் அணைப்பில் அப்படியே நின்றாள்.

ஜீவா, "ஐ’ம் ஸோ ஹாப்பி மதி" என்றான் அவளின் காதில் அணைத்தபடியே.
"என்னன்னு கேக்க மாட்டியா?"

கணவனைத் தானும் அணைத்தவள், "விக்னேஷ் கௌசி கல்யாணம் தானே?" என்று கேட்டாள்.

"அதுவும் ஒன்னுதான்" என்று அவளை விலக்கியவன், "நீ நம்ம ஃபேமிலி மேல வச்சிருக்கு அக்கறை மதி. கௌசி இங்க வந்த அப்புறம் நீ கடமையாவே எதுவும் செய்யலையே? எல்லாம் பாத்து பாத்து செஞ்ச... நம்ம வியா குட்டிக்கு செய்யற மாதிரி" என்றவன் அவளின் கன்னத்தில் ஒரு முத்திரையைப் பதித்து, "தேங்க்ஸ் மதி" என்றான்.

"இல்ல ஜீவா... கௌசி எப்போதுமே..." என்று மதி ஆரம்பிக்க,

"அய்யோ! ஏய் ப்ளீஸ்... மறுபடியும் கௌசி புராணம் பாடுவே... நீங்க இரண்டுபேரும் அப்படி இப்படின்னு... போதும்டி! மூணு வருஷமா கேட்டுட்டே இருக்கேன். அதான் அவ வந்துட்டால போதும்" என்று இருகைகளையும் காதில் வைத்தபடி கிண்டலடிக்க மதி அவனைச் செல்லமாக அடித்தாள்.

"சரி... நாளைக்கு ஏன் லேட்டா போறீங்க... ஏதாவது நைட் வொர்க் இருக்கா முடிக்க?" என்று வினவினாள்.

"ஆமாம்"

மதி, "சரி முடிச்சிட்டு வந்து படுங்க... நான் போய் தூங்கறேன்"

"வொர்க் என் பொண்டாட்டியோடதான்..." என்று அவளைத், தன் அருகில் இழுத்தவன் இதழ் நோக்கி குனிய, "ஓ... இதுதான் சார் வொர்க்னு சொன்னிங்களோ?" என்று கேட்டாள் மதி.

"ஆமா, பட் இப்போ நீ கொஞ்சம் பேசாமல் இருந்தால் நல்லா இருக்கும்" என்றவன் அவளின் இதழில் தஞ்சம் புகுந்தான். தன்னையும் தன் குடும்பத்தையும் அளவில்லாமல் நேசிக்கும் மனைவியை காதலால் மூழ்கடிக்க ஆரம்பித்தான்.

"என்ன நீயும் மதியும் லவ்வர்ஸ் மாதிரி பேசிட்டே இருக்கீங்க" என்று காரின் தன் அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருப்பவளிடம் பேச்சுக் கொடுத்தான் விக்னேஷ். அவள் பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்தபடியே வந்தாள்.

"என்னடி... பேசவே மாட்டிறே?" என்று காரை ஓட்டியபடி அவன் வினவ,

"எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா" என்றாள் கௌசி.

"என்ன மாதிரி?" என்று வினவினான்.

"அதான் தெரியல... ஏதோ குழப்பமா... கஷ்டமா" என்று விழித்தாள் கௌசி.

வலது கையால் காரை ஓட்டியவன், தன் இடது கரத்தால் அவள் வலது கரத்தைப் பற்றி, "எதையும் யோசித்துக் குழப்பிக்காத கௌசி... தைரியமா இரு... நான் இருக்கேன்" என்று அவள் கரத்தை வலுவாகப் பிடித்தான். அவன் தன் கையை அழுத்தமாகப் பற்றியதே அவளுக்கு சற்றுத் தெளிவாக இருந்தது.

கிணத்துக்கடவு வந்தவுடன் அவன் காரை நிறுத்த, “நீ உள்ளே போ... நான் வரேன்” என்றான்.

வெளிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல எங்கிருந்தோ ஓடி வந்த ப்ரௌனி அவளைத் தாவிப் பிடித்தது. ஒரு நிமிடம் தடுமாறியவள் பின் சமாளித்து நின்று ப்ரௌனியைக் கொஞ்சினாள். கௌசி அவள் குடும்பத்தை எவ்வளவு மிஸ் செய்தாளோ அதே அளவிற்கு ப்ரௌனியையும் மிஸ் செய்தாள். அதன் தலையை நீவி கௌசி முத்தமிட ப்ரௌனி தலையைத் தூக்கியது.

முதலில் புரியாமல் விழித்தவள் பின் சிரித்துக் கொண்டே, "சாரிடா மறந்துட்டே" என்று அதன் கழுத்தில் தன் கைகளை வைத்து கொஞ்சி தேய்த்துவிட்டாள்."ங்ங்ங்ங்" என்று சத்தத்தை எழுப்பியது அவளைச் சுற்றி சுற்றி சந்தோஷத்தில் அங்கும் இங்கும் ஓடியது.

"வா கௌசி" என்று தன் சின்ன அத்தை சுமதியின் குரலில் நிமிர்ந்தாள். அத்தையைப் பார்த்தவுடன் செந்தில்நாதன் ஞாபகம் வர சுமதியிடம் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள் கௌசி. பின் விக்னேஷ் அவளின் லக்கேஜ் எல்லாம் எடுத்து வந்து உள்ளே வைக்க, அத்தையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தாள் கௌசி.

"விக்னேஷ்... ஜீவா ஃபோன் பண்ணி சொன்னான்டா கல்யாணத்தப் பத்தி... எப்போ என்னன்னு நாளைக்கு நாள் பாத்திடலாம்" என்று சொல்ல தலையை ஆட்டியவன் உடை மாற்ற தன் அறைக்கு எழுந்து சென்று விட்டான்.
அவன் சென்ற பின், "அத்தை... உங்களுக்கு இதுல சம்மதமா?" என்று கேட்டாள் கௌசி.

சுமதி, "எதில்?"

"அதான்... இந்தக் கல்யாணத்தில்" என்று இழுத்தாள் கௌசி.

"ஏன்? என் கௌசியிடம்தான் என் மகன் சிடுமூஞ்சியைக் கட்டிக் கொள்ள சம்மதமான்னு கேக்கணும். நீ எதையும் கேக்கவே அவசியம் இல்லை" என்றார் அவளின் தாடையை பிடித்து ஆட்டியபடி. அவரின் சம்மதத்தையும் தெரிந்து இறுதியில் தெரிந்து கொண்டாள். "என்ன சிடுமூஞ்சியா?" என்று விழித்தாள்.

"அவன் அப்படித்தான் இருக்கான்... அந்த ஃபோட்டோ ஸ்டுடியோ ஆரம்பிச்சதுல இருந்து" என்று சலித்துக் கொண்டார் சுமதி. நான்சியின் துரோகத்தால் இருக்கும் என்று நினைத்தாள் கௌசிகா. விக்னேஷ் வர, சிறிதுநேரம் பேசிவிட்டு தன் அத்தையுடனே அவரது ரூமிற்குள் உறங்கச் சென்றாள் கௌசிகா.

விக்னேஷைப் பொறுத்தவரை, 'கௌசிகா குருவுடன் வாழ்ந்த காதல் வாழ்க்கையை முழுதாக மறக்கடித்து... தன்னைக் காதலிக்க வைத்து, தன் காதலை அவளிடம் உணர்த்த வேண்டும்' என்று எண்ணினான்

கௌசிகாவைப் பொருத்தவரை, "நான்சியுடன் ஆன காதல் விக்னேஷை பாதித்து விட்டது. அதனால் தான் பாராமுகம் காட்டி இருக்கிறான். இப்போது குடும்பத்தினருக்காகவே தன்னைக் கல்யாணம் செய்கிறான்" என்ற எண்ணம்.

இருவருமே சரியாகத் தவறான எண்ணத்திலும் கனிப்பிலும் இருந்தனர்.

அடுத்து என்ன?
 
  • Like
  • Love
Reactions: Malar and Sowmiya