

அத்தியாயம்-3
“உன் பிரண்ட் கிட்ட பேசுனியா?” ரோஹித் கண்ணாடிக் குவளையில் பழச்சாறை ஊற்றியபடி வினவ, தலைமுடியை கொண்டை போட்டபடி கணவனின் அருகே வந்த ரூபா, “யாரை கேக்கறீங்க?” என்று கேட்டாள்.
மனைவியின் கரத்தில் பழச்சாறை கொடுத்தவன், “அதுதான் முட்டி போட்டு உக்காந்தா கூட உன்னோட ஹைட்ல இருக்குமே ஒண்ணு.. அது” என்று கேலி செய்ய, கணவனை முறைத்துத் தள்ளினாள் அவள்.
“சும்மா அவளை ஏதாவது சொல்லாதீங்க..” என்றவளுக்கு மெய்யாலுமே கணவனின் கேலியில் கோபம் வந்தது.
“சரி சரி எதுவும் சொல்லலை.. புது படம் ரிலீஸ் ஆகியிருக்கே.. பேசியிருப்பேன்னு நினைச்சேன்..” என்றவனின் பேச்சில் சமையற்கட்டின் வாயில்வரை சென்றவள் அவனை திரும்பிப் பார்த்தாள்.
மனைவியின் பார்வையில் குறுஞ்சிரிப்பு புரிந்து விழிகளை சிமிட்டியவன், “நானும் ஏற்கனவே ஃபேன்(fan) தானே” என்றிட, “நேத்து நைட் பேசுனோம்..” பழச்சாறை அருந்தியபடி வரவேற்பறையில் சென்று அமர்ந்தாள்.
மனைவியின் அருகே சென்று அமர்ந்தவன், இன்ஸ்டாகிராமை நோண்டியபடி, “சோஷியல் மீடியாவுல பாத்தேன்.. எல்லாம் விழுந்து கெடக்குறானுக” என்று சொல்ல, “ரோஹித்” என்றழைத்தாள்.
அவளின் குரலில் கோபம் இல்லை. மாறாக ஒரு வித சோகம் இருந்தது.
அவனும் தன்னவளை ஏறிட்டு பார்க்க, மருண்ட விழிகளோடு, “குழந்தை பிறந்துட்டா என் மேல இருக்க இன்ட்ரெஸ்ட் போயிடுமா உனக்கு” என்று கேட்க, அவளின் அகண்ட விழிகளை கண்டவனுக்கு அவளின் மனவோட்டம் புரியாதா?
அவனின் உலகமே அவள் தானே!
அவளிடம் இருந்து இப்படியொரு கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை.
“ஏண்டி என்னை பாத்தா எப்படி தெரியுது?” காட்டமாகக் கேட்டவன், “என்னை இத்தனை வருசம் லவ் பண்ண இல்ல.. இவ்வளவு தான் புரிஞ்சு வச்சு இருக்கியா?” சினம் மிக கேட்டவன், அதே நிலையோடு எழ, அவனின் கரத்தை சட்டென பிடித்துக் கொண்டவளுக்கு மேடிட்ட வயிற்றை வைத்துக் கொண்டு எழ முடியவில்லை.
தலையை சரித்து அவளை பார்த்தவன் கரம் நீட்ட, எழுந்து நின்றவள், “சாரி” என்றார்.
“இங்க பாரு.. உன் பிரண்டை பாக்குற அளவுக்கு நான் சீப் இல்ல.. சும்மா உன்னை வெறுப்பு ஏத்த சொன்னேன்.. அப்புறம் எதுக்குடி ஆறு வருசம் உன்னை லவ் பண்ணி உன்னையே கல்யாணம் பண்னேன்” என்று எகிற, “சாரி” என்றவளை முறைத்தான்.
அவனோ இறங்காது நிற்க அவனின் முன் நின்றவள், விழிகளாலேயே செல்லம் கொஞ்சி அவனை அணைக்கச் செல்ல, அவளின் சற்று மேடிட்ட வயிரோ இடித்தது.
அதில் அவனின் இதழோரம் நகை பூக்க, கணவனை பொய்யாய் முறைத்து சிரித்தவள், “லவ் யூ” என்றாள் அவனின் கழுத்தில் கரம் கோர்த்து.
அவளின் செயலில் கோபம் அடித்து கொண்டு ஓட, மனைவியை அணைத்தவன், “இந்த மாதிரி எல்லாம் நினைக்காத.. உன்னை தாண்டி சைட் அடிப்பனே தவிர எங்கையும் போக எல்லாம் மாட்டேன்” என்று சிரித்துக் கொண்டு முடிக்க, அவனின் நெஞ்சில் குத்தினாள்.
“ப்ராமிஸ்.. மஹாலஷ்மி மாதிரி என் பொண்டாட்டி இருக்கும் போது ஆராதனா எல்லாம்.. அதுவும் இல்லாம அவளுக்கு அவ்வளவு சீன் இல்லை.. வெறும் மேக்கப்” ரோஹித் இழுக்க, அவனை ஏறிட்டு பார்த்தவள், “ஏன் அவளுக்கு என்ன குறை.. ரொம்ப அழகு அவ” என்றாள் தோழியை விட்டுக் கொடுக்காது.
இருவருக்கும் அதில் கருத்து வேறுபாடு துவங்க, அந்த தலைப்பிற்கான சொந்தக்காரியோ, தன் அறையில், தலைவியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
தங்க நிற கிங் சைஸ் பெட் அறையின் மத்தியில் இருக்க, அறையின் ஆஃப் வைட் சுவர் அறையின் மெருகை வேறுமாதிரி பணக்காரத் தன்மையோடு காட்ட, அவளின் சிறிய வயது புகைப்படமோ சுவற்றில் ஐந்தடிக்கு மாட்டப்பட்டிருந்தது.
பிங்க் நிற கவுன் அணிந்து, நான்கு வயது சிறுமியாய் அவள் மஷ்ரும் கட்டில் தன் அரிசிப் பற்களை காட்டிக் கொண்டு இருக்கும் புகைப்படம் அது. கையில் ஒரு ரோஜா பூவை வேறு பிடித்து இருப்பாள்.
முகத்தில் அந்த குழந்தைத்தனம்!
அந்த குழந்தைத்தனம் கொண்ட முகம்…
ஆராதனா!
தன் படுக்கையில் புதைந்து உறங்கிக் கொண்டிருந்தவளின் ஒரு கரமும், ஒரு காலும் படுக்கையில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது.
நேற்றைய இரவின் கொட்டத்தின் விளைவு இது!
சில இடங்களில் மட்டும் அடர் பழுப்பு வண்ணத்தில் கலர் செய்யப்பட்டு, கருகருவென்று இருந்த வஞ்சியவளின் கார்குழலோ, பஞ்சு மெத்தையில் இருந்து வழிந்து தரையை முத்தமிட்டுருந்தது.
இதழ்களோ மெலிதாய் திறந்திருக்க, ஏசி காற்றில் மனம் நிறைய குப்புறப் படுத்திருந்தவளின் அலைபேசி அலார சப்தத்தில் கூவியது.
அதில் இலேசாக விழிப்புத் தட்ட, “ம்ம்ம்மஹ்” சோம்பலும், நேற்றைய இரவின் விளைவான தலைவலியோடும் எழ, பாதி படுக்கையில் படுத்திருந்தளோ எழுந்து அமரவே தடுமாறினாள்.
அவள் எழுவதற்கு உள்ளாகவே அலாரம் தானாக நின்றுவிட்டது. தூக்கம் ஒருபக்கம் தள்ளினாலும் அலைபேசியை எடுத்து மணியை பார்த்தாள்.
அன்று அவளுக்கு எந்தவொரு ஷூட்டும் இல்லை தான். அதனால் தானே நேற்று பார்ட்டி.
இருந்தாலும் அவளுக்கு படுத்திருக்க பிடிக்கவில்லை.
தன் அறையில் உள்ள டெலிகாமின் வாயிலாக சமையல் அறைக்கு இணைத்தவள், “பத்து நிமிஷம் கழிச்சு டீ வேணும்” என்று வைத்துவிட்டாள்.
அறையின் சென்ட்ரலைஸ்ட் ஏசியை அணைத்தவள், எழுந்து சென்று தங்க நிற பால்கனி திரையை விலக்கினாள்.
வெளியே ஒரு வெண் புறா அமர்ந்திருந்தது.
கண்ணாடி தடுப்பின் ஊடே அதை கவனித்தபடியே, கதவையும் தள்ளியவள் அதன் அருகே சென்றாள்.
அதுவோ அசையாது நின்றது.
தன் இரு தந்தக் கரங்களையும் உயர்த்தி கோர்த்து சோம்பல் முறித்தவளின் வனப்புகளை கண்டு, அது தன் தலையை இலேசாக சரித்தது.
யார் தான் ரசிக்காது இருக்க முடியும் இந்த பேரழிகியை!
பிரபஞ்சம் மொத்தமும் ஆசிர்வதித்த ஒரு அழகு!
சந்திர வதனம் கொண்டவளின் கார்குழலில் துவங்கி தாமரை போன்ற மென்பாதம் வரை பெண்ணவளின் அழகு கொட்டிக்கிடக்க, ஐந்தே முக்கால் அடி கொண்டவளின் அறுபது கிலோ எடையும், கிள்ளினால் கூட சதை அதிகம் வராத இடையும் அவளை சந்தன மரக்கட்டையை போல காட்டியது.
அதுவும் அவளின் விழிகள்!
பாலில் விழுந்த வண்டாய் அவளின் கருவிழிகள் தன் நடிப்புத் திறனை காட்டும் பொழுதெல்லாம் அவளின் நடிப்பில் விழாதவர் எவரும் இல்லை.
சிற்பங்களில் இருக்கும் உதடுகளும், நாசியும், தீட்டிய புருவங்களும், சங்குக் கழுத்தும், இறுகிய அங்கங்களும், வளைந்திருந்த வனப்புகளும் என அவளின் அழகுக்கு வர்ணனைகளை கொடுத்துக் கொண்டே செல்லலாம்.
அப்படி இருப்பவளை தினமும் இரசிக்கும் ரசிகர்களுள் இந்த புறாவும் ஒன்று.
முகத்தை கழுவி விட்டு, வந்தவளுக்காக தேனீர் காத்திருக்க, கோப்பையோடு அலைபேசியையும் எடுத்துக் கொண்டு சென்று பால்கனியில் அமர்ந்தவள், தன்னுடைய தோழிக்கு அழைத்தாள்.
சரியாக தன் தோழியை பற்றி கணவனிடம் வாதாடிக் கொண்டிருந்த ரூபா அலைபேசியை எட்டி எடுத்தவள், கணவனிடம் நாக்கை துருத்திக் காட்டிக் கொண்டே, “சொல்லுங்க மேடம்.. அல்ரெடி முதல் இரண்டு படத்துல எல்லாரையும் விழ வச்சீங்க.. இப்போ.. படுத்தே விட்டான்னேயா.. அப்படி ஆகிடுச்சு போல” என்றிட,
தோழியின் பேச்சில் சிறு புன்னகை எட்டிப் பார்க்க, “ம்ம்” என்றவள், “எப்படி இருக்க? செக்கப் எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்டாள்.
“ம்ம் நல்லாருக்கேன் டி.. செக்கப் எல்லாம் நார்மல் தான்.. சீக்கிரம் இண்டியா வந்திருவேன்..” என்றாள் ரூபா.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, “ரூபா” என்ற ஆராதனா, தான் யூஎஸ் வரவிருப்பதாக கூறினாள்.
“வாவ்.. சூப்பர்டி.. வா வா.. வெயிட்டிங்” என்றவள், “எவ்வளவு வருஷம் ஆச்சு நாம சுத்தி..” என்றாள் குதூகலமாக.
அதில் இலேசான புன்னகை எட்டி பார்க்க, “ம்ம்” என்று மட்டும் வந்தது அவளுக்கு.
அவளின் மனதில் தான் செய்யப் போகும் காரியத்திற்காக ஆயிரம் கேள்விகள்.
அச்சம் என்பதெல்லாம் அவளுக்கு துளியும் இல்லை.
ஆனாலும் நிறைய யோசனை, தான் யாரும் அறியாது செய்யப் போகும் காரியத்தை யோசித்து.
உடல் பால்கனி தென்றலால் தீண்டிக் கொண்டிருந்தாலும், விழிகளோ வானில் மிதந்து கொண்டிடருந்த முகில்களை வெறித்துக் கொண்டிருந்தது.
“ஹே! நான் பேசறது கேக்குதா? ஹெல்லோ” என்று ரூபா மறுபக்கம் இருந்து கத்த, “ஹான் ஹான்.. இருக்கேன்” என்றாள் சுயநிலைக்கு திரும்பியவளாக.
“என்னாச்சு? எப்ப வர்ற? எவ்வளவு நாள் இருப்ப? இங்க தான் தங்கணும் சரியா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க, “ரூபா” என்று ஆராதனா கடுப்புடன் அழைத்ததிலேயே ரூபா நாக்கை கடித்துக் கொண்டாள்.
“ஸாரிங்க ஹீரோயின் மேடம்.. உங்க டேட்ஸ் தெரியாம கேட்டுட்டேன்” என்று கூற பெண்ணவளின் செவ்விதழ்களில் மென்னகை அரும்பியது.
ரோஹித்தோ மனைவியின் அலைபேசியின் அருகே செவிகளை வைத்து, அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்க, கணவனை தள்ளியவள், “சரி என்னன்னு பாத்துட்டு கால் பண்ணுடி” என்று அழைப்பை வைத்தாள்.
அலைபேசியை வைத்த ஆராதனாவோ, ரூபாவோடு பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய பிஏ மனோஜ் தனக்கு அழைத்திருப்பதைக் கண்டாள்.
அதுவும் இரண்டு முறை!
அவனுக்கு திருப்பி அழைத்தவள், “எஸ் மனோஜ்?” என்றிட,
“மேம்! ஒரு காலேஜ்ல கல்ச்சுரல்ஸுக்கு உங்கள சீஃப் கெஸ்டா இன்வைட் பண்ணியிருக்காங்க” என்றான்.
“மனோஜ்.. உன்னை நான் வேலையை விட்டு தூக்கறேன்னு சொன்னா உனக்கு புரியுமா? ஏன் எதுக்குன்னு சொல்லனும் தானே?” என்று அழுத்தமாக கேட்டாள். அதில் எச்சரிப்புத் தொணியும் இருந்தது.
அதில் சற்று தடுமாறியவன், “வி.ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்டியூட்சன்ஸ் மேம்.. இந்த மன்த் என்ட்” என்றான்.
மனோஜ் கூறிய கல்வி நிறுவனத்தின் பெயரை கேட்டதும், “வாட்? கம் அகைன்” என்றாள் இதழ்களில் சிறு திமிர்ப் புன்னகையோடு.
“வி.ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்டியூட்சன்ஸ் மேம்.. இந்த மன்த் என்ட்” மீண்டும் மனோஜ் கூற, “ஓஹ்!!!” என்றவளின் குரலில் எகத்தாளம் மட்டுமே மிஞ்சி இருந்தது.
அவளுக்கு சுவாரஸ்யமும் கூட!
‘எப்படி இது சாத்தியம்?’ என்ற கேள்வி அவள் மூளையை வண்டாய் குடைந்தது.
“யார் அழைச்சது மனோஜ்? இ மீன் யாரு இன்வைட் பண்ணாங்க? நீங்க என்ன சொன்னீங்க?” என்று ஒவ்வொரு கேள்விகளையும் நிறுத்தி நிதானமாக கேட்டாள்.
“மேம்.. அந்த காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் சேர்மன் மேம்..” என்றிட, “ம்ம்.. பேமென்ட் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்களா?” என்று கேட்டாள்.
“மனோஜ் உனக்கே தெரியும்.. எனக்கு அபிஷியலா இன்வைட் பண்ணா தான் போவேன்னு” என்று தனக்கே உண்டான அதிகாரத்தோடு கூறியவள், “அந்த காலேஜ்ல இருந்து எனக்கு டைரெக்ட் கால் வரணும்” என்று எதிரில் இருந்தவனின் பதிலுக்கு கூட காத்திருக்காது அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அன்று காலை கல்லூரிக்கு வந்திறங்கிய ஸ்ரீராமின் செவிகளில் இது விழ, கோபம் என்னும் அக்னி பிழம்பு உள்ளுக்குள் வெடித்தது அவனுள்.
அன்னையின் அறைக்குள் மின்னலென நுழைந்தவன், “ம்மா! சீஃப் கெஸ்ட்டை மாத்துங்க.. அவ ஒண்ணும் இங்க வரணும்னு இல்ல.. நாம ஒண்ணும் சும்மாவும் யாரையும் கூப்பிடல..” என்று வாதாட, மகனை பொறுமையாக ஏறிட்டு பார்த்த வசுந்தரா,
“அது அவ செல்ஃப் ரெஸ்பெக்ட் ஸ்ரீராம்.. அவ எதுவும் பெருசா கேட்டிடல.. நிறைய பேர் இப்ப எல்லாம் அபிஷியலா கூப்பிட்டா தான் வர்றாங்களாம்.. லாஸ்ட் இயர் சென்ட்ரல் மினிஸ்டரையும் அப்படி தானே இன்வைட் பண்ணோம்..” என்று கேட்க, அவனின் முகமோ மாறியது.
“மினிஸ்டரும் இவளும் ஒண்ணா ம்மா” ஸ்ரீராம் இளக்காரமாய் கேட்க, “ஸ்ரீராம்! யாரையும் இந்த மாதிரி பேசாத” என்று மகனை சற்று கண்டித்தார்.
அதில் அவனுக்கும் அடக்கப்பட்ட கோபம் எட்டிப் பார்க்க, “என்னமோ பண்ணுங்க.. பட் நான் இன்வைட் பண்ணமாட்டேன்..” என்று வெளியேறி விட்டான்.
வெளியேறும் மகனையே கண்ட வசுந்தரா, ‘இவனுக்கு அந்த பொண்ணோட என்னதான் பிரச்சனையோ’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
அன்று மதியமே ஆராதனா வரவிருப்பது உறுதி என்ற செய்தி கல்லூரி முழுதும் பரவ, அன்று முழுதும் சிடுசிடுவென்றே அனைவரிடமும் சிம்பிக் கொண்டே இருந்தான் அந்த கல்லூரியின் வைஸ் சேர்மன்.
அவனின் வாள் விழிகளில் அன்று சிக்கிய அனைவரும் ஏதாவது ஒன்றுக்கு வாங்கிக் கட்டிக்கொண்டே இருந்தனர்.
மாலை வரை அனைவரையும் படுத்தி எடுத்தவன், வீட்டிற்கு வந்து குளித்து முடித்துவிட்டு நீள்சாய்விருக்கையில் இருகைகளையும் பின்னே கோர்த்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்தான்.
கிரீமும், பழுப்பு நிறமும் கலந்த சுவற்றில், ஆலிவ் பச்சையில் மெய் தங்கங்களால் முட்கள் கொண்டு மாட்டப்பட்டிருந்த சுவர் கடிகாரத்தையே எத்தனை நேரம் பார்த்திருந்தானோ!
அவனின் மனம் மொத்தமும் கல்லூரியில் நடக்கவிருக்கும் கல்ச்சுரல்ஸையும், ஆராதனாவின் வருகையையும் ஒட்டியே இருந்தது.
ஏனோ அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. ‘நீ உன்னோட வேலையை பாரு.. நீ யாருடா..?” என்று அவள் கேட்ட கேள்வியும், அவனை அடித்த அடியும் இன்னும் அவன் மூளையில் உள்ள அணுக்களின் ஞாபகத்தில் உள்ளது.
என்னதான் அன்னையின் வளர்ப்பில் நன்றாக, ஒழுக்கமாக வளர்ந்த பையன் என்றாலும், அவனும் ஆண் என்கின்ற நெடில் தானே.
அந்த நெடிலுக்கே உண்டான அகங்காரம் அவனுக்கும் இருக்கத் தானே செய்யும்.
சாதாரண ஆண்களே பெண்கள் ஏதாவது கூறினால், தாம்தூம் என்று குதிக்கும் பேர்வழிகள்.
அதிலும் இவன்..
அதில் ஸ்ரீராம் மட்டும் விதிவிலக்கா என்ன?
அதுவும் ஆராதனாவின் குணத்திற்கும், இவனின் குணத்திற்கும் எப்படி?
நீண்ட நேரம் யோசனையில் இருந்தவனை அலைபேசி கலைத்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தான். சுப்ரமணியம் தான் அவனுக்கு அழைத்திருந்தது.
அவர் அவனிடம் பேச வேண்டும் என்று சொல்ல, “வீட்டுக்கு வந்திறட்டுமா தாத்தா?” என்று கேட்டான்.
“வேண்டாம் ஸ்ரீராம்.. நீ என்னோட ஆபிஸுக்கு வந்திடு.. அங்கதான் இருக்கேன்..” என்றிட, “ம்ம்.. ஒரு அரை மணி நேரம் தாத்தா..” என்று அலைபேசியை அணைத்தவன், தான் அணிந்திருந்த சார்ட்ஸை அகற்றிவிட்டு, வெண்மை நிற டி சர்ட்டையும், ப்ளூ நிற ஜீன்ஸ் பேன்ட்டையும் அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
கீழே வந்த மகனை கண்ட வசுந்தரா இரவு உணவுக்காக அழைக்க, “வந்து சாப்பிடறேன் ம்மா.. நீங்க சாப்பிட்டு படுங்க வந்திடறேன்” என்று சுப்ரமணியத்தை பார்க்க போவதாக சொல்லிவிட்டு தன்னுடைய எக்ஸ்சி 90யில் கிளம்பினான்.
செல்லும் வழி நெடுகிலும் தாங்கள் துவங்க இருக்கும் மருத்துவ கல்லூரியின் விஷயமாகவே யோசனையோடு சென்றவன், சற்று நேரத்திற்கு முன் யோசித்ததை எல்லாம் மறந்து தான் போனான்.
சுப்ரமணியத்தினுடைய அலுவலகத்தை அடைந்தவன் உள்ளே நுழைய, “வா ஸ்ரீராம்” என்றவர், அவனை அமர சொன்னார்.
அவர் இப்படியெல்லாம் இதுவரை ஸ்ரீராமை அழைத்ததில்லை. அதனாலேயே முக்கியமான விஷயம் என்பதை உணர்ந்தவன், அவர் அழைத்ததும் ஏன் எதற்கு என்று கேட்காது வந்துவிட்டான்.
அவன் அவரை பார்க்க, “சாப்பிட்டியாபா?” என்று கேட்டார் சுப்ரமணியம். “இல்ல தாத்தா போய் தான்” என்றான்.
“ஸ்ரீராம்!” என்றவர் யோசனையோடே இரு மணித்துளிகள் கழித்து, “வீட்டுல ஒரே பிரச்சனையா இருக்கு” என்றார். அதில் ஸ்ரீராமின் புருவங்கள் இடுங்கியது.
“யாரு தாத்தா?” ஸ்ரீராம் யோசனையோடு கேட்க,
“பொண்ணுங்க தான்.. வேற யாரு.. பெயர் சூட்டுற விழாவுக்கு வந்துட்டு போனதுல இருந்து.. ரகுராமும் ரோஜாவும் தான் உங்க பசங்கதான்… உங்க பிள்ளைகளா.. அவங்க உங்க கூட இருந்து எல்லாமே எல்லாம் அனுபவிக்கிறாங்க.. இந்த அஞ்சலி வந்தா திமிரா இருக்கா.. அப்படி இப்படின்னு பா.. வசுந்தரா வந்தா கிடைக்கிற மரியாதை கூட எங்களுக்கு இல்ல.. ஒரே தலை இடியா இருக்கு” என்றவர் பெருமூச்சு ஒன்றை விட்டார்.
“ரகுராம் அங்கிள் கிட்ட இதபத்தி பேசுனீங்களா தாத்தா?” என்று கேட்டான் ஸ்ரீராம்.
“பேசுனேன்.. அவனும் கத்தறான்.. முன்னவே ரோஜாவை அவ புருஷன் வீட்டுல அல்லது தனியா வீடு பாத்து வச்சுருக்கணும்னு சொல்றான்..” என்றவர்,
“நான் இருக்கும் போதே இப்படி அடிச்சுக்கறாங்க.. இவங்களை என்னன்னு சொல்ல.. இதுக்கு கல்யாணம் பண்ணி தந்தது எல்லாமே பெரிய இடம்.. அது தான் முடிவு பண்ணிட்டேன்.. சொத்தை எல்லாம் பிரிச்சு தந்திடலாம்னு..” என்றார் மனதில் மனைவியை நினைத்துக் கொண்டு.
தன் வீட்டுக்காக சம்பாதித்த மனிதரையே இப்போது கேள்வி கேட்கும் பொழுது அவருக்கு வலித்தது. தன் மனைவி இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசித்தார்.
அதை ஸ்ரீராமிடம் வெளிப்படையாகவே கூறினார்.
அவரின் அருகே அமர்ந்து அவரின் கரத்தை ஆறுதலாக பற்றியவன், “எதுக்கும் கலங்காதீங்க தாத்தா..” என்றான். அவனுக்குள் ஆத்திரம். இத்தனை செய்தவரை எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்று.
“வக்கீல் கிட்ட பேசிடலாம் ப்பா” என்றார் சுப்ரமண்யம்.
“எப்ப தாத்தா? ஏதாவது ஹெல்ப் வேணுமா?” ஸ்ரீராம் கேட்க, “அதுக்கு தான் அழைச்சேன்” என்றவர் அவனிடம் மொத்த விவரங்களையும் கூறினார்.
“சரிங்க தாத்தா.. நான் நாளைக்கு நம்ம வக்கீல் கிட்ட பேசறேன்.. பேசிட்டு உங்களை வந்து பாக்க சொல்றேன்” என்றவன் அவரை அவருடைய ஆடி காரில் ஏற்றி அனுப்பிவிட்டே தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினான்.
நாட்கள் மெதுவாய் நகர, வி ஆர் குரூப் ஆஃப் கல்வி நிறுவனத்தின் கோலாகால கலை நிகழ்ச்சி துவங்கியது.
முதல் இரண்டு நாட்கள் அழகாகவும் அமைதியாகவும் கழிய, மூன்றாவது நாளோ கல்லூரியே விழாக் கோலமாய் ஒருத்திக்காக காத்திருக்க, அன்றைய விழாவின் கதாநாயகியோ சூடான பாத் டப்பில் நுரைகளுக்கு நடுவே நீரோடு கர்நாடக சங்கீதத்தில் மூழ்கி, சிவப்பு நகச்சாயம் பூசி பாத் டப்பின் வெளியே இலேசாக தெரிந்த தன் கால் விரல்களை இசைக்கு ஏற்ப அசைத்துக் கொண்டிருந்தாள்.
மனதில் பல்வேறு சிந்தனைகள்!
கல்ச்சுரல்ஸ் செல்ல வேண்டும். அதை முடித்துக் கொண்டு நேராக விமான நிலையம்.
நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அவளுக்கு ப்ளைட்.
அனைத்தையும் நினைத்தபடி தயாராகியவள், கிளம்பி வந்து தன்னுடைய கருப்பு நிற ஜாக்குவாரில் ஏறினாள்.