



ஆழியின் அந்தாதியாய்
அத்தியாயம் – 1
எஸ்.எஸ் இல்லம்!
அந்த பெரும் வீட்டின் முன்னே இருந்த, கருப்பு க்ரானைட் கல்லில் இராஜகரீகமாக தங்கத்தில் பொரிக்கப்பட்டு இருந்தது, ‘எஸ்.எஸ் இல்லம்’ என்கின்ற எழுத்துக்கள்.
சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையை பார்த்தபடி அமைந்துள்ள, அந்த பிரம்மாண்டம் வாய்ந்த வீட்டின் பனிரெண்டு அடி உயரம் கொண்ட கதவும், வெளியே நின்றிருந்த பாதுகாவலர்களின் பலமுமே கூறியது அந்த வீட்டின் பாதுகாப்பு எவ்வளவு என்பதை.
அந்த காலத்திலேயே, அதாவது அந்த வீட்டின் இரண்டாவது மகள் பிறக்கும் போதே ஆறு கோடியில் வீடு கட்டியிருப்பதாக பத்திரிக்கைகளில் எல்லாம் செய்தி வந்திருக்கிறது.
அப்போது எப்படி இருந்ததோ இப்போதும் அதே கம்பீரத்தோடும், ஃப்ரென்ச் முறையில் நவீன கால அமைப்போடும் மாற்றி அமைக்கப்பட்டு ஹை கிளாஸ் முறையில், அந்த காலை வேளையில் சூரிய ஒளியில் பிராகசித்துக் கொண்டிருந்தது.
சூரியனின் சுடர் பட்டு தங்கமாய் தக்தகத்துக் கொண்டிருந்த கடலை பல்கானியில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார் சுப்ரமணியம்.
அந்த எஸ்.எஸ்ஸின் முதல் எழுத்தைக் கொண்டவர். இந்த மாதிரி நாட்களில் அவர் மனைவியை மிகவும் நினைப்பது வழக்கம்.
சுப்புலஷ்மி!
அந்த எஸ்.எஸ்ஸின் இரண்டாவது எழுத்தைக் கொண்டவர் அவர்.
அவரின் மனைவி என்பதை தாண்டி அவரின் உலகமே அவர்தான். அவர் இருந்தவரை அவரின் மனம் எதற்குமே ஏங்கியது கிடையது.
அவர் போன பின்பு..
அதுவும் இம்மாதிரி முக்கிய நாட்களில் அவருக்கு மனைவியின் நினைவு ரொம்பவுமே தாக்கும்.
‘அவ இருந்தா இந்நேரம் எல்லாரையும் எப்படி தாங்குவா.. எப்படி பாத்துப்பா’ என்று பெருமூச்சு ஒன்றை விட்டவர், தன்னுடைய அறையினுள் நுழைந்தார்.
அறைக்குள் நுழைந்தவருக்கு கீழே இருந்த மருமகளின் குரல் கேட்டது.
மங்கை!
அவரின் முகத்தில் சட்டென ஒரு பளிச்.
அவர் மனைவிக்கு பிறகு மருமகள் தான் இந்த வீட்டிற்கு எல்லாம். மகள்கள் கூட அந்தளவு இல்லாதது போன்று அவருக்கு தோன்றும்.
தொடக்கத்தில் ஒரு வருடம் மருமகளை பிடிக்காதது போல நடந்து கொண்டதும் சுப்புலஷ்மி தான். “நம் மகள்களை விட மருமகளை நம்பி உங்களை விட்டுவிட்டுச் செல்வேன்” என்று இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு கூறியவரும் அவர் தான்.
அதை நினைத்தபடி குளித்து முடித்து வந்தவர் பட்டு வேஷ்டி சட்டை உடுத்தி தன் அறைக் கண்னாடியின் முன்பு நின்றார்.
அவர் படுக்கையின் முன்பிருந்த கண்ணாடியின் முன் வந்து நின்றவர், கண்ணாடியின் வழியாக தன் படுக்கையின் தலைமாட்டின் மேலே மாட்டப்பட்டிருந்த மனைவியின் அழகிய புகைப்படத்தை பார்த்தார்.
சுப்புலஷ்மியின் கருப்பு வெள்ளை புகைப்புடம்!
திருமணமான புதிதில் அவருக்கு இருபது வயது இருக்கும் பொழுது சுப்ரமணியம் எடுத்த புகைப்படம் அது. அவர் தன் விர் புருவங்களுக்கு நடுவே வைத்திருந்த வட்ட பொட்டு மட்டும் சிவப்பு நிறத்தில் இருந்தது.
இந்த வயதிலும் மனைவியை இப்படி ரசிக்க முடியுமா என்று கேட்டால் அது அவரால் மட்டுமே முடியும்.
ரசிக்க தெரிந்தவனுக்கு மட்டுமே மனைவி என்றும் தேவதை.
காதல், மரியாதை மட்டுமல்ல அவருக்கான மரியாதையும், மதிப்பும் என்றுமே அவரிடம் குறைந்தது இல்லை.
அவருடைய இந்த வளர்ச்சிக்கும் அதுதான் அடிப்படை காரணமும் கூட. எந்த ஒரு வீட்டில் பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கு தானே வளர்ச்சியும் இருக்கும்.
தன்னுடைய தங்க ப்ரேமிட்ட கண்ணாடியை அணிந்தபடி கீழே வந்தவர், மருமகள் பூஜைகளுக்கு தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை கவனித்தார்.
அவர் வரவேற்பரையில் அமர்ந்ததும் அவரைக் கண்ட மங்கை, “காபி எடுத்துட்டு வரட்டுமா மாமா?” என்று கேட்க, “சரிம்மா” என்றார்.
வரவேற்பறையில் அமர்ந்திருந்தவரின் விழிகள் தாமாக அங்கு மாட்டப்பட்டு இருந்த குடும்ப புகைப்படத்தைக் கண்டது.
மூத்த மகன் திருமணத்தின் போது குடும்பமாக அனைவரும் எடுத்திருந்த புகைப்படம்.
சுப்ரமணியம்-சுப்புலஷ்மி தம்பதியருக்கு மொத்தம் ஐந்து செல்வங்கள்.
முதலில் இருவரும் பெற்றெடுத்தது மகனை தான்.
ரகுராம்!
அதை தொடர்ந்து பிறந்த நால்வருமே மகள்கள்.
ரோஜா!
ஜோதி!
புவனா!
சரண்யா!
அழகிலும், செல்வ செழிப்பிலும் குறைவே இல்லாதவர்கள் ஐவரும்.
ரகுராம்-மங்கையின் திருமணத்தின் போது எடுத்ததுதான் அந்த புகைப்படம். அப்போது மூத்த மகளான ரோஜாவிற்கு மட்டும் திருமணம் முடிந்திருந்தது.
ரோஜாவின் கணவர் கணேஷ். அவர்களின் மூத்த மகள் அஞ்சலி. அவள் பத்து மாத குழந்தையாக அந்த புகைப்படத்தில், தன் அன்னை ரோஜாவின் கைகளில் ரோஜா குவியலாக.
ரகுராம்-மங்கை தம்பதியருக்கு இரண்டு செல்வங்கள்.
விஷால் மற்றும் ரூபா. இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது.
ரோஜா-கணேஷிற்கு தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள்.
அஞ்சலி மற்றும் வருண்.
அஞ்சலி தான் பேரப் பிள்ளைகளில் அந்த வீட்டின் மூத்த வாரிசு.
வருண் இப்போது கல்லூரி. அவன் அந்த வீட்டின் கடைசி வாரிசு. அஞ்சலிக்கு பிறகு பத்து வருடங்கள் கழித்து பிறந்தவன்.
அஞ்சலிக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளன.
அந்த வீட்டின் மூத்த மகன் ரகுராம் மற்றும் மகள் ரோஜா தந்தை சுப்ரமணியத்தோடு தான் பெசன்ட் நகரில் வசிக்கிறார்கள்.
அஞ்சலியின் இரண்டாவது குழந்தையின் பெயர் சூட்டும் விழாவிற்கு தான், இப்போது அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
“எல்லாம் ரெடியா?” என்று வேளையாட்களை அதிகாரமாய் கேட்டபடி அங்கு வந்து சேர்ந்தாள் அஞ்சலி.
மருமகள் கொடுத்த காபியை பருகியபடியே மூத்த பேத்தியான அஞ்சலியை ஏறிட்டு பார்த்த சுப்ரமணியம், “உங்க அத்தை, மாமா எல்லாம் வந்துட்டாங்களான்னு முதல்ல பாரும்மா” என்றார்.
“வருவாங்க தாத்தா.. சும்மா தாங்க முடியுமா?” என்று ஒரு மாதிரி கணவனின் பெற்றோரை பற்றி அசட்டையாக அஞ்சலி பேச, சுப்ரமணியம் பேத்தியை ஒரு பார்வை பார்த்தார்.
அஞ்சலியிடம் தாம் எப்போதுமே செல்வம் படைத்தவர்கள் எங்கின்ற தலைகணம் மிக அதிகம். அதுவும் மூத்த வாரிசு என்பதால் அவளுக்கு அனைவரும் கொடுத்த செல்லமே அவளை அதிக திமிராக வளர வைத்தது.
அந்த திமிர் அதிகாரமாய் அவளுக்கு பிறந்த அடுத்த குழந்தைகளின் மீதும் விழ, ஒரு வயதுக்கு வந்த பிறகு ‘அக்கா’ என்பதோடு அனைவரும் அவளிடம் ஒதுங்கிக் கொள்வார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஒரே மாதத்தில் அவள் கணவன் சிவாவே, அவளோடு மாமனார் வீட்டிற்கு வந்துவிட்டான் என்றால்.. இல்லை இல்லை அவள் ஒரு வார்த்தை பேசாது தன் செயல்களாலேயே கணவனை தன்னோடு வர வைத்தாள் என்பதே உண்மை.
ஆனால் அவளின் இந்த அதிகாரம் எல்லாம் சுப்ரமணியத்திடம் செல்லுபடியாகாது.
அவர் மரியாதை என்ற விஷயத்தில் ‘கறார்’. அதில் யாராவது தவறினால் வீட்டை விட்டு வெளியேற சொல்லவும் தயங்கமாட்டார்.
செல்லம் கொஞ்சுவது எல்லாம் மற்ற விஷயங்களுக்கு தான். இதில் எல்லாம் அவர் படு ஸ்ட்ரிக்ட்.
சுப்ரமணியத்தின் பார்வையிலேயே அவர் தன் மனைவியை ஏதேனும் சொல்லிவிடுவார் என்பதை உணர்ந்த அஞ்சலியின் கணவன் சிவா, “நான் பேசிட்டேன் தாத்தா.. பக்கத்துல வந்துட்டாங்க” என்று முந்திக் கொள்ள, அவர் நடப்பதை உணராதவரா?
அஞ்சலியை தன் தீர்க்க பார்வை கொண்டு பார்த்தவர், “உன்னை பேச சொன்னேன்” என்ற தொணியிலேயே, அஞ்சலி தாமாக மாமனார் மாமியாருக்கு அழைத்தாள்.
மனதிற்குள் கோபம் வந்தாலும் அவளால் அதை காட்டிட முடியுமா?
அவர்களிடம் பேசிவிட்டு வந்தவள், “பத்து நிமிஷத்துல வந்திடுவாங்க தாத்தா” என்றிட சரியென்று தலையாட்டியவர், பத்திரிக்கையில் மூழ்கிவிட்டார்.
நேரம் நெருங்க நெருங்க அனைவருமே வந்தனர்.
அந்த வீட்டின் மூத்த மகனான ரகுராமும் தயாராகி கீழே இறங்கி வர, மங்கை தான் அனைத்து வேலையையும் பார்த்துக் கொண்டிருந்தார். அதை கண்டதும், “ரோஜா எங்க?” என்று தன் மூத்த தங்கையைப் பற்றி ரகுராம் கேட்டார்.
“அம்மா இப்பதான் எந்திரிச்சாங்க மாமா” அஞ்சலி கூற, ரகுராமிடம் ஒரு பெருமூச்சு.
‘ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது’ என்பதற்கு எடுத்துக்காட்டு அவரின் மூத்த தங்கை.
சொல்லி சொல்லி பார்த்து அவரும் விட்டுவிட்டார்.
அங்கு வந்த தங்கை கணவர் கணேஷை பார்த்தவர், “என்ன மச்சான்.. இன்னைக்கும் நீங்க தான் பர்ஸ்டா” என்று தங்கை இன்னும் வராததை கேலி செய்ய, அவரும் “ஆமா உங்க தங்கச்சி எப்பவுமே தான் லேட்” என்று பதில் கொடுத்தார்.
அவரும் வீட்டோடு மாப்பிள்ளை தான்.
அந்த வீட்டின் அடுத்த மகள்களான புவனாவும், சரண்யாவும் தன் கணவன் பிள்ளைகளோடு வந்து சேர, ரோஜா அப்போது தான் கீழேயே இறங்கி வந்தார்.
அனைவரும் வந்திறங்க, ரோஜாவும் ஒரு வழியாக கீழே வந்தார்.
இறுதியாக ரகுராம்-மங்கையின் மூத்த மகனான விஷால் தன் மனைவி ராதிகாவோடு கீழே இறங்கி வந்தான்.
நம் கதையின் இரண்டாவது கதாநாயகன்-கதாநாயகி இவர்கள்.
(நிறைய பேர் இருக்கா மக்களே..
சுப்ரமணியத்தின் மகன் ரகுராம். மகள் ரோஜா.
ரகுராம்-மங்கை மகன் விஷால். மகள் ரூபா.
விஷாலோட மனைவி ராதிகா.
ரூபா கணவன் ரோஹித்.
ரோஜா-கணேஷ் மகள் அஞ்சலி. மகன் வருண்.
அஞ்சலி கணவன் சிவா.
இப்போதைக்கு இது நியாபகம் இருந்தா போதும்)
அஞ்சலி தன் இரண்டாவது குழந்தையை கையிலெடுத்து வர, குட்டி தங்க குவியலாய் அன்னையின் கரத்தில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு மாத பெண் குழந்தையை அனைவரும் ஆசை கொண்டு பார்த்தனர்.
அஞ்சலி யாரிடமுமே இது வரை என்ன பெயர் என்று கூறவே இல்லை.
அனைவரும் அவளையே பார்க்க, “வைக்கும் போது சொல்றேன்” என்று அவள் விழிகளை சிமிட்ட, அதே நேரம் அந்த பெரும் வீட்டின் நுழைவு வாயிலை தனக்கே உரித்தான உறுமலோடு அதிகாரமாய் நுழைந்தது கருப்பு நிற வால்வோ எக்ஸ்சி 90.
அஞ்சலியின் முகம் சட்டென மாறியது.
ஆனால், அதை காட்டிட முடியாதே! முகத்தை சிரித்த மாதிரி மாற்றிக் கொண்டாள்.
கீறிச்சலோடு வாசலின் முன்பு நின்ற காரிலிருந்து, முதலில் வசுந்தரா கம்பீரமாய் இறங்கினார்.
வெளிர் பழுப்பு நிறத்தில், நீல நிறத்தில் அச்சடிக்கப்பட்ட வடிவில், ஜரி வைக்கப்பட்ட சில்க் காட்டன் புடவையில், தன் பணிக்கே உண்டான கம்பீரத்தோடும், நிமிர்வோடும் இறங்கிய தன் அத்தை வசுந்தராவை கண்ட ராதிகாவின் செப்பு இதழ்கள் மென்னகை கொண்டது.
வி.ஆர் குரூப்ஸ் ஆஃப் கல்வி நிறுவனத்தின் சேர்மேன்!
அவரை தொடர்ந்து இறங்கிய நம் கதையின் கதாநாயகனின் மேல் அனைவரின் பார்வையும் ஒரு வித ரசனையோடும் எப்போதும் விழும் பிரம்மிப்போடும் விழுந்தது.
ஸ்ரீராம்!
வசுந்தராவின் ஒரே மகன்.
முட்டிவரை மடக்கி விடப்பட்டிருந்த டெனிம் ஷர்ட்டிலும், பெய்ஜ் நிற பேண்ட்டிலும், தன் ஆளுமைக்கே உரித்தான வண்ணம் வலது கரத்தில் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ராடோ வாட்ச் அணிந்தபடி இறங்கியவன், தன் சன் கிளாஸை கழற்றியபடி உள்ளே வர, அஞ்சலியின் விழிகள் அவனை ஒரு வித வன்மத்தோடு பார்த்தது.
அஞ்சலியை பார்க்காமலேயே தன் மேல் அடித்த அனலை உணர்ந்து கொண்டவனின் இதழ்கள், தனக்கே உண்டான கூர் விழிகளால் நகை புரிய, அவளின் வன்மமும் அவனின் திமிரில் அதிகரித்தது.
“ஹை சித்தப்பா” என்று ஓடி வந்து ஸ்ரீராமின் மீது தாவினான் விஹான். அஞ்சலி மூத்த மகன். இரண்டு வயது.
விஹானை தூக்கியவன், அவனிடம் ஹைபை கொடுக்க, அவனும் பெரியவனின் பெரும் கரத்தை தன் சிறு கரம் கொண்டு தட்டினான்.
வசுந்தராவையும், ஸ்ரீராமையும் வரவேற்றவர்கள், “ஏன் லேட்?” என்று கேட்க, “ஸ்ரீராம் காலைல தான் யூஎஸ்ல இருந்து வந்தான்.. ப்ளைட் லேட்” என்றார் வசுந்தரா.
“சரி வாங்க முதல்ல பூஜையை முடிச்சிடலாம்” மங்கை அனைவரையும் அழைக்க, அனைவரும் பூஜை அறைக்குள் நுழைந்தனர்.
கடவுளை வணங்கியவர்கள், அப்படியே இடது பக்கம் திரும்ப, சுப்புலஷ்மியின் புகைப்படம் இருந்தது. என்ன தான் வீட்டில் கடவுளை வணங்கினாலும், அவர்களின் முதல் கடவுள் சுப்புலஷ்மி தான்.
கடவுளின் முன்பு நின்ற அனைவரின் மனமும், அவரை நினைத்து உருக, ஸ்ரீராம் மட்டும் சுப்ரமணியத்தை கவனித்தான்.
கரம் கூப்பி விழிகளை மூடி நின்றிருந்தவரின் தொண்டைக் குழி மனைவியின் நினைவில் ஏறி இறங்க, அவனுக்கோ சிறு வயது நினைவுகள்.
மனைவியின் மேல் அவர் கொண்டுள்ள காதலுக்கும், இருவரின் புரிதலான காதலுக்கும் அவன் அடிமை.
வழக்கம் போல அனைத்தையும் நினைத்துப் பார்த்தவன், விழிகளில் மட்டும் புன்னகையை காட்டி நிற்க, பாட்டியை வணங்கிவிட்டு திரும்பிய அஞ்சலி ஸ்ரீராமை முறைத்தாள்.
அவளின் முறைப்பை அவன் சட்டை கூட செய்யவில்லை. தன் விழியை திருப்பிக் கொண்டான்.
அடுத்து பெயர் சூட்டும் விழாவும் துவங்க, “வியானா” என்று மகளின் பெயரை அனைவருக்கும் கூறி, மகளின் பட்டுக் கன்னத்தில் இதழ் பதித்தாள் அஞ்சலி.
அனைவரும் குழந்தையின் நாவில் தேன் வைத்து, “வியானா” என்று மூன்று முறை கூற, அவளோ தூக்கத்தில் இருந்து விழித்தவளாய் தன் காலை கரத்தால் பிடித்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தாள்.
“விஹான்-வியானா.. குழந்தைக பேர் ரொம்ப நல்லா இருக்கு” வசுந்தரா உணவு உண்ண அமரும் போது அஞ்சலியிடம் கூற, பெருமிதமாக முகத்தை வைத்தவள் அவருக்கு நன்றி தெரிவித்தாள்.
ஐம்பது பேர் அளவிற்கு அமரக் கூடிய நீளமான டைனிங் டேபிளில், அனைவரும் காலை உணவிற்காக அமர, வேலையாட்கள் பரிமாற, “ஸ்ரீராமுக்கு பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கேட்டார் ரோஜா.
வசுந்தராவோ ஒரு நொடி மகனை பார்த்தவர், “ஸ்ரீராம் சரின்னு சொன்னா பாத்துடலாம்” என்று ரோஜாவை பார்த்துக் கூறினார்.
“இப்ப ஸ்ரீராமுக்கு என்ன வயசு?” அஞ்சலி வேண்டுமென்றே ஸ்ரீராமின் எதிரே அமர்ந்து கொண்டு கேட்க, “உங்க வயசு தானே அக்கா மாமாவுக்கும்?” என்று வேண்டுமென்றே கூறினாள் ராதிகாவும்.
தன் சொந்த மாமன் மகனை ஏதாவது சொன்னால் ராதிகா சும்மா இருப்பாளா?
அஞ்சலி அதற்கு பதில் கொடுக்கத் தெரியாதவளா?
“அதுதான்.. சிவாவுக்கும் அதே வயசு தானே..” அஞ்சலி தன் கணவணோடு ஒப்பிட்டு கூறியவள், நீள கண்ணாடிக் கோப்பையில் இருந்த தண்ணீரைப் பருகியபடி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீராமை கண்டு, “சரி தானே ஸ்ரீராம்?” என்றாள்.
தன்னிடம் நேராடியாக மோதுபவர்களுக்கு மட்டுமே பதில் அளிப்பவன் அவன். அதனால் தானே அவன் இவ்வளவு நேரம் அமைதி காத்தது.
அவள் நேரடியாக கேட்க இப்போது அவனே பதில் அளிக்க தயாராகிவிட்டான். அவனது பாஷையில்..
“அஞ்சலி! உனக்கும் சிவாவுக்கும் ஒரே வயசு தானே?” என்று முதல் குட்டு வைத்துக் கேட்டவன்,
“எப்ப கல்யாணம் பண்றோம் அப்படிங்கிறதை விட, எந்த மாதிரி பார்ட்னரை தேர்ந்தெடுக்கிறோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம்.. மேரேஜ் வந்து இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்ட விஷயம்.. அவசரப்பட்டு வெறும் மேக்கப் மட்டும் பண்ணிட்டு, ஜீரோ நாலேஞ் இருக்க பொண்ணையோ இல்ல எதுக்குமே அட்ஜஸ்ட் பண்ணாத பொண்ணையோ என்னால கல்யாணம் பண்ண முடியாது.. சொல்லுவாங்க இல்ல.. அழகு இருந்தா அறிவு சுத்தமா இருக்காதுன்னு.. இல்லையா சிவா?” என்று கேட்க, அவனும் அதற்கு தலையாட்ட தானே வேண்டும்.
சபையில் இல்லையெனில் அவனுக்கு தானே அசிங்கம்.
ஸ்ரீராமின் திமிரான பேச்சிலும், கணவனின் தலையசைப்பிலும் அடி நெஞ்சில் இருந்து ஆத்திரம் தீ பிழம்புகளாய், பொங்கிம் எழுந்தாலும் அவளால் அதை வெளியே காண்பிக்க முடியவில்லை.
அவளை தான் அவன் குறிப்பிட்டு கூறுகிறான் என்பதை அங்கிருந்த அனைவருமே அறிவார்கள்.
ஆனால், அதை அவனிடம் யாரும், ‘ஏன் இப்படி பேசுகிறாய்?’ என்று கேட்க முடியாது.
காரணம் அஞ்சலி தான் முதலில் வாய்விட்டாள் என்றெல்லாம் கிடையாது. அவனிடம் யாருமே பேசி வெல்ல முடியாது. அவனைப் போல பதிலடி கொடுக்கவும் முடியாது.
ராதிகாவோ அஞ்சலியின் வதனம் கருத்துப் போனதில், சற்றுப் புன்னகை செய்ய அது சரியாக ரோஜாவின் விழிகளில் இருந்து தப்பாது விழுந்தது. அதை அவரின் மனம் குறித்து வைத்தும் கொண்டது.
அனைவரும் சாப்பிட்டு முடிக்க, விஷாலின் அலைபேசி அடித்தது.
அவனின் தங்கை தான்.
ரூபா.
ராதிகாவின் அண்ணன் ரோஹித்திற்கு தான் ரூபாவை கொடுத்தது. பெண் கொடுத்து பெண் எடுத்தது.
ரூபாவும்-ரோஹித்தும் இப்போது யூ.எஸ், அவனுடைய ஒரு புதிய ப்ராஜெக்ட்டிற்காக சென்றிருக்கிறார்கள். இன்னும் முடிய ஒரு வருட காலம் இருந்தது.
“வியானா குட்டி..” என்று குழந்தையை சிறிது நேரம் கொஞ்சிய ரூபா, அனைவரிடமும் பேச, “செக்கப் எல்லாம் போறீங்களா?” என்று ரூபாவிடம் கேட்டார் அந்த வீட்டின் நான்காவது மகளான புவனா.
“போனோம் அத்தை..” என்று பதிலளித்த ரூபா அலைபேசியை கணவனிடம் நீட்ட, அலைபேசியை வாங்கிய ரோஹித், “மாமா! நேத்து மெயில் பண்ணேன் பாத்தீங்களா?” என்று ஸ்ரீராமிடம் கேட்க, “யப்! பாத்தேன்” என்றான் ஸ்ரீராம்.
“பேபி ஹெல்த் எப்படி இருக்கு?” என்று கேட்ட ஸ்ரீராம், “என்ன டிசைட் பண்ணியிருக்கீங்க? என்று கேட்க,
“அவ அங்க வரட்டும் மாமா.. பேபி பிறந்தாலும் அங்க அத்தை, அம்மா பாத்துக்கிற மாதிரி வராதுல” என்றான் ரோஹித்.
“சரி ஏழாவது மாசம் வளைகாப்பு இருக்கும்.. அதுக்கு முன்னாடி இங்க கொண்டு வந்து விடு.. நீயும் வந்து நாலு நாளாவது இருந்துட்டு போ” ஸ்ரீராம் கூற, “சரி மாமா” என்றவன் சிறிது நேரம் மற்றவர்களிடம் பேசிவிட்டு அலைபேசியை வைத்தான்.
வசுந்தராவும், ஸ்ரீராமும் கிளம்ப எழுந்து கொள்ள, ஸ்ரீராமின் அருகே வந்த சுப்ரமணியம், அவனோடு சாதரணமாக பேசிக் கொண்டே வாசல் வரை செல்ல, அஞ்சலிக்கோ, ‘அது என்ன அவன் பெருசு.. என் புருஷன் கிட்ட எல்லாம் இப்படி ஒரு நாள் பேசுனது இல்ல’ என்று உள்ளுக்குள் பொரிந்து கொண்டிருந்தாள்.
ஸ்ரீராமோடு நின்று பேசிக் கொண்டிருந்த சுப்ரமணியம், “வயசு 29 தான். ஆனா, அதுக்காக இன்னும் தள்ளிப் போட வேண்டாம்.. சரியான வயசு இது..” என்றார்.
வசுந்தராவும் அங்கு வந்து சேர, சுப்ரமணியத்திடம் புன்னகையோடு தலையசைத்து விடைபெற்றவன் அன்னையோடு வந்து காரை எடுத்தான்.
செல்லும் வழியில், “அஞ்சலி ஏன் உன் மேல கோபமாவே இருக்கா?” வசுந்தரா குறுஞ்சிரிப்போடு மகனிடம் கேட்க, கூலர்ஸை மாட்டியபடி ஸ்டியரீங்க் வீலை விரலால் இறுகப் பற்றியிருந்தவன், “அவளை நான் ரிஜெக்ட் பண்ண கோபம் அவளுக்கு இன்னும் போகல” என்றான்.
“இன்னும் இருக்கா?” வசுந்தரா யோசனையோடு வினவ, “அவளுக்கு வெஞ்சன்ஸ் அதிகம் ம்மா..” என்றவன் காரில் பாடல்களை உயிர்ப்பித்தான்.
வசுந்தராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்ததை வைத்துக் கொண்டு அஞ்சலி இப்படி இருப்பது ஒரு வித சலிப்பைத் தட்டியது.
மூன்று வருடங்களுக்கு முன்பு, அஞ்சலிக்கு ஸ்ரீராமை கேட்கலாம் என்று துவங்கியது ரோஜா தான். அவர்களின் செல்வாக்குக்கும், மகளின் அழகுக்கும் ஸ்ரீராம் தான் பொறுத்தமானவன் என்று அவரே முடிவு செய்து கொண்டார்.
அஞ்சலியிடம் கேட்க, ஏற்கனவே அவனின் மீது ஈர்ப்பு கொண்டவள் அவள். தலையாட்டிவிட்டு, தன்னைப் போன்ற அழகியை ஸ்ரீராம் நிராகரிக்க வாய்ப்பே இல்லை என்ற தலைகணத்தோடும், கல்யாணக் கனவோடும் அமர்ந்து விட்டாள்.
அடுத்து தந்தையின் மூலம் கணவரோடு சேர்ந்து திருமணப் பேச்சையும் நகர்த்தினார் ரோஜா.
வசுந்தராவோ யோசித்தார். அஞ்சலியைப் பற்றி அவருக்கு தவறான எண்ணம் எல்லாம் கிடையாது. ஆனால், அவளின் குணம் மகனோடு சரி வருமா என்று யோசித்தார்.
சுப்ரமணியமுக்காக அவர் மகனிடம் ஒரு வார்த்தை கேட்டார்.
ஸ்ரீராம் கொஞ்சம் கூட யோசிக்காது அஞ்சலி என்றதும் வேண்டாம் என்றுவிட்டான்.
அங்கு தொடங்கியது தான் அனைத்து பிரச்சனையும். அஞ்சலி வன்மத்தை கையில் எடுத்துக் கொண்டு அடுத்த முகூர்த்தத்தில் சிவாவை மணந்தாள்.
கணவனின் மேல் கொள்ளை காதல் தான். ஆனால் தன்னை ஸ்ரீராம் நிராகரித்த விடயத்தை அவளால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
யோசனையுடனே வெளியே பார்த்தபடி அமர்ந்திருந்த வசுந்தரா, “பொண்ணு பாக்க ஆரம்பிக்கலாம் ஸ்ரீராம்” என்றிட அன்னையை பக்கவாட்டாக தலை திருப்பிப் பார்த்தவன் குறுநகை புரிந்தான்.
மகனின் செயலை தலை திருப்பாமலேயே உணர்ந்து கொண்டவர், “விளையாட்டு போதும் ஸ்ரீராம்..” என்றார்.
அன்னையின் பேச்சிலும், அவர் அமர்ந்திருந்த விதத்திலுமே அவர் முடிவு எடுத்துவிட்டார் என்பதை உணர்ந்தவன், உதட்டை அழுத்தமாக குவித்து ஊதிவிட்டு, “ஓகே உங்க இஷ்டம் ம்மா” என்று முடித்துக் கொண்டான்.
மகனின் குணத்திற்கு பொறுமையான, குணமான பெண் அமைய வேண்டும் என்று அவர் நினைக்க, அஞ்சலியை விட நூறு மடங்கு திமிர், தலைகணம், அதிகாரம், ஆணவம் கொண்ட ஒருத்தி அனைவரையும் ஆட்டிப்படைக்க காத்திருக்கிறாள் என்பதை யார் அறியப் போகிறார்கள்.