மறையாதே என் கனவே-8,9,10,11,12

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-8

அனல் பறக்கும் பார்வையோடு தன்னை நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்கு தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ணமூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுகமூடி தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தவனை கவனித்தவன் கௌசிகாவிடம் பேச ஆரம்பித்தான்.

"ஏன் கௌசி... வர்றதுக்கு என்ன?" ஜீவா, சற்று கோபமான குரலில் வினவினான்.

"வேண்டாம்ன்னா வேண்டாம் ஜீ... நான் வந்தா எனக்கு பழைய ஞாபகம் மீண்டும் வரும். அதுவும் இல்லாம நான் வந்து என்ன செய்யப் போறேன்?" என்று கத்தியையும் வெங்காயத்தையும் எடுத்துக்கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தாள் கௌசிகா.

ஆனால், விக்னேஷ் விடவில்லை. தானும் எழுந்து ஜீவாவை எழுப்பி, ‘போ அவளிடம் போய் பேசி சம்மதிக்க வை’ என்று மிரட்டியபடி சைகை காட்டி அனுப்பினான்.

சமையல் அறைக்குள் புகுந்த ஜீவா சமையல் மேடையின் அருகில் நின்றான். விக்னேஷ் சமையல் அறை வாயிலிலேயே நின்றான். கௌசிகா அவர்கள் வந்ததைப் பார்த்தும் சமையல் வேலையில் குறியாய் இருந்தாள்.

"கௌசி, நீ வந்து தான் ஆகவேண்டும்" என்றான் ஜீவா கட்டளையிடுவது போல. ஆனால், இந்த மாதிரி குரலுக்கு அவள் பயப்படவும் தணியவும் மாட்டாள். அது அவளுடன் இருந்த எல்லோருக்கும் தெரியும்.

"முடியாது ஜீ" கௌசிகா பிடிவாதமானக் குரலில்.

"உனக்கு என்னதான் பிரச்சினை கௌசி... எங்க கூட வரதுக்கு என்ன? ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கறே?" ஜீவாவிற்கும் கோபம் ஏறியது.

"எனக்கு அங்க வரவே பயமா இருக்கு ஜீ! அங்க வந்தா பழைய ஞாபகம் எல்லாம் வந்து மறுபடியும் என்னைப் போட்டு அமுக்கிடும்" என்று உதட்டைக் கடித்தபடி சொன்னாள் கௌசி.

"இப்போ யாருமே சென்னையில் இல்ல கௌசிகா. எல்லாருமே கோயம்பத்தூர் மாறிட்டோம்" என்று ஜீவா சொல்ல கௌசியிடம், "ம்ம்" என்று தக்காளியை நறுக்கியபடியே பதில் வந்தது.

"நீ, 'ம்ம்'னு சொல்லவா, நான் பேசிட்டு இருக்கேன்?" என்று ஜீவா, அவள் தக்காளி நறுக்கிக் கொண்டிருந்த கத்தியைப் பிடுங்கினான்.

"என்ன சொல்லணும்னு எதிர்பாக்கற ஜீ" என்று தட்டிலிருந்த தக்காளியை வெறித்தபடியே கௌசி கேட்டாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. கோபத்தில் அல்ல பதட்டத்தில்.

"நீ, நாளைக்கு எங்ககூட வரணும் கௌசி" ஜீவா அழுத்தமானக் குரலில்.

"சும்மா சும்மா அதையே சொல்லாதே ஜீ... நான் இங்க இருந்தாக்கூட நிம்மதியா இருப்பேன். அங்க வந்தா என் நிம்மதியும் போய் உங்க நிம்மதியும் போயிடும்" என்றாள் எரிச்சலானக் குரலில்.

"நிம்மதி போக அப்படி என்ன நடக்கபோது கௌசி... அதான், நாங்க எல்லாரும் இருக்கோம்ல கௌசி... அப்புறம் என்ன?" ஜீவா விடமால் அவளிடம் வாதாடினான்.

சமையலறை வாயிலில் சாய்ந்து நின்றிருந்த விக்னேஷை ஒரு நிமிடம் பார்த்தவள், "ஆமா, நல்லா இருந்தீங்க எல்லாரும்... அவரவர் வாழ்க்கைன்னு வந்தப்புறம் யாரும் கண்டுக்கல. அனுபவிச்ச எனக்குத்தான் தெரியும் எவ்வளவு வலின்னு" என்றவளுக்கு கண்ணீர் வர வேறுபுறம் திரும்பி இருவரிடமும் கண்ணீரை மறைத்தாள்.

கௌசி எதைச் சொல்லுகிறாள் என்று விக்னேஷிற்குப் புரியாமல் இல்லை. முகம் இறுகி பாறைபோல ஆக பல்லைக் கடித்துக்கொண்டு நின்றான்.

"கௌசி... அதெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்தது. அவன் அப்போது கனடால இருந்தான். நான் கம்பெனி விஷயமாக சுற்றிக் கொண்டிருந்தேன். அதெல்லாம் இப்போ எதுக்கு கௌசி?" என்றவன் கௌசியின் முதுகு அழுகையில் குலுங்குவதைக் கண்டு,

"சரி, எங்கமேல தான் தப்பு... அழாதே" என்று ஜீவா, அவளை சமாதானம் செய்தபடி அருகில் சென்றான். விக்னேஷ் சுவற்றில் ஒருகாலை மடக்கி சாய்ந்து கையைக் கட்டியபடி நின்றிருந்தான்.

"அதான் ஜீ சொல்றேன், அப்போது நடந்த எதையும் என்னால மறக்கமுடியாது. அவரவர் வேலையைப் பாத்துட்டு இருப்போம். நீங்க நாளைக்கு கிளம்புங்க... நான் வரல" என்றாள் கௌசி கண்ணீர் சிந்தியபடி.

அதுவரை அமைதி காத்த விக்னேஷ் வெடித்தான். "ஜீ, உன்ன பேச்சு வார்த்தை நடத்த சொல்லல நான். நாளைக்கு கிளம்பி தயாராக இருக்கச் சொல்லு. அவ்வளவு தான்" என்றான் இடுங்கிய கண்களுடன் கௌசிகாவைப் பார்த்தபடி.

"நான், எங்க இருக்கணும்னு எனக்குத் தெரியும்... நீ முடிவு பண்ணாதே" என்று விக்னேஷைப் பார்த்து வெடுக்கென பதில் சொன்னாள். ஏற்கனவே விக்னேஷ் அவளை சட்டையே செய்யாமல் இருந்ததில் கோபமும் வருத்தமுமாக இருந்தவள், விக்னேஷ் ஆர்டர் போடுவது போல பேசவும் கோபம் பொங்கியது.

"ஏதோ இவ எடுத்த முடிவு எல்லாம் சரியா இருந்த மாதிரி பேசறா... இவ இங்க ஓடி வந்து மட்டும் என்னத்த சாதிச்சுட்டா..." என்று காய்ந்தவனிடம் கௌசிகா பாய்ந்தாள்.

"ஆமா, நான் எதுவும் சாதிக்கலதான். ஆனா, கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்" என்று கோபத்தில் கண்களில் கண்ணீர் வந்து மூக்கு விடைக்க பேசினாள் கௌசிகா.

"வாயை கொஞ்சம் அடக்கச் சொல்லு ஜீ... ஏதோ எல்லாரும் இவள கொடுமை பண்ண மாதிரி பேசறா" என்றான் ஜீவாவைப் பார்த்து விக்னேஷ்.

"அப்போ, நீங்க எல்லாரும் எனக்கு எடுத்த முடிவுகள் எல்லாம் நல்லாவா இருந்தச்சு? என் முடிவைப் பத்திச் சொல்ற" என்று எதிர்க்கேள்வி விக்னேஷைப் பார்த்துக் கேட்டாள் கௌசி.

"கௌசி, ப்ளீஸ் பழசையே பேசாதே" என்று சலித்தான் ஜீவா.

"சலிப்பாக இருக்கா ஜீ, நான் பேசறது. என் இடத்தில் இருந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் ஜீ. நீ, விக்னேஷ் எல்லாம் அவங்கவங்க வாழ்க்கைன்னு போயிட்டீங்க... ஆனால், நான்தானே அந்தக் கொடுமையை அனுபவிச்சேன். உங்க யாருக்கும் எதுவும் தெரியாது. யார் யாரோ எல்லாம்..." என்று ஆரம்பித்தவள் எதுவும் பேசாமல் கண்களை இறுக மூடிக் கண்ணீர் விட்டாள்.

அவளின் கண்ணீரைக் கண்டதில் ஜீவாவின் மனம் இளகத்தான் செய்தது.
ஆனால், விக்னேஷிற்கு இல்லை. ஏனெனில் அவளை விட்டுவிட்டுச் செல்ல
முடியாதே... இதைவிட்டால் அடுத்த சான்ஸ் அமையவே அமையாது.

"கௌசி, நீ இல்லாம, நாங்க எல்லாம் சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்கோம்னு நினைக்காத... நாங்க யாரும் முழுமையான சந்தோஷத்தில் இல்ல... ஒவ்வொரு நல்ல தருணத்திலும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கோம் கௌசி. நீ என்னடான்னா அங்க வந்தா நிம்மதியே போயிரும்னு சொல்லறயே" என்று ஜீவா ஆதங்கத்துடன் பேச, கௌசி அப்படியே நிற்பதைக் கண்டு, "அட்லீஸ்ட் நீ, ஒரு தடவை வந்துவிட்டுப் போ" என்று ஜீவா ஆரம்பிக்க, "ஜீ!" என்று விக்னேஷ் அதட்டினான்.

"எதுக்காக இங்க வந்தோம்ன்னு மறந்துட்டியா?" என்றவன், "இவள நிரந்தரமாகக் கூட்டிட்டு வர்றோம்னு அங்க சொல்லிட்டு வந்தது, இவளோட கண்ணீர பார்த்தவுடனே மறந்திருச்சா" என்று ஜீவாவிற்கு கோயம்புத்தூரில் உள்ள நிலைமையை நினைவூட்டினான் விக்னேஷ்.

"நான் அங்க வந்தா ஸ்டெரஸ் தாங்காம செத்திருவேன் ஜீ" என்று தன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்தபடி கெஞ்சும் குரலில் கௌசிகா மன்றாடினாள்.

அவள் பேசியதைக் கேட்ட இருவருக்குமே திகைப்பு. 'ஏன் இந்த அளவிற்கு பிடிவாதம் பிடிக்கிறாள் இவள்? இவள் அப்படி சொல்பேச்சு கேட்காதவளும் அல்லவே?' என்று இருவரின் மனதிலும் கேள்வி எழுந்தது.

டக்கென்று சுதாரித்த விக்னேஷ், "சரி ஜீ... இவ வரவேண்டாம். இங்கேயே கிடந்து நிம்மதியாக வாழட்டும்... ஆனா, அங்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் ஜீவன் கண்டிப்பாகச் சீக்கிரம் உயிரை விட்டுவிடும். அப்போது மொத்தமா வரட்டும்" பல்லைக் கடித்தபடி பேசியவன் கௌசியை நேராக அப்போது தான் பார்த்தான்.

இரண்டு நொடிப் பார்த்தவன், "சரியான சுயநலவாதி" என்று பற்களுக்கு இடையில் வார்த்தைகளைத் துப்பியவன் விறுவிறுவென்று சென்றுவிட்டான்.

அவன் தன்னை சுயநலவாதி என்று சொல்ல கௌசிகாவிற்கு மனம் அடித்தது.
'நானா விக்கா சுயநலவாதி... உங்கள் அனைவரின் சந்தோஷத்திற்காக உன்னை விட்டுக்கொடுத்து, என் நிம்மதி சந்தோஷம் என அனைத்தையும் விட்டுக் கொடுத்தேனே... அதற்கு நீ பேசும் பேச்சு இதுதானா... எவ்வளவு எளிதாய் சொல்லிவிட்டுப் போகிறாய்? நான் அடைந்த வலி யாருக்கும் சொல்லாமல் போனதால்தானே சுயநலவாதி ஆகிப் போனேன்...' என்று கண்ணீர் சிந்தி மனதிற்குள் பேசியபடி நின்றவளுக்கு அப்போதுதான் அவனது பேச்சு நினைவு வந்தது.

'உயிருக்கு போராடும் ஜீவனா? யார் அது?' ஒரு நிமிடம் அவனது பேச்சை நினைவிற்கு கொண்டு வந்து திகைத்து நின்றவள் ஜீவாவிடம் திரும்பி, "என்ன ஜீ சொல்றான் அவன்... யாருக்கு என்ன?" என்று அதிர்ச்சியைத் தாங்கிய விழிகளுடன் கேட்டாள் கௌசிகா.

"கௌசி, மாமா..." என்று ஆரம்பித்தவன் வரதராஜனிற்கு நெஞ்சுவலி வந்தது, சர்ஜரி செய்தது, அதற்கான டாக்டர் சொன்ன காரணம் என்று கடைசி மூன்று நாட்களாக நடந்தததை எல்லாம் சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்டவள், "அப்பா..." என்று வாய்பொத்தி அப்படியே தரையில் மடிந்து உட்கார்ந்து அழுக ஆரம்பித்து விட்டாள். தன்னை சிறுவயதில் இருந்தே ஒரு குறையும் இல்லாமல் வளர்த்தவருக்கு இப்படியா ஆகவேண்டும் என்று கௌசிகாவின் மனம் விம்மியது. எப்படி எல்லாம் பாசத்தைக் கொட்டி வளர்த்தார்.

நெஞ்சுவலி வரும் அளவிற்கு காரணம் ஆகிவிட்டேனே என்று நினைத்தவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை. மூச்சு கூட விடாமல் அழுதவளைக் கண்ட ஜீவாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னதான் கௌசி முறைப்பெண் என்றாலும் அவன், அவளை அப்படிப் பார்த்ததே இல்லை. எப்போதும் நல்ல தோழியாக, சகோதரியாகவே பார்த்தான். சின்னவயதில் இருந்து அவளை மடியில் தூக்கி சிரிக்க வைத்துப் பார்த்தவனுக்கு அவள் இப்படி அழுவதைக் காணச் சகிக்கவில்லை.

அவள் அருகில் சென்று இரண்டு கால்களையும் மண்டியிட்டு தரையில் அமர்ந்தவன், "கௌசி, இங்க பாரு..." என்று அவளின் கையைப் பற்றினான். ஆனால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை. அதிகமாக அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஜீவாவின் தோளில் தன் நெற்றியை வைத்துச் தலைசாய்த்தவள், "எ... எ... என்னால்... என்னாலதானே ஜீ எல்லாம்... அப்பாவிற்கு இப்படி ஆயிடுச்சு" என்று அழுகையில் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கி சிக்கி வந்தது.

"கௌசி! பர்ஸ்ட் அழாதே... மாமாக்கு சுகரும் அதிகம். அதனால கூட வந்திருக்கலாம். சும்மா நீயாக கற்பனைப் பண்ணாதே" என்று அவளைத் தேற்ற முயன்றான்.

"ஆனா, மன அழுத்தம்னு டாக்டர் சொன்னதா சொன்னல்ல நீ... அது என்னாலதானே?" என்று சமாதானம் ஆகாதவளாய் கேட்டாள் கௌசிகா.

கேவிக்கொண்டு அழுபவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை ஜீவாவிற்கு. "ஆமாம் கௌசி, உன்னால் தான் மன அழுத்தம்" என்று அழுத்தமானக் குரலில் ஜீவா சொல்ல, கௌசி மேலும் உதடுகள் துடித்தன.

"ஆனால், நீ வந்தா எல்லாம் போயிடும் கௌசி" அமைதியான தெளிவான குரலில் ஜீவா சொன்னான்.

கௌசி அவனை நிமிர்ந்து பார்க்க, "சூழ்நிலை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது கௌசி... நாம நினைச்சாலும் அதை மாத்த முடியாது. ஆனா, மாற ட்ரை செய்யலாம் கௌசி. நீ எங்க கூட கிளம்பி வா... ப்ளீஸ்" என்றான் அவளை நேராகப் பார்த்து.

"சரி ஜீ!" என்று கண்களைத் துடைத்தபடி கௌசிகா தலையை ஆட்டினாள். ஜீவா சொன்னதற்காக அவள் சரியென்று சொல்லவில்லை. அவளிற்கு அவள் அப்பா முக்கியம். சின்ன வயதில் இருந்து அதட்டியது கூட இல்லை. ஒரு வேலை கூட வாங்கியது இல்லை.

தானாக சென்று அவரை தொந்தரவு செய்து ஆட்டம் கட்டுவாள். அதற்கும் சிரிப்புதான். அப்படிப்பட்டவர் கடைசியாக ஏதோ ஒரு சூழ்நிலையில் எடுத்த முடிவில் இப்படித் தனியாகத் தவிக்க விட்டு வந்துவிட்டோமே என்று கௌசியின் மனம் அவளை குத்தியது.

"சரி கௌசி, எந்திரி... எந்திரிச்சு முகத்தைக் கழுவு. பாரு, அழுதா நல்லாவே இல்ல..." ஜீவா சொல்ல கண்களைத் துடைத்தவள் எழுந்து சென்று முகத்தைக் கழுவினாள்.

முகத்தைக் கழுவிக்கொண்டு வர ஜீவா, தன் ஃபோனை கௌசியிடம் கையில் தந்து, "மதி பேசணுமாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். கௌசி ஏதோ சங்கடமாக உணர்ந்தாள். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது என்று இருந்தது.

"ஹலோ..." என்று எப்படியோ பேசிவிட்டாள் கௌசிகா.

"கௌசி..." என்ற மதிக்கு தொண்டை அடைத்தது.

இருவருக்குமே கண்களில் நீர்கோர்த்தது. என்னதான் அந்நியமாக இருந்து உறவானாலும் இருவரின் நட்பும் அதற்கு ஒருபடி மேல்தான். இருவரும் ஒருவருக்கொருவர் எதையுமே மறைத்தது இல்லை. கௌசி விக்னேஷைக் காதலித்ததைத் தவிர...

கௌசி வீட்டைவிட்டு கிளம்பிய அன்று அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே கலங்கிப்போனாள் மதி. வியாஹா அப்போது கருவில் இரண்டரை மாதம். குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டு கௌசியைப் பற்றி நினைத்து, தனிமையிலும் ஜீவாவிடம் வருந்திப் பேசியதால் என்னவோ வியாஹா சிலசமயம் வாலுத்தனம் பண்ணும்போது அப்படியே கௌசியின் அச்சாக
இருப்பாள். கௌசி இல்லை என்றாலும் வியாஹாவின் சேட்டையில் எல்லோருக்கும் கௌசியின் ஞாபகம் வந்து வாட்டியது என்னமோ உண்மைதான்.

"கௌசி கேட்குதா?" மதி இன்னும் அதே குரலில்.

அதற்குள் படுக்கை அறைக்குள் நுழைந்து பெட்டில் உட்கார்ந்தவளுக்கு மதியின் குரல் கண்ணீரை வர வைத்தது.

கௌசிகா, "கேட்குது மதி... எப்படி இருக்க?"

"நல்லாயிருக்கேன் கௌசி, நீ?" என்று வினவினாள். அதற்குப் பிறகு இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை.

"எல்லோ... எல்லோரும் எப்படி இருக்காங்க மதி...?" என்று திக்கி திக்கி கேட்டாள் கௌசி.

"ம்ம், ஆல் குட்... நீ இங்க வரன்னு ஜீவா சொன்னாரு... ரொம்ப சந்தோஷமா இருக்கு கௌசி. வீ மிஸ்ட் யூ தீஸ் டேஸ்" என்று பேசிய மதிக்கும் சரி, கேட்டுக் கொண்டிருந்த கௌசிக்கும் சரி கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பிறகு இருவரும் சுமார் பத்து நிமிடம்தான் பேசினர். மதியிடம் பேசி முடித்துவிட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு, கௌசி பெட்ரூமில் இருந்து வெளியே வர, ஜீவா விக்னேஷுடன் உள்ளே நுழைந்தான்.

ஜீவாவிடம் ஃபோனைத் தந்தவள், "ஒரு அரை மணிநேரம் ஜீ... சீக்கரம் டிஃபன் ரெடி பண்ணிறேன்" என்று கௌசிகா சொல்ல, விக்னேஷிடம் இருந்து, "உச்" என்று வந்தது.

கௌசிகாவிற்கு கோபம் வந்துவிட்டது. "இப்போ உனக்கு என்ன பிரச்சனை? என்னிடம் பேச புடிக்கலனா விட்டுடுடா... சும்மா இந்த, 'உச்' கொட்றது எல்லாம் வேண்டாம்" என்று கௌசிகா முறைத்தபடி பேச விக்னேஷ் எகிறினான்.

"இந்த டா போட்டு பேசறதுலாம் என்கிட்ட வேண்டாம்னு சொல்லு ஜீ... இவளுக்கு எல்லாம் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது" என்று எகத்தாளமாகக் கேட்டான்.

ஜீவாவும் கௌசிகாவும் புரியாமல் நிற்க விக்னேஷ், "ஓடி வந்தவளுக்கு கோபம் வேறயா?" என்று கோபமாக அழுத்தமானக் குரலில் சொன்னான்.

கௌசிகா பொறுமையை இழந்தாள். "ஜீ... போதும் அவன நிறுத்த சொல்லு" என்று கௌசிகா குரலை உயர்த்த, "உண்மையைச் சொன்னால் கோபம் வேற வருதா?" என்றான் விக்னேஷ் விடாமல்.

"எல்லாம் மாமாவிற்காகப் பார்க்க வேண்டியதா இருக்கு" என்று விக்னேஷ் முணுமுணுக்க, கௌசிக்கு அழுகை வந்துவிடுவதுபோல இருந்தது.

'இவனுக்கு ஏன் நம்மேல் இவ்வளவு கோபம்? இவனிற்கு நல்லது தானே செய்துவிட்டு வந்தேன்? ஏன் இப்படி வெறுப்பாகவே பார்க்கிறான்? குத்தல் பேச்சுகள் வேறு. அவள் பார்த்த விக்னேஷ் இவன் அல்லவே... இப்போது ஆளே வேறு மாதிரித் தெரிகிறானே... பேச்சும் வெறுப்பின் அலைகளாக வருகின்றன' என்று பல எண்ணங்கள் கௌசிகாவிற்கு.

"இவ்வளவு வெறுப்புல இருக்கறவன் என்னை ஏன் கூட்டிட்டுப் போக வந்தாய்? ஜீவாவை மட்டும் அனுப்பி வச்சிருக்க வேண்டியதுதானே? உன்ன யார் வர சொன்னது" என்று அழுகையை அடக்கியபடி கண்ணீர் வெளியே வராமல் சிரமப்பட்டு சிவந்த விழிகளுடன் கௌசிகா கேட்டாள்.

"நானாக ஒன்னும் வரல... அப்படி ஏதாவது தேவையில்லாத கற்பனையை ஏத்தி வைத்துக் கொள்ளாதே... இதோ இவனிலிருந்து எல்லாரும் என்கிட்ட கேட்டாங்க, அதுவும் இல்லாம மாமாவுக்காக மட்டும் தான் வந்தேன். இல்லையென்றால் அப்படியே தொலையட்டும்னு விட்டிருப்பேன்!" என்று விக்னேஷ் தன் நாக்கை தேள்போல வைத்துக் கொட்டினான் கௌசிகாவை.

அவ்வளவு தான் கௌசிகாவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி வர, சமையல் அறைக்குள் புகுந்து விட்டாள். ஜீவா, விக்னேஷின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டின் பின்னால் கூட்டிச் சென்றான்.

"என்னடா விக்கி, என்னாச்சு உனக்கு... ஏன் இப்படி பேசற? எல்லாருக்கும் தான் அவள்மேல கோபம் இருக்கு. ஆனா, என்ன இருந்தாலும் அவ நம்ம கூட வளர்ந்தவடா. அவ எவ்ளோ பெரியவ ஆனாலும் நம்ம கௌசிதான் விக்கி... இப்படி திட்டற அவளை..." என்று கடுமையானக் குரலில் கேட்டவன்,

"அதுவும் இல்லாம நீ ஏன் இப்படி பேசற? அவ உனக்கு அப்படி என்ன பண்ணிட்டா சொல்லு... எனக்கு தெரிஞ்சு அவ வரும்போதும் கூட உனக்கு நல்லது பண்ணிட்டுதான் வந்தா... ஆனா, உன் விதி அதுல வேறுமாதிரி இருந்திருச்சு... அதுக்கு இவமேல கோபப்பட்டு என்ன பண்ண முடியும்?" என்று ஜீவா பேசப்பேச விக்னேஷின் முகம் கறுத்தது. அதுவும் உன் விதி விளையாடிவிட்டது என்று சொல்லும் போது அந்தக் கருமம் வேறு கண் முன்னாடி நிழலாடியது.

"அவ அழறதைப் பார்த்தா பாவமா இருக்குடா... அதான் கொஞ்சம் கத்திப் பேசிட்டேன்... ஸாரிடா விக்கி!" என்றுவிட்டு ஜீவா உள்ளே செல்லத் திரும்பினான்.

"ஜீ..." என்று அழைத்தான் விக்னேஷ். "ஸாரிடா..." என்ற விக்னேஷிற்கு தன்போக்கு அவனுக்கே புரியவில்லை.

ஜீவா, "சரி வாடா... உள்ளே போலாம்"

"நீ போடா, நான் வரேன்" என்றவன் அப்படியே அங்கு தண்ணீர் தொட்டியின் திண்டில் ஏறி அமர்ந்தான்.

விக்னேஷின் பேச்சுக்கள் தாங்காமல் சமையல் அறைக்குள் நுழைந்தவள் கண்ணீர் விட்டபடியே சமையலை செய்து கொண்டு இருந்தாள். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் குத்தியது கௌசிகாவிற்கு. ஏற்கனவே தன்னால் தான் தந்தைக்கு இப்படி என்ற குற்ற உணர்வில் இருந்தவள் விக்னேஷ் பேசிய வார்த்தைகள் வேறு மனதை அறுப்பது போல இருந்தது.

தன்னிடம் எப்படி இருந்தவன், இப்போது அதில் ஒரு சதவீதம் கூட இல்லையே. ‘ஓடி வந்தவள்’ என்று அவன் அழுத்தமும் வெறுப்புமாக குற்றம் சாட்டும் பார்வையில் சொன்னது கண் முன்நின்றது.

'நான் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தேன் என்று தெரியாமல் இப்படி என்னை வதைக்கிறானே?' என நினைத்துக் கண்ணீர் விட்டவள் ஜீவா உள்ளே நுழைவதைக் கண்டு கண்களை அவசரமாகத் துடைத்தாள்.

"இங்க வேர்க்குது பாரு ஜீ... நீ வேணும்னா ஹால்ல உட்காரு..." என்றாள் கரகரத்த குரலுடன் கௌசிகா.

"..." ஜீவா.

"பசிக்குதா ஜீ? இன்னும் ஒரு 15 மினிட்ஸ்தான்..." என்று பம்பரமாய்ச் சுற்றி வேலை செய்தவளைப் பார்க்க ஜீவாவிற்கு புதியாய் இருந்தது.

'இதே பழைய கௌசியாய் இருந்திருந்தால் அவனைப் போட்டு புரட்டியிருப்பாள். ஆனால் இன்று அவன் பேசியதற்கு உட்கார்ந்து அழுகிறாளே, விதி இப்படியும் மாற்றிவிடுமா ஒரு பெண்ணை?' என்று கௌசியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன் இப்போது விக்னேஷைப் பற்றி சிந்தித்தான்.

'அப்படி இவள் மீது என்னதான் கோபம் அவனுக்கு... ஏன் இவ்வளவு வெறுப்பு? வம்பிற்கு இழுத்து சண்டை செய்வானே தவிர, அவ்வளவு சீக்கிரம் அவனும் திட்டமாட்டான், யாரையும் அவளைத் திட்டவும் விடமாட்டான். அப்படி இருந்தவனுக்கு இப்போ என்ன?' என்று சமையல் அறையின் சுவற்றில் சாய்ந்து மேலே பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.

"ஜீ சமையல் ஆச்சு, போய் கையைக் கழுவிட்டுவா..." என்று அடுப்பில் இருந்த வடசட்டியை எடுத்தபடியே கௌசி சொல்ல, "ம்ம்" என்றான் ஜீவா.

"அப்படியே அவனையும் வரச்சொல்லு" என்று சிரத்தை இல்லாதக் குரலில் சொன்னாள் கௌசி.

வெளியே வந்தவன் தொட்டியின் திண்டில் காலைத் தொங்கப் போட்டு இருபக்கமும் கையை ஊன்றி, புருவமுடிச்சுடன் உட்கார்ந்த விக்னேஷை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

உள்ளே இருவரும் நுழைய கௌசிகா மூவருக்கும் தட்டில் சேமியாவையும் இட்லி உப்புமாவையும் வைத்துக் கொண்டிருந்தாள். வந்து அமைதியாக அமர்ந்த இருவருக்கும் தட்டில் தேங்காய் சட்னியை வைத்து முடிக்க, மூவரும் ஒரு பேச்சும் பேசாமல் உண்டு முடித்தனர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்த கௌசி பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள். "கௌசி எவ்ளோ வேலை செய்வ? குடு நான் செய்றேன்" என்று கையில் சோப்புநுரையுடன் இருந்த நாரை வாங்க வந்தான் ஜீவா.

"ஏ நோ..." என்று கையை இழுத்துக் கொண்டவள், "எல்லாம் டெய்லியும் நான் செய்றது தான் ஜீ, நீ பேசாமப் போய் ரெஸ்ட் எடு... நேத்து பஸ்ல சரியா தூங்கிருக்க மாட்ட நீ... நாளைக்கு வேண்டுமானால் பேக்கிங்-க்கு ஹெல்ப் பண்ணு" என்று பாத்திரத்தை கழுவியபடியே சொன்னாள் கௌசிகா.

"நல்லா பேசக் கத்துக்கிட்டே கௌசி" என்று கிண்டல் செய்தான் ஜீவா.

வேலையை முடித்துக்கொண்டு வந்தவள் ஜீவாவிற்கும் விக்னேஷிற்கும் பாயை விரித்தாள் கௌசிகா. பாயை விரித்து தலையணை போர்வை எல்லாவற்றையும் எடுத்துப் போட்டவள், ஜீவாவிடம் திரும்பி, "ஜீ... எல்லாம் போட்டுட்டேன். எக்ஸ்ட்ரா ஃபேன் வேணும்னா டேபிள் ஃபேன் போட்டுக்கங்க. தண்ணீர் இங்கயே ஒரு ஜக்குல வச்சுட்டேன்" என்றவள்,

விக்னேஷை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, "அப்புறம் நைட் வெளியில போயிராதீங்க... பனி ஓவரா இருக்கும்" என்றுவிட்டு தனக்கும் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அறைக்குள் புகுந்துவிட்டாள்.

உள்ளே வந்தவள் சத்தம் வராதவாறு அவளுடைய டைரி இருந்த மஞ்சள் ட்ராலியை ஒருமுறை ஓப்பன் செய்து பார்த்தாள். உள்ளே டைரியையும் சில சார்ட் பேப்பரையும் பார்த்தவள் அதன்மேல் பத்திரமாகக் காட்டன் துணியைப் போட்டு மூடி, அந்த ட்ராலியை எடுத்துத் தனியாக வைத்தாள்.

வந்து பெட்டில் படுத்தவளுக்கு அசதியாக இருந்தாலும் தூக்கம் வரவில்லை. "இதற்கு தானா இந்த இரண்டு நாட்களாக இப்படி அடிச்சுக்கிட்டே இருந்த?" என்று இதயத்தின் மேல் கைவைத்துக் கேட்டாள்.

வெளியில் படுத்திருந்த விக்னேஷ், ஜீவாவிற்கும் தூக்கம் வரவில்லை. அவர்களுக்கும் பல சிந்தனைகள். 'கௌசி அவ்வளவு சீக்கிரம் அழாத பெண். இப்படி சண்டை வருவதற்கெல்லாம் அழுகிறாளே?’ என்று நினைத்த ஜீவாவிற்கு, ‘பின்ன, இவன் பேசியதற்கு யாராக இருந்தாலும் அழத்தானே செய்வார்கள்’ என்று தன் மனதில் எழுந்த கேள்விக்கு அவனே பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

கழுத்தைத் திருப்பி விக்னேஷைப் பார்க்க, அவனோ விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தான். "விக்கி..." என்று அழைத்தான்.

விக்னேஷ், "ம்ம்..."

ஜீவா, "தூங்கிட்டயா?"

"இல்ல... சொல்லு" விக்னேஷ் விட்டத்தை வெறித்தபடியே.

"நீயும் அப்படியே ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கலாம்லடா" என்றவன்,
"உன் பிரச்சனையும் முடிஞ்சா எல்லாரும் ஹாப்பி ஆயிருவாங்கடா" என்றான் ஜீவா, விக்னேஷிற்கு மட்டும் கேட்கும்குரலில்.

விக்னேஷ், "இப்போ உன்ன அறையுற அறைல உள்ள இருக்கவ எந்திரிச்சு வெளில வந்திருவான்னு எனக்கு தோனுதுடா ஜீ..."

"போங்கடா, எப்படியோ போங்க... எனக்கென்ன? சொன்னேன் பாரு வந்து" என்று முதுகைக் காட்டித் திரும்பிப் படுக்க,

"ஏய், என்ன ஃபிகர் மாதிரி திருப்பிக்கறே" என நக்கலாய்க் கேட்டு விக்னேஷ் சிரிக்க,

ஜீவா, "பாரு கல்யாணமே ஆகாம இருந்து கடைசில என்ன பாத்தே நீ ஃபிகர்ன்னு சொல்ற... நீ எதுக்கும் தள்ளியே படுடா சாமி" என்று ஜீவா சொல்ல, விக்னேஷ் அவன் முதுகிலேயே உதைத்தான்.

அன்று இரவு மூவருக்குமே அவரவர் பழைய நினைவுகள் ஞாபகம் வந்தன. அந்த இரவில்... இரவில் உலவும் நிலவைப் போல அவரவர் நினைவுகளில் உலவ ஆரம்பித்தனர் மூவரும்.
 

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-9

ஜீவாவும் மதியும் கல்யாணம் முடிந்த கையோடு தேனிலவிற்கு ஏழு நாட்கள் கிளம்ப எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.

ஹனிமூனிற்கு சென்ற ஜீவாவும் மதியும் அவர்கள் வேலையில் மூழ்கினர் (ஹீஹீஹீ). சொல்லப்போனால் வெளியில் சுற்றியதே கம்மிதான். மிச்சநேரம் போக அறையிலேயே காதலில் கட்டுண்டு இருந்தனர்.

விக்னேஷ், "ஜீவா..."

"ம்ம்..." அவளின் கூந்தலில் விளையாடியபடியே ஜீவா.

மதி, "உன்கிட்ட ஒன்னு சொல்லணும்"

"ம்ம்..." அவன் வேலையில் அவன் மும்முரமாக இருந்தான்.

"இப்படி பண்ணிட்டு இருந்தா நான் எப்படி சொல்ல முடியும்... இரண்டு நிமிடம் கை காலை வச்சிட்டு சும்மா இருக்க முடியாதா?" என்று அவனிடம் இருந்து தள்ளி உட்கார்ந்தபடி கேட்டாள்.

"ஏய்! ஹனிமூன் வந்துட்டு இன்னும் பேசணும்னு சொல்றியேடி... லவ் பண்ணப்போ பேசுனது எல்லாம் பத்தாதா? அநியாயம் பண்ணாதடி" என்று முகத்தைப் பாவமாக வைத்துக் கெஞ்சினான் ஜீவா.

சிரிப்பை அடக்கிய மதி, "சரி,சரி... இரண்டே நிமிடம் ஜீ, ப்ளீஸ்!" என்று உதட்டைப் பிதுக்கிக் கேட்டாள்.

"சரி... சொல்லு சீக்கிரம்" என்று பறந்தான் ஜீவா.

"நம்ம கௌசியை நோட் பண்ணீங்களா இந்த ஒரு மாசமா?" என்று கேட்டாள் மதி.

"ஏன் அவளுக்கு என்ன" என்று புருவமுடிச்சுடன் ஜீவா எதிர்க்கேள்வி கேட்டான்.

"அவ ஒருமாதிரி இருக்கா ஜீவா. கொஞ்சம் டல்லா... நான், அவள ஒன் மன்தா நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்" என்று சொன்ன மதியின் முகமுமே குழப்பத்தில் இருந்தது.

"அது நாம எல்லாம் கூட இல்லைல்ல... அதான் அப்படி இருந்திருப்பா..." என்றான் அவளின் விரல்களைப் பற்றியபடி.

"இல்ல ஜீவா... அவ அந்த அளவிற்கு ஸில்லி கேரக்டர் இல்ல... அவளுக்குத் தெரியாதா நமக்கு எங்கேஜ்மேன்ட் ஆயிருக்கு... அதனால பிஸியா இருப்போம்னு" என்றாள்.

"சரி, நீ என்னதான் சொல்ல வர..." என்று சற்று பொறுமை இழந்தபடி கேட்டான் ஜீவா.

"எனக்கு என்னமோ கௌசி யாரையோ லவ் பண்றானு தோனுது ஜீவா" என்று தன்மனதில் நினைத்ததை மறைக்காமல் ஜீவாவிடம் சொன்னாள் மதி.

இந்த சந்தேகம் ரொம்பநாளாக இருந்த ஒன்று மதிக்கு. எதையும் மறைக்கும் பழக்கம் இல்லாத கௌசிகா, தான் எழுதும் கவிதையை மட்டும் மறைப்பாள் அனைவரிடமும். எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும் காண்பிக்கவே மாட்டாள். அப்படி இருக்க ஒருநாள் மதி அவள் ஒரு துண்டுப் பேப்பரில் எழுதி வைத்த ஒரு கவிதையைப் படித்துவிட்டாள். அதிலிருந்து இருந்த சந்தேகம்தான்.

அப்போதே சொல்லியிருந்தால், ‘பொசசிவ்னால கௌசிகாவை பிடிக்காமல்தான் இப்படி சொல்லுகிறாள்’ என்று ஜீவா எண்ணியிருப்பான் என்றுதான் கல்யாணத்திற்குப் பிறகு அதுவும் கௌசி மிகவும் சோர்வாகத் தெரியவே ஜீவாவிடம் கொண்டு சென்றாள்.

"எதை வச்சு சொல்ற, அவ லவ் பண்றானு?" என்று ஜீவா கேட்க,

"அது... அது... எனக்கு அவ ஆக்டிவிட்டீஸ் பாத்தாலே தெரியுது ஜீவா" என்றாள். அவனிடம் அந்தக் கவிதையைப் பற்றி மூச்சு விடவில்லை.

"அவ அப்படி எல்லாம் இருந்திருந்தா, எங்ககிட்ட சொல்லியிருப்பாடி... எதையும் மறைக்க மாட்டாள்" என்றான் அழுத்தமானக் குரலில்.

"ஆனா, நீங்களும் விக்னேஷும் மட்டும் சிலதை மறைக்கறீங்க இல்ல?" என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.

"எதை சொல்ற நீ" ஜீவா, அவள் கண்களைப் பார்க்காமல் தலையணையைக் கையில் எடுத்தபடிக் கேட்டான்.

"போதும் ஜீவா... எனக்கு எல்லாம் தெரியும்... கௌசிக்கு தெரிந்தால் எப்படி வருத்தப்படுவா தெரியுமா? நானே ஒருமாதிரி தான் ஆயிட்டேன்" என்று எண்ணையில் போட்ட கடுகு போல வெடித்தாள் மதி.

"மறைக்கணும் இல்ல மதி... இப்போ உங்க எல்லாருக்கும் சொல்ல வேணாம்னு இருந்தோம்" என்றான் ஜீவா.

"ஊருக்குப் போன அப்புறம், கௌசிகா கிட்டயாவது இப்போவே சொல்லிருங்க" என்றாள்.

"சரிடி" என்றான் ஜீவா தன் மனைவியை அணைத்தபடி.

"இதுல மட்டும் விவரமா இருங்க..." என்று சிரித்தவள், தன் கணவனின் அணைப்பை ஏற்று அவனுடன் இணைந்தாள்.

கல்யாணத்திற்காக கௌசி எடுத்த லீவோடு சேர்த்து மதியின் வேலையும் அவள் தலையிலேயே விழுந்தது. மாலை வீடு வந்து சேரவே ஏழுமணி ஆனது. அலுப்பின் காரணத்தால் அவளால் விக்னேஷிடம் பேசக் கூட முடியவில்லை. பேசலாமென்று நினைத்தவள் அவனிற்கும் லீவ் எடுத்திருந்ததால் அதே வொர்க் ஸ்டெரஸ் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

அன்று காலை ஆபிஸிற்கு கிளம்பிக் கொண்டு இருந்தவள் ஃபோன் அடிக்க எடுத்து காதில் வைத்து, "ஹலோ" என்று வாட்சைக் கட்டியபடியே பேசினாள் கௌசி.

"ஐ லவ் யூ" என்று ஒருவனின் குரல் கேட்டது. கூடவே ஒரு கேவலமான சிரிப்புடன்.

கௌசிகா, "எக்ஸ்க்யூஸ் மீ"

"ஐ லவ் யூ பேபி" என்றவன் ஃபோனிலேயே கௌசிக்கு முத்தத்தைத் தந்தான்.

அவன் செய்கை அருவெறுப்பைத் தர, "இனி ஃபோன் பண்ணினா செருப்பால அடிப்பேன்டா நாயே" என்று கோபமாகச் சொன்னவள், ஃபோனைக் கட் செய்து அந்த நம்பரை ப்ளாக் செய்தாள்.

வழக்கம்போல ஆபிஸிற்கு சென்றவளுக்கு ஏற்கனவே நிறைய வேலைகளை முடித்து வைத்திருந்ததால், கொஞ்சம் வேலை அன்று கம்மியாக இருந்தது. ரொம்பவே போர் அடிக்க இயந்திரமாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். ஏதோ யோசனையில் கைகள் தானாக வேலை செய்ய பதினொரு மணியளவில் மதியிடம் இருந்து கால் வந்தது கௌசிகாவிற்கு.

ஃபோனை எடுத்துக் காதில் வைத்தவள், "அப்புறம் புதுப் பொண்ணே... எப்படி இருக்க? ஒரு வாரமா ஃபோனே இல்ல... ஒரே ஜாலிதான் போல" என்று கேலியைக் கௌசி ஆரம்பித்தாள்.

"கலாய்க்காத கௌசி... ப்ளீஸ்" என்று மதியின் வெட்கக்குரல் வந்தது.

"ஆஹாஹா! வெட்கம்லா வருதே. உன்ன வெட்கப்பட வச்ச ஜீ மாமாகிட்ட ஃபோனைக் கொடு" என்றாள் கௌசி

"ம்ம்..." என்றவள், இரண்டு நொடிக்குப் பிறகு, "கௌசி, அவரு உன்கிட்ட பேச மாட்டாராம்... ஆளவிடுறா சாமின்னு ஓடிட்டார்" என்று சிரித்தாள் மதி.

"இருக்கட்டும் இருக்கட்டும்" என்ற கௌசி, "எப்போ சென்னை ரிட்டர்ன் மதி?" என்று கேட்டாள்.

"நாங்க வந்துட்டோம் கௌசி... இன்னிக்கு மார்னிங் ஏழுக்கு" என்றாள் மதி.
"ஹம்ம், அப்போ நாம ஈவ்னிங் மீட் பண்ணலாமா? உங்களோட அவர்கிட்ட கேட்டு சொல்லுங்க" என்று கௌசிகா மறுபடியும் ஆரம்பித்தாள்.

"உஹூம்... வந்தா நீ கலாய்ப்ப" என்று மதி சிணுங்க,

"அதுக்குன்னு நான் கிண்டல் பண்ணமாட்டேன் வான்னுலாம் சொல்லமாட்டேன். நீங்க வரீங்க. இல்லைனா நான் அங்க வந்துட்டு நைட் அங்கையே உன் கூடயே இருந்துப்பேன்" என்று கௌசி மிரட்டினாள்.

"எங்க கௌசி மீட் பண்ணலாம்?" என்று பவ்யமானக் குரல் வந்தது மதியிடம் இருந்து.

"ஹாஹாஹா... தட்ஸ் மை கைய்ஸ்" என்று கிளுகிளுத்தவள்,
"ஈவ்னிங் ஃபைவ் ஓ க்ளாக்... பெசன்ட் நகர் பீச் கேஎப்சி" என்றாள் கௌசிகா.

"ஓகே டன்" என்று மதி சொல்ல, இருவரும் ஃபோனை வைத்தனர்.

ஃபோன் காலை கட் செய்த கௌசிகா, விக்னேஷிற்கு ஃபோனைப் போட்டாள். ரிங் போக அவன் கட் செய்தான். மீண்டும் இருமுறை முயற்சி செய்ய கட் செய்து விட்டான். பிறகு லன்ச் டைமில் கால் செய்ய போனை எடுத்தவன், "என்னடி?" என்று எரிச்சலானக் குரலில் பேசினான்.

"இப்போ எதுக்கு சலிச்சுக்கற... இப்போ உனக்கு லன்ச் டைம்தானே?" என்று கௌசிகா கேட்க விக்னேஷ் தடுமாறினான்.

"சரி, என்ன விஷயம் சொல்லு" என்று அவசர அவசரமாகப் பேசினான்.

"ஈவ்னிங் பெஸ்ஸி பீச் பக்கத்துல இருக்க கேஎப்சி வந்திடு. மதியும் ஜீயும் வந்தாச்சு... எல்லோரும் மீட் பண்ணலாம்" என்றவளிடம்,

"எப்போ பாரு சுத்திக்கிட்டே இருப்பாயாடி, வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா?" என்று அங்கிருந்த டென்ஷனில் எரிச்சல் பட்டான்.

"அசிங்கமா திட்டிடுவேன்டா உன்ன... பாத்து பத்துநாள்கிட்ட ஆகப்போகுது. பாக்கலாம்னு கூப்பிட்டா சலிச்சுகற... நீ ஒன்னும் வர வேண்டாம். நாங்க மூன்றுபேர் மட்டும் பாத்துக்கறோம்" ஃபோனைக் கட் செய்தவள் அரை சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டாள்.

கையைக் கழுவிக்கொண்டு வந்து ஃபோனைப் பார்க்க அதற்குள் மூன்று மிஸ்டுகால் வந்திருந்தது விக்னேஷிடம் இருந்து. அவனிற்கு திருப்பி ஃபோனைப் போட, "ஹலோ" என்றான் விக்னேஷ்.

கௌசிகா, "ம்ம்..."

"கோவமாடி?" விக்னேஷ் யோசனையானக் குரலில்.

"பின்ன வரதா... ஏதோ நான் எப்போமே ஊர் சுத்தற மாதிரி பேசற... அதுவும் நான் வெளில சுத்தறதே உங்க கூடத்தான். நான் என்னமோ டெய்லியும் சுத்தற மாதிரி பேசற நீ!" என்று பொரிந்தாள்.

கௌசிகா, "ஸாரிடி... கொஞ்சம் டென்சன் அதான்"

கௌசிகா, "ம்ம்..."

"சரி, நான் ஈவ்னிங் வரேன்... உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்" என்று கௌசியின் ஆர்வத்தைத் தூண்டினான் விக்னேஷ்.

"என்ன சர்ப்ரைஸ்டா விக்கா" என்று ஆர்வமானக் குரலில் கேட்டாள்.

"அது நேர்ல தெரிஞ்சுப்ப நீ..." என்றவன், "பட், கௌசி நோ மட்டும் சொல்லிடாதடி" என்றான் கெஞ்சும் குரலில்.

"..." கௌசிக்குப் பேசவே வரவில்லை. ஏனோ ஆயிரம்வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தாள்.

"கௌசி இருக்கியா?" விக்னேஷின் குரல்.

"ம்ம்... என்னன்னு மட்டும் சொல்லேன்" என்று அவளுக்கே எட்டாதக் குரலில் கேட்டாள்.

"நம்ம கல்யாணத்தைப் பத்திதான் டி" என்று விக்னேஷ் சொல்ல கௌசிக்கு மயக்கம்போட்டு விழாத குறைதான்.

"என்னடி பேசவே மாட்டிக்கற?" என்று விக்னேஷின் குரல் வந்தது.

"இருக்கேன்டா... சரி ஈவ்னிங் பேசலாம்" என்று ஃபோனை அணைத்துவிட்டாள்.
ஃபோனை அணைத்த கௌசிக்கு, தன் இதயத் துடிப்பை நன்றாகவே உணர முடிந்தது. தன்னால் அரும்பும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை அவளால். இதமான காற்றில் பறக்கும் பஞ்சைப் போல அவளின் இதயம் பறந்து கொண்டிருந்தது.

சந்தோஷத்திலும் ஆவலிலும் வேலைகளை எல்லாம் சீக்கிரமாக முடித்தவள் மணியைப் பார்த்தாள். மணி மூன்றரை தான் ஆகியிருந்தது. பேசாமல் இப்போதே கிளம்பிப் போய் மதியிடமாவது பேசிக்கொண்டு இருப்போமா? என்று நினைத்துக்கொண்டு கிளம்பியவள் அவளின் ஃபோன், 'என்னை எடு' என்று சிணுங்க ஃபோனை எடுத்துப் பார்த்தாள். வரதராஜன்தான் கூப்பிட்டிருந்தார்.

ஃபோனை எடுத்துக் காதில் வைத்தவள், "சொல்லுங்க அப்பா" என்றாள்.

"பாப்பா எப்போ வீட்டுக்கு வருவே?" எனக் கேட்டார் வரதராஜன்.
"ஏம்ப்பா... வேலை முடிஞ்சுச்சு. ஏதாவது வாங்கிட்டு வரணுமா?" என்றாள் தன் ஹேண்ட்பாக்கில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தபடி.

"இல்லமா ஒரு முக்கியமான விஷயம். வீட்டிற்கு வர்றியா?" என்றார் அவர்.

"இப்போவேவா அப்பா?" என்றாள் புருவ முடிச்சுடன்.

"ஆமான்டா" வரதராஜன் சற்று அழுத்தமாக.

"சரி வரேன் பா" என்று ஃபோனை அணைத்தவள், தன் வேலைகளை எல்லாம் டீம்லீடரிடம் காண்பித்துவிட்டு ஹேண்ட்பாக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

போகும் வழியிலேயே மனதிற்குள் கணக்குப் போட்டபடி கௌசிகா சென்றாள். அப்பாவிடம் பேசிவிட்டுக் கிளம்பினால் ஐந்து, ஐந்தேகால்-க்கு எல்லாம் போய்விடலாம் என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

வீடு வந்து சேர்ந்தவள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய, "ஏன் பாப்பா ஸ்கூட்டியை உள்ள நிறுத்தலயா?" என்று வெளியில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியைப் பார்த்தபடிக் கேட்டார் வரதராஜன்.

"இல்லப்பா, ஈவ்னிங் மதி, ஜீ, விக்கா எல்லாரையும் பார்க்க போகணும்... நீங்க கூப்டிங்களா... அதான் வந்தேன்" என்று ஷோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

அருகில் வந்து அமர்ந்த வரதராஜன், "பாப்பா, உன்கிட்ட ஒன்னு சொல்லனும்டா" என்று அவளை பார்த்துச் சொன்னவரின் கண்களில் ஏதோ ஆசை.

"சொல்லுங்கப்பா... அதுக்குத்தானே வந்தேன். என்ன விஷயம்?" என்று அவரின் கைகளைப் பற்றியபடி சொன்னாள் கௌசி.

"உனக்குக் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்டா... நம்ம பேமிலி ப்ரண்ட்தான். நம்ம ஜீவா கல்யாணத்தில் பார்த்து, கல்யாணம் செய்தால் உன்னைதான் செய்வேன்ன்னு இருக்கிறாராம் அந்தப் பையன்" என்றார் வரதராஜன் மெல்லமெல்ல.

"முடிவே செஞ்சுட்டீங்களா அப்பா?" என்று அவரைப் பற்றிய இருந்த கைகளை எடுத்தபடி கேட்டாள் கௌசிகா. அவளின் நினைப்பு எல்லாம் இப்போது மதியம் விக்காவுடன் பேசியதில் நின்றது.

"என்ன கௌசிமா? உன்னைக் கேட்காமல் எப்படி முடிவு செய்வேன் சொல்லு... உன்கிட்ட பேசிட்டு சொல்றேன்ன்னு சொல்லிட்டேன்" என்று மகள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டாளோ சற்று வருத்தமானக் குரலில் கேட்க, அப்போது தான் கௌசிக்கு மூச்சுவிட முடிந்தது.

"..." எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள்.

"உனக்கு விருப்பம் இல்லையாமா?" என்று கேட்டார் வரதராஜன்.

"நான் நைட் சொல்றனே ப்பா. ப்ளீஸ்..." என்று அவரின் முகத்தை நேராகப் பார்த்து கண்களை சுருக்கிக் கேட்டாள் கௌசிகா.

"ப்ளீஸ்லாம் எதுக்கு பாப்பா அப்பாகிட்ட... நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால், நீ நல்ல முடிவைதான் எடுப்பன்னு எனக்குத் தெரியும்" என்றார் கௌசியின் தலையை வருடியபடி.

"ம்ம்... ப்பா" என்று புன்னகை சிந்தியவள், "சரிப்பா நான் கிளம்பறேன். அவங்களப் பாத்துட்டு வரேன்" என்றபடி எழுந்தவள் ஸ்கூட்டியை நோக்கிச் சென்றாள்.

ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பெசன்ட்நகர் பீச்சை நோக்கி வண்டியை செலுத்தியவள் தன் யோசனைகளிலேயே இருந்தாள். 'இன்று விக்காவிடம் சொல்லிவிடலாம். அவனும் அதே யோசனையில் தான் இருக்கான்போல. அவன்கிட்ட இன்னிக்குப் பேசிட்டு இன்னிக்கே அப்பாக்கிட்ட சொல்லிடணும்' என்று நினைத்தவள்,

‘எவனோ ஒருவன் என்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னால் அவனைக் கல்யாணம் பண்ணணுமா... ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் எப்படி நடக்கும்’ என்று மனதிற்குள் அந்த முகம் தெரியாத ஒருவனை மனதினுள் திட்டிக்கொண்டு வந்தவள் கேஎப்சியில் வந்து வண்டியை நிறுத்தினாள்.

வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே நுழைந்தவள் தன் கூட்டம் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். எல்லா டேபிளிலும் தேடியவள் கடைசியாக ஒரு மூலையில் இருந்த டேபிளில் ஜீவாவும் மதியும் உட்கார்ந்தது பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்களின் முதுகு மட்டுமே தெரிந்தது.

"அட ராமா... இதுக இன்னும் இந்தக் கடலை போடறத நிறுத்தலயா" என்று தலையில் அடித்தவள் அவர்களை நோக்கிச் சென்றாள்.

அவர்களின் பின்னால் நின்றவள் தொண்டையைச் செருமி, "ம்ஹூம்... நான் ஒருத்தி வந்துட்டேன்டா... நான் வந்தது கூடத் தெரியாமல் நல்ல வறுத்துட்டு இருக்கீங்க" என்று கௌசி குரல் கொடுக்க, இருவரும் சுதாரித்து தங்கள் உலகில் இருந்து வெளியே வந்தனர்.

"அப்புறம்... எங்கே அவன் இன்னும் வரலையா?" என்று கேட்டபடி தன் ஹேண்ட்பாக்கை கழற்றிவிட்டு மதியின் அருகில் அமர்ந்தாள் கௌசிகா.

"அவன் வருவான் கௌசி, நம்ம ஆர்டர் பண்ணலாம். அவன் வந்து ஜாயின் பண்ணிப்பான்..." என்று ஜீவா சொல்ல, "ஹே! என்னடா... அவனும் வரட்டுமே" என்று கௌசி சொல்ல மதி இடையில் புகுந்தாள்.

"இல்ல கௌசி... விக்னேஷ் வருவதற்கு டுவன்ட்டி மினிட்ஸ் ஆகுமாம். நம்மல ஆர்டர் பண்ண சொல்லிட்டாரு" என்று மதி சொல்ல, "ம்ம், சரி ஓகே" என்றவள் தனக்கு என்ன வேண்டும் என்று சொன்னாள்.

மதியிடமும் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு போனவன் ஆர்டர் செய்துவிட்டு வந்து அமர்ந்தான். சரியாக ஐந்து நிமிடத்திற்குப் பிறகு விக்கா வந்துட்டான் என்று பாதி திரும்பிய கழுத்தோடு ஜீவா என்ட்ரன்ஸை பார்த்துச் சொல்ல, மதியும் திரும்பி விக்னேஷைப் பார்த்தாள். கௌசிகா திரும்பவில்லை.

ஏனோ மதியம் பேசியதில் இருந்து அவனைப் பார்க்க கூச்சமாக இருந்தது கௌசிக்கு. அவன் வரட்டும் என்று திரும்பாமல் உட்கார்ந்திருந்தாள். அவன் பக்கத்தில் வருவதை உணர உணர ஏனோ புன்னகையை தழுவியது அவளது உதடுகள். தலையைக் குனிந்துகொண்டு அமர்ந்தவள் விக்னேஷின் கால்களோடு இன்னொரு கால் வந்து எதிரில் விக்னேஷின் பக்கத்தில் அமர்வதையும் கவனித்தாள்.

புருவ முடிச்சுடன் நிமிர்ந்து பார்த்த கௌசிக்கு கண்கள் வெளியே வந்துவிடுமோ என்ற அளவிற்கு விரிந்தது. காரணம் ஏழு வருடங்களுக்கு முன் பார்த்தவள் அவள் முன் அதுவும் விக்காவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். ஏதோ நெருடலாக உணர்ந்தாள் கௌசிகா.

"இவங்க நான்சி தானே?" என்று வெளியே வராதக் குரலில் கேட்டாள் கௌசிகா. ஆமாம் அது நான்சி தான். பள்ளியில் கௌசிகாவிடம் விக்னேஷிற்கு காதல் கடிதம் எழுதி தந்து வாங்கிக் கட்டியவள்.

"ஆமாம் கௌசி" விக்னேஷ் நான்சியின் கைகளைப் பற்றியபடி. கௌசிக்கு அதைப் பார்க்க பார்க்க இதயத்துடிப்பு தொட்டியில் இருந்து விழுந்த மீனைப் போலத் துடித்தது.

கௌசியின் முகமாறுதலைக் கண்ட மதி, ஜீவாவை முறைத்து, "நான்தான் சொன்னேன்ல" என்று முறைத்தாள்.

"வந்து கௌசி... நம்ம விக்கியும் நான்சியும் லவ் பண்றாங்க கொஞ்ச நாளா... உன்கிட்ட சொல்லத்தான் கூட்டிட்டு வந்திருக்கான்" என்று ஜீவா, கௌசியிடம் உளறிக் கொட்ட, கௌசிக்கு யாரோ தன்தலையில் சம்மட்டியால் அடித்துக் கீழே தள்ளியது போல ஆனது.

கோபம், அழுகை என முகத்தில் எந்தவித அதிர்ச்சியும் காட்டாமல் உட்கார்ந்திருந்தாள் கௌசிகா. விக்னேஷ் நான்சியின் கையைப் பிடித்தது வேறு அவளை குத்திக் கிழித்தது.

"கௌசி..." என்று விக்னேஷ் கூப்பிட, அதை உணராமல் உட்கார்ந்திருந்தாள் கௌசிகா.

மதி உலுக்க இயல்பிற்கு வந்தவள், "கௌசி உன்கிட்ட மறைக்கனும்னு இல்லடி... அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டோம். உன்கிட்ட எதுவும் மறச்சது இல்லைதான். ஆனா..." என்று விக்னேஷ் பேசிக்கொண்டு இருக்க நான்சி நடுவில் புகுந்தாள்.

"சாரி கௌசிகா... ஆக்சுவலி இவரு இன்னிக்குக் கூட வேண்டாம்னுதான் சொன்னார். அப்புறம் இவரு இன்னிக்கு என் ப்ளாட்ல இருந்தப்போதான் உங்க அப்பா ஃபோன் பண்ணினார். உங்க கல்யாண விஷயம் பத்திப் பேச... அதனாலதான் நம்ம எல்லாரோடகல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு இன்னிக்கே இவர்கிட்ட சொல்லிட்டேன்" என்று நான்சி விக்னேஷின் தோளில் கையைப் வைத்தபடி சொல்ல கௌசிக்கு, "என்னுடன் ஃப்ளாட்டில் இருந்தான்" என்று சொன்னது தான் காதில் நாராசமாய் கேட்டுக்கொண்டே இருந்தது.

'அப்போ என்கிட்ட பொய் சொன்னையா விக்கா... இவளுக்காகவா என்கிட்ட எரிச்சலாப் பேசுன நீ' என்று மனதினுள் நினைத்தவளுக்கு கண்ணீர் வரவா என்று எட்டிப்பார்த்தது. மேலும் நான்சி உரிமை உள்ளவள் போல விக்னேஷின் தோளில் வைத்திருந்த கை கௌசிகாவைக் கொன்றது. இதைத்தான் நம் கல்யாணம் என்று சேர்த்திச் சொன்னாயா? என்று நினைத்தவளுக்கு, தான் எவ்வளவு பெரிய பைத்தியம் என்று தோன்றியது.

எழுந்து நின்றவள், "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. மறந்துட்டு வந்துட்டேன். நான் கிளம்பறேன். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க, நான் நெக்ஸ்ட் டைம் ஜாயின் பண்ணிக்கறேன்" என்று தன் ஹேண்ட்பாக்கை எடுத்தபடிச் சொல்லியவள் நான்சியுடன் சேர்த்து அனைவருக்கும், "பை" சொல்லிவிட்டுக் நடந்தாள்.

அவள் கடை என்ட்ரன்ஸ் வரைக்கும் செல்வதைப் பார்த்த விக்னேஷிற்கு அவள் முதுகு அழுகையில் குலுங்குவது மட்டும் தெரிந்தது. அவள் பொய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்றும் தெரிந்தது. கௌசிகாவின் டீம்லீடர் அங்கு முதலில் வேலையில் இருந்தபோது பழக்கமான விக்னேஷின் ஃப்ரண்ட்தான். அவள் கிளம்பிவிட்டாளா என்று கேட்டுக்கொண்டே நான்சி ப்ளாட்டில் இருந்து கிளம்பினான்.

அதற்குள் ஆர்டர் செய்த உணவு வர அவள் சாப்பிடாமல் செல்கிறாளே என்று இருந்தது. பசி தாங்காதவள் கௌசிகா. எழுந்து மூவரையும் பார்த்து, "நீங்க உட்காருங்க நான் டூ மினிட்ஸ் வந்திடுறேன்..." என்று ஓடி வெளியே வந்து கௌசியை டூ வீலர் பார்க்கிங்கில் தேடினான். அதற்குள் அவள் வண்டியைக் கிளப்பிக்கொண்டு செல்வது மட்டும் தெரிந்தது அவனுக்கு.

உள்ள வந்து தன் புருவமுடிச்சைத் தட்டியபடி உட்கார்ந்திருந்தான் விக்னேஷ். தன் தோளைத்தொட்ட நான்சியிடம் முழுக் கோபத்தையும் காட்டினான்.

"உன்னை யார் உன் வீட்டில் இருந்ததை எல்லாம் சொல்லச் சொன்னது?" என்று அவளிடம் சீறினான்.

"ஏன், உண்மையைத்தானே சொன்னேன்?" என்று முகத்தை அப்பாவிபோல வைத்துச் சொன்னாள்.

"அதுக்குன்னு இப்போ, உன் அம்மா அப்பாகிட்டக் கூட சொல்லீருவியா உண்மைன்னு?" என்று விக்னேஷ் கேட்க வாயை மூடிக்கொண்டாள் நான்சி.

"யாரு மேலயும் கோபப்பட முடியாது, எல்லாம் முன்னாடியே அவகிட்ட சொல்லிருக்கணும். மறைத்தது உங்க தப்பு" என்றாள் மதி. கௌசி அழுது கொண்டு போனதில் மதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அதுவும் இந்த நான்சியைக் கண்டதிலிருந்து பிடிக்கவில்லை மதிக்கு. அந்தக் கோபத்தில் விக்னேஷிடம் சொல்லியே விட்டாள்.

ஒரு நிமிடம் யோசித்த விக்னேஷ், "சரி கிளம்பலாம் நான்சி, நான் உனக்கு கேப் புக் பண்றேன். நீ அதுல போ. நான் கொஞ்சம் மாமா வீட்டு வரைக்கும் போகணும்" என்றவன், தன் மொபைலை எடுத்து கேப்பை புக் செய்தான். நான்சியை கேப்இல் ஏற்றிவிட மழை பெய்யத் துவங்கியது.

"விக்கி பேசாம எங்க கூட கார்ல வந்திரு... பைக் அப்புறம் வந்து எடுத்துக்கலாம்... மழை வேற வருது" என்று ஜீவா சொல்ல,

"இல்லடா வேணாம். அங்க போய் லேட் ஆயிருச்சுனா ரிஸ்க். நான் இதுலயே வரேன்" என்று சொல்லியபடி அங்கு நிறுத்தியிருந்த தன் பைக்கில் ஏறி அமர்ந்தான்.

விக்னேஷ் பைக்கை எடுக்க ஜீவாவும் மதியும் காரில் கௌசியைப் பார்க்க அடையாரை நோக்கிப் புறப்பட்டனர்.
 

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-10

வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிய கௌசியின் கண்ணீர் நிற்கவே இல்லை. வழி முழுதும் அழுதுகொண்டே வந்தவளை ரோட்டில் போகும் வண்டியின் பின் உட்கார்ந்திருக்கும் சிலர் கவனித்துக்கொண்டு தான் சென்றனர். ஆனால், எதையும் உணரும் நிலையிலும் அவளில்லை.
ஏனோ நான்சியின் மேல் கோபம் வரவில்லை. ஆனால், விக்னேஷிடம் சொல்லவே முடியாமல் போயிற்றே என்ற வேதனை மிகுதியாய்த் தெரிந்தது. அதுவும் விக்னேஷ் நான்சியின் கையை உரிமையாய்ப் பிடித்தது கண்முன் நின்றது.

தன் சிந்தனைகளிலேயே உழன்றுகொண்டு வண்டியை ஓட்டியவள் ரோட்டில் இருந்த சிறுகுழியைப் பார்க்கத் தவறிவிட்டாள். வண்டியை விட்ட வேகத்தில் ஸ்கிப்ட் ஆக, எப்படியோ சமாளித்து பாலன்ஸ் செய்ய ஸ்கூட்டி ஆஃப் ஆகிவிட்டது. வண்டியை ஸ்டார்ட் செய்ய முயற்சித்து தோற்றவள் தள்ளிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

வழி முழுதும் கண்ணீர் சிந்திக்கொண்டே வந்தவள் தன் வீட்டுத் தெருக்குள் நுழையும்போது பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. வீட்டிற்குள் நுழைந்து வண்டியை நிறுத்திக்கொண்டு இருந்தவளுக்கு, சமையலறை ஜன்னலின் வழியாகத் தன் தந்தையின் குரல் கேட்டது. கூடவே சுமதி ஜெயாவின் குரலும். பெய்யும் மழையில் அரைகுறையாகக் கேட்க, ஜன்னலின் அருகில் சென்று நின்றாள் கௌசிகா.

"ஏன்ணா... ஏன் இப்படி நினைக்கறீங்க? நம்ம கௌசியோட குணத்துக்கும் அழகுக்கும் அந்தக் குடும்பம்தான் குடுத்து வச்சிருக்கணும்... நகை எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க... நாங்க எல்லாம் இருக்கோம்ல" என்று ஜெயா பேச,

"அதெல்லாம் வேண்டாம் ஜெயா... என் பொண்ணுக்கு நான்தான் எல்லாம் செய்யணும், சேமிப்பு நிறையவே இருக்கு. கோமதியின் (கௌசியின் அன்னை) நகையும் இருக்கு. எப்படியும் ஐமெபது பவுனாவது போட்டு அனுப்ப வேண்டாமா... இப்போதைக்கு முதலில் வாங்கிய ஒரு இடம் இருக்கு அதை விற்கலாம்னு இருக்கேன்" என்று பேசிய தந்தையின் குரல் கேட்டு கௌசிக்கு சரம்சரமாய் நீர் வழிந்தோடியது.

கல்யாணமே இப்போது வேண்டாமென்று சொல்லிவிடலாம் என்ற முடிவோடு வந்த கௌசி, தன்தந்தையும் அத்தைகளும் நடத்திய உரையாடலைக் கேட்டு அதிர்ந்து நின்றாள். பேசாமல் உள்ளே சென்று நிறுத்தச் சொல்லலாமா என்று எழுந்த எண்ணத்தில் விழுந்த மணலாய் மேலும் சில உரையாடல்களைக் கேட்டாள்.

"அண்ணா, இடமெல்லாம் எப்போதுமே நமக்கு ஒரு காலத்துல யூஸ் ஆகும். அதைப்போய் விக்கணுமா? அதுவும் இல்லாம அண்ணி இருந்தப்போ நீங்க இரண்டுபேரும் சேர்ந்து வாங்கியது. அண்ணி ஞாபகம் வரும் போதெல்லாம் அங்க போயிட்டு வருவீங்க. அதைப் போய் விக்கணுமா அண்ணா?" என்று சுமதியின் குரல் அங்கலாய்ப்பாய் கேட்டது.

"நாங்க, நம்ம கௌசிக்கு பண்ண மாட்டோமா அண்ணா?" என்றும் சுமதி கேள்வியை வீசினார்.

"சுமதி... ஜெயா... நீங்க இரண்டுபேரும் முதல்ல ஒன்னப் புரிஞ்சுக்கோங்க.. இடம் இருந்தா பிற்காலத்தில் யூஸ் ஆகும்தான். ஆனால், என் பெண்ணுக்கு மிஞ்சியது எனக்கு எதுவுமில்லை. உன் அண்ணியே இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாள் சுமதி" என்று தெளிவானக் குரலில் தங்கைகளைப் பார்த்துப் பேசியவர்,

"அதுவும் இல்லாமல் சின்ன வயதில் இருந்து ஒருவர் முகம் சுளிக்க நடக்காதவள் என் பொண்ணு. எனக்கு, உன் அண்ணிக்கு அப்புறம் ஒரே நிம்மதி அவதான். என் மகாலட்சுமி கூட. அப்படிப்பட்டவளை மனசு நிறைய அனுப்பினால்தான் எனக்கு உண்மையான நிம்மதி" என்று அழுத்தமாகச் சொன்னார் வரதராஜன்.

"சரி அண்ணா. அவதான் நைட் அவளோட முடிவைச் சொல்றேன்னு சொல்லி இருக்காளே. வந்து என்ன சொல்றான்னு பாப்போம்" என்று சுமதி சொன்னார்.

"என் பொண்ணு, எனக்கு சாதகமான முடிவைத்தான் எடுப்பாள்" என்று வரதராஜனின் நம்பிக்கையான குரல் ஒலிக்க வெளியே நின்றிருந்த கௌசி வேரோடி நின்றாள்.

அழுகை தாங்கமாட்டாமல் வீட்டிற்குள் வேகமாக நுழைந்து தன் அறைக்குள் ஓடினாள். அதற்குள் கௌசியைப் பார்த்துவிட்ட ஜெயா அவள் அழுதுகொண்டு போவதையும் பார்த்துவிட்டார்.

"கௌசி நில்லு" என்று பின்னாடியே ஜெயா போக, அறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்டாள் கௌசிகா.

ஜெயாவின் குரலைக் கேட்டு கௌசி வந்துவிட்டாள் போல என்று சமையலறையில் இருந்து வெளியே வந்த வரதராஜனும் சுமதியும் ஜெயா சொன்னதைக் கேட்டுப் பதறிவிட்டனர்.

"கௌசிமா, கதவைத் திற..." என்று வரதராஜன் போய் கதவைத் தட்டினார்.

"அப்பா, ப்ளீஸ் ப்பா... நான் கொஞ்சநேரம் தனியாக இருக்கனும். யாரும் பயப்படாதீங்க. நானே கொஞ்சநேரம் கழித்து வெளில வந்திருவேன்" என்று கௌசி அழுகுரலிலேயே பேச வரதராஜன் கலங்கினார்.

அங்கு அறையின் முன்நின்று எந்தப் பயனுமில்லை என்று எண்ணிய மூவரும் வந்து சோபாவில் அமர்ந்தனர். கௌசி அழுது இதுவரை ஒருத்தருமே பார்த்ததில்லை. சிணுங்குவாளே தவிர அழமாட்டாள். அப்படி இருப்பவள் இப்போது எதற்கு அழுகிறாள் என்று வரதராஜன், ஜெயா, சுமதி ஆகியோரின் எண்ணங்களில் எழுந்தது.

உள்ளே அழுதுகொண்டிருந்த கௌசிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பாவிற்கு தன்மேல் நம்பிக்கை என்று தெரியும். ஆனால், எவ்வளவு நம்பிக்கை என்று இன்றுதான் தெரிந்துகொண்டாள்.

ஆனால், விக்னேஷை மறப்பது என்பது அவளுக்கு சாத்தியமே இல்லாதக் காரியம், மறுக்கமுடியாத உண்மையும்கூட. இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவித்தாள் கௌசிகா. தன்னையே நினைத்து தன் சந்தோஷத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பா முக்கியம்தான். அதற்காக விக்னேஷை நினைத்துக்கொண்டு இன்னொருவனை எப்படி மணப்பது என்று நினைக்கும் போதே கௌசியின் உடல் கூசியது. தன் நினைவுகளிலேயே அழுதழுது கரைந்தாள்.

அதுவும் நான்சி தன்னைப் பார்த்த, ‘பார்த்தாயா... கடைசியில்’ என்ற பார்வையில் கௌசியின் மனமும் முகமும் சுருங்கிவிட்டது தான். இனி, ‘விக்கா’ தனக்கில்லை என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அழுகை அதிகம் ஆனதே தவிர குறைந்தபாடில்லை.

பெசன்ட் நகரில் இருந்து அடையார் வந்து சேர்ந்த விக்னேஷ் நேராக வீட்டிற்குள் புகுந்தான். பைக்கில் வந்ததால் சீக்கிரமே ஜீவா மதியை விட முன்னால் வந்து சேர்ந்தான். வீட்டிற்குள் தொப்பலாக நனைந்து வந்தவனை ஹாலில் உட்கார்ந்திருந்த மூவரும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.

"கௌசி எங்கே மாமா?" என்று தன் சட்டை ஸ்லீவ்சை மடித்தபடி கேட்டான் விக்னேஷ்.

"ஏன் விக்கி. உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்னையா?" என்று வரதராஜன் எழுந்தபடி கேட்டார்.

"அதெல்லாம் இல்ல... அவ எங்கே மாமா?" என்று கண்கள் இடுங்கக் கேட்டான்.

"விக்னேஷ், நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதலில்" என்று சுமதி விக்னேஷை அதட்ட விக்னேஷ் முகம் இறுகினான்.

"என்ன ஆச்சு விக்னேஷ், அவ ஏன் அழுதுகிட்டே வந்தா?" என்று ஜெயா கௌசிகா வந்தது, கதவை சாத்தியது என அனைத்தையும் சொல்லி முடித்தார்.
"உனக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சினையா? அல்லது ஜீவா ஏதாவது சொன்னானா?" என்று சுமதி விசாரித்தார்.

"அம்மா... நாங்க என்ன சின்னக் குழந்தையா? சண்டை போட்டுக் கொண்டு அழ... எப்போதுமே மூனுபேரும் உங்ககிட்ட சண்டைன்னு வந்து நின்னதில்லை... இது" என்று தயங்கியவன் அப்படியே நிறுத்தினான்.

தான் காதல் என்று சொன்னால், தன் அம்மா ஏற்றுக் கொள்வார்களா? என்று நினைத்தான். ஜீவா சொன்னபோதே முதலில் எதிர்த்தவர்கள் ஜீவாவின் பிடிவாதத்திலும் மதியின் குணத்திலும்தான் ஒப்புக்கொண்டதே. என்றெல்லாம் நினைத்தவன், "ஒரு சின்ன மிஸ்அண்டர் ஸ்டான்டிங்" என்று முடித்தான்.
அவன் பேசவும் ட்ராபிக்கில் மாட்டியிருந்த ஜீவாவும் மதியும் காரில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

"இன்னிக்கு கௌசிகிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசினேன் விக்னேஷ். அவள் அழுதுகொண்டு வந்ததும் காதல்னு இருக்குமோன்னு கற்பனை எல்லாம் செஞ்சுட்டேன்" என்று பெருமூச்சை விட்டார் வரதராஜன்.

உள்ளே வந்த ஜீவாவும் மதியும் என்ன நடந்தது என்று தெரியாமல் நாம் வாய்விட வேண்டாம் என்றபடி நின்றனர்.

"அவ இன்னும் ரூமில்தான் இருக்காளா?" என்று கேட்டபடி நகர்ந்தவன் கௌசியின் ரூம் முன்னால் நின்று கதவைத் தட்டினான்.

"கௌசி கதவைத் திற..." என்றான் விக்னேஷ் அறைக் கதவைத் தட்டியபடியே. கௌசியிடம் பதிலே இல்லை.

"கௌசி..." என்று மறுபடியும் கதவைத் வேகமாகத் தட்ட சுவரில் மோதியது போலத்தான் ஆகியது.

"கௌசி" என்று பொறுமை இழந்து கதவை இடியெனத் தட்டியவன், "இப்போ நீ கதவைத் திறக்கலன்னா நான் உடைத்து விடுவேன்" என்று விக்னேஷ் குரலை உயர்த்தி சொன்னான்.

"கௌசி..." என்று கதவை இடிக்கத் திரும்பியவன் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நின்றுவிட்டான்.

விக்னேஷ் வந்ததில் இருந்து ஒவ்வொன்றும் கௌசியின் காதில் விழுந்து கொண்டுதான் இருந்தது. அழுதுகொண்டே படுத்திருந்தவள் அவன் அப்பாவும் அத்தைகளையும் கேட்கும் கேள்விகளுக்கு நன்றாக சமாளிப்பதைக் கேட்டு, இன்னும் கண்களிலிருந்து கண்ணீர் மணிகளை விட்டாள். ஜீவாவும் மதியும் வந்ததும் நன்றாகவே உணர்ந்தாள்.

விக்னேஷ் வந்து கதவைத் தட்ட அவளுக்குத் திறக்கவே தோன்றவில்லை. தன் பெட்டில் படுத்திருந்தவள், அவன் கதவைத் தட்டி தன் பெயர் சொல்லிக் கூப்பிடவும், தன் தலையணையில் புதைந்தபடி கண்ணீர் விட்டாள். அவன் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டவும் அவளுக்குக் கதவைத் திறக்கத் தோன்றினாலும்... அவன் முகத்தை எதிர்கொள்ள முடியாது என்பதால் எழுந்து உட்கார்ந்து அப்படியே தன் அறைக் கதவை வெறித்தாள். இறுதியில் அவன் கதவை உடைப்பேன் என்று மிரட்டவே, 'செய்தாலும் செய்துவிடுவான்' என்று கதவின் லாக்கை மட்டும் திறந்து தன் கட்டிலில் போய் அமர்ந்துவிட்டாள் கௌசிகா.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த விக்னேஷ் கதவை இழுத்து சாத்தி மூடி லாக் செய்தான். "எதுக்குடி எந்திருச்சு வந்தே?" என்று அழுத்தமானக் கேள்வியோடு கௌசியின் பக்கத்தில் சென்று நின்றான்.

அமைதியாக கண்ணீர் சிந்தியபடியே எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தாள் கௌசிகா. என்ன சொல்லுவது என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தவளைக் கண்டு எரிச்சலுற்றவன், "இங்கே பார்" என்றான்.

தலையைக் குனிந்தபடியே உட்கார்ந்திருந்தவளின் கன்னத்தை அழுத்தமாகப் பற்றித் தூக்கியவன், "உனக்கு இப்போ என்ன பிரச்சனை, கௌசி சொல்லு?" எனக் கேட்டான்.

அவனைக் கட்டிப்பிடித்து நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் என்று சொல்லக் கதறிய மனதை அடக்கியவளின் கண்களில் மனதின் வலி தாளாமல் கண்ணீர் வந்தது. கன்னங்களில் வழிந்த கண்ணீர் கௌசியைப் பற்றியிருந்த விக்னேஷின் கையில் விழ, விக்னேஷின் கைகள் தானாகக் அவளின் கண்ணீரை சுண்டிவிட்டது. அவள் அழுதே பார்க்காதவன் இன்று அவள் இப்படி கண்ணீர் விடுவதைப் பார்க்க அவனின் மனம் ஏனோ சோர்ந்தது உண்மைதான்.

அவள் அருகில் உட்கார்ந்த விக்னேஷ் அவளின் கண்களை அழுத்தித் துடைத்தான். அவளின் கைகளைப் பற்றி, "என்னாச்சு கௌசி... ஏன் அழறே?" என்று கேட்டான் அவளின் கைகளை பற்றியபடி. ஏனோ அவன் நான்சியின் கையைப் பற்றியது நினைவு வர கௌசி அவன் கைகளில் இருந்து தன் கையைத் தானாக விடுவித்தாள்.

"ஏன் விக்கா... என்கிட்ட மறச்ச?" என்று தன் மனதில் எழுந்த முதல் கேள்வியைக் கேட்டாள்.

பதில் பேசாமல் இருந்தவனிடம், "நான் ஸ்கூல்ல பண்ணின மாதிரி ஏதாவது பண்ணி உங்களை பிரிச்சிடுவேன்னு நினைச்சயா?” என்று தன் மனதில் நினைத்ததை விக்னேஷின் முகத்தைப் பார்த்து நீர் தேங்கிய விழிகளுடன் கேட்க, அவனின் முகம் கறுத்துவிட்டது.

"சொல்லு விக்கா... அதை நினைச்சுத்தானே என்கிட்ட மறச்ச?" என்று அவன் தோளைப் பிடித்து இழுத்துக் கேட்க, விக்னேஷ் அவளையே பார்த்தபடி பதில் பேசமுடியாமல் இருந்தான்.

"கௌசி ப்ளீஸ் அழறத பர்ஸ்ட் நிறுத்து..." என்று கண்களை இறுக மூடிச் சொல்ல கௌசி எழுந்தாள்.

"அவ்வளவு கேவலமாக எல்லாம் நான் நடந்துக்க மாட்டேன் விக்கா" என்று எங்கோ பார்த்துச் சொல்ல விக்னேஷும் எழுந்தான்.

"ஆமாம் கௌசி... உன்கிட்ட மறச்சேன்தான். அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கு... பர்ஸ்ட், நீ என் மேல ரொம்ப பொசஸிவ், நீ ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் அதான் உண்மை கௌசி. இரண்டாவது நான்சி வெளியில தெரிய வேண்டாம் என்றாள். அவள் வீட்டில் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று" விக்னேஷ் பேசிக்கொண்டிருக்க, கௌசிகா இடையில் புகுந்தாள்.

"இன்று, நீ அவ வீட்டுக்க போறதுக்கு மட்டும் சம்மதித்து விட்டாளாக்கும்" என்று வெடுக்கெனக் கேட்டாள். அவளின் மனதில் நான்சியின் மேல் இருந்த வெறுப்பை அப்படியே வெளியே காட்டினாள் தன்னையும் மீறி.

"கௌசி..." என்று விக்னேஷ் அதட்ட, "என்னிடம் எவ்வளவு பொய். இப்போது கூட என்னிடம் சண்டைக்கு நிற்கிறாய் இல்லை" என்று அழுதாள். அவளிற்காக தன்னை அதட்டுகிறான் என்று அவளிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

"கௌசி, இதே உன்னைப் பற்றி நான்சி தப்பாக நினைத்துச் சொன்னாலும் நான் அவளையும் அதட்டியிருப்பேன்டி... ஆனால் நீ சொன்ன பாரு, உன்னை கேவலமாக நினைச்சுன்னு... அப்படிஒரு நாள் கூட நினைத்தது இல்லைடி. நான் முன்னாடி சொன்ன இரண்டு ரீசன்தான்டி உண்மை" என்றவன் அவளின் தோளைச் சுற்றிப் பிடித்தான்.

"என்னடி உன்னை நான் அப்படி நினைப்பேனா? அவ்வளவுதான் நீ என்னப் பத்தி நினைச்சதா?" என்று கேட்க அப்படியே நின்றாள்.

"அதுவும் இல்லாமல் எனக்கு நான்சியை ரொம்ப பிடிச்சிருக்கு கௌசி. அவளோட ஹோம்லினெஸ், என்னைக் கேர் பண்ற விதம், அடக்கமா அமைதியா இருக்கிறது..." என்று விக்னேஷ் பேசப்பேச கௌசிக்கு மனம் விம்மியது.

அவன் சொன்ன அனைத்து குணங்களும் கௌசிக்கு எதிரானது. ஆனால், அவன் சொன்ன கேர் மட்டும் நான்சியை விட கௌசியிடம் அதிகமாகவே இருந்தது. அதை விக்னேஷ்தான் உணரவில்லை.

‘நான் அப்படி அடக்கமாக இருந்திருந்தா என்னையும் பிடித்திருக்குமா உனக்கு?’ என்று கேட்க எண்ணிய நாவை கட்டுப்படுத்த சிரமப்பட்டாள் கௌசிகா.

"சரி கௌசி, உன் கல்யாணத்தைப் பத்தி மாமாட்ட என்ன சொல்லப்போற?" என்று கேட்டான் விக்னேஷ்.

"எனக்கு கல்யாணம் வேண்டாம் இப்போ" என்றாள் கௌசிகா சுவற்றை வெறித்தபடி.

"ஏன் வேண்டாம், யாரையாவது லவ் பண்றியா?" என்று அவளை கூர்ந்து பார்த்துக் கேட்க, கௌசிகா அவனை முறைத்தாள். ‘உன்கிட்டயே எப்படிடா உன் பெயரை சொல்லுவேன்’ என்று கௌசியின் மனம் ஊமையாய் அழுதது.

தன் மனதில் இருந்ததை மறைத்தவள், "அப்படி இருந்திருந்தா உன்னைப்போல மறைத்திருக்க மாட்டேன்" என்று முறைத்தபடியே கௌசிகா சொல்ல விக்னேஷ் சிரித்தான்.

"என்ன குத்திக் காட்டுறியா? சரி, உனக்கு எப்போது எல்லாம் தோனுதோ பண்ணு, நான் எதுவும் சொல்லலை..." என்றவன், "கல்யாணம் ஏன் வேண்டாம்னு சொல்ற, அதைச் சொல்லு?" எனக் கேட்டான்.

"எ... என... எனக்கு" என்று யோசித்தவள், "எனக்கு அப்பாவை விட்டுப்போக மனசில்லை" என்றாள். சொன்னவளால் அழுகையை அடக்க முடியவில்லை. மூச்சை இழுத்து இழுத்து அழுதாள்.

"கௌசி என்னடி இது சின்னக் குழந்தை மாதிரி அழுதிட்டு. அதுவும் கௌசிக்கு அழுகத் தெரியும்னு இன்னிக்குதான் எனக்குத் தெரியுது" என்று அவள் நிலைமையை அறியாமல் அவளை சிரிக்க வைக்க எண்ணி நக்கல் செய்தவன்,
"இங்க பாரு கௌசி... நான் சொல்றதைக் கேளு... பையன் சென்னைதான். எனக்குத் தெரிந்தவனும் கூட... என்கூட ஸ்கூல்ல +1, +2 படிச்சான், நல்ல பையன்தான். நீயும் யாரையும் லவ் பண்ணலன்னு சொல்ற... நீ மட்டும் ஓகே சொன்னா எவ்வளவு சந்தோஷப்படுவோம் தெரியுமா?" என்று நீளமாகப் பேசினான்.

அவன் பேசபேச கௌசிக்கு தான் ஏதோ உள்ளே குத்திக் காயப்படுத்துவது போல இருந்தது. அவனே இன்னொருவனை கல்யாணம் செய்துகொள் என்று கட்டாயப்படுத்துவது அவளை ஏதோ நரகத்தில் தள்ளுவதுபோல இருந்தது.

"உனக்குப் பையனைப் பார்க்க வேண்டுமா? அப்படி இருந்தாலும் சொல்லு நான் அரேன்ஜ் பண்றேன்" என்று விக்னேஷ் சொல்ல, வேண்டாமென அவசரமாகத் தலை ஆட்டினாள் கௌசிகா.

"அப்போ உனக்கு ஓகேவா?" என்று விக்னேஷ் கேட்க, அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தவளின் முகத்தில் அத்தனை பயம், பதட்டம், வேதனையும்...

கௌசிக்கு ஏதோ தன்னை எல்லோரும் அடைத்தது போல இருந்தது. அப்பாவின் நம்பிக்கையும் பாசமும் ஒரு பக்கம். விக்னேஷைக் காதலிக்காமல் இருந்திருந்தாலாவது அவனிடம் சொல்லியிருக்கலாம். இவனுடன் வாழ்க்கை முழுதும் சண்டைபோட்டு வாழ நினைத்தவளை, அவனே இன்னொருவனை மணக்கச் சொல்லிக் கேட்பது ஏதோ உயிரையே பறிப்பதுபோல இருந்தது.

"ஏன்டி பதட்டப்படறே? ஒன்னும் இல்லை... தலையை மட்டும் ஆட்டு போதும் என்று" அவளின் கையைப் பிடிக்க வேண்டியவன், இன்னொருவனின் கையைப் பிடிக்க தைரியம் சொல்லிக்கொண்டு இருந்தான்.

ஏனோ தனக்கு விருப்பம் என்று சொல்ல கௌசிக்கு வாய் வரவில்லை. "உங்க எல்லாருக்கும் சம்மதம்னா... உங்க விருப்பப்படியே எல்லாம் நடக்கட்டும்" என்று அவள் மனதை பாறையாக வைத்துச் சொல்ல, விக்னேஷ் அவளை வெளியே அழைத்துச் சென்றான். வெளியே வர அனைவரும் இருவருக்காகவே காத்திருந்தனர்.

"மாமா, கௌசிக்கு கல்யாணத்தில் சம்மதம். உங்களை பிரிந்து போகணும்னுதான் இவ்ளோ அழுகை" என்று விக்னேஷ் சொல்ல எல்லோரும் கௌசியைக் கவனித்தனர்.

அழுது சிவந்திருந்த கண்களைப் பார்த்த வரதராஜன், "கௌசிமா. மாப்பிள்ளை சென்னைதான். இதுக்கா இப்படி அழுதாய்? நான் என்னவோ ஏதோ என்று பயந்துட்டேன்" என்று கௌசியின் அருகில் வந்தவர், அவளின் கண்களில் இருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

கௌசி சம்மதம் சொன்னவுடன் மாப்பிள்ளை வீட்டிற்கு ஃபோன் செய்து சொன்னவர் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார். சின்னப் பையன் போல நடந்து கொண்டிருந்தவரைப் பார்க்க அனைவருக்கும் வியப்பாக இருந்தது. தன் கல்யாணத்தில் இவ்வளவு சந்தோஷமா இவருக்கு என்று யோசித்த கௌசி... அதுதான் அந்த ஆண்டவன் என் சந்தோஷத்தையும் இவருக்கே கொடுத்திட்டான் போல விரக்திப் புன்னகை சிந்தினாள்.

எல்லோரும் இரவு அங்கேயே சாப்பிட முடிவு செய்ய கௌசியின் அத்தையின் கணவர்களும் சந்தியா என அனைவரும் வந்தனர். எல்லோரும் சாப்பிட்டு விட்டுக் கிளம்ப கௌசியின் அருகில் வந்த மதி, "உண்மையாகவே உனக்கு இதில் சம்மதமா கௌசி?" என்று கௌசியிடம் கேட்டாள் மதி.

"ம்ம்..." கௌசிகா வெறுமனே தலையை ஆட்டினாள்.

"வாயைத் திறந்து பேசாமல் இருப்பவளா நீ?" என்று நேராகப் பார்த்து மதி கேட்க, கௌசி தடுமாறினாள். யாருக்கு உண்மை தெரிந்தாலும் பிரச்சினைதானே.

"எனக்கு இன்னும் கல்யாணம்னு மைண்ட் செட் ஆகலை... அதான் திடீரென இப்படி இருக்கு மதி" என்று சமாளித்தாள் கௌசிகா.

"சரி வரேன் கௌசி... குட் நைட்" என்று சொல்ல அனைவரும் கிளம்பினர்.

விக்னேஷும் பயங்கர குஷியாக கிளம்புவதை இயலாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் எல்லோரும் சென்றபின் தன் அறைக்குள் புகுந்தாள்.
நள்ளிரவு வரை ஜன்னலின் வெளியவே வெறித்துக் கொண்டிருந்தாள். பிறகு திரும்பிப் படுக்க வந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு, அவளுடைய டேபிளில் இருந்த டைரி கண்ணில் பட்டது. எடுத்து வந்து உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தவள் பாதியில் நிறுத்தி அதைக் நெஞ்சோடு சேர்த்து வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

மீண்டும் டைரியைப் பிரித்தவள், தன் மனதில் தோன்றிய ஒன்றை எழுத ஆரம்பித்தாள்.

‘பிடிக்கவில்லை
என்று உதிர்த்த வார்த்தையைத்
தாங்கியிருப்பேனோ?
அதைவிட உன் காதலியோடு
பார்க்கும்போது உயிர் நின்றுவிட்டது.
வாழ்க்கையை ரசித்த எனக்கு
இப்போது அவளாகப் பிறந்திருந்தால்?
என்ற ஏக்கம் வதைக்கிறது...
அப்போது உன்னோடு வாழ்ந்திருப்பேனே.
உன்னுடன் கைகோர்க்க
நினைத்தவளுக்கு
நீ அடுத்தவருடன் கைகோர்க்க சொல்வது
நியாயமா?’

என்று எழுதியவள் அதன் மேலேயே சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

சம்மதம் சொன்ன அடுத்த வாரத்திலேயே நிச்சயதார்த்தத்தை வைக்க கௌசிகா கலங்கிப் போனாள். தன் முகத்தை மறைக்க மிகவும் சிரமப்பட்டாள். அப்போதுதான் மாப்பிள்ளை பெயர் என்று அனைத்தையும் தெரியவந்தது கௌசிகாவிற்கு.

மாப்பிள்ளை பெயர் குரு. தன் அப்பாவின் தொழிலைப் பார்ப்பவன். அப்பா, அம்மா, குரு, அக்கா என்ற குடும்பம். குருவின் அக்கா வினித்ராவிற்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. பெரிய இடம் என்பதால் நிச்சியதார்த்தத்தையே தடபுடலாக நடத்தினர். தன் தந்தையை நினைத்த கௌசிக்குத் தான் கலக்கமாக இருந்தது. இவர் எப்படி செலவுகளைத் தாங்கப் போகிறார் என்று.

குரு நிச்சயத்தின்போது பேச, ஓரிரு வார்த்தை பதில் பேசினாளே தவிர எதுவும் தானாகப் பேசவில்லை. விக்னேஷையே கண்கள் கட்டுப்படுத்த முடியாமல் தேடின. எப்போது இது முடியும் என்று இருந்தவள் எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவர்கள் போட்ட நகை என்று ஒவ்வொன்றையும் கழற்றி வைத்தவளுக்கு அப்போது தான் மூச்சு வந்தது. ஏனோ ஒன்றுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. ட்ரெஸிங் டேபிள் முன்னால் உட்கார்ந்து தன்னையே வெறுத்த பார்வையில் நோக்கிக் கொண்டு இருந்தாள் கௌசிகா.

காற்று வீசும் போது நகரும் மேகங்களைப்போல நாட்கள் நகர்ந்து கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில்தான் கௌசி எது நடக்கக்கூடாது என்று எண்ணினாளோ அதுவும் நடந்தது.
 
  • Like
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-11

நிச்சயம் முடிந்த ஒருவாரத்தில் கௌசிகா, தன் தந்தையிடம் பேசினாள். "அப்பா உண்மையாவேதான் சொல்றேன்" என்றாள் கௌசி.

"இல்லைமா, நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்" என்றார் வரதராஜன் பிடிவாதமானக் குரலில்.

"ஏன் அப்பா, நிச்சயம் ஆன உடனே, நான் அடுத்தவள் என்ற நினைப்பு வந்துருச்சா?" என்று வாடிய முகத்துடன் கௌசிகா கேட்க வரதராஜன் பதறினார்.

"என்ன பாப்பா நீ? உன் கல்யாணத்துக்கு உன்கிட்டையே பணமா... முடியாது" என்றார்.

"அப்பா, நான் சம்பாதித்து சேர்த்தது தானே. வச்சுக்கங்கப்பா... நீங்க நம்ம இடத்தை எல்லாம் விக்க வேண்டாம்" என்று அவரின் கையை ஆறுதலாகப் பற்றி சொல்ல,

"உனக்கு எப்படித் தெரியும் பாப்பா?" என்று வரதராஜன் கேட்க,

"அன்னிக்கு நான் வரும்போது நீங்க பேசுனது என் காதுல விழுந்துச்சு அப்பா" என்றாள் கௌசிகா.

"அப்பா... என் மேல உண்மையாவே பாசம் இருந்தா இதை எடுத்துக்கங்க. இல்லைன்னா வேண்டாம்" என்று மூன்று லட்சத்தை டேபிளில் வேகமாக வைத்தவள் எழுந்து சமையல் அறைக்குள் புகுந்துவிட்டாள்.

மகளின் பிடிவாதத்தை அறிந்தவர் அரைமனதுடனே அதை எடுத்தார். கௌசி வேலைக்குச் செல்வதை மாப்பிள்ளை வீட்டார் விரும்பவில்லை.கல்யாணத்திற்கு ஒருவாரம் முன் குருவின் தந்தை தேவராஜின் அழைப்பு வந்தது.

"எங்க வீட்டு மருமகள் வேலைக்கு செல்வதா? அப்படியே வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லைனாலும் குருவோடு போய் பிசுனஸைப் பார்க்கட்டும்" என்று ஃபோன் பண்ணி சொன்னார் குருவின் தந்தை தேவராஜன்.

வரதராஜன்தான், தன்மகளின் புகுந்த வீட்டை நினைத்துப் பெருமை கொண்டார். 'பெண் அடுத்த இடத்தில் வேலைக்குப் போக வேண்டாம். வேண்டுமென்றால் மகனுடனே ஆபிஸிற்குச் செல்லட்டும்' என்று எத்தனை வீட்டில் சொல்லுவார்கள் என்று நினைத்தவரின் மனம் நிறைந்தது.

தேவராஜ் சொன்னதை வரதராஜன் கௌசியிடம் எடுத்துச் சொல்ல, "சரிப்பா" என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டாள் கௌசி. கௌசி வாதம் செய்வாள் என்று எண்ணியவருக்கு ஆச்சரியமே.

“என்னடி எதுக்கு எடுத்தாலும் ஏதாச்சும் பேசுவ? இப்போ ஒரே வார்த்தையில சரின்னு சொல்லிட்ட" என்று முகவாயில் கை வைத்துக் கேட்டார் ஜெயா.

அதற்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு கௌசிகா நகர்ந்து விட்டாள். அவளே இதை எதிர்பார்த்ததுதான். எப்படியும் இவ்வளவு வசதியாக இருப்பவர்கள் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள் என்று அவள் நினைத்ததுதான்.
அதுவும் இல்லாமல் கௌசியால் வேலையில் முழுமையாக மூழ்க முடியவில்லை. மனம் விக்னேஷை நினைத்தபடியே இருந்தது. "ச்சீ... இது தப்பு கௌசி. இன்னொருவனுக்கு நீ நிச்சயம் ஆனவள். விக்னேஷை நினைக்காதே" என்று மூளை எச்சரிக்க,

"இவனை எப்படி நினைக்காமல் இருப்பது. குழந்தையின் கையில் உள்ள பொம்மையைப் பிடுங்கியதுபோல இருக்கிறதே" என்று மனம் கிடந்து அடித்தது.
மேலும் நிச்சயம் ஆனதில் இருந்து ஜீவா, மதி, விக்னேஷ் மூவரும் அவளை வெளியே கூப்பிடுவதே இல்லை. அதற்கு அவர்களே ஒரு காரணம் கற்பித்தனர்.

"கௌசிக்கு நிச்சயம் ஆயிருச்சு... எப்படியும் குருகிட்ட பேசிட்டு இருப்பா, அவளும் கொஞ்சம் அவனைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும்" என்று ஜீவா அனைவரும் கூடியிருந்த போது தன் அன்னையிடம் சொன்னான்.

விக்னேஷும் எப்போதாவது கௌசிக்கு கூப்பிடுவான். அதுவும் பக்கத்தில் நான்சியை வைத்துக்கொண்டு. அவன் கேட்பதற்கு மட்டும் பதிலை சொல்லிவிட்டு வைத்து விடுவாள்.

நிச்சயம் ஆன ஒன்றரை மாதத்தில் இருந்து கௌசியின் வழக்கம் இதுவே. காலையில் வேலைக்கு செல்வது, மாலை வந்து தன்னுடைய அறையை சாத்திக்கொண்டு படுக்கையில் கிடந்து எதையாவது வெறித்துக் கொண்டிருப்பது. இல்லையென்றால் ப்ரௌனியுடன் இருந்து, எங்கோ பார்வையைப் பதித்தபடி அதை நீவிக் கொண்டு இருப்பாள். இப்போது வேலை வேண்டாம் என்று சொல்லவே அதற்கும் சரியென்று விட்டாள்.

பட்டாம்பூச்சியாய் மூவருடன் சுற்றித் திரிந்தவளுக்கு அவர்களைப் பார்க்க முடியாமல் மனம் அழுதது.

"பாரு ஜெயா... எம் பொண்ணுக்கு பொறுப்பு நல்லாவே வந்திருச்சு... பாப்பா எப்படி மாறிட்டா பாரு?" என்று அவர் பெருமையாகப் பேசிக்கொண்டு இருக்க, ஜெயாவிற்கு தான் உள்ளுக்குள் ஏதோ நெருடலாய் இருந்தது. ஏனோ கல்யாணப் பெண்ணிற்கு உண்டான கலை கௌசியிடம் இல்லாததைக் கவனித்தார் ஜெயா.
கேட்கலாமா என்று நினைத்தவர், ‘சரி, பிறந்த வீட்டை விட்டுப் போகும் கவலையாக இருக்கும்’ என்று நினைத்து அவளிடம் அப்புறம் இதைப் பற்றிப் பேசுவோம் என்று விட்டு விட்டார்.

கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்பே எல்லோரும் கௌசியின் வீட்டில் தங்க ஆரம்பித்திருந்தனர். அப்போதும் கௌசி அறையிலேயே கிடந்தாள். யாரிடமும் எதுவும் பேசாமல் அறைக்குள்ளேயே நத்தையாய் சுருங்கினாள்.

திருமண நாளை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்க கௌசிகாவிற்கு, ‘ஏதாவது நடந்து கல்யாணம் தானாக நின்று விடாதா’ என்று இருந்தது. காரணம் குருவுடன் மனம் ஒன்றி வாழவே முடியாது என்று கௌசிகாவிற்கு நன்கு தெரிந்தது.

"அம்மா..." என்று கல்யாணத்திற்கு வாங்கி வைத்த சீர்களை பார்த்துக் கொண்டிருந்த ஜெயாவைக் கூப்பிட்டாள் சந்தியா.

"என்னடி..." என்று கேட்டவரிடம், "கல்யாண ப்ளவுஸ் மதி அண்ணி குடுத்துவிட்டாங்க... ஆனா, கௌசி எங்க? அவளக் காணோம்" என்று கேட்டாள் சந்தியா.

"ஏன்டி, நான் என்ன மடியிலா வச்சிருக்கேன்? இங்க தான் இருப்பா... போயிப்பாரு..." என்று வேலையில் மூழ்கியிருந்தவர் எரிச்சல் பட,

"அம்மா, நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு, நான் போய் செமஸ்டருக்கு படிக்கிறேன்... நீங்க குடுத்திடுங்க" என்று அவள் பறந்துவிட்டாள்.

கௌசியைத் தேடி கௌசியின் அறைக்குச் சென்ற ஜெயா, அவள் அங்கு இல்லாது போகவே அந்த ப்ளவுஸை கௌசியின் பெட்டில் வைத்துவிட்டுத் திரும்பியவர் அப்படியே நின்றார்.

யாரோ விசும்பும் சத்தம் கேட்டவர், அது பாத்ரூமிலிருந்து வர கௌசிதான் அழுவது என்று கண்டுபிடித்தார்.

எதற்காகவும் இல்லை, அந்த நான்சியால் தான்... கௌசிக்கு போன் செய்தவள், "ஹாய் கௌசி. நான்தான் நான்சி பேசறேன்... எப்படி இருக்க? எப்படியும் கல்யாணப் பொண்ணு ஜாலியாதான் இருப்ப" என்று நான்சி சிரிக்க, கௌசி கண்களை எரிச்சலும் கோபமுமாக இறுக மூடித் திறந்தாள்.

"சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடறேன் கௌசிகா... இன்னிக்கு விக்னேஷ், என் வீட்டுக்கு வந்திருந்தார், இப்போதான் கிளம்பினார். ரொம்ப டயர்டா இருக்க மாதிரி தெரியறார், கொஞ்சம் பாத்துக்கங்க" என்று அவள் அக்கறையைக் காட்ட அவள் பேச்சு, கௌசிக்கு நெஞ்சுவரை கசந்தது. விக்காவிற்கு அவள் வீட்டில் என்ன வேலை என்று நினைக்கவே கண்கள் கரிக்க ஆரம்பித்தது கௌசிக்கு.

"கௌசி லைன்ல இருக்கியா?" என்று கேட்க, "ம்ம்" என்று மட்டும் பதில் அளித்தாள் கௌசி.

"எல்லா வேலைகளையும் நல்லா கத்துக்கோ, யாருகிட்டயாச்சும் கேட்டு... இன்னும் மேரேஜூக்கு ஒருவாரம் தான் இருக்கு. உனக்கு அம்மா இருந்திருந்தா இது எல்லாம் சொல்லிக் குடுத்திருப்பார்கள். அவங்க தான்" என்று அவள் பேசபேச கௌசிகா கட் செய்து விட்டாள்.

அவள் தெரிந்து பேசுகிறாளா இல்லை தெரியாமல் பேசுகிறாளா என்று கௌசிக்குப் புரியவில்லை. ஆனால், அவள் பேச்சு கௌசியை ரொம்பவுமே பாதித்து விட்டது. பாத்ரூமிற்குள் சென்றும் அழுகை அடங்கவில்லை கௌசிக்கு. இன்னும் ஒருவாரம் என்று சொன்னதே காதில் ஒலித்தது.

கௌசிக்கு, தன் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயமாக இருந்தது. அழுது முடித்தவள் தன் டிசர்ட்டால் கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே வர, தன் மூத்த அத்தை ஜெயா பெட்டில் தன்டைரியுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு பேயறைந்தாற் போல நின்றுவிட்டாள். அவள் அந்த டைரியைப் படித்துக் கொண்டு இருந்தபோது தான் நான்சி கூப்பிட்டது. அவள் பேசிய பேச்சில் மறந்து பெட்டின் மீதே வைத்து விட்டுச் சென்றிருந்தாள்.

"அ... த்... தை" என்று நடுங்கிய குரலுடன் பக்கத்தில் போக, ஜெயா அவளைக் கேள்வியாய் பார்த்தார்.

"யாருடி அந்தப் பையன்?" ஜெயா ஆதங்கமானக் குரலில்.

"..." கையைப் பிசைந்து கொண்டே பதில் பேசாமல் நின்றாள் கௌசி.

எழுந்து அறையின் கதவை சாத்தி, தாழிட்டு விட்டு வந்தவர் தன் அண்ணன் மகளை அருகில் இழுத்து, "சொல்லுடி என்னத்த மனசுல வச்சிட்டு இப்படித் திரியற?" என்று கேட்ட அவரின் குரலே கரகரத்தது.

அத்தையின் குரலில் நிமிர்ந்தவள் அவரின் கண்களில் கண்ணீர் கோட்டைக் கண்டாள். அவ்வளவுதான், தன்னைப் பாசமாய் வளர்த்தவரின் கண்ணில் கண்ணீரைக் கண்ட கௌசியும் அழுதுவிட்டாள்.

"அத்தை..." என்று அவரைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். கௌசியின் கண்ணீர் அவரின் தோளை நனைக்க அவளை விலக்கிப் பார்க்க, கௌசி உடல் தளர்ந்து போனவள் போல குறுகிக்கொண்டு அழ அவளைப் பார்க்கபார்க்க அவருக்கு உள்ளுக்குள் வேதனையானது.

"கௌசி கண்ணு... இங்க பாரு, எதுக்கு அழற தங்கம்... என்னடா ஆச்சு? இந்த டைரியில் இருப்பதற்கும், நீ அழுவதமும் எனக்கு பயமா இருக்குடா... என்னன்னு சொன்னாத்தானே தெரியும்" என்று அவளின் கண்களைத் துடைத்து விட்டுக்கேட்டார்.

"அத்தை..." என்று அழுகையில் விக்கினாள்.

"சொல்லு கௌசி... என்ன இதெல்லாம்?" என்று கேட்டவர், அவளை அழைத்துச் சென்று படுக்கையில் உட்காரவைத்து தானும் உடன் அமர்ந்தார்.

சிறிதுநேரம் அழுதவள், "நான் ஒருத்தன லவ் பண்ணேன் அத்தை, ரொம்ப நாளாவே... ஆனா, அது அவருக்குத் தெரியாது. அப்பா கல்யாணத்தைப் பத்தி பேசுனாரு, அப்போ சொல்லலாம்னு நினைச்சப்பதான், அவன் இன்னொரு பொண்ணும் லவ் பண்ணிட்டு இருக்கிறது தெரிஞ்சுது. அப்பாக்காக மட்டும்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் அத்தை. ஆனா... ஆனா... என்னால அவனை மறக்க முடியல அத்தை" என்று அவர் மடியில் விழுந்து கதறினாள்.

அவள் அழுதே பார்க்காத ஜெயா, கௌசி அழுவதை, அதுவும் ஒருவன்மேல் காதல் கொண்டு அழுவதைக் காண அவளுக்காக அவர் மனம் அடித்தது.
"கௌசி எந்திரி..." என்று அவளை எழுப்பியவர், "இங்க பாரு கௌசி... நான் கேட்பதற்கு பதில் சொல்லு! இங்க பாரு என்னப் பாரு, நீ அவன காதலிச்சுட்ட... ஆனா, அவன் இன்னொருத்தி பின்னாடி போயிட்டான், விடு... அதுக்காக நீ இந்த கல்யாணத்தில் விளையாடணுமா?" என்று கேட்டு அவளை அதிர வைத்தார்.

அத்தை என்று ஏதோ சொல்ல வந்தவளை தடுத்து தன் பேச்சைத் தொடர்ந்தார் ஜெயா. "இங்க பாரு, இஷ்டமில்லாம நீ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இப்படிக் கஷ்டப்படற. இன்னும் கல்யாணத்துக்கு அப்புறம் நீ இதை விட அனுபவிப்ப... அந்தப் பையன் குருவோட உன்னால வாழ முடியுமா? நீ வேணும்னா சொல்லு நான் அண்ணன்கிட்ட பேசுறேன்" என்று அவர் சொல்ல கௌசி மறுப்பாகத் தலையசைத்தாள்.

அவரின் கையைப் பிடித்து யாசிப்பது போல வைத்தவள், "அத்தை... அப்பா என்னாலதான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்காரு அத்தை. நீங்களே பாக்குறீங்களே, இப்போ எப்படி துள்ளித் திரிஞ்சிட்டு இருக்காருன்னு... அம்மா இல்லாம இவ்ளோநாள் கஷ்டப்பட்டு வளத்துட்டாரு அத்தை. என்னால எதுவுமே அவருக்கு பண்ண முடியல... இதையாவது நான் அவருக்காக பண்றேன். அப்பாக்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க அத்தை" என்று அவரின் கைகளின் மேலேயே நெற்றியைச் சாய்த்து அழுதாள்.

"அதுக்காக... நீ பிடிக்காம அங்க எப்படிடி போய் இருப்பே?" என்று கேட்ட ஜெயாவின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

"நான் நினைச்சதுதான் நடக்கல. அவரு நினைச்சதாவது நடக்கட்டும்" என்று கௌசி முடிக்க, ஜெயாவிற்கு மனசு இன்னும் கேட்கவில்லை.

"அத்தை என் மேல சத்தியமா யாருகிட்டையும் சொல்லக் கூடாது" என்று ஜெயாவின் கையை எடுத்து, தன் தலையில் வைத்துக் கேட்டாள்.

"ஏய்ய்! என்ன கௌசி இது? கையை விடு" என்று அவர் உருவப் பார்க்க கௌசி, அவரின் கையை உடும்பாகப் பற்றி இருந்தாள்.

"இல்ல அத்தை... என் மேல சத்தியம் பண்ணுங்க" என்று பிடிவாதமாகக் கேட்க, "சரிடி, சரி... உன் மேல சத்தியமா யாருக்கும் சொல்ல மாட்டேன் சரியா... கையை விடு" என்று கையை உருவிக் கொண்டவர் அழுதேவிட்டார்.

சின்ன வயதில் இருந்து தான் தூக்கி வளர்த்தவள், விளையாட்டுத்தனமாக சுற்றி வந்தவள் இன்று இவ்வளவு இப்படிப் பேசுவது அவருக்கு கண்களைக் கரித்து விட்டது.

"நீ இவ்வளவு மெச்சூர்ட்டுன்னு நினைக்கல கௌசி" என்று கண்களைத் தன்சேலைத் தலைப்பால் துடைத்தபடி சொன்னார் ஜெயா.

"எனக்கு அப்பா சந்தோஷம்தான் முக்கியம் அத்தை" என்று சொன்னாள் எங்கோ வெறித்தபடி. ஆனால், அவளின் மனதிற்கு மட்டுமே தெரியும் விக்காவின் வார்த்தைக்காக என்றும். அவனை இந்த ஜென்மத்தில் மறப்பதும் ஒன்று மரணிப்பதும் ஒன்று என்பதை அவள் நன்றாக உணர்ந்தாள்.

வெளியே சென்று வந்த வரதராஜனின் குரல் கேட்க கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்த ஜெயா, கௌசியின் தலையை வருடி, "உனக்கு எல்லாமே நல்லதா அமையும்டி" என்று அவளின் கன்னத்தைப் பிடித்து கண்களைத் துடைத்து விட்டார்.

"முகத்தைக் கழுவிட்டு வா... போய் சாப்பிடலாம்" என்றுவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார்.

அத்தை கூறியதை செய்துவிட்டு வெளியே வர விக்னேஷ், ஜீவா, மதி என மூவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகையை வரவழைத்தவள், விக்னேஷைக் காண முடியாது ஜெயா அத்தையை நாடிச் சென்றாள். மதிதான் கௌசியின் கருவளையத்தையும் ஓய்ந்த தோற்றத்தையும் கவனித்தாள். ஆனால் விக்னேஷும் ஜீவாவும் அதற்கு வேறு மாதிரி காரணத்தைக் கற்பித்தனர்.

"என்னடி உன் ஆள்கூட செம கடலையா டே அண்ட் நைட் ஃபுல்லா... கண் எல்லாம் சிவந்து டார்க் சர்கில்ஸ் வந்திருக்கு..." என்று வம்பிழுத்தபடி விக்னேஷ் சென்று அவளின் தோளைச் சுற்றி கை போட்டு நின்று கேட்க, எப்போது அவன் வம்பிழுத்தாலும் இனிப்பவளுக்கு இன்று வேப்பங்கொழுந்தாய் கசந்தது.
அதுவும் இன்னொருவனுடன்... அவளைக் திருமணம் செய்து கொள்ளப்போகிறவன் என்றாலும் அவளால் ஏனோ மனதளவில் அதை ஏற்க முடியவில்லை. ஒரு வெற்றுப் புன்னகையையே பதிலாய் அளித்தவள் தன் அத்தையிடம் சென்று நின்று கொண்டாள் உதவி செய்கிறேன் என்ற பெயரில்.

"பார்ரா... நம்ம கௌசி வேலை எல்லாம் செய்யறா! கல்யாணத்துக்கு அப்புறம் முழு நேரக் குடும்பத் தலைவி ஆகப்போறா" என்று ஜீவா சிரிக்க விக்னேஷும் ஜீவாவும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

"ஏய்ய்ய், எல்லாரும் ஹால்ல போய் உக்காருங்கடா... சும்ம தொணதொணன்னு" என்று கௌசியின் நிலையை அறிந்த ஜெயா எரிச்சலைக் காட்டினார் மகன்களிடம்.

"ஏன் பெரியம்மா... அடுப்புல இருந்து இறக்குன குக்கர் மாதிரி இருக்கீங்க? சரி விடுங்க, ஏய் நீ வா... உன்கிட்ட பேசி எவ்வளவு நாள் ஆச்சு?" என்று கௌசியின் கையைப் பிடித்திழுக்க, அவன் கையிலிருந்து தன் கையை கௌசி உருவிக் கொண்டாள்.

"நான் வரலை... வேலை இருக்கு" என்று முதுகைக் காண்பித்து திரும்பிக் கொண்டாள்.

"அவதான் வேலை இருக்குன்னு சொல்றால்ல... அவ வருவா, நீங்க மூனுபேரும் போய் உட்காருங்க" என்று ஜெயா சிடுசிடுத்தார்.

விக்னேஷிற்கு முதல்முதலாய் கௌசி இப்படி விலகி நின்றது என்னவோ செய்தது. ஆனால், அது என்ன உணர்வு என்று அவன் அறிய முற்படவில்லை. கோபம் கொண்டவனாய் வந்து ஹாலில் அமர்ந்து கொண்டான். அவன் பக்கத்தில் வந்து எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தனர் ஜீவாவும் மதியும். மதிக்கு ஏதோ நெருடலாக இருந்தது. கணவனிடம் தன் எண்ணத்தைச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளவும் அவள் தயாராக இல்லை. அவரவர் சிந்தனையிலேயே மூவரும் அமர்ந்திருந்தனர்.

உள்ளே கௌசி தன் அத்தையின் தோளில் நின்றபடி சாய்ந்து கண்ணீரை உதிர்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்ணீரை உணர்ந்தவர் விரலை வைத்து பேசாதே என்று எச்சரித்தார். கண்களைத் துடைத்து விட்டவருக்கும் கண்ணீர் வழிந்தது.

அதற்குள் மாடிக்கு சென்றுவிட்டு கீழே வந்த வரதராஜன் விக்னேஷ், ஜீவா, மதி மூவரையும் வரவேற்று விட்டு சமையல் அறைக்குள் நுழைய அதற்குள் கௌசியும் ஜெயாவும் கண்ணீரின் சுவடில்லாமல் நின்றனர்.

"என்னமா... சாப்பாடு ஆச்சா? பாருங்க அவங்களும் வந்துட்டாங்க... ஆச்சுன்னா எடுத்து வைங்க" என்று வரதராஜன் சொல்ல உணவை எடுத்து பரிமாறினர்.

"நீயும் உட்காரு கௌசி..." என்று ஜெயா சொல்ல, விக்னேஷின் அருகில் மட்டும் இருந்த இடத்தில் உட்கார்ந்தாள் கௌசி. விக்னேஷ் இறுகிய முகத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டானே தவிர மறந்தும் கௌசியின் பக்கம் திரும்பவில்லை. அவன் கோபமாக இருக்கிறான் என்று அவளுக்கு நன்கு புரிந்தது.

சாப்பிட்டுவிட்டு எழுந்தவனுடன் தானும் அரை சாப்பாட்டிலேயே எழுந்து வந்து கையை கழுவினாள். வெளியே வந்தவனிடம், "விக்னேஷ்" என்று அழைத்தாள்.

"என்ன சொன்ன?" என்று திரும்பியவன் முறைப்பாக அவளிடம் கேட்டான்.
"விக்னேஷ்ன்னு..." என்றாள் கௌசிகா.

"ஓ... விக்கா இப்போ விக்னேஷ் ஆயிட்டேன்ல" என்று நக்கலும் கோபமுமாகக் கேட்டவன், "புதுசா உனக்கு ஆள் வந்துட்டானே, எங்கள எல்லாம் தேர்ட் பெர்சன் ஆக்கிட்டயாக்கும்" என்று கேட்டான்.

"ப்ளீஸ் டா... இப்படி எல்லாம் பேசாத, இப்போ எதுக்கு இந்தக் கோபம்?" என்று கேட்டவளுக்கு ‘கண்ணீர் நான் வரவா’ என்று கேட்க அதை அடக்கி உள்ளே வைத்தாள்.

"இல்லடி... நான் என் லிமிட்லயே இருந்துக்கறேன். உனக்கு, நான் கையப் பிடிச்சா கூடப் பிடிக்கல விடு... உனக்கும் நிச்சயம் ஆயிருச்சு. ஸோ, அதுதான் கரெக்ட். இனிமேலும் பழைய மாதிரி இருந்தா, குரு என்ன நினைப்பான்? அவன் இடத்தில் நானே இருந்தாலும் கோபம்தான் வரும்" என்றவன் வாய் போனபோக்கில் பேசிக்கொண்டு இருந்தான். ஆனால் கௌசிதான் கண்ணீர் முத்துக்களை உதிர்த்துக் கொண்டு இருந்தாள்.

அவளது கண்ணீரைக் கண்டு கைகளால் அதைத் துடைக்கச் சென்றவன், கையை மறுபடியும் கீழே இறக்கினான். "கௌசி, இப்போ என்ன சொல்லிட்டன்னு அழுகற... கண்ணைத் துடை" என்று சொல்ல அவள் அப்படியே நின்றிருந்தாள்.

"சாரிடா... உன்ன ஹர்ட் பண்ணிருந்தா" என்று விசும்பியபடி மறுபடியும் அழுதாள்.

"ஏய்... கண்ணைத் துடைக்கப் போறீயா, இல்லையாடி?" என்று அவன் அடிக்குரலில சீற, அவளின் அழுகை அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நின்றது.

"என்ன கௌசி, இப்போதெல்லாம் எப்போ பார்த்தாலும் அழறே? கல்யாணப் பொண்ணுனா நல்ல கலகலன்னு இருக்க வேணாமா!" என்றவன் கைகளைக் கட்டியபடி நின்றான். அவளின் கண்ணீரைத் துடை என்று அவன் மூளை உந்தியதே அதற்குக் காரணம்.

கண்களைத் துடைத்தவள், "என் மேல கோபமாடா?" என்று விவரிக்க முடியாத சோகக் கண்களுடன் கேட்க, விக்னேஷ் அவளின் பார்வையில் அடிப்பட்டுப் போனான்.

இந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று சத்தியமாக அவனுக்கு புரியவில்லை. ஆனால், அவளின் சோகம் அவனைத் தாக்கியது. அவனைப் பொறுத்தவரை கௌசிகா குருவுடன் நன்றாகப் பேசி பழகி புரிந்துகொண்டு இருக்கிறாள். ஒருவேளை நாம பேசுனதுல இவ இப்படி அழறாளோ என்று பலவாறு யோசித்தான்.

தலையைச் சிலுப்பி சுயநினைவிற்கு வந்தவன், "அதெல்லாம் இல்லடி. உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லத்தான் வந்தோம்" என்று பேச்சின் திசையை மாற்றினான்.

அவன் குட்நியூஸ் என்றதும் கௌசி, என்னவென்று அவனைப் பார்க்க மதி, ஜீவா, வரதராஜன், ஜெயா எல்லோரும் ஹாலிற்கு வந்தனர்.
 
  • Like
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-12

"எனக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு கௌசி... அது விஷயமா கனடா போறோம் நானும் என் டீம் மெம்பர்ஸ் மூன்றுபேரும்" என்றான் விக்னேஷ் குஷியாக.

"சூப்பர்டா, கங்கிராட்ஸ்..." என்றாள் கௌசி உண்மையான மகிழ்ச்சியோடு. இந்த மாதிரி ப்ராஜெக்ட் அவனின் கனவென்பது அவள் நன்கு அறிந்த விஷயமே. அதைப் பற்றி நிறைய நாட்கள் தூங்காமல் உழைத்திருக்கிறான் என்று கௌசிக்குத் தெரியும். அவளுடன் சேர்ந்து வரதராஜனும் ஜெயாவும் வாழ்த்தினர்.

"எப்போப்பா விக்கி கிளம்பனும்?" எனக் கேட்டார் வரதராஜன்.
"நம்ம கௌசி கல்யாணம் முடிஞ்ச அன்றே மதியம் மாமா" என்று விக்னேஷ் சொல்ல, எல்லோருமே வாயைபிளக்க கௌசி மட்டும் அமைதியாய் இருந்தாள்.

"என்ன விக்கி, கல்யாணம் முடிஞ்சு ஒருவாரம் கழித்துப் போனா கிடக்கு" என்று ஜெயா அங்கலாய்த்தார்.

"இல்லை பெரியம்மா... நான் முன்னாடியே போக வேண்டியது. இதோ, இவளின் கல்யாணத்தை முடிச்சிட்டுதான் போகணும்னு டைம் எக்ஸ்டண்ட் பண்ணிருக்கேன்" என்றான் அனைவரையும் பார்த்து.

"என்ன கௌசி, விக்னேஷ் அன்னிக்கே கிளம்பறேன்னு நிக்கறான்... எதுவும் சொல்லாம நிக்கற? சண்டை போட்டு இருக்க வை அவனை" என்று வரதராஜன் கௌசியிடம் சொல்ல, கௌசியோ விக்னேஷிடம் என்ன சொல்லுவது என்று தெரியாமல் அவனைப் பார்த்தாள். அவளால் என்ன சொல்ல முடியும். என் கல்யாணத்தில் இருந்து என்னை வாழ்த்து என்றா?

"மாமா, நானும் புதுசா கம்பெனி சொந்தமா ஸ்டார்ட் பண்ணப்போறேன் கோயம்புத்தூர்ல... கௌசி கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வாரத்துல கிளம்பிருவோம் நானும் மதியும்" என்று ஜீவா சொன்னான்.

"ஆமா அண்ணா. இவனுக்கு ரொம்ப நாள் ஆசை. அதான், நாங்களும் எதுவும் சொல்லலை. கோயம்புத்தூர் என்றால் மதி அம்மா அப்பாவும் இருக்காங்க இல்லையா, நமக்கும் கொஞ்சம் தைரியமாக இருக்கும்" என்றார் ஜெயா.

"ரொம்ப சந்தோஷம் ஜீவா. நல்லா பண்ணு நீயும்... எப்படியோ உங்க எல்லாருக்கும் புடிச்ச மாதிரி வாழ்க்கை அமைஞ்சிருச்சு..." என்று வரதராஜன் சந்தோஷப்பட ஜெயாவின் பார்வையும் கௌசியின் பார்வையும் சந்தித்து மீண்டது.

கௌசிக்கு விக்னேஷ் தன் கல்யாணத்தன்று போறதே சரியாகப்பட்டது. அவளால் அவனை எதிர்கொள்ள முடியாது என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜீவாவும் போகிறேன் என்று சொல்லுவது அவளுக்கு வலித்தது. ஒரே சமயத்தில் இரண்டு பேரையும் பிரியவேண்டுமே என்று மனம் சோர்ந்தது. மதியையும் இனி அவ்வளவாகப் பார்க்க முடியாது என்று எண்ணியவளுக்கு முகம் சுருங்கியது.

"சரி மாமா... நான் கிளம்பறேன்" என்று எழுந்தவன், "பெரியம்மா... அம்மா ஏதோ மண்டபத்துக்குன்னு சொன்னதெல்லாம் வாங்கிட்டாங்களாம். ஏழு மணிக்கு தான் வந்தாங்களாம். நாளைக்கு வரேன்னு சொன்னாங்க" என்ற விக்னேஷ், கௌசி உட்பட அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

"சரி ஜீவா. நம்மளும் கிளம்பலாம். இரு உன் அப்பாவுக்கும் டிபன் எடுத்துட்டு வந்திடறேன்" என்று சமையல் அறைக்குள் புகுந்துவிட்டார்.

ஜீவாவும் வரதராஜனும் ஏதோ பேசியபடி மாடி ஏற, மதி இடுங்கிய கண்களுடன் கௌசியைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். மதியின் பார்வை தன்னைத் துளைப்பதைக் கண்ட கௌசி எழுந்து தன்னறைக்குச் செல்ல மதியும் அவள் பின்னே சென்றாள்.

தன் பின்னே நுழைந்தவளைக் கண்ட கௌசி, "மதி... நீ குடுத்த ப்ளவுஸ் நல்லா இருக்கு. ஸ்டிச்சிங் எல்லாம் பெர்ஃபக்ட்" என்று பேச்சின் திசையை வேறுபக்கம் கொண்டு சொல்ல முயன்றாள் கௌசி.

"சரி கௌசி. இதுல எது ரிசப்ஷன் ப்ளவுஸ், எது முகூர்த்த ப்ளவுஸ்ன்னு சொல்லு" என்று கைகளை மார்பிற்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு கௌசியைப் பார்த்துக் கேட்டாள்.

"அ... அது..." என்று ப்ளவுஸைப் பார்த்தவள் எதுவும் பேசவில்லை. இஷ்டமான கல்யாணமாக இருந்திருந்தால் எல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், எதிலும் நாட்டம் இல்லாமல் திரிபவளுக்கு எதன் மீதும் விருப்பமும் செல்லவில்லை, கவனமும் இல்லை.

"கௌசி... உனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னு நல்லாவே தெரியுது" என்று பட்டென்று சொல்லிவிட்டாள்.

"உன் இளைத்த உடம்பும் கருவளையமுமே சொல்லுது. என்ன கௌசி மறைக்கற நீ...?" மதி.

"ஆமாம் மதி. இஷ்டம் இல்லதான். என்ன பண்ண சொல்ற? எல்லோருக்கும் புடிச்ச மாதிரி வாழ்க்கை அமைஞ்சிடுதா என்ன? அது மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான்" என்றாள் கௌசி இறுகிய முகத்துடன்.

"இது நம்ம விளையாடற பொருள் இல்ல கௌசி... லைஃப் புல்லா ஒருத்தர் கூட ட்ராவல் பண்ணப் போறோம் உனக்குப் புரியுதா, நீ என்னடான்னா இப்படி அசால்ட்டா இருக்க..." என்று கௌசியின் மீது கோபத்தைக் காட்டினாள் மதி.
தன் வாழ்க்கைக்கு அப்படித் தன் தந்தையிடம் பேசியவள் இப்படித் தன் வாழ்க்கைக்கு வாய் மூடிக்கொண்டு இருப்பது அவளுக்கு ஆதங்கமாகவும் கோபமாகவும் இருந்தது.

"எல்லாம் சரியாகிடும், விடு மதி" என்றாள் கௌசி வெற்றுக்குரலில்.

"நீ வேணும்னா சொல்லு... நான் ஜீவாகிட்ட சொல்லி பேசச் சொல்றேன்" என்று மதி சொல்ல கௌசி அதிர்ந்தாள்.

"எனக்கு இந்தக் கல்யாணம் இஷ்டம்தான்னு சொல்லிடுவேன் மதி" என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு கௌசி சொல்ல, மதிக்கு கோபம் வந்து விட்டது.

"கௌசி நீ தைரியமானவள்னு நினைச்சேன், இப்படி கோழையா இருப்பன்னு நினைக்கல... என்ன பிரச்சனைனு சொல்ல மாட்ற... வேண்டாம் விடு. உனக்காக நான் யோசிக்கிறேன் பாரு, என்னைச் சொல்லணும்..." என்று தன்னைத்தானே திட்டியவள்,

"சரி கௌசி, உன் வாழ்க்கை... உன் இஷ்டம்" என்று சொன்னவள் அறையை விட்டு வெளியே வர, வரதராஜனும் ஜீவாவும் கீழே வந்தனர். ஜெயா ஹாலில் தான் உட்கார்ந்திருந்தார். கௌசியும் மதியும் பேசியது அவருக்கு நன்றாகவே கேட்டது. ஆனால், மருமகளிடம் கேட்டது போலக் காட்டிக் கொள்ளவில்லை.
பிறகு அவர்களும் கிளம்பிச் செல்ல கௌசிதான் தனக்குள் மருக ஆரம்பித்தாள்.

நாட்கள் முயல் வேகத்தில் நகர்ந்து குரு கட்டிய தாலியோடு அவனோடு மணமேடையில் ஹோமப்புகையின் முன் அமர்ந்திருந்தாள் கௌசிகா. ‘முடிந்தது இனி அவ்வளவுதான்’ என்று நினைத்தவளுக்குக் கண்களில் நீர் திரையிட்டது.

நிமிர்ந்தவள் இடதுபக்கம் எதேச்சையாக நின்று கொண்டு இருந்த விக்னேஷைப் பார்த்தாள். அவனும் அவளையேதான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்து புருவத்தைச் சுருக்கியவன், பின் ஹோமப்புகையில் என்று நினைத்துக் கொண்டான்.

கல்யாணத்திற்கு நான்சியும் வந்திருந்தாள். "கௌசி, நீ அவளைக் கூப்பிட்டயா?" என்று டச்சப் செய்வது போல வந்து மதி கேட்க, இல்லை என்று தலை அசைத்தாள் கௌசி.

"இதைப் பார்த்தாலே எனக்குப் புடிக்கல, கூப்பிடாமயே சிங்காரிச்சுட்டு வந்துட்டா... என்ன ஜென்மமோ" என்று எரிச்சல் பட்ட மதி, தன் மாமியார் கூப்பிட சென்றுவிட்டாள். கௌசியின் கண்கள் விக்னேஷைக் கவனித்தது. அவள் சென்று விக்னேஷின் முன் எப்படி இருக்கேன் என்பதுபோல நின்றதும், விக்னேஷ் அவள் காதில் ஏதோ சொன்னதும், அதற்கு அவள் சிரித்ததும், கௌசிக்கு எல்லா உணர்வுகளும் வடிந்தது போல இருந்தது.

பின் விக்னேஷிடம் பேசிவிட்டு மேலே வந்தக் நான்சி, "கங்கிராட்ஸ் குரு!" என்று கையைக் கொடுக்க குருவும், "தேங்க்ஸ் நான்சி" என்று கையைக் கொடுத்தான்.

"நான்சி, என்னோட ஸ்கூல் பிரண்ட்..." என அறிமுகம் செய்ய, "ம்ம்..." என்று மட்டும் தலையை ஆட்டினாள்.

"கௌசியை எனக்கு நல்லாத் தெரியுமே... நம்ம ஜூனியர்தானே ஸ்கூல்ல... செம போல்ட் கேர்ள்" என்றவள் கடைசியாக சொன்ன வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள்.

கௌசி அவளை முறைக்க, அதற்குள் மேலே வந்த விக்னேஷ், "ஹே! வாங்க, எல்லோரும் ஒரு போட்டோ எடுத்துப்போம்" என்று சொல்ல, அவனும் நான்சியும் சேர்ந்து குருவின் பக்கத்தில் நிற்க, ஜீவாவும் மதியும் கௌசியின் பக்கத்தில் நின்றனர்.

மேலே போட்டோவிற்கு நின்றிருந்த கௌசியைப் பார்த்த ஜெயாவிற்கு வயிற்றில் ஏதோ பிசைந்தது. காரணம் அவளின் இறுகியபாறை முகம். போட்டோ எடுத்த பின், "கிளம்பறேன்" என்று சொன்ன நான்சியை உறுத்து விழித்தாள் கௌசிகா.

ஆனால், நான்சியோ இளநகையுடன் சென்றுவிட்டாள். அவள் போவதையே வெறித்துப் பார்த்த கௌசியைக் கீழே இருந்து கண்ட ஜெயாவிற்கு உதறலெடுத்தது.

‘கடவுளே! இவள் பிடிவாதம் பிடித்து நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லையே... இப்படி தானே சென்று விழுந்துவிட்டு இப்படி நிற்கிறாளே... கடவுளே எந்தப் பிரச்சினையும் வராம நீதான் காப்பாத்தனும்’ என்று கடவுளை வேண்டிக்கொண்டு கனத்த மனதுடன் யாரோ கூப்பிட அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றார்.

பின் எல்லாம் முடிந்து குருவையும் கௌசியையும் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆரத்தி எடுத்து வரவேற்று எல்லா சம்பிரதாயங்களையும் செய்தனர்.

"சரி நான் கிளம்பறேன்... வரதுக்கு எப்படியும் ரெண்டுமாசம் ஆயிரும்..." என்று மதியத்திற்கு மேல் வீட்டிற்கு வந்து, சில சம்பிரதாயங்களை முடித்துவிட்டு உட்கார்ந்திருந்த கௌசியிடமும் குருவிடமும் கூறினான் விக்னேஷ்.

"ம்ம்..." என்று தலை ஆட்டியவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கண்ணீர் மணிகள் உதிர்ந்தன. பழைய கௌசியாக இருந்திருந்தால் அவனை சந்தோஷமாக அனுப்பி வைத்திருப்பாள். ஆனால், இன்றோ அவன் பக்கத்தில் இருந்தும் அவளால் எதுவும் பேச முடியவில்லை.

குருவின் அருகாமையில் உட்கார முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு விக்னேஷ் வந்து கிளம்புகிறேன் என்று சொன்ன போது, ஏதோ முன்பின் தெரியாத இருட்டில் யாரோ தன்னை குழியில் விட்டுவிட்டு செல்வதை உணர்ந்தவளுக்கு இயலாமையால் அழுகை வந்தது.

"ஏய், என்னது இது... இனி குருதான் உன்ன வச்சிட்டு அழணும்... நீ ஏன் அழறே?" என்று குரு ஏதாவது நினைப்பானோ என்று சூழ்நிலையைக் கொஞ்சம் கலகலப்பாக ஆக்க விரும்பி பேச்சை மாற்றினான் விக்னேஷ்.

"நோ வொரிஸ் விக்னேஷ்... இனிமேல் கௌசி என் பொறுப்பு. என்னை மீறி அவளுக்கு என்ன ஆகிடப் போகுது" என்று கௌசியின் தோளில் கை போட்டு, கையை அவளின் தோளில் அழுத்தினான்.

அவன் கை பட்டவுடன், விக்னேஷின் பார்வையும் கௌசியின் பார்வையும் அவன் கையிருந்த இடத்தைத்தான் பார்த்தது. கௌசிக்கு குருவின் செயல் சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம் இல்லாமல், ‘ச்சீ’ என்று இருந்தது.

"சரி நான் கிளம்பறேன், ஒன்ஸ் அகெயின்... ஹா... ஹாப்பி மேரிட் லைஃப்" என்றவன் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான் விக்னேஷ்.

அடுத்து கிடைத்த தனிமையில் மதி கௌசியிடம் பேசினாள். "கௌசி சாரி. அன்னிக்கு கொஞ்சம் கோபமாக பேசிட்டேன்" என்றாள் வருத்தமாக மதி.

"அதெல்லாம் எந்த சாரியும் வேண்டாம் மதி... என்மேல இருந்த அக்கறைல தானே பேசுன" கௌசி முயன்று வரவழைத்த புன்னகையோடு.

"ஹம், கௌசி... கொஞ்சம் மாற ட்ரை பண்ணு. என்ன ஆனாலும் காலம் பதில் சொல்லும் கௌசி. நமக்கு புடிச்ச மாதிரி எல்லாம் மாறிடும். நீ சந்தோஷமா இரு கௌசி. நாங்க கோயம்புத்தூர் இன்னும் ஒன் வீக்ல கிளம்பிருவோம். அடிக்கடி ஃபோன் பண்ணு. நாங்க வந்தாலும் உன்ன பார்க்க வர்றோம்" என்றாள் மதி.

"ம்ம்..." என்று கௌசி சொன்னாலே தவிர எதுவும் பேசவில்லை. அவளால் பேச முடியவில்லை. அதற்குள் அங்கு வந்த சுமதி, கௌசியை அழைத்து குரு வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியது பற்றி ஆரம்பித்தார்.

மாலை கௌசி குருவின் வீட்டிற்குக் கிளம்ப வரதராஜன், சுமதி, ஜெயா, மதி, ஜீவா எல்லோருக்குமே கண்களில் கண்ணீர் கோர்த்ததே தவிர, கௌசிக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை.

ஏன், ஜெயாவின் கணவர் சதாசிவம் மற்றும் சுமதியின் கணவர் செந்தில்நாதனிற்குமே மனம் கனத்தது. ஆனால் கௌசியின் முகம் இறுகி மனமோ எங்கோ இருந்தது. (அவள் மனம் கனடா சென்றவனுடன் பின்னேயே இருந்தது)

அங்கு அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்ப, நேராக குருவுடன் ஓஎம்ஆர் இல் உள்ள வீட்டில் கார் வந்து நின்றது. வரும் வழியில் தன் சிந்தனைகளிலேயே இருந்தவள் குருவின் பார்வையை உணரவில்லை. வீடு வந்து இறங்கியதும் இயந்திரத் தன்மையுடன் நடக்க, குருவின் அக்கா வினித்ரா ஆரத்தி எடுக்க அப்போது தான் கௌசிகா வீட்டைக் கவனித்தாள்.

அவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்தால், எந்தப் பெண்ணுக்கும் மனம் துள்ளும். ஆனால் கௌசியின் மனமோ சுருங்கியது. அவள் மனமும் லயிக்கவில்லை. மாமியார் நீலவேணியோ வேண்டாவெறுப்பாக நின்றிருந்தார். அவரது முகத்தை வைத்தே அவருக்கு இந்தத் திருமணத்தில் அவ்வளவு விருப்பம் இல்லை என்பதை கௌசி யூகித்து விட்டாள். இருக்கிற வேதனையில் இது வேறா என்று நினைத்தவளுக்கு தலை வேறு வலிக்க ஆரம்பித்தது.

வீட்டிற்குள் வந்தவுடன் சில உறவினர்கள் தவிர யாருமே இல்லை. அவர்களும் ஏழு மணிக்கு மேல் கிளம்பிச் செல்ல வினித்ரா, "கௌசி, வா ரெடி ஆக வேண்டாமா?" என்றபடி வந்தாள்.

"எதுக்கு?" என்று கௌசி கேட்க எல்லோரும் அவளை விசித்திரமாகப் பார்த்தனர். அப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது, எதற்கு வினித்ரா அழைக்கிறாள் என்று.

"ஏம்மா உனக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தெரியுமா, தெரியாதா?" என்று குருவின் தாயார் நீலவேணி கேட்க, "இ... இல்லை... வந்து... மறந்திட்டேன்" என்று திணறினாள் கௌசிகா.

அமைதியாக எழுந்து வினித்ராவுடன் ஒரு அறைக்குச் சென்றாள். கௌசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதை அவள் யோசிக்கவே இல்லையே... ‘இதற்குத்தான் அத்தை சொன்னாங்களா? அய்யோ கடவுளே என்னைக் காப்பாத்து’ என்று மனதிற்குள் புலம்புவதைத் தவிர அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. வினித்ரா அவளின் தம்பியின் அருமைபெருமைகளை சொல்லிக்கொண்டே கௌசியைத் தயார்செய்ய, அது எதுவும் கௌசியின் காதில் விழவில்லை. அவளுக்கு வியர்த்துக்கொண்டே இருந்தது.

"ஏன் உங்களுக்கு இப்படி வியர்க்குது?" என்று வினித்ரா கேட்க, "அது... வந்து..." என்று திணறினாள் கௌசி.

"பயப்படாதே... என் தம்பி ரொம்ப நல்லவன்" என்று தைரியம் மூட்டினாள். அவளை தயார் செய்து குருவின் அறைக்குள் விட்டுவிட்டுத் தன் கணவன் மற்றும் குழந்தையுடன் வீட்டிற்குக் கிளம்பி விட்டாள் வினித்ரா.

அறைக்குள் இருந்த கௌசிக்கு மூச்சு முட்டுவது போல ஆகியது. கால்கள் எல்லாம் செயல் இழந்து நடக்கக் கூடத் தோன்றாமல் அப்படியே நின்றவள் அப்போது தான் அறையின் அலங்காரத்தைக் கவனித்தாள். இதயம் நின்று நின்றுத் துடிக்க தன் கைப் பெருவிரல் நகத்தால் உள்ளங்கையை அழுந்தியபடி நின்றிருந்தாள். அவள் அழுத்திய அழுத்தில் அந்த இடம் கன்றி ரத்தம் வரும் நிலைக்கு ஆனது.

எப்படியாவது குருவிடம் இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என்று அவனைப் பற்றி அறியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள் கௌசிகா. வினித்ரா சொன்னது அவளுக்குக் கொஞ்சம் தைரியத்தைத் தர நின்றிருந்தாள்.

"எ...ன்ன யோசிச்சி...ட்டு இரு...க்க கௌசிகா?" என்று தன் பின்னால் அருகில் நின்றபடி அவள் காதின் அருகே குருவின் குரல் கேட்க தூக்கிவாரிப் போட்டபடி திரும்பிப் பார்த்தவள் அவனது தோற்றத்தில் திகைத்தாள்.
இது குருவா?

தலை கலைந்து, கண்கள் சிவப்பேறி நின்றிருந்தவனிடம் மதுவாடை வர கௌசிக்கு உமட்டல் எடுத்தது. ஐடி வேலையில் இருந்தவளுக்கு ஏதாவது பார்ட்டிக்கு போகும்போது பக்கத்தில் இருப்பவரிடம் வரும் மதுவின் நெடி சாதாரணம்தான். ஆனால் அவளுக்குத் தெரிந்த யாரும் இப்படி மொடாக் குடிகாரர்கள் யாரையும் பார்த்தது இல்லை.

அவன் பார்வை வேறு வித்தியாசத்தைத் தர கௌசிக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்தது. அவளின் உடலை மேலிருந்து கீழ் அளந்தவனைப் பார்க்க மனதின் தைரியம் குறைந்து கொண்டே வந்தது. அவன், அவள் அருகே வர... அவன், தன்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த கௌசிகா பின்னே நகர்ந்தாள்.
அவளுக்கு உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடிக்க வாயைத் திறந்து பேசினாள்.

"குரு, நான் உங்ககிட்டப் பேசணும்..." கௌசியின் குரல் சொல்லும்போதே நடுங்கியது.

"ஹம்ம், ப்ளீஸ் டோண்ட் ஸ்பாயில் மை மூட்" என்று அருகில் வர, கௌசியின் உடல் உதறல் எடுத்தது. உள்ளமும் நடுங்கியது. கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் குருவின் பார்வையில் பறந்து கொண்டு இருந்தது.

அவன் கௌசியின் தோளில் கை வைக்க வர, சடாரென விலகியவள் வெளியே செல்லப் பார்க்க, அந்தப் போதையிலும் கௌசியை ஒரே எட்டில் வந்து பிடித்துவிட்டான். துள்ளித் திமிறி விலக முயன்றவளை அவன் கரம் உடும்பாய் பற்றி வலியைத் தந்தது.

அவன் கைகள் எல்லை மீற, கோபம் வந்தவளாய் தன் முழுபலத்தைக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு அவனை முறைத்தாள். "ச்சீ... மனுஷனா நீங்க... ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம இப்படி பிகேவ் பண்றீங்க?" என்று பயத்தை வெளியே காட்டாமல் மறைத்து கோபமாய் அவனிடம் சொற்களை வீசினாள்.
கோபப்படுவான் அல்லது முகம் கன்றுவான் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக அவன் முகம் ஏளனத்தைத் தத்தெடுத்திருந்தது.

"ஏன், நான் உன் கணவன் தானே?" என்றான் ஏளனச் சிரிப்போடு.

"ஓ, அப்போ நீங்க எனக்கு தாலி கட்டிட்டா... என்னை என்ன வேணாலும் பண்ணலாமா?" என்று சீறினாள் கௌசி.

"ஸோ, வேற என்ன நீ எதிர்பாக்கறே? இந்த சீரியல், சினிமால வர மாதிரி உனக்கு வெயிட் பண்ணச் சொல்றியா... எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. வெயிட் பண்ண ரீசனும் இல்ல" என்றான் விட்டேற்றியாக.

"நீங்க எல்லாம் படிச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல... காட்டான் மாதிரி நடந்துக்கறீங்க" என்றாள் முகத்தில் வெறுப்புடன்.

"நீ என்ன வேணாலும் சொல்லிக்க... நான் அதை எல்லாம் கன்சிடர் பண்ண மாட்டேன்... இந்தக் காதுல வாங்கி இந்தக் காதுல விட்டிடுவேன்" என்று போதையிலும் அழுத்தமாகப் பேச, கௌசிக்கு பயம் எடுத்தது உண்மைதான்.

"ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட்... என்னை ஒரு மனுஷியாகவாவது நினைச்சா, கொஞ்சநாள் என்னை விட்டிடு" என்றாள் எங்கோ பார்த்தபடி.

குரு, "ஏன்?"

"..." கௌசிகா.

அவள் அருகில் வந்தவன், "ஏன்னு கேட்டேன்?" என்று அவளின் தோளில் கையை வைத்தான். ஆனால், அவனின் கேள்வி, அவன் தெரியாததைக் கேட்பது போல இல்லை. ஏதோ உள்ளே வைத்துக் கொண்டு வேண்டுமென்றே கௌசியைக் காயப்படுத்தும் நோக்கம் இருந்தது.

அவன் கையைத் தட்டிவிட்டவள், "ச்சீ! உனக்கு புரியுதா... எனக்கு, நீ தொட்டா புடிக்கலை... அருவெறுப்பா இருக்கு" என்று முகத்தை சுழித்து அவனிடம் வெளிப்படையாகச் சொல்லியே விட்டாள்.

ஆனால், அடுத்து அவன் கேட்ட கேள்வியில் கௌசிகா ஆணியடித்தாற் போல
அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

"உன் அத்தை மகன் விக்னேஷ் தொட்டிருந்தால் இப்படி சொல்லிருப்பியாடி?" என்று குரு ஆங்காரமாய்க் கத்த கௌசிக்கு உலகமே நின்றுவிட்டது.
 
  • Like
Reactions: Malar