மறையாதே என் கனவே - 5,6

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-5

வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி, "அப்பா மாத்திரை போட்டிங்களா, இன்னிக்கு சுகருக்கு?" என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டாள்.

அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே அவர் மாத்திரை போடவில்லை என்று புரிந்துகொண்டவள், "மிஸ்டர்வரதராஜன் உங்களுக்கு என்ன சின்னகுழந்தைன்னு நினைப்பா? ஒவ்வொன்னையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கணுமா" என்று தன்தந்தையை ஒரு புருவத்தைத் தூக்கி மிரட்டியவள், உள்ளே சென்று மாத்திரையை எடுத்து வந்து கொடுத்து தண்ணீரையும் தந்தாள்.

மாத்திரையைப் போட்டுவிட்டு சிரித்தபடி டம்ளரை தந்தவரிடம், "என்ன அப்படி ஒரு சிரிப்பு?" என்று புரியாமல் கேட்டவளிடம், "அது ஒன்றுமில்லமா... அப்பாவை மட்டும் இப்படி மிரட்டுறாயே... கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்டுக்கு போயிட்டா, அங்க இப்படி யாரை மிரட்ட முடியும் சொல்லு? ஒருவேளை அப்படியொரு அப்பாவி கிடைத்தால் பாவம்தான். அதை நினைச்சேன் சிரித்தேன்" என்று வரதராஜன் கேலிசெய்ய, "போங்கப்பா இந்த கல்யாணத்திற்கு எல்லாம் என்ன அவசரம்? இப்போதைக்கு நோ சான்ஸ்" என்றாள் கௌசிகா.

"அச்சச்சோ! நாய்க்குட்டியை மறந்துட்டேன் பாருங்க" என்று ஞாபகம் வந்தவளாக அறைக்குள் ஓடியவள், அந்த கூடைக்குள் அமைதியாக எட்டிப் பார்த்தாள். அழகாக தூங்கிக் கொண்டிருந்தது ப்ரௌனி. சமையல் அறைக்குள் நுழைந்தவள் பாலைக் காய்ச்சி பிரிட்ஜில் இருந்த மில்க்பிக்கிஸ் மூன்றை எடுத்து பாலில் நன்றாக கலந்து கரைத்தாள். பின் பாலை ஆற வைத்தவள், வீட்டில் இருந்த ஒரு பழைய ஃபீடிங் பாட்டிலைத் தேடியெடுத்து அதில் பாலை ஊற்றிக்கொண்டு எடுத்துசென்றாள்.

ப்ரௌனியை எடுத்து தன்மடியில் வைத்தவள் அதற்கு ஃபீடிங் பாட்டிலை வாயில் வைத்து பாலைப் புகட்டினாள். அழகாக வயிறு முட்டக் குடித்துவிட்டு, ‘ங்ங்’ என்று அவளின் மடியில் படுத்துறங்கிய ப்ரௌனியைக் கண்டு சிரித்தவள், அதை மீண்டும் கூடைக்குள்ளேயே வைத்து ஹாலில் கொண்டுபோய் ஷோபாவின் ஓரத்தில் வைத்து ஒரு சின்ன டர்க்கி கர்ச்சிஃபால் போர்த்திவிட்டாள்.

"அப்பா நான் போய் தூங்கறேன் நீங்களும் தூங்குங்க" என்றுவிட்டுத் தன் அறைக்குள் புகுந்துவிட்டாள்.

அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரே கசகசவென்று இருந்தது. ஒரு டவலை எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு டவலை மட்டும் உடம்பில் சுற்றிவிட்டு வெளியே வர, கௌசிகாவின் செல்போன் சிணுங்கியது.
எடுத்து ஃபோனைப் பார்த்தாள். திரையில், "விக்கா" என்ற பெயரோடு, பெயருக்கு பின்னால் அவனது போட்டோ அழகாகக் காட்சியளித்தது.

ஃபோனை அட்டண்ட் செய்து காதில் வைத்தவள், "ஹலோ மிஸ்கௌசிகா ஹியர். சொல்லுங்க என்ன வேணும்?" என்று பெட்டில் கட்டின துண்டோடு அமர்ந்தபடிக் கேட்டாள்.

"ஏய் ரௌடி" என்று ஆரம்பித்தவன், "சரி உன்கிட்ட ஒன்னு கேக்கணும்" என்று விக்னேஷ் கேட்க,

"கேளு" கௌசிகா நக்கலான குரலில்.

"ஹோட்டல்ல ஏன்டி அந்தப் பொண்ணுங்கள மிரட்டிட்டு இருந்த?" -விக்னேஷ்.

"நானா?" அப்பாவித்தனமான குரலோடு கௌசிகா.

"ஃப்ராடு, நான் பார்த்தேன்... சொல்லு ஏன் மிரட்டிட்டு இருந்த?" என்று விடாமல் கேட்டான்.

"என்னைப் பார்த்தால் மிரட்டுகிற பொண்ணு மாதிரியா இருக்கு? பேசுனேன்தான்... ஆனால், அட்வைஸ் குடுத்திட்டு இருந்தேன்" என்று சிரிப்பை அடக்கியபடி சொன்னாள்.

"மேடம் அப்படி என்ன குடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" கேலியான குரலோடு விக்னேஷ்.

"அதுவா... அங்க ஒரு வொயிட்சர்ட் போட்ட பையனை, கரெக்ட் செய்ய ட்ரைப் பண்ணீட்டு இருந்தாங்க. நான் போயி, இங்க பாருங்கம்மா... அந்தப் பையன் நல்லவன் இல்லை. சரியான ப்ளேபாய். பத்து பொண்ணுங்களை இதுவரை ஏமாத்தி இருக்கான், அதுவுமில்லாம அவனுக்கு சொரியாசிஸ் இருக்கு. அப்புறம்..." என்று சொல்லிக்கொண்டே போனவளை விக்னேஷின் குரல் தடுத்தது.

"ஏய்! ஏய்! ஏன்டி இப்படி பண்ற? நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்... நல்லது பண்ணலனாலும் பரவாயில்லை. கெட்டது பண்ணாம இரேன்" என்றவனிடம், "நான் உண்மையைத்தான சொன்னேன் விக்கா" என்று உதட்டைக் பிதுக்கிக் கேட்க, அவனிற்கு கோபம் எட்டிப்பார்த்தது.

விக்னேஷ், "ஏன்டி, என்னை எவ பாத்தா உனக்கென்னடி?"
"என்னடா இப்படி கேட்டுட்ட... என் அத்தை பையன் நீ! கல்யாணம் வரை உன்னைக் காக்க வேண்டியது இந்த முறைப்பெண்ணின் கடமையல்லவா, சொல்லு?" என்று போலியாய் அழுவதுபோல பிகு செய்தாள் கௌசி.

"சொப்பா!" என்று பெருமூச்சு விட்டவன், "ஏய், வந்தேன்னு வையி. அவ்வளவுதான்" என்று விக்னேஷ் சொல்ல, தான் உட்கார்ந்திருக்கும் அழகை ஒருதரம் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது.

"போய் தூங்குடா. எனக்குத் தூக்கம் வருது. டு நாட் டிஸ்டர்ப்" என்றபடி ஃபோனை கௌசி வைக்க, அந்தப்பக்கம் விக்னேஷ், "ராட்சசி" என்று லேசான முறுவலுடன் முணுமுணுத்தபடி போனை வைத்தான்.

ஃபோனை வைத்துவிட்டு தனது கப்போர்டை திறந்து நைட் ட்ரெஸை எடுத்து, உடுத்திக் கொண்டு மதி கொடுத்த டைரியைப் பிரித்தபடி தன் ரைட்டிங் டேபிள் முன்னால் அமர்ந்தாள். தான் இதுவரை எழுதி வைத்திருந்த பழைய கவிதைகள் எல்லாவற்றையும் கட் செய்து அதில் ஃபெவிஸ்டிக் போட்டு ஒட்டினாள். பிறகு, இன்று நடந்ததை எழுத நினைத்தவளுக்கு அவளது விக்காவின் முகம் முன்னால் வந்து நின்றது.

ஆமாம்... அவள் விக்காவைக் காதலிக்கிறாள். எப்போதிலிருந்து என்று தெரியவில்லை. ஆனால், அவளது விக்காவுடன் பேசாமல், இல்லை இல்லை... வம்பிழுக்காமல் ஒருநாள் கூட அவளால் இருக்கமுடியாது. ஆனால், இதுநாள்வரை யாருக்கும் தெரியாது. ஏன் விக்னேஷிற்கே தெரியாது. சொல்லத் தைரியமில்லாமல் இல்லை, ஏனோ அவனிடம் மறைத்து, மறைந்து காதலிப்பதில் அவ்வளவு சுகம் அவளுக்கு. இப்படியே நாட்களும் செல்கிறது.

'இயல்பாய் இருக்கிறேன்
உன் முன்னால்
ஆனால்
இரவிற்கும் பகலிற்கும்
இடையே உள்ள
நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிக்கின்றன
உன் நினைவுகள்டா...

கொஞ்சம்
நிதானமாகவே
சேமித்துக்கொண்டிருக்கிறேன்
என் காதலை
ஏனென்றால்
மொத்தமாகக் கொட்டி
என் காதலின் போதையில்
உன்னைத்
தள்ளாடவைப்பதற்கு…

என் பேனாவின்
திசை
நோக்கிச் செல்லும்
எழுத்துக்கள் போல
என்னையும் அழைத்துச் செல்
என்பதே
தீராத ஆசை'என்று டைரியில் தன் பேனாவால் எழுதி முடித்தாள்.

தன்கையால் அதற்கு ஒரு முத்தத்தைத் தந்தவள் மூடி வைத்துவிட்டு அப்படியே சென்று படுக்கையில் விழுந்தாள். அன்றைய நாளை ஒருதரம் முழுதாக நினைத்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.

வரதராஜனிற்கு சொந்த ஊர் சென்னைதான். அம்மா, அப்பா, இரண்டு தங்கைகளோடு அழகானக் குடும்பம் வரதராஜனுடையது. வரதராஜனின் பெற்றோரிடம் அவ்வளவு வசதியில்லை என்றாலும் பிள்ளைகளுக்கு கல்வி முக்கியமென்று தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் ஒரே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார் வரதராஜனின் தந்தை. வரதராஜனின் மூத்த தங்கை ஜெயா. இரண்டாவது தங்கை சுமதி. நன்றாகப் படித்து முடித்து வேலையில் சேர்ந்தார் வரதராஜன். குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்.

ஆனால், அந்த சந்தோஷம் அவர்களுக்கு நிலைக்கவில்லை. அடுத்த ஆறு மாதத்தில் வரதராஜனின் தந்தை மாரடைப்பால் இறந்தார். அவர் இறந்த சோகத்திலேயே அடுத்த ஆறுமாதத்தில் வரதராஜனின் தாயும் இறந்துவிட்டார். தாய் தந்தையை அடுத்தடுத்து இழந்ததில் மூன்று பிள்ளைகளும் கலங்கி நின்றனர். அப்போது ஜெயா பத்தாவது. சுமதி எட்டாவது.

தந்தை வாங்கிய கடன்வேறு அவர்களை தொந்திரவு செய்தது. வயதுப்பெண்கள் இருக்கும் இடத்திற்கு கடன்காரர்கள் வருவது அவ்வளவு சரியாகப்படவில்லை வரதராஜனிற்கு. ஆகவே, தன் தந்தை வைத்துப் போயிருந்த ஒரே நிலத்தை விற்றவர் கடனை எல்லாம் செட்டில் செய்தார். கையில் கொஞ்சம்கூட நிற்கவில்லை.

அதனுடன் தங்கைகளை வேறு தேற்றும் பொறுப்பும் சேர்ந்து கொண்டது. தங்கைகளைத் தேற்றி பள்ளிக்கு அனுப்பினார். அதற்குள் பள்ளிக்கட்டணம், வீட்டுச் செலவுகள் என்று வர திணறிப்போனார் வரதராஜன். சம்பளத்தை அன்னையின் கையிலே கொடுத்துப் பழக்கப்பட்டவரால் எப்படி சிக்கனமாய் செலவு செய்வதென்று தெரியவில்லை. பின்பு தங்கைகளை தன்னுடன் அமர்த்தி மாதாமாதம் வாங்கும் மளிகைசாமான் லிஸ்ட் என்று பட்டியல் போட்டார்.
அதிலிருந்து ஜெயா தேவையில்லாதவற்றை (அதாவது தன் அம்மா வாங்குவதைப் பார்த்துப் பழகி இருந்ததால்) கழிக்கச் சொன்னாள். பின் ஒருவாறு சமாளித்தனர் மூவரும்.
வரதராஜன் அயராது உழைத்து ஆபிஸில் பதவி உயர்வை வாங்கினார். அப்படியே ஐந்து வருடங்கள் கடந்தன. அதற்குள் ஜெயாவும் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார். சுமதி கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார். வரதராஜன் ஜெயாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஜெயா மறுத்தாள்.

"ஏன் ஜெயா... கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்ற?" என்று கேட்டவரிடம்,
"அண்ணா நான் போயிட்டா, சுமதியும் நீங்களும் தனியாக இருப்பீங்க... இன்னும் இரண்டு வருசம் போகட்டும். சுமதியோடு சேர்த்து எனக்கும் கல்யாணத்தை வைத்து விடுங்கள்" என்று சொன்னார் ஜெயா.

நல்லவேளை காதல் அது இது என்று இருக்குமோ என்று நினைத்தவர் நிம்மதியடைந்தார் வரதராஜன். அவருக்கும் கொஞ்சம் கையில் பணம் கம்மியாக இருப்பது போலத் தோன்றியது. வாழப்போகும் இடத்தில் நன்றாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டவர் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.
அடுத்த இரண்டரை வருடத்தில் நன்றாக உழைத்து கல்யாணத்திற்கு சேர்த்தவர், இரண்டு மாத இடைவெளியில் ஜெயாவின் கல்யாணத்தையும் சுமதியின் கல்யாணத்தையும் வைத்தார். நல்லநேரமோ என்னமோ நல்ல குடும்பமாக சென்னையிலேயே அமைந்தனர் இரு பெண்களுக்கும். அம்மாவின் நகை, இவரின் சேமிப்பு என இரண்டு பெண்களுக்கும் ஆளுக்கு முப்பது பவுன் போட்டார்.

முதலில் ஜெயா கல்யாணம், அடுத்து சுமதி கல்யாணம் என்று அடுத்தடுந்து கல்யாணம் நன்றாகவே முடிந்தது. ஜெயாவின் கணவர் சதாசிவம். சுமதியின் கணவன் செந்தில்நாதன். இரண்டு தங்கைகளின் பிரிவு சோகத்தை தந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதே அவருக்கு பெரிய நிம்மதி. அவ்வப்போது அவர்கள் இவரைப் பார்க்க வருவது வழக்கம். இல்லையென்றால் இவர் பார்த்து வருவார்.

அடுத்து வந்த ஒருவருடத்தில் அதே இரண்டு மாத இடைவெளியில் ஜெயா, ஜீவாவையும், சுமதி விக்னேஷையும் பெற்றெடுத்தனர். தான் தாய்மாமா ஆகிவிட்ட பெருமை அவரிடம் அன்று அதிகமாகத் தெரிந்தது. தாய்மாமன் சீரை எந்தக் குறையுமில்லாமல் செய்தார் வரதராஜன். செந்தில்நாதனிற்கும் சதாசிவத்திற்கும் வரதராஜனின் மேல் நல்ல மரியாதை உண்டு.

"வேற யாராவது இருந்திருந்தால் தங்கைகளின் படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பி, கையாலாகாத ஒருவனிடம் தள்ளியிருப்பான். ஆனால், இவரோ எந்தக்குறையும் இல்லாமல் படிக்க வைத்து நகையையும் சேர்த்து நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறாரே!" என்று ஒருநாள் செந்தில்நாதனும் சதாசிவமுமே பேசிக்கொண்டனர்.

அடுத்த மூன்று வருடத்தில் செந்தில்நாதனும் சதாசிவமும் உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து வரதராஜனிற்கு மணம்முடித்து வைத்தனர். முதலில் கல்யாணம் வேண்டாம் என்றவர் கோமதியைக் கண்டவுடன் தலையாட்டி விட்டார். கோமதி அழகில் மட்டுமல்ல குணத்திலும் தங்கம்தான். முதலில் அண்ணி எப்படியோ என்ன பயந்த ஜெயாவுக்கும் சுமதிக்கும், ‘அப்பாடா’ என்று இருந்தது.

அடுத்து ஒரு வருடத்தில் ரோஜா பூவே தோற்றுவிடும் அளவிற்கு ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு இறைவனிடம் சேர்ந்துவிட்டார் கோமதி. வரதராஜன் தான் உடைந்துபோனார். வாழ்க்கையில் முதல் தடவையாக கதறினார். அப்பா அம்மா இறந்தபோதுகூட கண்ணீர் விட்டாரே தவிர இந்தளவு அழவில்லை. வாழ்ந்த இந்த ஒருவருட வாழ்க்கையில் ஒரு சின்ன சண்டைக்கூட போட்டதில்லை. தாயும் தாரமுமாக இருந்து, இந்த ஒருவருடம் மனைவியுடன் வாழ்ந்த நாட்களை மறக்கவே முடியாது வரதராஜனால்.

அவருக்கு அதற்குப்பிறகு கிடைத்த ஒரே ஆறுதல் கௌசிகா மட்டும்தான். குழந்தையை கவனித்துக்கொள்ள வரதராஜன் மிகவும் சிரமப்பட, அவர் வேலைக்குச் செல்லும்போது சுமதியிடம் கௌசிகாவைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.

சுமதியின்வீடும் ஜெயாவின்வீடும் பக்கம் பக்கம் என்பதால் ஜெயாவும் எல்லோரும் காலை வேலைக்கு சென்றபிறகு தங்கையின் வீட்டிற்கு வந்து அண்ணனின் மகளைப் பார்த்துக் கொள்வார்.

மற்ற குழந்தைகளைப் போலக் கௌசிகா அழுததே கிடையாது. பசி வந்தால் மட்டுமே அழுகை. அவளைப் பார்த்துக் கொள்வதும் யாருக்குமே சிரமமாக இருக்கவில்லை.

ஜீவாவும் விக்னேஷும் அப்போதுதான் நான்கு வயதென்பதால் கௌசிகாவை ஆச்சரியமாகப் பார்த்தனர். குழந்தையாகத் தொட்டிலில் படுத்திருக்கும் அவளைக் காண இருவருக்குமே குஷிதான். ஜீவா கௌசியை கையில் வாங்குவேன் என்று அடம்பிடிக்க, அவ்வப்போது சுமதி அவனை உட்காரவைத்து அவனது மடியில் வைப்பார். விக்னேஷைக் கேட்டால், "வேண்டாம்" என்று விடுவான்.

ஆனால், கௌசியின் மேலே அவன் கண்கள் இருக்கும். தலையில் அடர்த்தியான முடியுடன் முட்டைக் கண்களை உருட்டிக்கொண்டு, கை கால்களை உதறி அந்தச் ரோஜா இதழ்களை விரித்துச் சிரிக்கையில் வாயைத்திறந்து அவளைப் பார்த்துக்கொண்டு இருப்பான் விக்னேஷ்.

அழுதுகொண்டு இருந்தால் கூட விக்னேஷை கண்டால் அழுகை அடங்கிவிடும் பிஞ்சுக் குழந்தையாக இருக்கும்போதே. கௌசிகா தவழ ஆரம்பிக்க யாராலும் சமாளிக்க முடியவில்லை. ஒருநாள் வேலை விஷயமாக வரதராஜன் வெளியூர் சென்றுவிட அன்று கௌசிகாவை சுமதி வீட்டிலேயே வைத்திருந்தார்.

அடுத்தநாள் காலை(ஞாயிற்றுக்கிழமை) தவழ்ந்து கொண்டே சென்ற கௌசி நன்றாக தூங்கிக்கொண்டிருந்த விக்னேஷின் அருகில் உடகார்ந்தாள். ஜீவாவும் விடுமுறை என்பதால் சுமதி வீட்டிலேயே இவர்களுடன் இருந்தான். அப்போதுதான் எழுந்து தூக்கக் கலக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜீவா, கௌசி விக்னேஷின் அருகில் உட்கார்ந்திருந்ததைக் கண்டான். ஒருநொடி தாமதிக்காமல் அவனின் உச்சி முடியை அப்படியே இரண்டு பிஞ்சுக் கையால் பிடித்துவிட்டாள்.

முடியைப் பிடித்து இழுத்த வலியில் விக்னேஷ் கத்த ஆரம்பிக்க சுமதியும் செந்தில்நாதனும் படுக்கை அறைக்குள் ஓடி வந்தனர். அதற்குள் ஜீவா கௌசியின் கையை விக்னேஷின் தலையில் இருந்து எடுத்துவிட தூக்கத்தில் இருந்தவன் எழுந்து உட்கார்ந்து உச்சந்தலையைப் பிடித்தபடி கண்களில் நீருடன் சிணுங்க ஆரம்பித்தான் விக்னேஷ். உள்ளே வந்த சுமதியும் செந்தில்நாதனும் ஜீவா விவரம் சொல்ல சிரிப்பை அடக்கியபடி விக்னேஷை சமாதானம் செய்தனர்.

"வி... விக்... விக்கா, விக்க்காகா..." என்று விக்னேஷை முதல்முதலாக தன் மழலைக் குரலால் அழைத்தாள் கௌசிகா. அவள் முதல் உச்சரித்த வார்த்தையும், "விக்கா" தான். எல்லோரும் கண் விரிய கௌசியைப் பார்க்க, அழுது கொண்டிருந்த விக்னேஷின் அழுகையும் அப்படியே நின்று வாயைத் திறந்து, "பேபே..." என்று கௌசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

செந்தில்நாதன் தான் கௌசியைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். அதிலிருந்து எதற்கெடுத்தாலும், "விக்கா, விக்கா" தான். அவளின் சுட்டித்தனத்தால் அனைவருக்கும் ப்ரியமாகிப் போனாள். வளர வளர தான் சேட்டை குறும்பு எல்லாம் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்தவர் முகம் சுளிக்கும்படியான குறும்பு இல்லை. சிறுவயதில் இருந்தே ஆண் நண்பர்களுடன் இருப்பதால் இயல்பாக வந்த ஒன்று.

தன் மனைவியையே உரித்து வைத்திருந்த மகளையும் அவளது சேட்டைகளையும் காண காண வரதராஜனும் கொஞ்சம் சோகத்தில் இருந்து வெளியே வந்தார்.

பள்ளி சேரும் வயது வந்தவுடன் விக்னேஷ், ஜீவா படிக்கும் பள்ளியிலேயே மகளை சேர்த்துவிட்டார் வரதராஜன். பள்ளி முடிந்து விக்னேஷ், ஜீவா உடனே பள்ளியில் இருந்து வருபவள் தன் தந்தை வரும்வரை சுமதி அத்தை வீட்டிலேயே தங்கிவிடுவாள்.

ஜீவா, விக்னேஷ், கௌசிகா மூவரும் நல்ல நெருக்கம். வயது வித்தியாசம் இருந்தாலும் ஆண் பிள்ளைகள் இருவரும் செய்வதைக்கண்டு நானும் அதையே செய்வேன் என்று குளறுபடி செய்வாள். அவள் செய்தது தப்பாகி விட்டால் அவ்வளவுதான். அதுவும் அவளை விக்னேஷும் ஜீவாவும் கிண்டல் செய்து விட்டால் அவ்வளவுதான். இருவரையும் அடித்துவைத்து விடுவாள். அதிலும் சின்னவயதில் இருந்தே கிடைப்பது விக்னேஷின் உச்சி முடிதான். என்னதான் சண்டையிட்டுக் கொண்டாலும் மூவரும் பிரிந்ததே இல்லை.

சிறு வயதிலிருந்தே காலை நேரத்தில் எழும் பழக்கம் இருந்ததால் தன் தந்தையுடன் எழுந்து ஏதாவது உதவுகிறேன் என்று ஆரம்பித்து விடுவாள். தந்தையிடம் தினமும் நடக்கும் அனைத்தையும் ஒப்பித்தபடியே அவரின்மேல் படுத்து சொல்ல சொல்ல பாதியில் உறங்கிவிடுவாள்.

கௌசிக்கு நான்கு வயது இருக்கும்போது சந்தியா பிறந்தாள் ஜெயாவிற்கு. அப்படியே நாட்கள் செல்ல கௌசி வயது பதிமூன்று ஆனது. விக்னேஷ் ஜீவாவின் வயது 17. பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.
பள்ளி இறுதியாண்டு வகுப்பு என்பதால் மாலை ஆறுமணிக்கு அவன் வீட்டிற்கு வந்தவன் யாரும் வீட்டில் இல்லாததைக் கண்டு வீட்டிற்குள் தேடினான். ஒருவேளை கோவிலிற்கு சென்றிருப்பார்கள் என்று நினைத்தவன் உடையை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹாலிற்கு வர கௌசிகா அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

"ஏய், இங்க தான் இருக்கியா... அம்மா எங்கடி?" என்றபடி சோபாவில் வந்து அமர்ந்து டிவியைப் போட்டான்.

"நான் பாத்ரூமில் இருந்தேன்" என்றவள், "அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க" என்று தரையைப் பார்த்தபடியே பதில் வந்தது.

‘என்ன, இவ இவ்வளவு அமைதியா உட்கார்ந்திருக்கா’ என்று நினைத்தவன், அவளை உற்று கவனித்தான். மஞ்சள்நிற ஃப்ராக் முட்டியின் கீழ் வரைப் போட்டு, கைகளைக் வயிற்றுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு ஏதோ யோசித்தபடி எட்டுக்கால்பூச்சி போல உடல்வாகுடன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

"ஏய், என்ன ஆச்சு? எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க... ஏதாவது சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆயிட்டியா என்ன?" என்று கேலியாகக் கேட்டுப் பார்த்தான். அவளிடம் பதிலில்லை. அவள் ஏதோ தீவிர யோசனையில் மூழ்கி இருந்தாள்.

"கௌசி, இங்க பாருடி... என்ன ஆச்சு?" என்று அவளது தாடையைக் கன்னத்தோடு பிடித்துத் திருப்பிக் கேட்டான்.

அவளைப் பார்த்தவனுக்கு அவள் ஏதோ பயமாகவும் பதட்டமாகவும் இருப்பதுபோலத் தெரிந்தது. "விக்கா... நா... நான்... பெரிய பொண்ணு ஆயிட்டேன்டா... அதாவது ஏஜ் அட்டண்ட் பண்ணிட்டேன்டா" என்று மூச்சுவாங்க உதடு நடுங்க அவள் சொல்ல, விக்னேஷ், 'பேபே'வென விழித்தான்.

அவனுக்கு என்னவென்று தெரியாமல் இல்லை. ஆனால், இப்போது என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏனோ அவளைவிட அவனுக்கு அதிக பதட்டமாக இருந்தது. தன் அம்மாவிற்குக் வீட்டு ஃபோனில் இருந்து அழைத்துப் பார்த்தான். சுமதி எடுக்கவில்லை. அடுத்து ஜீவாவின் வீட்டிற்கு ஃபோன் போட ஜெயா தான் எடுத்தார்.

"பெரியம்மா..." என்றவனுக்கு குரல் உள்ளே சென்றது.

"என்னடா விக்னேஷ்... என்ன ஆச்சு, ஏன் குரல் ஒருமாதிரி இருக்கு?” என்று ஜெயா கேட்க விஷயத்தைக் கூறினான்.

"சரி, நான் பத்து நிமிடத்தில் வரேன்" என்று ஃபோனை வைத்தவர், அடுத்து பத்து நிமிடத்தில் வந்தார். அவர் வந்த அடுத்த சிலநொடிகளிலேயே சுமதியும் வர உறுதியாகிவிட்டது. உடனே தன் அண்ணனுக்குப் ஃபோன் செய்து தங்கைகள் விவரம் சொல்ல அவர் பூரித்துப் போனார். பின் எல்லா சீர்களும் நன்றாகவே செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இரண்டு மாதம் மட்டுமே கௌசியை சுமதி, ஜெயாவால் அடக்கி வைக்க முடிந்தது. மறுபடியும் ஆட்டம்பாட்டம் சேட்டைதான்.

இப்போது மட்டுமில்லை பள்ளியில் இருந்தே எந்தப் பெண்ணையும் விக்னேஷிடம் பேசவிடமாட்டாள் கௌசி. ஒருமுறை விக்னேஷுடன் படிக்கும் பெண் கௌசியிடம் வந்து ஒரு லவ்லெட்டரைத் தந்து, "இதை நீ விக்னேஷிடம் தந்துடு ப்ளீஸ்" என்று சொல்ல, "ஏய், இந்தா... அப்படியே ஓடிப்போயிடு!" என்று அவள் கையில் கௌசி லெட்டரைத் திணிக்க அந்தப் பெண் கௌசியை முறைத்தாள்.

"நீ இல்லையென்றால் எனக்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்களா?" என்று முறைத்தபடி கேட்டாள்.

"சூப்பரா முறைக்கற... வந்து உன் அப்பா குமார் அங்கிள்தானே... என் அப்பாவிற்குத் தெரிந்தவர்தான். நான் எங்கு சொல்லணுமோ அங்க சொல்லிக்கறேன்" என்று மிரட்ட, அவள் அவ்வளவுதான் ஓடியே விட்டாள்.

பாவம் அவள் கழுத்தில் மாட்டியிருந்த ஐடி கார்ட்டில் இருந்த அவள் அப்பாவின் பெயரை கௌசி பார்த்ததை அவள் அறியவில்லை. இது எல்லாம் நடந்தது கௌசிக்கு பள்ளி முடிந்து செல்லும்போது, அதாவது பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவெளி இருந்த நேரத்தின் போது.

இந்த விஷயம் விக்னேஷின் காதுகளில் எப்படியோ எட்டிவிட்டது. வீட்டிற்கு வந்து கௌசியை அவன் கேள்வி கேட்க, "ஏய்ய்! என்னடா கேள்வி கேக்கற... அவ ஓவரா பேசுனா, நான் சும்மா விடணுமா?" என்று கேட்க இருவருக்கும் சண்டை வந்தது.

அதற்குள் சுமதி வந்து விசாரிக்க சின்ன வயதில் இருந்தே எதையும் மறைக்கும் பழக்கமில்லாத விக்னேஷ் தன் அன்னையிடம் எல்லாவற்றையும் கூறி, "அம்மா, பாரும்மா இவளை... அந்தப் பொண்ணு சீனியர்ன்னு கொஞ்சம்கூட பயமில்லாம அந்தப் பொண்ண பிடிச்சு மிரட்டி அனுப்பியிருக்கா... பாவம் க்ளாஸ்ல வந்து என்கிட்ட அழுது. கௌசிய யார்கிட்டையும் சொல்ல வேணாம்னு சொல்லிடுன்னு அப்படி கேக்கறா" என்று சொல்ல கௌசிக்கு கோபம் வந்தது.

"உனக்கு ஏன்டா, அவமேல அவ்வளவு அக்கறை?" என்றவள், "அத்தை பாத்தீங்களா... அவன் அந்தப் பொண்ணு பத்தி பேசறான், நோட் பண்ணுங்க!" என்று சுமதியைக் குழப்பினாள்.

அதற்குள் செந்தில்நாதன் வர இருவரையும் சமாதானம் செய்தார். இந்த மாதிரி விஷயங்களில் சண்டைகள் வருமே தவிர ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்கமாட்டார்கள் ஜீவா, விக்னேஷ், கௌசிகா. ஆனால், வெளியே காட்டிக்கொண்டதே இல்லை.

ஜீவாவின் வீடு கொஞ்சம் வசதியாகவே இருந்தனர். விக்னேஷின் வீடும் நல்ல மிடில்க்ளாஸ் வாழ்க்கையையே வாழ்ந்தனர். கௌசிகாவின் வீட்டிலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

இப்படியே ஸ்கூல் என எல்லாவற்றையும் முடித்து கௌசி கல்லூரியில் சேர்ந்தாள். கல்லூரியிலும் பண்ணாத வேலையில்லை. ஒரு பெண்ணை தப்பாகப் பேசினான் என்று ஒருவனை வகுப்பிலேயே அடித்து விட்டாள்.

பெண்கள் படிப்பிற்கு மட்டும்தான் லாயக்கு என்று ஒருவன் சொல்ல, "வரியா... பைக் ரேஸ் வச்சுக்கலாம்" என்று கேட்டாள்.

"ஏய் இங்க பாருங்கடா... ரேஸ் வராளாம்" என்று சிரித்தான். அதாவது கௌசியின் நண்பன்தான் அவன். சும்மா பேசிக் கொண்டிருந்தவர்கள் பேச்சின் திசைமாறி இப்படி வந்து நின்றது.

"இந்த ஹேஹே... லாம் வேண்டாம். ரேஸ் வர்றியா இல்லையா?" என்று கேட்க, ஒரு சண்டே காலை 5.40 மணிக்கு ஈசீஆர் ரோட்டில் வைத்திருந்தனர். கௌசியிடம் பைக் எல்லாம் இல்லாததால் வகுப்பிலுள்ள ஒரு மாணவனின் பைக்கையே வாங்கினாள்.

ரேஸ் நீலாங்கரையில் ஆரம்பித்து முட்டுக்காடு வரை என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஒருசிலர் தவிர மிச்ச பத்துபேரும் முட்டுக்காட்டில் நின்றிருந்தனர். ரேஸ் ஆரம்பிக்க வண்டியை இருவரும் கிளம்ப, ரேஸ் பைக்கிற்கே உண்டான சத்தத்தோடு அந்த அதிகாலையில் பைக் கிளம்பியது. விஜிபி தாண்டி பனையூர் வரை கௌசியால் தன் நண்பனை முந்த முடியவில்லை.

விக்கா பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கும்போது சொன்னதை ஞாபகத்திற்கு கொண்டு வந்தாள் கௌசி. கியரை டவுன் செய்தவள் ஆக்சலரேட்டரைக் கொடுத்து சைட் எடுத்து ஓவர்டேக் செய்துவிட்டாள். ஓவர்டேக் செய்த சந்தோஷத்தில் இன்னும் ஸ்பீட் எடுக்க முட்டுக்காட்டை முதலில் அடைந்தாள்.

தொடக்கத்தில் யாருக்குமே கௌசி முதலாவதாக வருவாள் என்று தோன்றவில்லை. சும்மா வாய் அடிக்கிறாள் என்றுதான் நினைத்தார்கள். முதலில் வந்ததுகூட அவளில்லை என்றுதான் நினைத்தனர். காரணம் ஒரேமாதிரி ரேஸ் சூட் அண்ட் ஹெல்மெட் அணிந்திருந்தனர். ஹெல்மெட்டை கழற்றிவிட்டு இறங்கி வந்து, "ஹே! ஃபர்ஸட் ஃபர்ஸ்ட்" என்று ஆட எல்லோரும் அவளுடன் சேர்ந்து ஆட, இரண்டாவதாக வந்த கவின் (பைக் ரேஸ்-இல் உடன் வந்தவன்) சேர்ந்து ஆடினான்.

அவள் ஆடிவிட்டுத் திரும்ப அப்படியே நின்றுவிட்டாள். விக்னேஷும் ஜீவாவும் ஆப்போசிட் ரோட்டில் நின்று இவர்கள் அடித்தக் கூத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வளவுதான் அப்படியே நின்றுவிட்டாள். "போச்சு மாட்டுனோம்" என்று முணுமுணுத்தவள் ஹெல்மெட், ரேஸ் ஜாக்கெட்டை எல்லாம் கழற்றி தன் நண்பர்களிடம் தந்துவிட்டு ரோட்டைக் க்ராஸ் செய்து அவர்களின் அருகில் சென்றாள்.

அப்போது விக்னேஷும் ஜீவாவும் ஐடி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒருவருடம் ஆகியிருந்தது. சும்மா காலை ஒரு ரவுண்ட் போறோம் என்று வீட்டில் சொல்லி வந்த இருவரும், முட்டுக்காட்டின் பாலத்தில் நின்றுவிட்டனர். பைக் வரும் சத்தத்தில் எதேச்சையாகத் திரும்பிய இருவரும் ஹெல்மெட்டைக் கழட்டிய பின்புதான் அது கௌசிகா என்றே கவனித்தனர்.

அவர்கள் அருகில் கௌசிகா செல்ல அவர்கள் இருவரும் திருட்டுமுழி முழித்தனர். ‘திட்டுவாங்கப் போகிறோம்’ என்று நினைத்து வந்தவள் இவர்கள் இருவரும் முழிப்பதைப் பார்த்து, ‘என்ன இவனுக முழியே சரியில்ல...’ என்று புருவத்தைச் சுருக்கியபடி அருகில் சென்று நிற்க, இருவரும் கையைக் கோர்த்து இடைவெளிவிடாமல் ஒட்டி நின்றனர்.

"என்னடா... என்ன மறைக்கறீங்க?" என்று கௌசி கேட்டுக்கொண்டே அருகில் வர இனி மறைக்க முடியாதென்று நினைத்த இருவரும் நகர, அங்கு ஒருபெண் நிற்பதைப் பார்த்த கௌசிகாவின் கண்கள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது.

"யாருடா இந்தப் பொண்ணு?" என்று கேட்க, இருவருடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் விழித்தாள்.

"கௌசி... கௌசி... யார்கிட்டையும் சொல்லிடாதேடி... இது, நான் லவ் பண்ற பொண்ணு" என்று ஜீவா கிட்டத்தட்ட கெஞ்சத் துவங்க,

"என்னது லவ் பண்றியா? என்கிட்ட சொல்லவே இல்ல. மறைச்சுட்டல ஜீ?" என்று கேட்டவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"நான் இன்னிக்குதான்டி ப்ரபோஸே பண்றேன். இன்னிக்கு இவ பர்த்டே... இவ ஓகே சொன்னால் அப்புறம் சொல்லலாம்னு நினைத்தேன்" என்று ஜீவா, கௌசியை சமாதானம் செய்ய, விக்னேஷ் ஜீவாவின் கையை அழுத்தியதை ஜீவா கவனிக்கவில்லை.

"இவனிடம் மட்டும் சொல்லி கூட்டிட்டு வந்திருக்க. ஆனா, என்ன மட்டும் விட்டுட்டேல்ல" என்று விக்னேஷை கைகாட்டி ஜீவாவிடம் சண்டையிட்டாள் கௌசிகா. ஜீவா பேசாமல் நின்றான்.

"ப்ரபோஸ் பண்ணிட்டியா?" என்று கௌசி கேட்க, அப்போதுதான் இன்னும் அவளைப் ப்ரபோஸ் செய்யவில்லை, கௌசி வந்த அவசரத்தில் அவளிடம் எல்லாவற்றையும் உளறிவிட்டதை ஜீவா உணர்ந்தான்.

ஒரு நிமிடம் நாக்கைக் கடித்துக்கொண்டு திரும்பியவன் மதியைப் பார்த்தான். மதி இடுப்பில் கை வைத்தபடி, "இதற்குதான் கூட்டிட்டு வந்தீங்களா?" என்று முறைத்தபடிக் கேட்டாள்.

காரைத் திறந்து ஒரு கிஃப்டை எடுத்தவன் அவள் முன் ஒரு காலை மடித்து அமர்ந்து மதியின் ஒரு கையைப்பிடித்து, "மதி, ஐ லவ் யூ... ஐ வாண்ட் டூ மேரி யூ... வில் யூ மேரி மீ?" என்று நடுரோட்டில் கேட்க மதியின் முகம் சிவந்துவிட்டது.
"ப்ளீஸ், ப்ளீஸ் ஜீவா... கெட்டப்..." என்று இன்னொரு கையைப் பிடித்து எழுப்பினாள் மதி.

அவள் எதுவும் பேசவில்லை. ஆனால், உதடுகள் வெட்கத்தில் சிரித்தபடி இருந்தது. "ஓகே வா?" என்று ஜீவா கேட்க, தலையை ஆட்டினாள் மதி.

"ஹேஹே... சூப்பர், ஜீ மாமா கமிட் ஆயிட்டான்" என்று விக்னேஷும் கௌசிகாவும் குதிக்க, ஜீவாவிற்கு அப்போதுதான் அவர்கள் இரண்டுபேரும் அங்கு இருப்பதையே ஞாபகம் வர, "அய்யோயோ... இனி இதை வச்சே ஓட்டப் போறாங்களே" என்று சொல்லிச் சிரித்தான் ஜீவா.

"மதி இவதான் கௌசிகா... ஆனா, இனி கௌசிக்" என்று விக்னேஷ் ஆரம்பிக்க, "வாட் கௌசிக்ஆ?" என்று கேட்டாள் கௌசிகா. அந்தப் பெயர் இங்கு இருந்துதான் ஆரம்பித்தது.

"ஆமாம். நீ பைக்ல இருந்து இறங்குனப்பவே முடிவு பண்ணிட்டேன்.. இனிமேல் நீ பையன்தான்... பொண்ணு இல்ல" என்று விக்னேஷ் சொல்ல, அவனை இடித்தவள், "இவங்க சொல்றது எல்லாம் கேட்காதீங்க" என்று மதியிடம் பேசினாள். பின் நால்வரும் காரில் ஏறி அவரவர் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

டக்கென்று இடித்த இடியில் நிகழ்விற்கு வந்த கௌசிகா, தன் கண்களிலும் கன்னத்திலும் கண்ணீர் கரையை உணர்ந்தாள். திரும்பி கவிதாவைப் பார்த்தாள். நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து வந்து எப்போதும் பூட்டியிருக்கும் தன் ட்ராலியைத் திறந்தவள் அந்த டைரியை எடுத்தாள். ஆம்... மதி அவளது 22வது பிறந்த நாளன்று கொடுத்த டைரி.

டைரியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள் மூன்றரை வருடத்திற்குப் பிறகு ஒரு கவிதையை அதில் கண்ணீருடன் எழுதினாள்.

'பகலினில் வெளிச்சமாய்
இரவினில் தென்றலாய்
தனிமையில் இனிமையாய்
கஷ்டத்தில் கண்ணீராய்
தேயாத பிறையாய்
உன் நினைவுகள் ஒளிர
வளர்பிறையாய்
உன் காதல் என்னுள்
வளர்கிறது'

என்று எழுதி முடித்தாள்.

வெளியே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்தவள், டைரியைத் திறந்து முதலில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள். அவளின் முதல் கவிதை. விக்னேஷ் கல்லூரி சேர்ந்த புதிதில் அவனை ரொம்பவும் மிஸ் செய்தபோது எழுதியது.

'என் வாழ்க்கை என்னும் கவிதையில்
நீயோ ஓர் உயிர் எழுத்து'

இரண்டாவது கவிதை. அவனிற்குத் தெரியாமல் அவனை சைட் அடிக்கும்போது எழுதியது.

'மறைந்து நின்று தன் காதலனை
பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் பார்த்துக் கொள்ளலாம்
அவளது வெட்கத்தை'

மூன்றாவது கவிதை. ஒருமுறை காற்றடித்தபோது மாடியில் ஜீவா, விக்னேஷுடன் நின்று பேசிக் கொண்டிருந்தபோது,

'காற்றிடம் ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் போகிறேன்
உன் கூந்தலை அது கலைத்து
விட்டுச் செல்லும்போது
உன்னுடைய தோற்றத்தில்'
நான்காவது கவிதை. ஒருநாள் வரதராஜன் வேலை விஷயமாக வெளியே சென்றபோது கௌசிக்கு காய்ச்சல் வந்து படுத்தாள். அப்போது விக்னேஷ் தன்னைப் பார்த்துக் கொண்டபோது எழுதியது.

'ஆயிரம் எழுத்துக்களால்
உன் அன்பை
அலங்கரித்தாலும்
நீ காட்டும் அன்பையும்
பாதுகாப்பையும்
பாதிதான் வெளிப்படுத்தும்
என் கவிதைகள்'

"கௌசி..." என்று கவிதாவின் குரல் கேட்க, டக்கென்று டைரியை தனது உடைகளுக்குள் ஒளித்துவிட்டாள் கௌசி.

"என்னடி, இங்க உட்கார்ந்துட்டு இருக்க?" என்று கண்களைத் தேய்த்தபடி வந்தாள் கவிதா.

கௌசிகா, "தூக்கம் வரல"

"உள்ளவா... மழைச் சாரல்ல உட்காராதே" என்று கவிதா உள்ளே அழைக்க,

"நான் தண்ணி குடிச்சிட்டு வரேன். நீ போய் படு" என்று கௌசி சொல்லிவிட்டு டைரி கீழே விழாதவண்ணம் எழுந்து உள்ளே வந்தாள்.

உள்ளே வந்து படுத்தவளுக்கு மீண்டும் பழைய நினைவுகள் வந்து சுனாமியாய் எழுந்தது.
 
  • Love
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-6

தன் பிறந்தநாளிற்கு அடுத்தநாள் காலை எழுந்தவள் வழக்கம்போல தன் அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று, தன் தந்தையை முடிந்தளவு தொல்லை செய்தவள் குளிக்கிறேன் என்று சென்றுவிட்டாள். கௌசி படிப்பை முடிக்க வரதராஜனும் ரிட்யர்ட் ஆகிவிட்டார்.

குளித்து முடித்து ரெடியாகி ஜீன்ஸிலும் கேசுவல் சர்டிலும் வந்தவள் சாப்பிட்டு முடித்துவிட்டு, "அப்பா நான் கிளம்பறேன் ப்ரௌனியைப் பாத்துக்கங்க... நீங்களும் மறக்காம சாப்பிட்டுக்கங்க... அப்புறம் மாத்திரை போட்டுக்கங்க" என்று ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு ஓஎம்ஆரில் உள்ள தான் வேலை செய்யும் ஐடி கம்பெனிக்குக் கிளம்பிவிட்டாள்.

ஜீவா, மதி வேலை செய்யும் இடத்தில்தான் வேலையில் இருந்தாள் கௌசிகா. மதியின் டீமும்கூட. முதலில் அவர்களுடன் வேலையில் இருந்த விக்னேஷ், இரண்டு வருடம் கழித்து அதே ஓஎம்ஆரில் வேறு இடத்தில் வேலை கிடைக்க அங்கே சேர்ந்துவிட்டான்.

ஒன்பது மணியளவில் ஆபிஸிற்குள் நுழைந்தவள் மதியும் ஜீவாவும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் அருகே சென்றாள். "என்ன காலங்காத்தலயே கடலையா?" என்று கேட்டுச் சிரித்தவள், மதியின் கண்கள் சிவந்திருப்பதைக் கண்டாள்.

"ஏய்! மதி என்னாச்சு? ஏன் டல்லா இருக்க?" என்று விசாரிக்க, அவளால் பதிலே பேசமுடியவில்லை.

ஜீவாதான் ஆரம்பித்தான். நேற்று மதியின் அம்மா பரமேஸ்வரி மதியைப் பார்க்க, சொல்லாமல் கொள்ளாமல் சென்னை வந்திருக்கிறார். ஹாஸ்டலிற்கு வந்தவரிடம் ரூம்மேட் என்ன சொல்லுவது என்று தெரியாமல், 'அவள் வேலை விசயமாக ஆபிஸ் வரை போயிருக்கிறாள்' என்று சொல்லிவிட்டாள்.

'ஞாயிற்றுக்கிழமை ஆபிஸா?' என்று யோசித்துவிட்டு பரமேஸ்வரி மதிக்குப் ஃபோன் போட்டார்.

மதி ஃபோனை எடுக்க, "ஹலோ" என்றார் பரமேஸ்வரி.

"ஹலோ அம்மா" என்றாள் மதி.

பரமேஸ்வரி, "என்ன பண்ற மதி... சாப்பிட்டியா? எங்க இருக்க?"

"நான் சாப்பிட்டேன்மா... நான் ரூமில்தான் இருக்கேன்" என்றவள், "அம்மா ஒரு சின்னவேலை அப்புறமாக கூப்பிடறேன்" என்று வைத்தவள், அதன் பிறகு அழைக்கவேயில்லை.

ஃபோனை சுவிட்ச்ஆஃப் செய்துவிட்டாள். அவளது ரூம் மேட்டினாலும் அவளுக்கு இன்ஃபார்ம் பண்ண முடியவில்லை. மாலை மதியை இறக்கிவிட்டு மற்றவர்கள் கிளம்ப, யாருக்கும் தெரியாவண்ணம் தன் உதட்டைக் குவித்து ஜீவாவிற்கு ஒரு முத்தத்தைத் தூரத்தில் இருந்து தர, அவளது ரூமில் மறைந்து நின்று அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தார் பரமேஸ்வரி.

அறைக்குச் சென்ற மதி தன் அன்னையைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள். அவளின் அம்மா, அவளை எரித்துவிடுவது போல பார்த்துக்கொண்டு இருக்க, "அம்மா, எ... எ... எப்போ வந்தீங்க?" என்று தடுமாற்றத்துடன் கேட்டவள், தன்தாயின் முகத்தைத் தவிர்த்து உடை மாற்றுவதற்கு போவதுபோல குளியலறைக்குள் புகுந்து கொள்ளப் பார்த்தவளை இழுத்து வைத்து நான்கு அறைவிட்டார்.

"யாருடி அவன், யாரு அவன்? கீழே நடந்த அத்தனையும் நான் பாத்துக்கிட்டு தான் இருந்தேன்" என்று கையைப் பிடித்து அழுத்தி ஆங்காரமாகக் கத்தினார்.
நல்லவேளை அவளின் ரூம் மேட் பக்கத்து அறைக்கு எஸ்கேப் ஆகிவிட்டாள். பதில் பேசாமல் இருந்தவளை இன்னும் ஒரு அறை அறைந்து தள்ளினார்.

"நாளைக்கு நீ வேலைக்குப் போக வேண்டாம். என்னோட கோயம்பத்தூர் கிளம்பு" என்று அவர் கட்டளையிட,

"அம்மா..." என்று விசும்பியவளை, "என்ன?" என்று கேட்டார் பரமேஸ்வரி.

"அம்மா நாளை ஒருநாள் மட்டும் ஆபிஸ் போயே ஆகவேண்டும்... ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு" என்று மதி சொல்ல, "ஏன், நாளை அப்படியே ஓட ப்ளான் போடுகிறாயா?" என்று கேட்க மதியால் அவளின் முகச்சுளிப்பை மறைக்க முடியவில்லை.

"அம்மா... அவர் என்னுடன் காலேஜில் படிச்சவர்... ஆபிஸ் மூலமா ஏற்பட்ட பழக்கம் இல்ல" என்று பொய்யைச் சொன்னாள் மதி.

"சரி நீ போ... ஆனா, நாளைக்கு மதியம் உன் அப்பா வந்துடுவார். நாளைக்கு நைட்டே, நாம கோயம்பத்தூர் கிளம்பறோம். வரட்டும் அந்த மனுஷன் உன்னை படிப்பு முடிஞ்சவுடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்திடலாம்னு அடிச்சுக்கிட்டனே... கேட்டாரா? அந்த சனியன் புடிச்ச வேலைக்கு நாளையே முழுக்கு போட்டுவிட்டு வந்துவிடு" என்று பரமேஸ்வரி ரௌத்திரமாகப் பேச தலையை மட்டும் ஆட்டிவைத்தாள் மதி.

அத்தனையையும் கேட்டு முடித்த கௌசிக்கு என்னவோபோல ஆகிவிட்டது. நம் பிறந்தநாளிற்கு வந்து தானே இவளுக்கு இப்படி ஆகிவிட்டது என்று நினைத்த கௌசி, "சாரி மதி... என் பர்த்டேக்கு வந்துதானே உனக்கு இந்த நிலைமை" சங்கடத்துடன் பேசினாள் கௌசி.

"சீச்சீ அதெல்லாம் இல்ல கௌசி, எப்படியும் இன்னும் இரண்டு மாசத்துல நானே சொல்லலாம் என்று இருந்தேன். அதுக்குள்ள தானாகத் தெரிந்துவிட்டது அவ்வளவுதான்" என்று கௌசியைச் சமாதானம் செய்தாள்.

ஆபிஸில் எல்லோரும் வர ஆரம்பிக்க, "சரி, இன்னிக்கு மதியம் லீவ் போட்டுட்டு இரண்டுபேரும் வாங்க பேசிக்கலாம்" என்று ஜீவா இரண்டு பேரையும் அனுப்பி வைத்தான்.

மணி ஒன்று ஆக ஜீவாவிற்காக காத்திருந்தனர் மதியும் கௌசியும். ஜீவாவிடம் இருந்து கௌசிக்கு மெசேஜ் வந்தது, "கௌசி நான் வர இன்னும் ஒன்ஹவர் ஆகும்... நீங்க போய் சாப்பிடுங்க... நான் வரேன்" என்று அனுப்பியிருந்தான் ஜீவா.

"மதி, ஜீ மெசேஜ் அனுப்பி இருக்கான்" என்று மெசேஜைக் காண்பித்தாள்.

மதி, "எனக்கு வேண்டாம் கௌசி... பசியில்லை"

"எனக்கு பசிக்குது... அட்லீஸ்ட் கம்பெனி தாயேன்" என்று கௌசி கேட்க, "சரி அங்கயாவது போய் உட்கார்ந்திருக்கலாம்" என்று நினைத்து கௌசியுடன் சென்றாள் மதி.

ஆனால், கேன்டீனிற்கு சென்று மதிக்கும் வாங்கிக்கொண்டு வந்து கௌசி டேபிளில் வைக்க, "கௌசி ப்ளீஸ்... என்னால இந்த நிலையில் சாப்பிட முடியல" என்றாள் மதி.

"அதேதான் நானும் சொல்றேன். இதே நிலையில் இருந்தேனா இன்னிக்கு ஈவ்னிங்குள்ள மயக்கம் போட்டுடுவ... தயவுசெஞ்சு சாப்பிடு" என்று கௌசி சொல்ல மதி கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்தாள்.

அதற்குள் ஆபிஸில் அவர்கள் டீமில் இருக்கும் சௌமியா அவர்கள் எதிரில் இன்னொருத்தியுடன் வந்து உட்கார்ந்தாள். கௌசிகாவிற்கு எரிச்சல் வந்தாலும் அவளிடம் காட்டாமல் அமைதியாக தன் உணவை உண்டு கொண்டிருந்தாள்.

மதியுமே அவளிடம் வாயைக் கொடுக்க மனமில்லாமல் அமைதியாக சாப்பிட, அந்த அமைதியைக் கலைப்பதற்கு என்றே வந்த சௌமியா ஆரம்பித்தாள்.
"ஏய், உனக்கு ஒன்னு தெரியுமாடி" என்று பக்கத்தில் இருந்தவளிடம் ஆரம்பித்தாள்.

"என்ன?" என்று அவள் கேட்க, "இப்போலாம் லவ் அது இதுன்னு கண்டபடி சுத்துறாங்க... அதெல்லாம் கல்யாணத்தில் முடியுமா?" என்று கேட்டாள் உடன் இருந்தவளிடம்.

மதிக்கும் கௌசிக்கும் புரிந்துவிட்டது. நேற்று கௌசி பிறந்த நாளிற்கு எடுத்த போட்டோவை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்ததைப் பார்த்து வயிறு எரிந்திருக்கிறாள். அதான் இங்கு வந்து அந்த எஃபக்ட்டை கொட்டுகிறாள் என்று. காரணம், அவள் ஜீவாவை ஒருதலையாக வந்த புதிதில் காதலிக்க, அதற்குள் ஜீவாவும் மதியும் ஒன்று சேர்ந்திருந்தனர்.

"என்னடி சம்மந்தமே இல்லாம பேசற?" என்று சௌமியாவின் பக்கத்தில் இருந்தவள் கேட்க, "இல்லைடி நாட்டுல நடக்கிறதைத் தான் சொல்றேன்" என்று அவளையும் பேச்சிற்குள் இழுக்கச் செய்தாள் சௌமியா.

"ஆமாம்டி மோசமா போயிட்டிருக்கு" என்று அவள் சலிக்க,

"என்ன மாதிரி சொல்ற?" என்று சௌமியா துருவ,

"அதான், நன்றாக சுற்றிவிட்டு செய்யக் கூடாத வேலை எல்லாம் செய்துவிட்டு பிரண்ட்ஸ்னு சொல்லிக்கறாங்க" என்று அவள் பொதுவாக சொல்ல, சௌமியாவிற்கு எதிர்ப்பார்த்து கிடைக்க வாயெல்லாம் பல்லாகிவிட்டது.

"ஆமாம். அதுவும் இந்த அப்பாவி மாதிரி முகத்தை வைத்துத்தான் சில பெண்கள் ஏமாத்துறாங்க" என்றவள், "இல்லை மதி?" என்று மதியிடம் திரும்பிக் கேட்டாள்.
வேறு ஏதாவது சமயமாக இருந்திருந்தால் மதி திருப்பிக் கொடுத்திருப்பாள். ஆனால், இப்போது அவள் இருக்கும் மனநிலைக்கு எதுவும் பேசமுடியவில்லை.
"ம்ம்..." என்று மட்டும் தன் சிந்தனையை வேறு எங்கோ வைத்துக்கொண்டு தலை ஆட்டினாள்.

"அதுவும் உங்கள மாதிரி மதி" என்று முணுமுணுக்க, கௌசிக்கு அது நன்றாகக் கேட்டது.

'அவள் எப்படியும் நம்மிடம் வாயைக் கொடுத்து மாட்டுவாள்' என்று நினைத்த கௌசி அமைதியாக இருந்தாள். அதேபோல நடந்தது.

"அதுவும் நம் கௌசிகாவைப் போல எல்லாம் தெரிஞ்சவங்களா இருந்தா... அவ்வளவுதான் லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் எதுக்கு வேண்டுமானாலும் துணிவாங்க" என்று சொல்ல, 'வாடி மாட்டுனியா... பத்துபேருடன் கடலை போடற நீ பேசுறியா' என்று நினைத்த கௌசி சிரித்த முகத்துடனே ஆரம்பித்தாள்.

"சௌமியா, நீ சொல்றது உண்மைதான். நான் எல்லாம் தெரிஞ்சவதான்" என்ற கௌசி, "அதுவும் உன் பாஷையில் சொல்லணும்னா நான் அப்பாவி இல்லதான்" என்று அவளின் தேவையில்லாத பேச்சைக் குத்திக்காட்டினாள் கௌசி.

மேலும், "உனக்கு ஒன்னு தெரியுமா சௌமியா? எல்லாம் தெரிஞ்சவங்கதான் எது தப்பு எது சரின்னு நடந்துப்பாங்க. அதாவது அவங்களுக்கு ஒரு கன்ட்ரோல், கட்டுப்பாடு இருக்கும். ஆனால், பாவம் உன்னை மாதிரி வாயில் விரல் வச்சாக்கூடக் கடிக்கத் தெரியாத உண்மையான அப்பாவிதான் சீக்கிரம் மயக்கத்தில் விழுந்து விடுவாங்க சௌமி" என்று சொல்ல, அவளின் முகம் கறுத்து சிறுத்துவிட்டது.

"பாத்து இரு சௌமியா... நீ ஏற்கனவே பத்துபேருடன் பேசுவதாக ரூமர் பரவுது" என்று உன்னைப்பற்றி எனக்குத் தெரியும் என்று சொல்லாமல் சொல்ல அவள் முகத்தில் ரத்த ஓட்டமே நின்றுவிட்டது.

அதற்குள் ஜீவா இவர்களைத் தேடி கேன்டீன் வர இருவரும் எழுந்தனர். "பை சௌமியா... ஹேவ் எ நைஸ் டே" என்று கௌசி சொல்ல, அதைக் கேட்கும் உணர்வில கூட அவளில்லை.

பின் ஜீவாவுடன் இறங்கி கீழே வர, "ஜீ எங்க போறோம்?" என்று கௌசிகா கேட்க, "நாம எப்பவும் போகும் கஃபே காபிடேதான்" என்று ஜீவா சொன்னான்.

"சரி நீ மதியைக் கூட்டிக்கொண்டு போ... நான் ஸ்கூட்டியில் வரேன். ஈவ்னிங் அப்படியே போயிடுவேன்" என்று நாகரீகமாக அவர்களுக்குத் தனிமையளித்து ஸ்கூட்டியை எடுக்கப் போனாள் கௌசி.

யாரோ தன்னைக் கண்காணிப்பதைப் போல உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள். சுற்றியும் கண்களைச் சுழலவிட்டவள், 'ஏதோ ப்ரம்மை' என்று நினைத்துவிட்டுத் திரும்பி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து காஃபி ஷாப்பை அடைந்து உள்ளே போக ஜீவா, மதியுடன் விக்னேஷும் அமர்ந்திருந்தான்.சென்று விக்னேஷின் பக்கத்திலேயே அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.

"பேசாம நீ இப்போ உன் அம்மாக்கூட ஊருக்குப் போ மதி. நான் நாளைக்கே வந்து பேசறேன்" என்று ஜீவா பொறுமையாகப் பேச ஆரம்பித்தான்.

"இல்ல ஜீவா... இல்ல, நான் போகமாட்டேன். போனா, எங்கம்மா ஏதாவது பண்ணி நம்மள பிரிச்சுடுவாங்க... எனக்கு அவங்களப் பத்தி நல்லாத் தெரியும். ப்ளீஸ், புரிஞ்சிக்கோங்க... என்னை போகமட்டும் சொல்லாதீங்க!" என்று ஜீவாவின் தோளில் சாய்ந்து அழ, அவனால் எதுவும் பேசமுடியவில்லை.

கௌசிக்கு மதி அழுவதைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. விக்னேஷும் ஏதோ யோசனையில் இருந்தான்.

"சரி மதி... நீ போகவேண்டாம் விடு... தயவுசெஞ்சு அழாதே" என்று சமாதானம் செய்துகொண்டிருந்தான் ஜீவா.

"ஜீ... ஒரு டவுட்" விக்னேஷ் ஜீவாவை அழைத்தான்.

ஜீவா, "என்ன விக்கி"

"மதி அப்பா, இந்நேரம் வந்திருப்பார் இல்ல?" என்று கேட்டான் விக்னேஷ்.

"ம்ம் வந்திருப்பார்" என்றான் ஜீவா.

"மதி... உன் அப்பா, நீ சொன்னா கேட்பாரா?" என்று மதியைப் பார்த்துக் கேட்டான் விக்னேஷ்.

"ம்ம், கேட்பார்... ஆனா, அம்மா இருந்தா, அப்பாகூட பேசவே விடமாட்டார்" என்றாள் மதி கண்ணைத் துடைத்தபடியே.

"ஓகே... ஜீ இங்கப்பாரு... மதி சொல்றதப் பாத்தா, மதியோட அம்மா கொஞ்சம் டாமினண்ட் கேரக்டர் மாதிரி தெரியுது. அவங்க முன்னாடி மதி அப்பாகிட்ட பேசுனா நம்மையும் பேசவிடாம அவரையும் குழப்பிடுவாங்க... ஸோ, நாம அவருகிட்ட தனியாத்தான் பேசணும். அவர்கிட்ட நம்மள பேசமுடியாம தடுக்கத்தான் முடியுமே தவிர, அவரு முடிவாகச் சொன்னால் மதி அம்மாவால் எதுவும் பேசமுடியாது" என்ற விக்னேஷ்,

"மதி உன் அப்பா நம்பரைத் தா... அவர் பெயர் என்ன?" என்று கேட்டு வாங்கி அவரின் எண்ணிற்கு டயல் செய்தான்.

அவர் போனை எடுத்து, "ஹலோ" என்று சொல்ல, "ஹலோ, இது முருகானந்தம் சார்தானே?" என்று கேட்டான் விக்னேஷ்.

முருகானந்தம், "ஆமாம்... நீங்க?"

"சார்... நாங்க கொரியர்ல இருந்து பேசறோம்... மதி முருகானந்தம் பெயரில் ஒரு பார்சல் வந்திருக்கு. அவங்களுக்கு ஃபோன் பண்ணோம்... ஏதோ வேலையாக இருப்பதால், அவங்க ஹாஸ்டல் அட்ரஸ் தந்து உங்ககிட்டத் தர சொல்லியிருக்காங்க... நான் ஒரு பத்து நிமிடத்தில் அங்க வந்துவிடுவேன். நீங்க வந்து வாங்கிக்கோங்க சார்" என்று தன் தாடையில் ஒரு கையை வைத்தபடி பேசியவன் அவர் சொல்லும் பதிலிற்காக காத்திருந்தான்.

"சரிப்பா... வா" என்று வைத்துவிட்டார்.

சரியாக பத்துநிமிடத்தில் கொஞ்சம் தூரம் தள்ளி ஹாஸ்டலின் முன்னால் ஜீவாவின் கார் நின்றிருந்தது. விக்னேஷ் காரின் முன்சீட்டில் அமர்ந்திருக்க ஜீவா, மதி, கௌசி எல்லாம் பின்சீட்டில் உட்கார்ந்திருந்தனர்.

எல்லோருக்குமே கொஞ்சம் பயம்தான்... மதியின் அப்பாவிற்கு பதில் மதியின் அம்மா வந்துவிட்டால்?

ஆனால், நல்லவேளையாக முருகானந்தமே வந்தார். மதி அவரைக் கைகாட்ட, ஃபோனை எடுத்து அவருக்குப் ஃபோன் செய்த விக்னேஷ், "சார் வந்துட்டேன்... நீங்க எங்க இருக்கீங்க? என்ன கலர் ட்ரெஸ்" என்று கேட்டான்.

"நான் வெள்ளை சட்டை... ப்ரௌன் பாண்ட்... கண்ணாடி போட்டிருக்கேன்" என்று விவரம் சொன்னார் அவர்.

"சார், நான் உங்களைப் பார்த்துட்டேன்... உங்க ரைட் சைட் ஒரு வொயிட் காருக்கு பின்னாடி தான் நிற்கிறேன்... வந்து பார்சலை வாங்கிக்கங்க" என்று சொல்லிக் கட் செய்துவிட்டான்.

முருகானந்தம் பக்கத்தில் வரவர காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அவரைப் பார்க்க, தன் மகளைப் பார்த்த முருகானந்தம் அவளிடம் ஏதோ பேசவர, அவர்கள் அதற்குக்கூட விடவில்லை.

அவரைப் பின்சீட்டில் போட்டு உள்ளே தள்ளி வலதுபக்கம் மதி இடதுபக்கம் ஜீவா உட்கார, விக்னேஷும் கௌசிகாவும் முன் உட்கார, விக்னேஷ் காரை எடுத்தான்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மகளைப் பார்த்து, "என்னமா நடக்குது?" என்று கேட்க, "ஒரு நிமிசம் ப்பா" என்றாள் மதி. கொஞ்சதூரம் சென்ற பின், ஒரு அமைதியான இடத்தில் காரை நிறுத்தினான் விக்னேஷ். பின் விக்னேஷும் கௌசியும் பாதி திரும்பிப் பின்னால் பார்த்தபடி உட்கார்ந்தனர்.

"அப்பா, நான் இவரைத்தான் லவ் பண்றேன்பா... ரொம்ப நல்லவர் ப்பா.. என்ன இவருக்கே கல்யாணம் பண்ணி வச்சிருங்கப்பா" என்று கண்ணீருடன் ஜீவாவைக் கைகாட்ட, "ஹாய்... மாமா... சார்" என்றான் ஜீவா.

"சார், நான் உங்க பொண்ண ரொம்ப லவ் பண்றேன். அவளும்தான். உங்க பொண்ண நல்லா பாத்துப்பேன். நீங்க நம்பி உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணித்தரலாம்" என்று ஜீவா, அவர் திட்டுவதற்கு முன் அவசர அவசரமாகப் பேசி முடித்தான். அவர் ஏதோ பேச ஆரம்பிக்கும் முன் விக்னேஷ் உள்ளே புகுந்தான்.

"ஆமாம் அங்கிள்... எங்க ஃபேமிலில எல்லாருக்குமே முன்னாடியே தெரியும்.. நீங்க ஒத்துக்கிட்டா அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணத்தை முடித்துவிடலாம். ஜீவாவும் நல்ல பையன்தான்" விக்னேஷும் அவசர அவசரமாகப் பேசிமுடித்தான்.

'அய்யோ! நாம மட்டும் என்ன ஏதும் சொல்லாம இருக்கோம்' என்று நினைத்த கௌசி, "ஆமாம் பெரியப்பா, எங்க அத்தை, மாமா எல்லாம் மதியை நல்லாப் பாத்துப்பாங்க... நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். மதியை கட்டின புடவையோடு அனுப்பினால் போதும்" என்று முடிக்க, எல்லோரும் மதி உட்பட, 'ஏய்! இது ஓவர் டயலாக் கம்மி பண்ணு' என்ற பார்வைப் பார்த்தனர்.

"அதில்ல பெரியப்பா... எங்க ஜீவா ரொம்ப நல்ல பையன். எந்தப் பிரச்னையும் வராது. அண்ட் நீங்க மதி ஆசைப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேத்துவீங்களாமே... பெரியம்மாக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்லையாம். நீங்கதான் அவரை சமாதானம் செஞ்சு கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கவேண்டும். நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக முடியும் பெரியப்பா... நீங்க சொல்லி பெரியம்மா கேட்காம இருப்பாங்களா? உங்க பெரிய மீசையை வைத்துக் கொஞ்சம் மிரட்டுனாவே பயந்திருவாங்க... ப்ளீஸ் பெரியப்பா" என்று தன்பாதி திரும்பிய உடம்பையும் தலையையும் சீட்டில் சாய்த்த வண்ணம் பேசியவளைக் கண்டு முறுவலித்தார் முருகானந்தம்.

ஏனோ ஜீவா, விக்னேஷின் சார், அங்கிளுக்கு நடுவில் இந்த பெரியப்பா முருகானந்தத்தை ஈர்த்துவிட்டது. நேற்று மனைவி ஃபோன் செய்து ஒப்பாரி வைத்தபோது, 'சரி பையன் நல்லவன் என்றால் கல்யாணம் செய்து வைத்துவிடலாம்' என்று நினைத்துதான் சென்னை வந்தது அவர். ஆனால், இவர்கள் செய்த இந்த சந்திப்பும் பேச்சும் அவருக்கு சிரிப்புடன் அவர்களின் மேல் நல்ல எண்ணம்தான் வந்தது.

"உன் பெயர் என்னமா?" என்று கௌசியைப் பார்த்துக்கேட்டார் முருகானந்தம்.

"கௌசிகா பெரியப்பா" என்றாள்.

"சரி, என் பெண்ணின் விருப்பத்திற்காகவும் நீ பேசியதற்காகவும் நான், உன் பெரியம்மாவிடம் கேட்கிறேன்" என்று அவர் சொல்ல, "அப்படினா உங்களுக்குச் சம்மதமா?" என்று நான்குபேரும் ஒருசேர வினவ, "ஆமாம்" என்றார் முருகானந்தம்.

விக்னேஷும் ஜீவாவும், ‘என்னடா நம்ம பேசுனதுக்கு ஒரு ரியாக்ஷனும் இல்ல’ என்பதைப் போலப் பார்த்துக் கொண்டனர்.

"தாங்க்ஸ்ப்பா" என்று தன் தந்தையை மதி கட்டிக்கொள்ள ஜீவா, விக்னேஷ், கௌசி மூவரும் ஹைஃபை அடித்துக்கொண்டனர்.

பின் பரமேஸ்வரியைத் திருமணத்திற்கு ஒத்துக்க வைத்து, நிச்சயதார்த்தத்தை ஒரு கோயிலில் எளிமையான முறையில் முடித்தனர். இரண்டு மாதத்தில் கல்யாணம் என்பதால், எல்லோரும் கல்யாண வேலையில் மூழ்கிவிட கௌசி தனிமையாக உணர்ந்தாள்.

அவ்வப்போது விக்னேஷிற்கு கால் செய்தாலும் பிசி என்று வந்தது. ஜீவாவையும் மதியையும் டிஸ்டர்ப் செய்யவும் கௌசிக்கு மனமில்லை. அவ்வப்போது ஆபிஸில் பேசுவதோடு சரி. அடுத்து ஒருவாரம் கழித்து ஆபிஸ் முடிந்து கிளம்பியவள் விக்னேஷ் வேலை செய்யும் கம்பெனி அருகில் வண்டியை நிறுத்தி, தன் தந்தைக்கு சுகர் டாப்ளட்ஸ் வாங்கிக்கொண்டு இருந்தாள்.
திடீரென ஏதோ தோன்றத் திரும்பிப் பார்த்தவள் விக்னேஷ் போலவே ஒருவன் ஒரு பெண்ணோடு செல்வது போல இருந்தது. சீக்கிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு மாத்திரையை வாங்கிக்கொண்டு பணத்தின் மிச்சத்தைக்கூட வாங்காமல் ஓடியவளால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

விக்னேஷிற்கு ஃபோனைப் போட்டவள், "விக்கா எங்க இருக்க?" என்று கேட்டாள் கௌசிகா.

"நான் இந்த நேரத்தில் எங்கே இருப்பேன்... ஆபிஸ் தான்டி! ஏன், என்ன விஷயம்?" என்று அவன் வினவ,

"ஒன்னுமில்ல... நீ வேலையை முடிச்சிட்டு கால் செய்" என்று வேலை நேரத்தில் டிஸ்டர்ப் செய்யப் பிடிக்காதவள் ஃபோனை வைத்துவிட்டாள். இரவு ஆகியும் அவன் கூப்பிடவில்லை. கௌசியைத் தனிமை மிகவும் வாட்டி எடுத்தது.

அன்றிரவு டைரியை எடுத்தவள் ஒரு கவிதையை எழுதினாள்.

'என் தேடல் நீ
என் காதல் நீ
என் மௌனத்தின் பின் உள்ள
காரணம் நீ
என் கவிதையில் மறைந்துள்ள
பொருள் நீ
என்று நான் அறிவேன்
நீ எப்போது அறிவாய்?'

என்று எழுதியவள் அந்த எழுத்துகளை பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் கௌசிகா. அவனிடம் தன் காதலை சொல்லிவிடலாமா என்று இருந்தது அவளுக்கு.

'ஆனால், எப்போ?' என்று நினைத்தவள், 'சரி. ஜீவா கல்யாணம் முடியட்டும்' என்று விட்டுவிட்டாள். டேபிளில் தலை வைத்து யோசித்துக்கொண்டு இருந்தவள் டைரியின் பக்கத்திலேயே படுத்து உறங்கியும் விட்டாள்.

அடுத்தநாள் ஞாயிறு என்பதால் காலையில் எட்டுமணிக்கு எழுந்தவள் ப்ரௌனிக்கு ஆர்டர் செய்த மரத்திலான ஒரு பெரியவீடு... முந்தையநாள் பார்சலில் வந்ததைப் பிரித்தாள். 'ப்ரௌனி பெரிதானாலும் அது யூஸ் ஆகும்' என்று நினைத்தவள் அதை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து தன்வீட்டின் முன்னால் உள்ள, சிறிய குளிர்ந்த மண் இடத்தில் அதை வைத்துவிட்டு ப்ரௌனிக்குத் தேவையான எல்லாவற்றையும் அதில் உள்ளேயும் வெளியேயும் வைத்துக் கொண்டிருந்தாள்.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்பியவள், 'விக்கா' நின்றிருப்பதைப் பார்த்தாள். ஒரு உணர்ச்சியற்ற பார்வையை அவன்மேல் வீசியவள் மீண்டும் திரும்பி தன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்கை ப்ளூ டீ-சர்ட் த்ரீ பை பொர்த் மஞ்சள்நிற நைட் பாண்ட் போட்டு தூக்கிக் கட்டியிருந்த கொண்டையுடன் மண் எல்லாம் கை கால்களில் அப்பியபடி வேலை செய்து கொண்டிருந்தவளைப் பார்க்கையில் அவனுக்குச் சிரிப்பு வந்தது. "கௌசி" என்று அழைத்தான். இருமுறை அழைத்தும் பலன் இல்லாமல் போனது.

"கௌசிக்" என்று கடைசியாக அவன் கௌசியை அழைக்க கையில் கிடைத்த கல் ஒன்றை அவன்மேல் எறிய, அது நூலளவில் அவன் மண்டையை பதம் பார்க்காமல் மிஸ் ஆனது. நேராக எழுந்து வந்தவள் அவனது உச்சி முடியைப் பிடித்துவிட்டாள்.

"உனக்கு என்னை எல்லாம் ஞாபகம் இருக்கா? என்கிட்ட நீங்க எல்லாரும் பேசி எவ்வளவு நாள் ஆச்சுத் தெரியுமா? நீ, என் ஃபோன் கூட இப்போலாம் அட்டண்ட் பண்றது இல்ல..." என்று தலையைப் பிடித்து ஆட்டி, அவனைக் கேட்டவளின் குரல் உடைந்தது.

"ஹே ஸாரி ஸாரி ஆஆ வலிக்குது டி" என்று அலறியவன், "அதுக்குத் தான் உன்ன வெளில கூட்டிட்டு போலாம்ன்னு வந்திருக்கேன்டி. ஜீவாவும் மதியும் அங்க நம்மகூட ஜாயின் ஆயிருவாங்க" என்று சொல்லியபடியே அவளின் கையை தன் தலையில் இருந்து எடுத்தவன் அவளைப் பார்க்க, "நீங்க கூப்பிட்ட உடனே மட்டும் நான் வரணுமா... முடியாது போடா" என்று முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் கௌசிகா.

கௌசியைக் கெஞ்சிக் கூத்தாடி சமாதானம் செய்து எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்கு எப்படியோ தன்னுடைய பைக்கில் கூட்டிவந்தான் விக்னேஷ்.
மேலே அவர்கள் ஃபுட் கோட்டிற்குச் செல்ல ஜீவாவும் மதியும் முன்னாடியே வந்து அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சென்று விக்னேஷும் கௌசியும் அமர, கௌசி, 'உர்' என்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள். ஜீவாவும் மதியும் அதற்கான காரணம் கேட்க, சிலுப்பிக் கொண்டவள் பதில் பேசவில்லை.

"அது ஒன்னுமில்ல... கௌசிக்கு கோபம் வந்திருச்சு நம்ம மேல" என்று இன்று காலை வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னான் விக்னேஷ்.

"அட அவ்வளவு தானா?" என்று கேட்ட ஜீவா, "என்னடா விக்கி கௌசியை எப்படி சமாதானம் செய்யறதுன்னு மறந்துட்டாயா?" என்று கேட்டு ஜீவா எழ, மதியும் ஜீவாவுடன் எழுந்து அருகில் வர, விக்னேஷ் எழுந்தான். மூவரும் தன்னைச் சுற்றி நிற்க, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று கெளசிக்கு புரிந்துவிட்டது.

நொடியும் தாமதிக்காமல் மூவரும், 'குறுகுறுப்பு' மூட்ட கௌசியால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ஃபுட் கோர்ட்டில் இருந்த எவரையும் கண்டுகொள்ளவில்லை நான்கு பேரும். பின் கௌசி சமாதானம் ஆக ஃபுட் கோர்ட்டில் நான்குபேரும் கொறித்துவிட்டு ஷாப்பிங்கை ஆரம்பித்தனர். கல்யாணத்திற்குப் பிறகு சும்மா எங்காவது உறவினர்கள் வீட்டுக்குச் சென்றால் வேண்டுமென சில சேலைகளைப் பார்த்தாள் மதி.

"ஏன்டி கௌசிக்... நீ இந்த சேலை எல்லாம் ட்ரைப் பண்ணி பொண்ணா மாற ட்ரைப் பண்ணலாம்ல" என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்தபடி விக்னேஷ் கிண்டல் செய்ய, "அய்யயோ போடா... என் சீர் அன்னிக்கு நான் கட்டியதே போதும். தட்டிதட்டி விடும். நடக்கவும் தெரியாது எனக்கு" என்றாள் கௌசி.

"அட, இப்போ பழகுனாதான புருஷன் வீட்டுக்குப்போன அப்புறம் கட்டமுடியும்" என்று விக்னேஷ் சிரிக்க, "கல்யாணம் ஆனா சேலை கட்டணுமா? அதெல்லாம் முடியாது" என்று பதில் கொடுத்தாள் கௌசிகா.

"கல்யாணமான அப்புறம் இதை உன் புருஷன்கிட்ட சொல்லு பார்ப்போம்" என்று சவால் போலச் சொல்ல, ‘அதானே பண்றேன்’ என்று மனதிற்குள் நினைத்தபடி நின்றாள்.

"சரி வா... நான் உனக்கு சாரி வாங்கித்தரேன்" என்று டிசைனர் சாரீஸ் இருந்த பக்கம் அவளை இழுத்துக்கொண்டு சென்றான் விக்னேஷ்.

கௌசிக்கு சேலை எடுத்தே பழக்கம் இல்லை. விக்னேஷே அவளது தங்க நிறத்திற்குப் பொருத்தமான ஆரஞ்ச் மஞ்சள் கலந்த ஒரு டிசைனர் சில்க் சாரியை எடுத்துத் தந்தான். அதன் வேலைப்பாட்டையும் அதைத் எடுத்துத் தந்தவனையும் ஒருசேர ரசித்தாள் கௌசிகா. எல்லாம் முடிந்து நான்குபேரும் வெளியே வரும்போது ஏதோ உறுத்த கௌசி திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே வந்தாள்.

ஜீவாவும் மதியும், ஜீவாவிற்கு ஷூ வாங்க ஒரு கடைக்குள் போக... அதேசமயம் விக்னேஷிற்கும் ஃபோன் வர அவன், "ஆபிஸ் ஃபோன்" என்று ஒரு ஓரத்தில் போய் நின்று பேச ஆரம்பித்தான். கௌசியும், “நீங்க போங்க நாங்க வரோம்” என்று செகண்ட் ஃப்ளோரில் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தாள்.
'ஏன் கொஞ்ச நாளாக யாரோ பாலோ பண்ற மாதிரியே இருக்கு' என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தவள், "ஹாய் கௌசிகா" என்ற குரலில் திரும்பினாள்.

யார் எனத் திரும்பிப பார்த்தவள், அவள் பின் நின்றிருந்தவனை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

கௌசிகா, "யார் நீங்க?"

"உங்களுக்கு என்னைத் தெரியாது... ஆனால், எனக்கு உங்களைத் தெரியும்"என்று அவன் பேச, "சரி தெரிஞ்சிக்கோங்க பை" என்று நகரப் பார்த்தவளை அவன் குரல் தடுத்தது.

"ப்ளீஸ் கௌசிகா நில்லுங்க... நான் சொல்றத ஒருநிமிடம் கேளுங்களேன்" என்று அவன் கெஞ்ச, கௌசிகா நின்றாள். "என்ன சொல்லுங்க? எனக்கு டைம் ஆச்சு..." என்று கடுமையாக குரலில் சொன்னாள் கௌசிகா.

"கௌசிகா எனக்கு... நான் உங்களை இரண்டு மாசமா லவ் பண்றேன்... நான் உங்க ஆபிஸ் கீழ இருக்க ஃபர்ஸட் ப்ளோர்ல தான் இருக்கேன்" என்று சொல்ல கௌசிகா அவனது பேச்சில் குறுக்கே புகுந்தாள்.

"ஸீ... நீங்க யாருனே எனக்குத் தெரியாது. எனக்கு லவ்ல எல்லலாம் இன்ட்ரஸட் இல்ல... டோண்ட் வேஸ்ட் யுவர் டைம். இனி, என் பின்னாடி நீங்க வராதீங்க" என்று சொல்லிவிட்டு கௌசிகா நகரப் பார்க்க, அவன் கௌசிகாவின் கையைப் பிடித்துவிட்டான்.

"கௌசிகா. ப்ளீஸ்... ப்ளீஸ்!" என்று அவன் கெஞ்ச, "இப்போ நீங்க கைய விடலைன்னா அவ்வளவுதான்... ப்ளீஸ் டேக் ஆஃப் யுவர் ஹேண்ட்ஸ்" என்று சொல்ல விக்னேஷ் வந்துவிட்டான்.

முதலில் ஃப்ரண்டிடம் பேசுகிறாள் என்று நினைத்த விக்னேஷ், அவன் கையைப் பிடிப்பதைக் கண்டதும் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். வேக நடையுடன் வந்தவன் கௌசிகாவின் கரத்தைப் பற்றியிருந்த அவனின் கையை எடுத்து முறுக்க, கௌசிகா பயந்துவிட்டாள்.

"டேய் விக்கா... என்னடா பண்ற நீ? தயவுசெஞ்சு அவன விடு... எல்லாரும் பாக்கறாங்க" என்று கௌசிகா, விக்னேஷின் தோளைப் பிடித்து இழுத்தாள். ஆனால், விக்னேஷின் கையோ இரும்பென அவனின் கையைப் பிடித்திருந்தது.

"விக்கா" என்று அவனைப் பிடித்து உலுக்க, "வாய மூடு கௌசி" என்று அடிக்குரலில் உறுமினான்.

அதற்குள் ஷூ கடையில் இருந்து வெளியே வந்த ஜீவாவும் மதியும் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து கௌசியுடன் சேர்ந்து விக்னேஷைப் பிடித்து இழுத்தனர். ஆனால், ஆடாமல் அசையாமல் அவனின் கையை பிடித்திருக்க அவன் வலி தாங்கமுடியாமல் நின்றிருந்தான்.

இரண்டு நிமிடப் போரட்டத்திற்குப் பிறகு அவனின் கையை விட்ட விக்னேஷ், "இனி உன்ன கௌசி பின்னால் பார்த்தேன்... நீ அவ்வளவுதான்" என்று கர்ஜித்தான். அவனை அந்த இடத்தில் இருந்து இழுத்து வரப் போதும் போதுமென்று ஆகிவிட்டது மூவருக்கும்.

"டேய் என்னடா ஆச்சு?" என்று ஜீவா கேட்க, "என்னைக் கேட்காதே... இவளைக் கேளு" என்று கோபத்தைக் காட்டினான். கௌசி தலைகுனிந்தபடியே நடந்ததைச் சொல்லி முடித்தாள்.

"அறிவிருக்கா டி... எவனே தெரியாதவன் கூடப் பேசிட்டு நிப்பியா?" என்று விக்னேஷ் திட்ட,

"டேய், சும்மா சும்மா என்னைத் திட்டாதே... அவன் பர்ஸ்ட் டீசன்ட்டா தான் பேசிட்டு இருந்தான். அவன் கையைப் பிடிப்பான் என்று எனக்குத் தெரியுமா, சொல்லு? அவன் நம்ம கம்பெனி ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருப்பதாக சொன்னதால் தான் மரியாதைக்காக நின்றேன்" என்று சண்டையிட்டாள்.

"டேய் இரண்டு பேரும் நிறுத்துங்க" என்று ஜீவா சொல்ல ஒரு இடத்தில் உட்காருவதற்கான போடப்பட்ட பெஞ்சில் நால்வரும் உட்கார்ந்தனர்.

பிறகு இரண்டு பேருக்கும் சற்று கோபம் அடங்க, "என்ன விக்னேஷ்? இதுக்கே இப்படி டென்ஷன் ஆகிட்டீங்க... ஆபிஸ்ல டெய்லியும் இரண்டு ப்ரபோசல் வந்துட்டு இருக்கு நம்ம கௌசிக்கு" என்று சிரித்தாள்.

"எது நம்ம கௌசிக்கு அவ்வளவு ப்ரபோசலா..." என்று கௌசியின் தோளில் கையைப் போட்டவன், "என்னடா கௌசிக், அவ்வளவு அழகா நீ?" என்று கேட்டான் விக்னேஷ்.

"உன்ன மாதிரி ஆள் கண்களுக்கு, என் அழகெல்லாம் தெரியாது" என்று கண்களை படத்தில் வருவதைப் போலச் சிமிட்டிக் காண்பிக்க, அவளை ஜீவாவும் விக்னேஷும் ஒருசேரக் கொட்டினர்.

பிறகு ஜீவாவும் மதியும் கிளம்ப, விக்னேஷும் கௌசியும் பைக் பார்க்கிற்கு வந்து சேர்ந்தனர். விக்னேஷ் பைக்கை எடுக்கப்போக, 'இவன் இத்தனை நாள் பின்னாடி சுற்றியதுதான் உறுத்தியதுபோல' என்று நினைத்துக் கொண்டவள், பைக்கை எடுத்துக்கொண்டு விக்னேஷ் வர, அவனுடன் ஏறி வீட்டிற்குப் புறப்பட்டாள்.

ஆனால், அவளது யூகம் சரிதானா?

இன்றும் தன்னை நோட்டம் விட்டக் கண்களை ஏன் கௌசியால் கண்டுகொள்ள முடியவில்லை? விதியா? விதிதான்.

நாட்கள் செல்லஜீவா மதியின் திருமணநாளும் வந்தது. ஜீவா மதியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தாலியைக் கட்டி, சுற்றி இருப்போரின் ஆசிர்வாதத்தோடு ஆஃபிசியலாக மதியைத் தன் மனைவி ஆக்கிக்கொண்டான்.

காதலித்தவர்களையே கைபிடித்த பெருமிதம் இருவரின் முகத்திலும் நன்றாகத் தெரிந்தது.

கல்யாணத்திற்கு வந்த யாரோ ஒருவர் வரதராஜன், "அடுத்த கல்யாணம் உங்கள் வீட்டில் தானா?" என்று கேட்க, தன் தந்தை தலை ஆட்டுவதைப் பார்த்தாள்.
ஆனால், கௌசிக்குதான் முகம் வாடிவிட்டது. 'விக்னேஷ் இப்போது எல்லாம் வேலை வேலை என்று தனக்கு நேரம் ஒதுக்குவதில்லை. ஃபோன் செய்தாலும் எடுப்பதில்லை என்று. நேரில் பார்க்கும் போதும் லேப்டாப் ஃபோனுடன் உட்கார்ந்திருக்கிறான். இவனிடம் எப்போது சொல்லுவது?' என்று கௌசியின் மனம் பரபரத்தது.

பற்றாக்குறைக்கு இந்த மதியின் அண்ணன் சுதாகரன் வேறு பின்னால் ஜொள்ளு விட்டுக்கொண்டு சுற்றுகிறான். அவன் விடும் ஜொள்ளில் எல்லாரும் கல்யாண மண்டபத்தில் இருந்து நீந்திக் கொண்டுதான் போக வேண்டும் போல. ஜீவா, மதி முகத்திற்காக பொறுத்துக் கொண்டு இருந்தாள் கௌசிகா. இல்லை என்றால் மண்டையை உடைத்திருப்பாள். எரிச்சலை எல்லாம் அடக்கிக்கொண்டு இருந்தவள், ‘நடுவில் இந்த விக்கா வேறு இப்படிப் பண்றான்' என்று நொந்து கொண்டாள்.

போகட்டும் இந்த வாரம் அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தாள்.

ஆனால், எல்லாம் மாறி தன் வாழ்வே தலைகீழாகப் போய் எல்லோரின் நிம்மதியும் அழியப் போவதை அன்று, கௌசிகா மட்டுமில்லை எவரும் அறியவில்லை.