மறையாதே என் கனவே - 2

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-2

அதேநாள் காலை கோயம்புத்தூரில்...(அதாவது கௌசியின் இதயம் காரணமில்லாமல் துடித்துக் கொண்டிருந்த தினம்)

அன்று காலை ஜாக்கிங் முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிய விக்னேஷ் என்றழைக்கப்படும் விக்னேஷ்வரன் வீட்டின் முன் கிடந்த செய்தித்தாளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

"அம்மா" என்று குரல் கொடுத்தபடி விக்னேஷ் நுழைய, சமையல் அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனது அன்னை சுமதி.

"காஃபியா டீயா விக்னேஷ்?" என்று கேட்ட தாயிடம், "காஃபி மா" என்றவன், தனது ஷூவைக் கழற்றி வைத்துவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் வந்தமர்ந்து அன்றைய செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் சுடச்சுட ஆவி பறக்க காஃபியைக் கொண்டு வந்த தாயைப் பார்த்தவன், "நீங்க குடிச்சாச்சா?" என்று கேட்டபடித் தனக்குக் கொண்டு வந்த காஃபியை எடுத்து பருக ஆரம்பித்தான்.

அருகிலிருந்த சோபாவில் அமர்ந்த சுமதி தன் மகனையேப் பார்த்துக் கொண்டு இருந்தார். 29 வயது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? 25 வயதுப் பையனைப் போலவே தெரிகிறான். ஒரு ஆண்மகனிற்கு உண்டான அனைத்துக் கம்பீரமும் அழகும் நிறைந்த தன் மகனை பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சுமதி.

ஆனால், பலூன் வெடித்ததைப் போலச் சட்டென்று அந்தப் பெருமைத்தனம் வெடித்து, அவரைச் சோகம் ஆட்கொண்டு விட்டது. எப்படி இருந்தவன் இன்று... என்று யோசித்தார். கிட்டத்தட்ட மூன்று மூன்றரை வருடத்திற்கு முன்னால் இருந்த சிரிப்பு, கேலி எதுவுமே இவன் முகத்தில் இப்போது இல்லையே.
என்னதான் மகன் இப்போது சம்பாரித்தாலும் மகனின் இந்த நிலை கவலையையே அளித்தது சுமதிக்கு. கால்கட்டு போட்டாலாவது சரியாகும் என்று நினைத்தால் இவன் அந்த பேச்சே வேண்டாம் என்கிறானே. தன் சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தவரை விக்னேஷின் குரல் கலைக்க, "எ... என்ன விக்னேஷ், என்னக்கேட்டாய்?" என்று தன் சிந்தனைகளில் இருந்து வெளிவந்துக் கேட்டார் சுமதி.

"என்ன தீவிரமான யோசனை, அதுவும் இந்தக் காலைல?" என்று பேப்பரை மடித்து டீபாயில் வைத்தபடி கேட்டவனிடம் என்ன சொல்லுவதென தெரியாமல் விழித்தார் சுமதி.
‘என்ன என்று சொல்லுவது இவனிடம், உன்னைப் பற்றியக் கவலை என்றா?' உண்மையைச் சொன்னால், 'எதற்கு தேவையில்லாத விஷயத்தை நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள்' என்று எரிந்து விழுவான் என்று யோசித்தார்.

"அம்மா..." என்று அழைத்து அவரின் பக்கத்தில் வந்து அமர்ந்தவன், "என்னமா, கேட்டுட்டே இருக்கேன் எதுவுமே சொல்லமாட்டிறீங்க... ஏதாவது சொல்லணுமா?" என்று அக்கறையாக வினவினான் அவரின் அருமைமகன்.

"ஒன்றுமில்லைபா, அடுத்தவாரம் அப்பாவிற்குத் திதி கொடுக்கணும். ஞாபகம் இருக்கில்லையா? அடுத்த செவ்வாய் எந்த வேலையிருந்தாலும் கான்சல் பண்ணிடு" என்று சொல்ல, ஹாலில் மாட்டியிருந்த தன் தந்தையின் படத்தை ஒருநிமிடம் நிமிர்ந்து பார்த்தான்.

சந்தனமாலைப் போடப்பட்டிருந்த ஃபோட்டோ ப்ரேமில் சிரித்த முகத்துடன் இருந்த, தன் தந்தை செந்தில்நாதனைப் பார்க்கையில், சுருக்கென்ற ஒரு வலி ஏற்பட்டது விக்னேஷிற்கு. கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன்னால் திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் இறந்தவரை நினைக்கையில் இன்னும் வேதனையாகத் தான் இருக்கின்றது விக்னேஷிற்கு.

தன் முகத்தில் இருந்த வேதனையை டக்கென்று அன்னை காணாதவாறு மறைத்தவன், "ஞாபகம் இருக்கும்மா. நீங்கள் சொன்ன மாதிரியே செஞ்சுடலாம்" என்று எழுந்தான். யோசனை வந்தவனாக, "அம்மா! மாமா எங்க?" என்று கேட்டான்.

"இன்னு எழவில்லை போல... நேத்தே கொஞ்சம் டயர்ட்டா இருக்குன்னு சொன்னார். தூங்கிட்டு இருப்பார். அவரே எந்திருச்சு வரட்டும்" என்றுவிட்டு சமையல் அறைக்குள் நுழைய, விக்னேஷும் தன் அறைக்குள் புகுந்துவிட்டான்.

தன் தந்தை செந்தில்நாதன் இறந்தபின் கண்ணைக் கட்டிவிட்டதைப் போல விக்னேஷ் உணர்ந்தான். நடந்த சம்பவத்தில் இருந்த ஐ.டி வேலையையும் விட்டுவிட்டான். தற்போது இயற்கை விவசாயம் மற்றும், ‘விக்னேஷ் போட்டோகிராஃபிஸ்’ என்று கல்யாணவிழாக்கள் மற்றும் நிறைய விளம்பரங்கள் எல்லாம் சிறப்பாக செய்து கொண்டு இருந்தான்.
முதலில் சிரமப்பட்டாலும் இரண்டையும் விடாமல் தன் முயற்சியையும் ஆர்வத்தையும் இரண்டிலும் காட்டி வெற்றியைக் கண்டான். கடந்த ஒன்றரை வருடமாகப் பணத்திற்கு பற்றாக்குறை இல்லாமல், அப்பர்மிடில் கிளாஸ் வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தவன் தன் தாய்மாமா வரதராஜன் இன்னும் வராததைக் கண்டு, "அம்மா, மாமா இன்னுமா தூங்கறாரு?" என்று புருவமுடிச்சுடன் கேட்க, "மணி என்ன? எட்டு ஆச்சா... இவ்வளவு நேரம் தூங்கமாட்டாரே? போய் எழுப்பிப்பாரு விக்னேஷ்" என்று அன்னைக் கூற அவரது அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.
பூட்டவில்லைதான், இருந்தாலும் தட்டாமல் உள்ளே செல்வது அநாகரிகம் என்று தோன்றவே, "மாமா..." என்று மீண்டும் ஒருமுறை கதவைத் தட்டிப் பார்த்தான். பதில் இல்லாது போகவே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

அவர் இன்னும் உறங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டவன், "மாமா" என்று மெதுவாக அழைத்தபடி அவர் அருகில் சென்று எழுப்பினான். அவரிடம் அசைவே இல்லை. ஒருநிமிடம் அதிர்ந்தவன், "மாமா, மாமா..." என்று உலுக்கிப் பார்த்தான். அவரது போர்வையை விலக்கி நெஞ்சில் தலையை வைத்துப் பார்த்தவனுக்கு அவரின் இதயத்துடிப்பு சரியாக இருந்த மாதிரித் தெரியவில்லை.

யோசிக்காமல் அவரை கைகளில் அள்ளியவன், அவரைத் தூக்கிக்கொண்டு வெளியில் வர, சமையலறையில் இருந்து வெளியே வந்த சுமதி, "அய்ய்யோ... என்ன ஆச்சு?" என்றுப் பதறி ஓடி வர, "அம்மா, பேசறதுக்கு டயமில்ல... போய்க் கார் சாவியை எடுத்துட்டு வாங்க. சீக்கிரம் ஹாஸ்பிடல் போய்விடலாம்" எனச் சொல்லிவிட்டு வேகமாகச் செயல்பட்டான் விக்னேஷ்.

அதற்குள் வீட்டையும் பூட்டிவிட்டு கார்சாவியையும் எடுத்துக்கொண்டு சுமதி வந்துவிட்டார். கார்கதவைத் திறந்து வரதராஜனை உள்ளே சாய்ந்தவாறு படுக்க வைத்துவிட்டு, தன் அன்னையையும் பின்னே ஏறச் சொல்லிவிட்டு முன் சீட்டிற்குச் சென்று காரை எடுத்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் 'ராயல் கேர் ஹாஸ்பிட்டல்' முன்னால் கார் நின்றது. காரை நிறுத்திவிட்டு உள்ளே ஓடியவன் விவரம் சொல்ல, ஸ்ட்ரக்சருடன் வந்தவர்கள் காரிலிருந்த வரதராஜனை ஸ்ட்ரக்சரில் வைத்து உள்ளேகொண்டு சென்றனர்.

விக்னேஷ் நினைத்ததுபோல ஹார்ட்-அட்டாக் தான். ஐசியூவில் இருந்து அவசரமாக வெளியே வந்த நர்ஸ் ஏதோ பேப்பரில் சைன் கேட்க, அவர்கள் கேட்ட இடத்தில் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தான். முழுதாக ஹாஸ்பிடல் சென்றபின் மூன்றரைமணி நேரம் அந்த ஐசியூவின் முன்பு நின்றார்கள் விக்னேஷும் சுமதியும். அந்த மூன்றரை மணிநேரத்தில் லட்சம் எண்ணங்கள் இருவரையும் ஆட்கொண்டது.

ஆப்ரேஷனை முடித்துக்கொண்டு வெளியே வந்த டாக்ட,ர் சுமதியும் விக்னேஷும் நிற்பதையும் பார்த்துவிட்டு, "நீங்கள் தான் பேஷண்டின் உறவா?" என்று கேட்டார்.

"ஆமாம்" என்றான் விக்னேஷ். சுமதியால் பேசக்கூட முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைப்பதுபோல இருந்தது.

"சரி என்னுடைய ரூமிற்கு வாங்க" என்று அவர் சொல்ல இருவரும் அவரைத் தொடர்ந்தனர்.
உள்ளே சென்றபின், "நீங்க உட்காருங்க. ஒரு நிமிஷம் வந்து விடுகிறேன்" என்றவர் அந்த அறையின் மூலையில் இருந்த சானிடைஸர் மூலம் கையை சுத்தம் செய்துகொண்டு வந்தார்.

"நீங்க அவருக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் டாக்டர்.

"அவர் என் தாய்மாமா டாக்டர். என் அம்மாவோட அண்ணன்" என்று பதிலளித்தான் விக்னேஷ்.

"வேறு யாரும் இல்லையா அவருக்கு. அதாவது வொயிஃப், பிள்ளைங்க...?" என்று டாக்டர் கேட்க, விக்னேஷின் முகம் இறுகியது.

"இல்..." என்று விக்னேஷ் ஆரம்பிக்கும் முன் சுமதி முந்திக்கொண்டார். "மனைவி இல்ல டாக்டர், பெண் வெளியூருல வேலையில் இருக்கா" என்று வாயில் வந்ததை அவசரமாகச் சொல்லி சுமதி சமாளிக்க, தன் அன்னையை ஓரப்பார்வையில் எரித்தான் விக்னேஷ்.

"டாக்டர்... மாமாக்கு என்ன ப்ராப்ளம்?" என்று பேச்சை மாற்றிக் கேட்டான் விக்னேஷ்.

"அவருக்கு ஹார்ட்-அட்டாக் தான். எங்க மெடிக்கல் டெர்ம்ல சொல்லணும்னா மையோகார்டியல் இன்ஃப்ராக்ஷன் (myocardial infarction)" என்றார்.

"முன்னாடியே சிம்டம்ஸ்லா ஏதும் காட்டுலயே டாக்டர்?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் விக்னேஷ்.

"அவர் வயது என்ன?" என்று வினவினார் டாக்டர்.

விக்னேஷ், "55 டாக்டர்"

"பொதுவா இந்தக் கேஸ்ல வயதானவர்களுக்கு சிம்டமஸ் அவ்வளவா காமிக்காது" என்ற டாக்டர்,"அவருக்கு சுகர் வேற இருப்பதால்தான், பைபாஸ் சர்ஜரி பண்ண வேண்டியதா போச்சு. பிரஷர் எல்லாம் அதிகமா இருக்கு, ஹைப்பர் டென்சன்... அவரு ஏதோ மனசளவுல டிப்ரஸ்டா இருந்திருக்கிறாரு" என்று முடித்த டாக்டர் விக்னேஷையும் சுமதியையும் மாறிமாறி பார்த்தார்.

"அப்படி ஏதும் அவர் எங்களிடம் காட்டவில்லையே டாக்டர்... நன்றாகத் தானே இருந்தார்" என்று இறுகிய முகத்துடன் கேட்டான் விக்னேஷ்.

"அதான் பிரச்சினையே... அவர் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம மனசுல போட்டுக் குழம்பி, இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்" என்றார் டாக்டர்.
ஒருநிமிடம் நெற்றிப்பொட்டில் தன் ஆள்காட்டி விரலை வைத்து தேய்த்த விக்னேஷ், "சரி, இப்போ எல்லாம் ஓகேதானே டாக்டர்? அதாவது உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே?" என்று சற்று சின்னக்குரலில் டாக்டரை பார்த்துக் கேட்டான். அவருக்கு ஏதாவது என்றால் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது.

"இனி இல்ல தான்... அதாவது இதுக்கு அடுத்து நீங்கள் எல்லாரும் அவரை வைத்திருக்கும் மனநிலையைப் பொருத்தது" என்றார். டாக்டர் என்ன சொல்ல வருகிறார் என்ன விக்னேஷிற்கு புரிந்துவிட்டது.

"புரியலையே டாக்டர்" என்றார் சுமதி. "அதாவது, அவர் ஏதாவது மனச்சோர்வில் இருக்கிறார் என்று சொன்னேனில்லை... அதை என்ன என்று கேட்டு சரி செஞ்சுருங்க" என்றார்.

விக்னேஷும் சுமதியும் அமைதியாக அமர்ந்திருக்க, "இது அவருடைய மனசுக்காக... என்னதான் நாங்க மருந்து மாத்திரைகள் கொடுத்தாலும் ஒருத்தருக்கு, தன்னோட மனநிம்மதியும் தன்னம்பிக்கையும்தான் பாதி பலத்தை சீக்கிரம் திருப்பித் தரும்" என்ற டாக்டர், "சரி நானும் ரவுண்ட்ஸ் போகணும்... வேறு ஏதாவது கேட்க இருக்கிறதா?" என்று கேட்டார் இருவரிடமும்.

"இல்ல டாக்டர்" என்று விக்னேஷ் எழ, சுமதியும் எழுந்துவிட்டார்.

"ஓகே... அவரை கொஞ்சநேரத்தில் வேற ரூமிற்கு மாத்திடுவோம்... அங்க வர்றப்ப பார்க்கிறேன்" என்று அவர் நடக்க, மூவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

ஒரு நர்ஸ் வந்து, "சார், ஹாஸ்பிடல் பில்..." என்று ஆரம்பிக்க "எங்கக் கட்டணும்?" என்று கேட்டான்.

பின் பில்லைக் கட்டிவிட்டு வந்தவன் அப்போதுதான், "ச்ச... ஜீவாவிற்கு இன்னும் சொல்லல பாரு" என்று ஜீவாவிற்கு போனைப் போட்டான்.

போனை எடுத்த ஜீவா, "ஹலோ, சொல்லுடா விக்கி" என்று ஆரம்பித்தான்.

"ஜீ, மாமாவிற்கு ஹார்ட்-அட்டாக்டா. இன்னி..." என்று விக்னேஷ் முடிப்பதற்குள், "டேய்... என்னடா சொல்லற? என்ன திடீர்னு... இப்போ எப்படி இருக்கிறாரு?" என்று பதட்டமான குரலில் வினவினான்.

"திடீர்னா... பின்ன இதெல்லாம் சொல்லிட்டா டா வரும்... ஜீ, என்ன முழுசா பேசவிடு" என்றவன் காலையில் நடந்தது முதல் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தது வரை கூறினான். "இப்போ ப்ராப்ளம் இல்ல ஜீ... நீ பொறுமையாகவே வா" என்றான்.
"சரிடா... வர்றேன்" என்று ஜீவா போனை வைத்துவிட்டான். ஜீவா வேறு யாருமில்லை. நம் வரதராஜனுடைய முதல் தங்கை ஜெயாவின் மகன். இரண்டாவது தங்கை சுமதியின் மகன்தான் விக்னேஷ்.

போனை வைத்துவிட்டு தன் அன்னையைத் தேடி வந்தான். சுமதி அங்கு போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் சென்றவன், "ஏதாவது சாப்பிடறீங்களா? காலையிலும் சாப்பிடவில்லை. என்ன வேணும்னு சொல்லுங்க வாங்கிட்டு வர்றேன்" என்றான் அக்கறையாக.

"எனக்கு எதுவும் வேணாம்" என்று சுமதி சொல்ல விக்னேஷிற்கு சுள்ளென்று கோபம் வந்தது.

"இப்போ வயித்தைப் பட்டினி போட்டு என்ன சாதிக்க போறீங்க?" என்று கோபமாகக் கேட்டான்.

"எதையும் இல்லை. எனக்கு மனசு சரியில்ல விடு விக்னேஷ்" என்று சலித்தார் சுமதி.

"எதையும் சாப்பிடாமல் இருந்து... மனதையும் போட்டுக் குழப்பிக்கிட்டு இப்போ உள்ளே இருக்கிறாரே. அவரைப்போல கை, காலை நீட்டிப் படுக்கப் போறீங்களா? அவரைப் பார்த்துக் கொள்ளவாவது உங்களுக்குச் சத்து வேண்டாமா?" என்று அதட்டியவன், "நான் போயி காண்டீன்ல ஏதாவது வாங்கிட்டு வர்றேன்" என்று நகர, "நீயும் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வா விக்னேஷ்" என்று அன்னையின் குரல் கேட்டுத் திரும்பிய விக்னேஷ், "ம்ம்" என்றுவிட்டு நடந்தான்.

காண்டீனிற்கு வந்து தன் அம்மாவிற்கு ஒருசெட் இட்லியும் ஒரு ஜீஸும் சொல்லியவன், தனக்கு ஒரு காஃபியை வாங்கிக்கொண்டு அமர்ந்தான்.
டாக்டர் சொன்னது அவன் மனதில் ஓடியது. அவர் எதை நினைத்துக் கலங்குகிறார் என்பதும் அவனுக்குப் புரியாமல் இல்லை. எல்லோருக்கும் இருக்கும் வருத்தம் கலக்கம்தான். ஆனால், விக்னேஷின் மனதில் அது வெறுப்பாக இருந்தது. அதை வெளியே காட்டவில்லை என்றாலும் தன் அன்னை அறிந்துகொண்டது அவன் அறிந்ததே.

அடுத்து என்ன என்று யோசித்துக்கொண்டு இருந்தவனை, "டோக்கன் நம்பர் 101" என்ற குரலில் தன் நினைவிலிருந்து வெளியே வந்தவன், எழுந்து சென்று தன் அன்னைக்கு வாங்கியிருந்த பார்சலை எடுத்துக் கொண்டு முதல் தளத்திற்குச் சென்றான்.

அவன் அங்கு வந்து சேரவும் ஜீவா வரவும் சரியாக இருந்தது. ஜீவா, அவனுடைய மனைவி மதி, பெற்றோர் ஜெயா, சதாசிவம் (அதாவது வரதராஜனுடைய முதல் தங்கையின் குடும்பம் மொத்தமும்) வந்துவிட்டனர்.
தன் அக்கா ஜெயாவைக் கண்ட சுமதி கண் கலங்கி, "அக்காகா... அண்ணா, அண்ணா" என்று குழந்தைபோல கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார்.
தங்கை அழுவதைப் பார்த்து ஜெயாவிற்கும் கண் கலங்கிவிட்டது, "ஏய் அழாதடி. எனக்கு அழுகை வருது" என்று சொல்ல சொல்ல ஜெயாவிற்கும் அழுகை வந்துவிட்டது.

'இருக்காதா பின்னே?' சீராட்டிய அண்ணன் இப்போது இப்படி இருப்பதைப் பார்க்க இருவருக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

ஜீவா, தன் மனைவி மதியிடம் கண்ஜாடை செய்ய மதி சென்று, "அத்தை பாருங்க... சித்தப்பாவிற்கு எதுவும் இல்ல. இன்னும் கொஞ்சநாள்ல சரி ஆயிரும்" என்று சமாதானம் செய்தவள், "இரண்டு பேரும் உட்காருங்க" என்று முதலில் இருவரையும் உட்கார வைத்தாள்.

"மதி..." என்று விக்னேஷ் அழைக்க, "சொல்லுங்க விக்னேஷ்" என்றாள் மதி.
"இது அம்மாக்கு வாங்கிட்டு வந்தேன். காலையில இருந்து சாப்பிடல அவங்க... கொஞ்சம் சாப்பிடச் சொல்லிக் குடுங்க" என்று மதியின் கையில் தான் வாங்கி வந்த பார்சலைத் தந்தான்.

தன் அன்னையும் பெரியன்னையும் எதிரிலிருந்த இருக்கையில் அமர, ஜீவாவும் ஜீவாவுடைய தந்தை சதாசிவமும் விக்னேஷுடன் அமர்ந்தனர். ஜெயாவும் சுமதியும் கொஞ்சம் சமாதானமான பிறகு, மதி பார்சலைத் திறந்து சுமதிக்கு சாப்பிடக் குடுத்தாள்.

சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவிக்கொண்டு சுமதி வந்தமர, ஒரு சில நிமிடங்கள் யாருமே எதையுமே பேசவில்லை. ரொம்பவே அமைதி காத்தனர்.
மேலும் ஐந்து நிமிடம் கழிய சதாசிவம்தான், "என்னப்பா ஆச்சு. டாக்டர் ஏதாவது சொன்னாரா. எதனால இப்படியாம்?" என்று கேள்விகளை நிதானமாக அடுக்கினார்.

"பெரியப்பா..." என்று ஆரம்பித்தவன் டாக்டர் அறையில் நடந்த அனைத்தையும் அனைவரிடமும் கூறினான்.

"என்ன செய்யலாம் இப்போது?" என்று சுமதி சின்னக்குரலில் அனைவரிடமும் யோசனை போலக் கேட்டார்.

விக்னேஷ் இடுங்கின கண்களுடன் தன் அன்னையைப் பார்த்தான். தன் அன்னை எங்கு சுற்றி எங்கே வருகிறார் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அதாவது, 'நான் சொன்னாலதானே திட்டுவாய். இவர்கள் சொன்னால் என்ன சொல்லப் போகிறாய். கண்டிப்பாகக் கேட்கப் போகிறாய்' என்று நினைத்து அவர் ஆரம்பித்தார்.
ஆனால், விக்னேஷிற்குத்தான் மிதமிஞ்சிய ஆத்திரம் பொங்கியது. எவ்வளவு சாதுரியமாக தன் அன்னை காய் நகர்த்துகிறார் என்று அவன் உள்ளுணர்வும் சொன்னது.

"அம்மா..." என்று விக்னேஷ் ஆரம்பிக்க, அதற்குள் அவனுடைய செல்போன் அழைத்தது.

ஃபோனின் திரையில் மகாலிங்கம் என்ற பெயரைப் பார்த்தவன், ‘இதை எப்படி மறந்தேன்’ என்று நினைத்துவிட்டுப் போனை எடுத்துக்கொண்டு அனைவரிடமும் இருந்து விலகி கொஞ்சம் தள்ளி நின்று பேசினான்.

"ஹலோ தாத்தா... ஸாரி தாத்தா" என்று கெஞ்சலும் கொஞ்சலுமாக விக்னேஷ் பேசினான்.

"எதுக்குப்பா ஸாரி? அதெல்லாம் எந்தக் காரணமும் இல்லாமல் நீ இப்படி பண்ணியிருக்க மாட்டாய் என்று தெரியும்" என்றவர், "என்ன ஆச்சு? இப்படி எல்லாம் போகாமல் இருக்கமாட்டியே விக்கா" என்று கேட்டார்.

"அது இன்னிக்கு காலைல..." என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் கூறினான்.

"சரிப்பா... எதுக்கும் கவலைப்படாதே! நான் நாளைக்கு வந்து வரதராஜனைப் பாக்கறேன். நான் அந்த காலேஜ் பிரின்சிபாலிடம் சொல்லிக்கறேன், வேறு எப்போதாவது வைத்துக் கொள்ளலாமென்று..." என்றார் மகாலிங்கம்.

விக்னேஷ்வரன், "சரி தாத்தா"

மகாலிங்கம் தாத்தா, "சரிப்பா வைக்கிறேன்"

"சரி தாத்தா" என்று போனை வைத்துவிட்டான் விக்னேஷ்.

ஃபோட்டோகிராபிஸ் போக விக்னேஷ் இயற்கை விவசாயமும் செய்து வருகிறான். அவன் இயற்கை விவசாயம் செய்து வருவது மகாலிங்கம் அய்யாவின் இடத்தில்தான். அவர் விக்னேஷிற்கு நல்ல வழிகாட்டியும் கூட. இருவருக்கும் என்னதான் வயது வித்தியாசம் நாற்பதுக்கு மேல் என்றாலும் ஏதோ வயதைக் கடந்த இனம்புரியாத நட்பு இருவருக்கும்.

விக்னேஷ் இந்த இயற்கை விவசாயத்தை நன்கு செய்ய அவனைப்பற்றி லோக்கல் பத்திரிகைகளில் வந்தது. அதனால் அவனைக் கோயம்பத்தூரில் உள்ள அரசு விவசாயக் கல்லூரியில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டுகொள் விடுத்தார் அந்தக் கல்லூரியின் ப்ரின்சிபால்.
அதுவும் மகாலிங்கம் அய்யாவின் மூலம். வரதராஜனிற்கு இன்று நேர்ந்த உடல் நலக்குறைவால் விக்னேஷினால் அதற்குப் போக முடியவில்லை. விக்னேஷிற்கும் தன் மாமாவிற்கு ஒன்று என்றதும் அனைத்தும் மறந்துபோயின.
ஃபோனை வைத்துவிட்டு வந்தவனுக்கு இன்னொரு வேலை திடுமென நினைவிற்கு வந்தது. ஒரு நிமிடம் யோசித்தவன், "ஜீ, ஒரு வேலை டா. ஒரு இரண்டுமணி நேரம் இருக்கியா, வந்து விடுகிறேன்" எனக் கேட்டான்.

"அதெல்லாம் நோ ப்ராப்ளம். நீ போயிட்டு பொறுமையா வா. நாங்க எல்லாரும் இருக்கோம்" என்று சொல்ல, "விக்னேஷ் நம்ம வீட்டு வழியாகவா போற?" எனக் கேட்டார் ஜெயா.

"ஆமாம் பெரியம்மா... நம்ம ஸ்டுடியோவிற்கு தான் போறேன்" என்றான்.

"சரி நானும் வர்றேன், எல்லாருக்கும் டிபன் செய்துவிட்டு, உனக்கும் அம்மாவிற்கும் மட்டும் நைட் சாப்பிட இங்கே எடுத்து வந்துவிடலாம்" என்று அவர் சொல்ல மதி உள்ளே புகுந்தாள்.

"அத்தை பேசாமல் நான் போறேன். நீங்க இங்க சின்னத்தை கூட இருங்க. அதுவுமில்லாம பாப்பா அம்மா வீட்டில் இருக்கா. இன்னும் கொஞ்சம் நேரத்துல எப்படியும் அழ ஆரம்பித்துவிடுவா. நான் டிபன் செஞ்சு விக்னேஷிடமே குடுத்து விடுறேன்" என்று மதி சொல்ல, எல்லோருக்கும் அதுவே சரி என்றுபட்டது.

மதியை வீட்டில் விட்டுவிட்டு சாய்பாபா காலனியில் உள்ள தன் ஸ்டுடியோவிற்கு சென்றான் விக்னேஷ். அவன் உள்ளே செல்ல ஏதோ கல்யாண ஆல்பத்தை சரி பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் நிமிர்ந்து விக்னேஷ் வருவதைக் கண்டான்.

"என்ன விக்ரம்... அந்தக் கல்யாண ஆல்பம் அண்ட் வீடியோஸ்லாம் வந்து வாங்கிட்டு போயிட்டாங்களா?" என்று கேட்டபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தான்.

"இப்போ தான் ஃபோன் பண்ணிச் சொன்னேன். ஈவ்னிங் வந்து வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாங்க" என்றபடி விக்ரம் தன் கையிலிருந்த ஆல்பத்தை அதற்கு அழகாக வடிவமைத்த ஒரு பெட்டியில் வைத்து மூடினான்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று விக்ரம் வினவ, "வரதராஜன்மாமாவிற்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். அதான் அவரு ஞாபகமாகவே இருக்கு விக்ரம்" என்றான் விக்னேஷ்.

"இப்போ பரவாயில்லையா?" என்று விக்ரம் வினவ, "ம்ம்" என்ன மட்டும் பதில் வந்தது.

பின் இருவரும் அவரவர் வேலையில் மூழ்கினர். ஃபோட்டோகிராஃபிஸில் சிறிய வயதில் இருந்தே ஆர்வம் அதிகம் இருந்ததால் தான் விக்னேஷ் இந்த ஸ்டுடியோவை ஆரம்பித்ததே. மகாலிங்கம் அய்யாவின் உறவுப்பையன் என்று வேலைக்கு வந்தவன் தான் விக்ரம். அவன் கல்யாண போட்டோஸ், வீடியோஸ் என்று பார்க்க விக்னேஷ் எடிட்டிங், ஆர்டர் பிடிப்பதென அனைத்தையும் பார்த்துக்கொண்டான்.

அந்தந்த வேலைக்கு ஏற்ப ஆட்கள் வைத்திருந்தான் விக்னேஷ். "விக்ரம் என்னடா... இன்னும் அந்த ஆள் வரவில்லை?" என்று தன் வாட்ச்சை திருப்பிப் பார்த்தபடியே விக்ரமிடம் சலித்தான் விக்னேஷ்.

"அட ஆமாம்! அந்த சொட்டையன் அத்தனைக் கேள்வி அன்று உன்னிடம் போனில் கேட்டப்பவே தெரியும்" என்றவன், "நீ வேணும்னா கிளம்பு. நான் அந்த ஆள் வந்தால் நாளை வரச்சொல்றேன்" என்று விக்ரம் சொல்ல விக்னேஷும் கிளம்பிவிட்டான்.

நேரம் போனதே தெரியவில்லை. மணி ஆறரை ஆகியிருந்தது. அப்படியே சாய்பாபா காலனியில் இருந்து வடகோவை ஜீவா வீட்டிற்கு வந்து சேர்ந்தான் விக்னேஷ்.

அவன் உள்ளே வரும்போதே, "சித்தாதா..." என்று ஓடி வந்து ஜீவாவுடைய இரண்டரை வயதுக்குழந்தை விக்னேஷிடம் ஒட்டி நின்றது.

"வியா பாப்பா" என்று குழந்தையைக் கொஞ்சியபடித் தூக்கியவன், அந்த அழகான குண்டுக் கன்னத்தில் ஒரு முத்தத்தைத் தந்தான். 'எனக்கு' என்பதைப் போலக் கன்னத்தைக் காட்டிய விக்னேஷிடம் மறுக்காமல் தன் பூவிதழால் முத்தத்தைத் தந்தாள் வியாஹா. "ஆ! தாடி குத்துது சித்தா" என்று சிணுங்கியவளைப் பார்க்க விக்னேஷிற்கு சிரிப்பு வந்தது.

சமையலறையில் இருந்து வெளியே வந்த மதி, "ஒரு 15 நிமிஷம் விக்னேஷ்.. சப்பாத்தி ரெடி ஆயிருச்சு. குருமா மட்டும்... உட்காருங்க" என்று குடிக்க தண்ணீரைத் தந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் மதி.

இருபது நிமிடத்தில் ஒரு பையோடு வெளியே வந்தவள் பையை விக்னேஷிடம் தந்தாள். "ஒரு டீ ப்ளாஸ்க்கும் இருக்கு... இரண்டு பேருக்கும். தண்ணீ எல்லாம் வச்சிருக்கேன்" என்றபடி விக்னேஷின் கையில் இருந்து தன்மகள் வியாஹாவை வாங்கினாள்.

"ஆ... ஆ... சித்தா நானும் உங்க கூட வரேன்" என்று கையையும் காலையும் ஆட்டிச் சிணுங்கி அழ ஆரம்பிக்க, அவளை விக்னேஷ் சமாதானம் செய்தான்.

"வியா... சித்தா இன்னிக்கு ஹாஸ்பிடல் போறேன். என்னதான் வியா பாப்பா போல்ட் கேர்ள்னாலும் அங்க வரக்கூடாது. சித்தா நாளைக்கு வந்து உங்களை ஐஸ்கிரீம் சாப்பிட கூட்டிட்டுப் போறேன்" என்று சொல்ல "நிஜமாவா சித்தா?" என்று தன் பெரிய கண்கள் விரிய கேட்டவளிடம், 'ஆம்' என்றுவிட்டு விக்னேஷ் கிளம்பினான்.
மருத்துவமனையில் வரதராஜனை வேறு அறைக்கு மாற்றி இருந்தனர். விக்னேஷ் செல்ல டாக்டர் அங்குதான் நின்றிருந்தார். சுமதியிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தவர் விக்னேஷைப் பார்த்து புன்னகைக்க விக்னேஷும் புன்னகைத்து வைத்தான்.

"இன்னும் ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல இருக்கணும். நாங்க நல்ல அப்சர்வேஷன்ல வச்சிட்டு பிரசர்லாம் கொஞ்சம் நார்மல் வந்த பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்யமுடியும்" என்றுவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

"மாமா, இப்போ ஒரு அரைமணி நேரத்திற்கு முன்தான் கண் முழித்தார். மருந்தின் காரணத்தினால் மறுபடியும் கண் அயர்ந்துவிட்டார்" என்று சுமதி விக்னேஷிடம் கூறினார்.

சுமதி தன் அக்கா ஜெயாவிடம் கண்ஜாடை காட்ட ஜெயாவும் ஏதோ காற்றிலேயே பேசினார். விக்னேஷ் அதைக் கவனிக்கத் தவறவில்லை.

"விக்னேஷ் ட்யூட்டி நர்ஸ் இருக்காங்க பார். நம்ம இவ்வளவு பேர் இங்க நிற்கவேண்டாம். வா... கொஞ்சநேரம் எல்லாரும் கீழே இருந்துவிட்டு வரலாம்" என்றழைக்க, விக்னேஷ், சுமதி, ஜெயா, சதாசிவம், ஜீவா என அனைவரும் கீழே வந்தனர்.

அந்த ஹாஸ்பிடலில் கீழே வெளியே பெரிய புல்வெளி மர பெஞ்சுகளுடன் இருந்தது. அதில் போய் சதாசிவம், ஜெயா, சுமதி அமர அதன் எதிரில் இருந்த பென்ஞ்சில் ஜீவாவும் விக்னேஷும் அமர்ந்தனர்.

சதாசிவம் தான் ஆரம்பித்தார்."விக்னேஷ் டாக்டர் உன்னிடம் பேசியதாய் சொன்னதானே... அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று வினவினார்.

"நான் இனி அவரை நல்லா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் மாமா. இன்னும் கொஞ்சநேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு என்று நினைக்கிறேன்" சட்டையின் மேல் பட்டனைக் கழற்றி விட்டபடி சொன்னான்.

"அது மட்டும் போதும்ன்னு நினைக்கறியா?" என்று ஜெயா பேச்சின் உள்ளே புகுந்தார்.

"பெரியம்மா... ப்ளீஸ்... எல்லாரும் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்கு புரியாம இல்ல" என்று இறுகிய குரலில் சொன்னவன், "அதை என்னால செய்ய முடியாது. அனுமதிக்கவும் மாட்டேன்" என்றான் உறுதியான குரலில்.

"ஏன் விக்கா முடியாது?" என்ற குரலில் திரும்பியவன் மகாலிங்கம் அய்யா நிற்பதைப் பார்த்து எழ, "உட்காரு, உட்காரு" என்று தோளில் தட்டியபடி வந்து விக்னேஷின் அருகில் அமர்ந்தார்.
"நீங்க என்ன தாத்தா இந்த நேரத்தில் இங்க?" என்று விக்னேஷ் வினவ, "மணி ஏழே முக்கால் தான்பா. சரி, ஏன் உன்னால் ஒத்துக்கமுடியாது" என்று விஷயத்திற்கு வந்தார்.

அமைதியாக அமர்ந்திருந்தவனிடம், "இதப் பாருப்பா... உனக்கு உன் மாமன் மேல் பாசம் அதிகம்தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இனிதான் அவரை நீ இன்னும் பார்த்துக்கொள்ள வேண்டும். பிடித்தவர்கள் கூட இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்" என்ற மகாலிங்கம் விக்னேஷின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.

அவன் முகம் எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. "இன்று மாலை கூட மயக்கத்தில் அந்தப் பொண்ணோட பெயரையே தான் சொல்லி இருக்கிறார் விக்கா. உன் கோபத்துனால ஏன் அவர தண்டிக்கிறாய்?" என்று கேட்க, "என்ன தாத்தா, தண்டனைன்னு எல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க!" என்றவன், "என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கே தெரியும்" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

"நடந்தது எல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும் விக்கா... உனக்கு மட்டுமில்ல, இங்கு இருக்க எல்லாருக்குமே அந்தக் கோபம் இருக்குன்னு உங்கள் எல்லோரின் முகத்தைப் பார்த்தாலே தெரியுது. ஆனால், இதை செஞ்சுதான் ஆகவேண்டும்... வேறுவழி இருப்பதாகத் தெரியல" என்றார்.

ஒருசில நிமிடம் அந்த இடம் அமைதியாக இருந்தது. விக்னேஷின் கையைப் பிடித்த ஜீவா, "விக்கி, மாமாவிற்காகடா..." என்றான்.

ஒரு பெருமூச்சுவிட்ட விக்னேஷ், "சரி" என்றான்.

"அப்புறம் என்ன? எங்கே இருக்கிறான்னு கண்டுபிடிக்க வேண்டும். இனி பேசாம ஏதாவது டிடெக்டிவ் ஏஜென்சியில்..." என்று சதாசிவம் கூற,

"கம்பம்" என்று ஒற்றை வார்த்தையில் அனைவரையும் அதிரச் செய்துவிட்டு எழுந்து சென்றான் விக்னேஷ்.

சில அடிகள் நடந்து தன் அன்னையைத் திரும்பிப் பார்த்தவன், "அம்மா நைட் ஒருவர் தான் ஹாஸ்பிடல்ல இருக்கணும். நீங்க இன்னிக்கு நைட் பெரியம்மா வீட்டுல தங்கிக்கங்க" என்றுவிட்டு ஜீவாவைப் பார்த்தவன், "ஜீ, இன்னும் இரண்டு நாள்ல கம்பம் கிளம்பலாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

'மனசு முழுதும் வெறுப்பை வைத்துக் கொண்டு அவள் இருப்பிடம் மட்டும் எப்படிக் கண்டுபிடித்தான், எப்போது கண்டுபிடித்தான்? ஏன் யாரிடமும் சொல்லவில்லை?' என்று எல்லோரின் மனதிலும் கேள்வி எழுந்தது.
 
  • Like
  • Love
Reactions: Malar and Sowmiya