


அத்தியாயம்-2
வசுந்தரா!
வி.ஆர் குரூப் ஆஃப் கல்வி நிறுவனத்தின் சேர்மன்.
யாரோ அவருக்கு கொடுத்த இடமோ பதவியோ கிடையாது இது. தன்னுடைய இருபத்தி நான்கு வயதிலிருந்து அவராய் உழைத்து உருவாக்கியது இந்த சாம்ராஜ்யத்தை!
அத்தனை எளிதில் எதுவும் சாத்தியம் கிடையாது. அதுவும் ஒற்றை பெண் இத்தனை தூரம் கடந்து வந்த பாதை, ‘எளிது’ என்கின்ற வார்த்தையையே பார்த்திருக்காது.
அவரும் கடினம் என்கின்ற வார்த்தையே அறியாது கணவரோடு வாழ்ந்து கொண்டிருந்தவர் தான். ஆனால், 2004ஆம் ஆண்டு சுனாமி அவரின் மொத்த வாழ்வையே மாற்றிவிட்டது.
ரோஹித்-ராதிகாவின் அன்னை, ஸ்ரீராமின் தந்தையுடைய உடன் பிறந்த சகோதரி.
அன்று அவர்கள் கூட கடற்கரை செல்ல வேண்டியது. கடவுள் அதில் கொஞ்சம் மனசாட்சி கொண்டவன் போல. குழந்தைகளை அனாதையாக விட மனமில்லாது, அவர்களை பார்த்துக் கொள்ள வசுந்தரா வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.
குழந்தைகள் அன்று காலை தீவுத் திடலில், சிறுவர்களை மையமாக வைத்து நடந்த சிரிப்போடு கூடிய நாடகம் ஒன்றுக்கு சென்றிருந்தனர்.
ஸ்ரீராமின் தந்தையோடு அவரின் தங்கையும், தங்கை கணவரும் கடற்கரை சூரிய உதயத்தைக் காண சென்றிருக்க, குடும்பமே அன்று அஸ்தமனத்தைச் சந்தித்தது.
அப்போது வெறும் தொடக்கப்பள்ளியே வைத்திருந்தனர்.
அதுவும் ஸ்ரீராமின் தந்தை வசதி படைத்தவர் ஒன்றும் கிடையாது. அவர் தன் சொந்த முயற்சியில் வங்கியில் கடன் எடுத்து துவங்கியதுதான் வி.ஆர் தொடக்கப்பள்ளி.
கணவர் இறந்ததும் மூன்று பிள்ளைகளை வைத்துக் கொண்டு, பள்ளியை எப்படி நடத்துவது என்று தெரியாது தவித்த வசுந்தராவிற்கு கை கொடுத்தவர்கள் தான் சுப்ரமணியமும், சுப்புலஷ்மியும்.
ரகுராமும், ஸ்ரீராமின் தந்தை ரவியும் நெருங்கிய நண்பர்கள்.
சுப்ரமணியமும், சுப்புலஷ்மியும் தனியாக அல்லாடிக் கொண்டிருந்த, வசுந்தராவிற்கு தூண்களாய் நின்றனர்.
சுப்புலஷ்மி, “குழந்தைகளை எங்கிட்ட விட்டுட்டு போ.. நான் பாத்துக்கறேன்” என்றிட, சுப்ரமணியம் வசுந்தராவை மேல்படிப்பு மேற்கொள்ள கூறிவிட்டு பள்ளியை மேலே கொண்டு வந்து அவர் ஒப்படைத்தார்.
வசுந்தராவிற்கு அவர் பயின்ற படிப்பும், சுப்ரமணியத்தின் அறிவுரைகளும் வேலை செய்ய, ஐந்து வருடத்தில் கடனை அடைத்தவர், அதன் பிறகு பதினைந்து வருடத்தில் ஒரு கல்வி நிறுவனத்தையே உருவாக்கிவிட்டார்.
சுப்புலஷ்மி இருந்தவரை மட்டுமே பிள்ளைகளை அவர் அங்கு விட்டது.
அதன் பிறகு ஸ்ரீராமும் பதின் வயதை அடைந்திருக்க, வசுந்தரா ராதிகா, ரோஹித்தை பார்த்துக் கொள்ள, மகனையே ஏற்பாடு செய்துவிட்டார்.
அவனும் இருவருக்கும் மூத்தவன் என்பதால், தனிமையில் பொறுப்பாக இருவரையும் கவனித்துக் கொண்டான்.
அதனாலேயே அவனுக்கு சிறு வயதில் இருந்து பொறுப்பு கூடியது. அதுவும் ராதிகா பெண் என்பதால், அவளுடைய பாதுகாப்பும், பொறுப்பும் இவனுடையது.
ரோஹித்தும் உடன் இருப்பவன் தான். ஆனால், ஸ்ரீராம் இருக்கும் தைரியத்தில் அவன் மேலோட்டமாக தங்கையை பார்த்துக் கொள்வதோடு சரி.
இதனாலேயே சில சமயங்களில், மாமனிடம் விட, அண்ணனிடம் தனக்கு ஆக வேண்டிய காரியங்களுக்கு, சின்னவள் தாஜா செய்து கொள்வாள்.
ஸ்ரீராம் இளங்கலை படித்து முடித்ததோ அவர்களுடைய கல்லூரியில் தான். அதன் பிறகு யூகேவில் முதுகலையையும், எம்பிஏவையும் முடித்தான். அதனால் அவனை பொறுத்தவரை, தன்னுடன் படித்த பெண்கள் சிலரை பார்த்தே, ராதிகாவிடம் படு ஸ்ட்ரிக்ட்.
ஆண்களை விட, பெண்களுக்கு சேரும் சேர்க்கையில் தான் அனைத்து பழக்கவழக்கங்கள் என்பதை உணர்ந்தவன், அவள் நட்பு வட்டத்தின் மேல் கூட ஒரு கண் வைத்திருப்பான்.
யூகேவில் இருந்து கொண்டே இங்கு என்ன நடக்கிறது என்பதில் அவன் அத்துப்படி.
ரோஹித்திற்கே மாமாவின் கறார் சில சமயங்களில் அதிகப்படியாக இருப்பது போல தோன்றும். அதனால் தங்கையை வெளியே செல்வதிற்கு எல்லாம் அவன் எதுவும் தடுத்ததில்லை.
ஆனால், அது தவறு என்றும் ராதிகாவும் ஒரு முறை சகோதரனுக்கு நிரூபித்தாள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு, ரோஹித்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றவன் அவசர அவசரமாக கிளம்பி செல்ல, காரிலிருந்து இறங்கியவன், முதலில் பார்த்தது கைகளை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்த ரூபாவை தான்.
தங்கையை தேடினான்!
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
ரூபாவை முறைத்தபடியே தங்கையிடம் சென்றவன், போலீசாரிடம் விசாரிக்க, “சார்!” என்றவர் அனைத்தையும் கூறினார்.
ரூபாவும், ராதிகாவும் ஈசிஆரில் உள்ள பப் ஒன்றிற்கு வந்திருக்க, அங்கு வந்திருந்த இளைஞர்களால் ஏற்பட்ட பிரச்சனை இது.
வந்திருந்த ஒருவன் ரூபாவிடம், வம்பிழுக்க ராதிகாவோ யோசிக்காது அவனின் கன்னத்தை பழுக்க விட்டிருந்தாள்.
அதில் பப்பில் நியமிக்கப்பட்டிருந்த பவுன்சர்கள் சூழ்ந்து விட, பிரச்சினை பெரிதாகியது. அதாவது போலீசார் வரும் அளவிற்கு. மெய்யாலுமே ராதிகா அறைந்திருந்த பையனின் கன்னம் அவள் விரல் தடங்களோடு பழுத்து சிவந்திருந்தது.
ரோஹித் பற்களை கடித்தான். கழுத்து நரம்புகள் புடைத்தெழ, தங்கையையும், ரூபாவையும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், எதிரே இருந்த இளைஞர்களை கண்டான்.
காவல் அதிகாரிகளிடம் இருமாப்போடு, “இப்ப என்ன சொல்றாங்க?” என்று கேட்டான்.
“சாரி கேக்க சொல்றாங்க..” என்று அவர் கூறும் போதே, ரோஹித்தின் அலைபேசி அடித்தது.
அலைபேசியை எடுத்துப் பார்த்தவன், மண்டை சூடாக நெற்றியை தேய்த்து உதடுகளை குவித்து ஊதினான்.
அவனின் செய்கையிலேயே, ராதிகாவிற்கு அதுவரை இருந்த தைரியம் பறந்தோட, யார் என்று கேட்காமலேயே அலைபேசியில் யார் என்று புரிந்து கொண்டவளுக்கு அச்சத்தில் தொண்டைக்குழி அடைத்தது.
அலைபேசியின் திரையையே பார்த்திருந்தவன் தங்கையை ஒரு வினாடி ஏறிட்டு பார்க்க, அவளின் விழிகளோ அவள் மொத்த உடலுக்குள் இருந்த நடுக்கத்தை பிரதிபலித்தது.
அலைபேசியை ஏற்று செவியில் வைத்த ரோஹித், “மாமா” என்றிட, “கெட் அவுட் ஆஃப் தேர் ரைட் நவ் (Get out of there right now)” என்ற ஸ்ரீராமின் அதிகராமும், ஆணையும் கலந்து தெறித்த குரலே கூறியது, அவனின் கோபம் விண்ணளவை அடைந்து விட்டது என்பதை.
அதற்கு மேல் ஒரு வார்த்தை அங்கு பேசினாலும் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை அறிந்த ரோஹித், அமைதியாக அலைபேசியை துண்டித்தவன், “போய் கார்ல ஏறுங்க” என்று போட்ட உறுமலில், ராதிகாவும், ரூபாவும் அரண்டு போய் காரில் ஏறினர்.
பப்பில் இருந்து வெளியே வந்த ஒரு பவுன்சர், அலைபேசியை அங்கிருந்த பெரிய அதிகாரியிடம் தர, அலைபேசியை வாங்கி பேசியவரோ, பம்பிய பம்பில் ரோஹித்திற்கு புரிந்தது.
அப்போதுதான் பப்பின் பெயரை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தான். ஸ்ரீராமின் நண்பனுடைய பப் அது. விஷயம் அதனால் தான் அங்கு சென்றிருக்கிறது என்பதை யூகித்தான்.
ரோஹித் வந்து காரில் ஏறும் பொழுது, யாரோ ஒருவரின் செவிப்பறை கிழியும் சப்தம் கேட்டது. அங்கிருந்து அவர்களை பத்திரமாக அழைத்து வந்தவன், வரும் வழியில் இருவரையும் வறுத்தெடுத்து விட்டான்.
“உன்னை கொஞ்சம் ஃப்ரீயா விட்டதுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட.. உன்னை சொல்லி இல்ல.. சேர்க்கை அப்படி” என்று ரியர் வியூ மிரர் வழியாக ரூபாவை முறைத்துக் கொண்டே அவன் சொல்ல, அவளுக்கு கோபம் வந்தது.
பின்னே ராதிகாவோடு அமர்ந்து கொண்டு, அவனை கண்ணாடி வழியாக முறைத்தாள்.
“என்ன முறைக்கிற? வீட்டு கார்ல வந்தா ட்ரைவர் சொல்லிடுவானு இரண்டு பேரும் கேப்ல வந்திருக்கீங்க.. நீதான் ஐடியா குடுத்தியா?” என்று எகிற, அவளுக்கும் சுயமரியாதை உண்டு அல்லவா?
வந்தது இரண்டு பேருமே. இவன் தங்கை ஏதோ வாயில் விரல் வைத்தால் கூட கடிக்க தெரியாத குழந்தை போலவும், இவள் தான் அவளை அழைத்து வந்து கெடுத்தது போலவும் பேசியது அவளின் கோபத்தை தூண்டியது.
ராதிகாவை பார்த்தாள்.
அவளோ எதுவும் அறியாத பிள்ளை போல அமர்ந்திருந்தாள். அவள் தானே, இங்கு ரூபாவை அழைத்து வந்தது கூட.
அண்ணன் தங்கை செயலில் கோபம் எழ, “ராதிகா! காரை நிறுத்த சொல்லு” என்றிட,
“ரொம்ப பண்ணாத.. உண்மையாவே இறக்கி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்” ரோஹித் மிரட்ட, கதவை திறக்கச் சென்றுவிட்டாள் ரூபா. அதில் அண்ணன் தங்கை இருவருமே பயந்து போக, காரை ஓரமாக நிறுத்தினான் ஆடவண்.
அடுத்த நொடியே காரிலிருந்து இறங்கியவள், கார் கதவை அடித்துச் சாற்ற, ரோஹித்தும் அவளின் திமிரில் தாமதிக்கவில்லை. காரை எடுத்துவிட்டான். ராதிகா எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.
ராதிகாவை வீட்டில் விட்டவனுக்கு மனம் கேட்கவில்லை. தங்கையை இறக்கிவிட்ட கையோடு, ரூபாவை இறக்கிவிட்ட இடத்திற்கு விரைந்து செல்ல, அவளோ அதே இடத்தில் அசையாது நின்றிருந்தாள்.
அவளின் அருகே காரை நிறுத்தியவன் கண்ணாடியை கீழே இறக்க, அவளோ அவன் வந்தது தெரிந்தும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நின்றாள்.
“ஏய் சீன் போடாதடி.. வந்து ஏறு” என்றிட, அவளின் கோபம் இறங்கவில்லை.
காரிலிருந்து இறங்கியவன் அவளிடம் செல்ல அவளோ அப்போது தான், அவனை கண் கொண்டே பார்த்தாள்.
“சாரி” என்றான்.
அவளிடம் அசைவில்லை.
“வா டி.. வந்து முதல்ல கார்ல ஏறு” என்றவன், அவளின் கரத்தின் முட்டியை பற்றி உள்ளே ஏற்ற, அவளோ எதுவும் பேசாது ஏறிக் கொண்டாள்.
இருவரும் பதின் வயதின் இறுதியில் காதலிக்கத் துவங்கியது. இப்போது வரை சிறு சிறு ஊடல்களோடும், அதீத காதலோடும் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு வழியாக அவளை சமாதானம் செய்து வீட்டில் இறக்கி விட்டவன், அடுத்த நாள் கண் விழித்தது ஸ்ரீராமின் முகத்தில் தான். ஒரு பிசினஸ் மீட்டிங்கிற்காக சிங்கப்பூர் சென்றிருந்தவன் வந்துவிட்டான்.
அந்த பரந்த வரவேற்பறையில் ஸ்ரீராம் கால் மேல் காலிட்டு அழுத்தமான பார்வையோடு அமர்ந்திருக்க, அவனின் முன்பு கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள் ராதிகா.
தூங்கி எழுந்து படிகளில் இறங்கி வந்த ரோஹித், அந்த காலை வேளையில் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருந்த ஸ்ரீராமை கண்டு, திடுக்கிட்டு தான் போனான்.
‘நாம அப்படியே வந்தது தெரியாம நைசா மேல போயிடுவோம்..’ என்று மெதுவாக திரும்பி தப்பிக்க பார்க்க, “தம்பி! டீ எடுத்துட்டு வரட்டுமா?” என்று வந்தார் சமையல்காரர் வேலு.
கண்களை அழுத்தமாய் மூடித் திறந்தவன், வரவேற்பறையை நோக்கி திரும்ப, ஸ்ரீராமின் பார்வை ராதிகாவின் மேலிருந்து மாறவில்லை.
“வேலு அண்ணே! எப்பவாது வந்து இப்படி கேட்டு இருக்கீங்களா?” என்று கேட்க, ஸ்ரீராம் அமர்ந்திருந்ததையும், ராதிகா, ரோஹித் நின்றிருந்ததையும், மாறி மாறி பார்த்தவர், நெற்றியை சொரிந்து கொண்டு சென்றுவிட்டார்.
ஸ்ரீராம், “ரோஹித்! இங்க வா” என்று அழுத்தமாக அழைக்க, அவனும் ராதிகாவின் அருகே சென்று நின்றான். வசுந்தராவும் காபியை கலந்து வந்தவர் மகனுக்கு ஒன்று தந்துவிட்டு தானும் எடுத்துக் கொண்டு மகனின் அருகே அமர்ந்து கொண்டார்.
அவருக்கோ சிறுசுகள் மாட்டிக் கொண்டதில் உள்ளுக்குள் நகை. இருந்தும் மகன் கண்டிக்கட்டும், இல்லையெனில் கெட்டுவிடுவார்கள் என்று தலையிடாமல் அமர்ந்துவிட்டார்.
ஸ்ரீராம், “ராதிகா!” சிம்மக் குரலில் அழைத்ததில் பெண்ணவளோ, மிரண்டு விழித்தாள்.
ராதிகாவை பார்த்தபடியே அன்னையிடம் நேற்று நடந்ததை கூறியவன், “நேத்து நடந்ததை எவனாவது வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவுல போட்டிருந்தா என்ன ஆகுறது?” என்று கேட்டவன்,
“இந்த சொசைட்டிக்கு என்ன சொன்னாலும் புரியாது.. பொண்ணுங்க மேல தான் பழியை போடும்.. அதுவும் நேத்து நீங்க போட்டிருந்த ட்ரெஸ்..” என்று பல்லைக் கடித்தவன் ஒரு துளி அசையாது தன் விழிகளாலேயே, பெண்ணவளை மிரள வைத்துக் கொண்டிருந்தான்.
“இந்த ஊர் சுத்துறது இதெல்லாம் தான் பெரிய இதுன்னு நினைக்காம, ஏதாவது அச்சீவ் பண்ண பாருங்க.. ரியல் ஃபெமினிஸ்ம் வேற.. இனிமே இந்த மாதிரி ஏதாவது வந்துச்சு..” என்று நிதனமாக நிறுத்தியவனின் விழிகள் நிதானமாக இல்லை.
அடக்கப்பட்ட ஆத்திரத்தை அவனின் கடிக்கப்பட்ட கீழ் இதழ்கள் அப்பட்டமாய் காட்ட, ராதிகா எச்சிலை மென்று விழுங்க, “தொலைச்சிடுவேன்” என்று அடிக்குரலில் கர்ஜித்தான்.
மொத்தத்தில், ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் அன்னையின் வளர்ப்பில் வந்த ஒரு ஹிட்லர் அவன்.
ரோஹித்திடமும், “அவங்க சின்ன பொண்ணுங்க.. நீதான் கவனமா இருக்கணும்.. நான் இல்லைனா அவங்க மேல உன் கவனம் இரண்டு மடங்கா இருக்கணும்.. இனி அந்த மாதிரி வந்தா தொலைச்சிடுவேன்னு சொன்னது அவங்களுக்கு விட உனக்கு தான்..” என்றிருந்தான்.
இதுதான் அவன்.
அதன் பிறகு ராதிகாவும், ரூபாவும் அந்த மாதிரி இடங்களுக்கு சென்றதில்லை.
இரண்டு வருடத்தில் விஷால்-ராதிகாவின் திருமணம் முடிய, அடுத்து ஒரு மாத இடைவெளியிலேயே ரோஹித்-ரூபாவின் திருமணமும் முடிந்தது.
அவர்கள் நால்வரின் வாழ்வும் எந்த பிசிரும் இன்றி இப்போதுவரை செல்ல, வசுந்தரா மகனுக்கான வரன்களை பற்றிய சிந்தனையோடே ‘சேர்மன்’ என்று பொறிக்கப்பட்டு இருந்த கதவை நோக்கிச் செல்ல, அவருக்காக அன்றைய கோப்புகளோடு காத்திருந்த ப்யூன் கதவை அவருக்காக திறந்துவிட, அந்த இடத்திற்கே உரித்தான கம்பீரத்தோடு தன் இருக்கையில் சென்று அமர்ந்தார் அந்த இரும்புப் பெண்மணி.
கலை மற்றும் அறிவியல், பொறியியல், பல் மருத்துவம் மூன்றுமே பலமாய் வீற்றிருக்க, அடுத்த கட்டமாக மருத்துவத்திற்கு இப்போது அன்னையும், மகனும் திட்டமிட்டுக் கொண்டு இருந்தனர்.
கணவரின் கனவான பள்ளியை விட்டுவிடக் கூடாது என்று துவங்கியவர், இப்போது ஒரு சாம்ராஜ்யத்தையே மகனுக்காக உருவாக்கிவிட்டார்.
காரை நிறுத்திவிட்டு வந்த ஸ்ரீராம், அதே அறைக்கு அருகே, ‘வைஸ் சேர்மன் அன்ட் பிரின்சிபால்’ என்று பொரிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான்.
அன்றைய காலை இருவருக்குமே வேலை சரியாக இருக்க, சிறிது நேரம் தன்னுடைய லேப்டாப்பில் முக்கிய அஞ்சலை அனுப்பியபடி இருந்தவன், அருகே ஓடிக் கொண்டிருந்த சிசிடிவியை பார்த்தான்.
மாணவர்கள் சிலர் வெளியே நிற்பது தெரிய, ஒரு நொடி புருவங்கள் நெறிந்தாலும் மறுநொடி என்னவென்று யூகித்தவன், இருக்கையில் இருந்து எழுந்தான்.
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். இவனை கண்டதும், “குட் மார்னிங் ஸார்” என்று சொன்னவர்களிடம், தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு சேர்மனின் அறையை தட்டிவிட்டு உள்ளே சென்றான்.
உள்ளே வந்த மகனை கண்டவர், தன் மூக்குக் கண்ணாடியை அகற்றியபடி என்னவென்று பார்க்க, வெளியில் மாணவர்கள் நிற்பதை கூறினான்.
யோசனையோடு அவர் ப்யூனை பார்க்க, “கல்ச்சுரல்ஸ் விஷயமா பாக்கணும்னு சொன்னாங்க மேம் நேத்தே.. நீங்க நேத்து பிசியா இருந்ததுனால நான்தான் வைஸ் சேர்மன் ஸார் வந்தவுடனே வர சொன்னேன்” என்றிட, அவர்களை உள்ளே அனுப்ப கூறினார் வசுந்தரா.
அன்னையின் எதிரே அமர்ந்தவன், குறுஞ்சிரிப்புடன், “என்ன லிஸ்ட் போட்டிருக்காங்கன்னு தெரியல” என்றிட அவரும் நகைத்தார்.
வெளியே நின்றிருந்த பத்து பேரும் உள்ளே வர, இருவரும் திரும்பினர். நிறுவனத்தின் மூன்று கல்லூரியில் இருந்துமே சேர்ந்து நடத்தும் விழா என்பதால், பத்து பேராக வந்திருந்தனர்.
அனைவரையும் பார்த்த வசுந்தரா, “டேட்ஸ் எல்லாம் என்னனு டிசைட் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க, “எஸ் மேம்..” என்று வசுந்தராவிடம் ஒரு பேப்பரை நிட்டினர்.
அதில் மூன்று நாட்கள் நடப்பதற்கு உண்டான அனைத்து நிகழ்ச்சிகளும் இருந்தது.
வசுந்தரா மூன்று நாட்களுக்கு உண்டானதை பார்வையிட்டுக் கொண்டிருக்க, அங்கு வருகை தந்திருந்த ஒரு மாணவியோ ஸ்ரீராமை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.
மற்றொரு மாணவி அவளின் காலை மிதிக்க, அவளிடம் முகத்தைக் காட்டியவள், “சூப்பர்ல?” என்று கிசுகிசுத்துக் கண்களாலேயே கேட்க, அவளும் இலேசாக எம்பி பார்த்தவள், இரு புருவங்களையும் தூக்கி காட்டினாள்.
“சூப்பர்.. பெர்ஃபெக்ட்..” வசுந்தரா கூற, “எஸ் மேம்” என்றாள் ஒருத்தி ஸ்ரீராமை பார்த்தபடியே.
அருகே இருந்த தோழி இடித்ததில் சுயநினைவிற்கு வந்தவள் வசுந்தராவை நோக்க, ஸ்ரீராமோ நடந்தது அறிந்தும் கண்டும் காணாதது போல இருந்தான்.
ஸ்ரீராமிடம் தன் கரத்திலிருந்த பேப்பரை நீட்டிய வசுந்தரா, “நீங்க ஒரு தடவை செக் பண்ணிடுங்க ஸ்ரீராம்” என்றார்.
பேப்பரை தன் கரத்தில் வாங்கியவன் ஒவ்வொன்றாக சரி பார்த்தபடி, “ஃபினான்ஷியல் டார்கெட்ஸ் என்ன?” என்று கேட்டான்.
“ஸார்.. நாங்க கணக்கு போட்டு பாத்ததுல குறைஞ்சபட்சம் நாற்பது லட்சம் ஆகிடும்” என்று ஒரு மாணவன் கூற, ஸ்ரீராம் அன்னையை ஏறிட்டு பார்த்தான்.
வசுந்தரா, “போன கல்ச்சுரஸ் விட அதிகமா இருக்கே?” என்று யோசனையோடு கேட்க, அவர்களிடம் பதிலில்லை.
அவர்களையே பார்த்திருந்த ஸ்ரீராம், “சீஃப் கெஸ்ட் யாரு?” என்று விசாரித்தான்.
ஒருவருக்கு ஒருவர் முகத்தைப் பார்த்தவர்கள், “ஸார் முதல் நாள் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்..” அவர்கள் துவங்க, ஆள்காட்டி விரலை மட்டும் ஸ்ரீராம் உயர்த்தியதில் அவர்களின் பேச்சு தானாக நின்றது.
அவர்கள் அவனையே பார்க்க, தோள்களை தோரணையோடு குளுக்கி அவர்களை பார்த்தவன், “மூணாவது நாள் யார் வர்றா?” என்று கேட்டான்.
“ஆக்ட்ரெஸ்… ஸார்” அவர்கள் பெயரை சொல்லி கூற, ஆண் பிள்ளைகளின் வாயில் வழிவது அப்பட்டமாய்த் தெரிந்தது.
ஸ்ரீராம் அன்னையை பார்க்க, அவரும் அதே யோசனையோடு தான் இருந்தார்.
முதல் இரண்டு நாட்கள் பேச்சாளர்கள், விளையாட்டு வீரர்கள், பெரும் அதிகாரிகள் என்று அழைப்பவர்கள், இறுதி நாள் மட்டும் சினிமாத் துறையில் இருக்கும் யாராவதை தான் அழைப்பார்கள்.
இயக்குனர், நடிகர், நடிகை, பாடகர், இசை அமைப்பாளர் என யாரை வேண்டுமானாலும் அழைப்பது வழக்கம்.
இப்போது, ‘அவள்’ என்று வந்து நின்றது.
வசுந்தரா, “எவ்வளவு கேக்கறாங்க?” என்று வினவ, “அவங்க சிக்ஸ் லேக்ஸ் கேக்கறாங்க மேம்” என்றான் ஒரு மாணவன்.
மாணவனின் பதிலில் வியப்புடன் புருவங்களை உயர்த்திய வசுந்தரா, “ஆறு லட்சமா? அதுவும் ஒரு நாள் வந்துட்டு போறதுக்கு” என்றுவிட்டு மகனை பார்த்தார்.
அவனோ மாணவர்களை பார்த்தவன், “நீங்க எப்படி கான்டாக்ட் ப்ண்ணீங்க? என்று கேட்க, “ஸார்! அவங்க பிஏவோட தங்கச்சி இவளோட ஸ்கூல் பிரண்ட்” என்று அருகே இருந்த பெண்ணை காட்டிட, அவளும் தலையாட்டினாள்.
வசுந்தரா ஏதோ பேச வரும்முன், “ஓகே தென்.. மேமும் நானும் இதுக்கு மட்டும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்றோம்..” என்றவன்,
“கெட் பக் டு யோர் கிளாஸ் ரூம்ஸ்” என்று தன் கையிலிருந்த பேப்பரை இருவிரலால் மேஜையில் வைத்தபடி கூற, அனைவரும் எதுவும் பேசாது வெளியே நகர்ந்தனர்.
அம்மாவும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்ன சொல்ற ஸ்ரீராம்?” வசுந்தரா கேட்க, “சீஃப் கெஸ்டா கூப்பிடற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டாளா?” என்று வார்த்தைகள் அவனிடமிருந்து இளக்காரமாக வந்தது.
“ஸ்ரீராம்!” வசுந்தரா கண்டிக்க, அன்னையை பார்த்தபடி எழுந்தவன், தன்னுடைய அறைக்கு சென்றான்.
அன்று வசுந்தரா விரைவாகவே வீட்டை அடைய, ஸ்ரீராம் ஒரு மந்திரியை மருத்துவ கல்லூரி விஷயமாக பார்த்துவிட்டு கிளம்ப மணி பத்தரை ஆகியிருந்தது.
வரும்வழியில் சிக்னலில் காரை நிறுத்தியவனின் மியூசிக் சிஸ்டம், “மஞ்சள் வெயில் மாலை இதே..” பாட்டை துவங்க, அதே சமயம், தூரத்தில் இருந்த பெரும் நகைக் கடையின் மேலே இருந்த எல்இடி விளம்பரத்தில் அவளின் படம் இருந்தது.
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட-கூட வந்தாய்
வெண்ணிலவே வெள்ளி-வெள்ளி நிலாவே
நட்சத்திர பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்
அவளை பார்த்தபடி பாடலை செவியில் வாங்கியவனுக்கு, கேட்டுக் கொண்டிருக்கும் பாடலின் கதாநாயகயின் பெயரும், இவளின் பெயரும் ஒன்று என்பது நினைவில் வந்தது.
அவளின் புகைப்படத்தையே பார்த்திருந்தவன் சிக்னல் விட்டதும் “ஆராதனா!!!” என்ற அவளின் பெயரை அழுத்தமாய் உச்சரித்தபடி கியரை போட்டு தன்னுடைய வால்வோவை, ராட்சத வேகத்தினில் எடுக்க, அந்த பெயருக்கான சொந்தக்காரியோ மதுவின் பிடியில் பார்ட்டியில் ஆடிக் கொண்டிருந்தாள்.
அவள்!
அவனின் முன்னாள் காதலியோ, பிரிந்து சென்ற மனைவியோ இல்லை.
ஆனால், வெறியை கிளப்பிக் கொண்டிருந்தாள்.
விதி என்பவன் ஒரு அழகிய வில்லன் அல்லவா!
அவன் போட்ட முடிச்சை எப்படியேனும் நிறைவேற்றிக் கொள்வான். ஆனால், இந்த இருவருக்கு அவனே படாதபாடு படப் போகிறான் என்பதை அவன் அறியவில்லை.