மறையாதே என் கனவே-23,24

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-23

அடுத்தநாள் காலை கண் விழித்த விக்னேஷ், கௌசியைத் தேட அவளோ அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் கீழே சென்றிருப்பாள் என்பதை உணர்ந்த விக்னேஷ் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான். குளித்து முடித்து ஒரு ரெட் சர்ட்டையும் டார்க்ப்ளூ லிவிஸ் ஜீன்ஸை அணிந்தவன் தலையை கையால் கோதிவிட்டுக் கீழே சென்றான்.

அங்கே சென்று கௌசியைத் தேடியவன் கண்ணிnfபட்டாள் கௌசி. அவளை கண்டவன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்துதான் போனான். கருப்பு நிற பட்டுப்புடவையில் தங்கநிற ஜரிகை பார்டரிலும், சில அணிகலன்களும் சில ஒப்பனைகளிலும் மின்னியவளைக் கண்டு அவனால் கண்களை எடுக்க முடியவில்லை. அவளது நிறத்தை வேறு அந்த கருப்புநிறம் தூக்கிக் காட்டியது. தன்னை மறந்து கௌசியை ரசித்துக் கொண்டிருந்தான்.

"அய்யோ! ச்சீ!" என்ற விக்ரமின் குரலில் திரும்பிய விக்னேஷ், விக்ரம் பாண்ட்டில் ஏதோ துடைப்பதைக் கண்டு, "என்ன ஆச்சு விக்ரம்?" என்று வினவினான்.

"அது ஒன்றுமில்லை விக்னேஷ்... இங்க ஒருத்தன் சொந்தப் பொண்டாட்டியைப் பார்த்தே வழிஞ்சிட்டு இருக்கான். அவன் விட்ட ஜொள்ளில் என் பேண்ட்லாம் நனஞ்சிருச்சு பாரு" என்று சொல்லி நிமிர்ந்தவன் விக்னேஷின் முகத்தைப் பார்த்துவிட்டு, "எனக்கு வேலை இருக்கு... நான் போறேன்" என்று போய்விட்டான். விக்ரமின் பேச்சில் ஆண்மகனான விக்னேஷிற்கு முகம் சிவந்தது.

அதற்குள் அவனைக் கண்டுவிட்ட கௌசி அவன் அருகில் வந்தாள். அவன் முகத்தைக் கவனித்தவள், "என்னடா, முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து இருக்கு... ஃபீவரா?" என்று விசாரித்தவள் கையை அவன் நெற்றியிலும் கழுத்திலும் வைத்துப் பார்த்தாள்.

கௌசியின் செயலில் ஒரு நிமிடம் விதிர்விதிர்த்து போனவன் அவள் கையைப் பிடித்துத் தடுத்தான். "கௌசி, இது... இந்த நேரத்துல எந்திருச்சதுனால இப்படி இருக்கு" என்றவன், "வேலை எல்லாம் சரியா போயிட்டு இருக்கா?" என்றுப் பேச்சை மாற்றி கௌசியை வேலையில் மூழ்கடித்தான்.

அதிகாலை நேரத்தில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி ஏற எல்லாம் நல்லபடியாக முடிந்தது. பின் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்ய போட்டோஸ் விடியோஸ் எல்லாம் அழகாக படம் பிடிக்கப்பட்டது. விக்னேஷ் பொண்ணு மாப்பிள்ளை உடை மாற்றப் போன கேப்பில் கேமிராவை வாங்கி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியே ஏதோ வீடியோ கேமிராவை சரி பார்த்துக் கொண்டு வந்த கௌசி அப்போது தான் விக்னேஷைக் கவனித்தாள்.

சிவப்பு சட்டையை கை முட்டி வரை மடக்கி விட்டு, அலை அலையான கேசத்துடன் நின்றிருந்தவனைப் பார்க்க அவளால் அவன் மீது இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. ஆறடி உயரத்தில் நல்ல கம்பீரமாக நிற்பவனைக் கண்டவளுக்கு ஏனோ தன்னை அறியாமல் கண்கள் அங்குல அங்குலமாக ரசித்தது.

அப்போது என்று பார்த்து கௌசியைக் கவனித்த விக்ரம், "அட ஈஸ்வரா! இதுக ரெண்டுக்கும் எப்போ பாரு இதே வேலையா இருக்கு" என்று புகைந்தவன்,
கௌசியின் அருகில் வந்து, "ஹலோ... மேடம் உன் புருஷனை ஸைட் அடிச்சது போதும்... என்ன மாதிரி சிங்கிளை வயிறு எரிய வைக்காதீங்க" என்று சொல்ல, கௌசியோ, 'அச்சச்சோ இவன் பாத்துட்டானே' என்று பதறி ஏதோ சொல்லி சமாளித்தவள் அங்கிருந்து ஓடாத குறையாக ஓடினாள்.

திருமணம் முடிந்து விருந்தும் முடிந்து எல்லாம் கிளம்ப அங்கு வந்து சேர்ந்தாள் அவள். சாட்சாத் நம்ம நான்சி மேடம்தான். விக்ரமுடன் பேச்சில் இருந்த விக்னேஷும் கௌசியும் அவளை சுத்தமாகக் கவனிக்கவில்லை. ஆனால், உள்ளே வந்தவுடன் கௌசி நான்சியின் கண்ணில்பட, கூடவே விக்னேஷும் கண்ணில் சிக்கினான்.

கௌசியின் தோற்றத்தைப் பார்த்தவளுக்குப் புரிந்து விட்டது. விக்னேஷும் கௌசியும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று. அவளுக்கும் குரு இறந்த செய்தி தெரியும். கௌசி வீட்டை விட்டுச் சென்றதும் தெரியும். மதி அண்ணன் சுதாகரன் மூலமாக. அதாவது கௌசி, குருவின் திருமணத்தில் அவளிடம் சுதாகரன் பேச்சுக் கொடுத்தபோது வந்த பழக்கம். அதன் பிறகு அவள் நிம்மதியாக ஹைதராபாத் சென்றாள்.

மணப்பெண்ணின் அண்ணன் இவளுக்கு எப்படியோ ஃப்ரண்ட். அதாவது இவள் எப்படியாவது ஃப்ரண்டாக பிடித்திருப்பாள். ட்ராஃபிக் காரணமாக திருமணத்திற்கு லேட்டாகவே வந்தாள் நான்சி ஹைதராபாத்தில் இருந்து. அவளுக்கும் திருமணம் ஆகி இருந்தது. ஆனால், ஏனோ கௌசியையும் விக்னேஷையும் பார்க்க அவளால், அவள் வயிற்றெரிச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

மணமக்களை சென்று பார்த்து கிஃப்டையும் கொடுத்தவள் மணமகளின் அண்ணனிடமும் சொல்லிக்கொண்டு திரும்பினாள். அதாவது அவளுக்கு விக்னேஷ் கௌசிகாவுடன் சென்று பேச ஆவல். அவர்கள் விக்ரமிடம் சொல்லிக்கொண்டு முன்னேயே கிளம்ப பின்னாலேயே சென்றாள்.

கார் பார்க்கிங் வர அவர்கள் இருவருக்கும் முன் சென்று வழியை மறைத்து அவள் நிற்க, கௌசியும் விக்னேஷும் யார் என்பது போல அவளின் முகத்தைப் பார்க்க இருவருக்குமே, 'ச்சி இவளா?' என்று இருந்தது.

நான்சி இருவரும் அதிர்வார்கள் என்று நினைத்திருக்க இருவரின் முகப் பிரதிபலிப்பில் அவளுக்கு முதல் அடி விழுந்தது. தான் நாவை விஷம் ஆக்கிக் கொட்டத் தயாரானாள் நான்சி.

"புருஷன் போன சோகத்தை மறந்து இவன் கூட சுத்தறயா?" என்று கௌசியிடம் கேட்டாள். விக்னேஷிற்கு சுர் என்று ஏறி ஏதோ சொல்ல வர கௌசி அவன் கையைப் பிடித்து அடக்கினாள்.

"ஆமா, என் புருஷன் கூடத்தான் சுத்திட்டு இருக்கேன்... இப்போ நான் கௌசிகா விக்னேஷ்வரன்" என்று அழுத்தமாகச் சொன்னாள் கௌசிகா. நான்சிக்கு இரண்டாவது அடி.

விக்னேஷிடம் திரும்பியவள், "அப்போ முன்னாடி இருந்தே இரண்டு பேரும் லவ்வர்ஸா? பட் வெளில காட்டிக்கல. ஊரை ஏமாத்திட்டு சுத்தி இருக்கீங்க... நீ என்னை ஏமாத்தி இருந்திருக்கடா" என்று குரலை உயர்த்த, 'பளார்' என்று இடியாய் இறங்கியது அறை.

அடித்தது நம்ம கௌசி தான். "யாரை பார்த்து டா போட்டுப் பேசறே... பிச்சிருவேன்... ஏய், நீ என்னமோ காவிய காதல் பண்ண மாதிரி பேசறே... நாங்க ஊர் சுத்துனோமா? அப்படியே இருந்தாலும் நான் இவன் கூட, இவன் என்கூடதான் சுத்துனோம்... உன்ன மாதிரி இடத்துக்கு ஒருத்தன மாத்தல" என்ற கௌசி, "மரியாதை முக்கியம்னா இனி எங்க வழியில வராதே" என்று எச்சரித்தவள் விக்னேஷின் கையைப் பிடித்துக்கொண்டு காரை நோக்கி நடந்தாள்.

காரில் வந்து முன் சீட்டில் அமர்ந்தவள் விக்னேஷ் இன்னும் வெளியே நின்று கௌசிக்கு முதுகைக் காட்டி நான்சி இருந்த திசையைப் பார்ப்பது தெரிந்தது.

"ஏய்! இப்போ நீ வரீயா... இல்ல அவ கூட போறியா?" என்று கௌசி எரிச்சலாக வினவ, விக்னேஷ் அமைதியாக உள்ளே ஏறி அமர்ந்தான்.

செல்லும் வழியில் இருவரும் எதுவுமே பேசவில்லை. கௌசி கடுகடுவெனவே வந்தாள் என்றால் விக்னேஷோ எதுவுமே நடக்காதவன் போல அமைதியாக வந்தான். ஆபிஸ் வந்தவுடன் உள்ளே நுழைந்த இருவரும் ஆபிஸ் ரூம் உள்ளே செல்லும் வரை எதுவும் பேசவில்லை. உள்ளே நுழைந்தவுடன் கதவை சாத்திய கௌசி, "டேய்! உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே?" என்று விக்னேஷிடம் பாய்ந்தாள்.

"நானா... நான் என்ன நினைக்கறேன்... நைட் உன் மாமியார் என்ன டின்னர் செய்வாங்கன்னு" என்றான் சாதாரணமாக.

"கிண்டலா? கொன்னுருவேன் உன்ன" என்று மிரட்டியவள், "அவளைப் பாத்துட்டு நின்னுகிட்டு இருக்க, அவ உன்ன டா போட்டு பேசறா... நீ பாட்டுக்கு வேற எவனையோ திட்டற மாதிரி நிக்கற... இல்ல தெரியாமதான் கேக்கறேன், அவ மேல உனக்கு என்னடா ஸ்கூல்ல இருந்து அவ்வளவு கரிசனம்" என்ற பொரிந்து தள்ளிவிட்டாள்.

அவ்வளவுதான் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான் விக்னேஷ். அவன் சிரிப்பதைப் பார்த்து எரிச்சல் வந்தவள் கையில் கிடைத்த பேனாவை அவன் மேல் எடுத்து வீச, அதை லாவகமாக கேட்ச் பிடித்தான் விக்னேஷ்.

"ஏய், நான் ஏதோ அவள பாத்து மயங்கி நின்ன மாதிரி பேசறே? எனக்கு நீ அவள அறைஞ்ச உடன சிரிப்பு தான்டி வந்துச்சு" என்றவன், "அப்புறம் கரிசனம் பத்தி கேட்டீல்ல? அது வந்து... ஹையோ எனக்கு ஷையா இருக்கு எப்படி சொல்லுவேன்... அவ நல்ல கும்தாதாதா வா இருப்பாடி அதான் கொஞ்சம் சறுக்கிட்டேன்... இல்லைனா நான் ரொம்ப ஸ்டாரங்டி" என்றான் சிரிப்புடனே.

"ஆமா, ஆமா ரொம்ப ஸ்டார்ங்... உன்ன பத்தி தெரியாது பாரு... சைசை" என்று சொன்னவளை உற்று கவனித்தான் விக்னேஷ்.

காலையில் இருந்த மேக்கப் கொஞ்சம் கம்மி ஆகியிருந்தது. தலை கொஞ்சம் கலைந்து அவள் காதின் அருகில் சிறு முடிகள் பறந்தது. கோபத்தில் உதட்டின் மேல் வியர்த்திருக்க அதுவும் அவளை அழகாகக் காட்டியது.

"இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க கௌசி" என்றான் மாறிய குரலில்.

ஒரு நிமிடம் திகைத்தவள், "நான் என்ன பேசிட்டு இருக்கேன்... நீ என்னடா பேசறே, லூசு போடா" என்று ஆபிஸ் அறையில் இருந்து வெளியே வந்தாள். வந்து அமர விக்ரமும் வந்திருந்தான். "ஹே! நீ வீட்டுக்கு போகலையா? நான் கிளம்பிட்டன்னு நினைச்சேன்" என்றான்.

"அவன் கூடவே போயிக்கறேன்" என்றவள் சிறுசிறு வேலைகளை செய்தாள். அவளுக்கு வேலையிலும், உறக்கம் சரியாக இல்லாத காரணத்தினாலும் டயர்டாக இருந்தது.

மாலை ஆனதும் இருவரும் புறப்பட மதி, கௌசிக்கு கால் செய்தாள்.

கௌசி, "ஹலோ"

மதி, "கௌசி, நீங்க கிளம்பியாச்சா?"

கௌசி, "இல்ல மதி, ஏன் என்ன ஆச்சு?"

"பாப்பா... உங்க இரண்டு பேரையும் பாக்கணும்ன்னு ஒரே அழுகை கௌசி, நீங்க வர முடியுமா?" என்று வினவினாள் மதி.

"ஷ்யூர், வர்றோம் மதி" என்றவள் விக்னேஷிடம் விஷயத்தை சொல்ல அவன் காரை ஜீவா வீட்டை நோக்கி இயக்கினான்.

உள்ளே இருவரும் நுழைய, "சித்தாதா..." என்று விக்னேஷின் காலை கட்டிக் கொண்டாள்.

விக்னேஷ் வியாஹாவைத் தூக்கி, "ஏன் வியா குட்டி அழுது? அழுகக் கூடாதுன்னு சித்தா சொல்லி இருக்கேன்ல" என்று சொல்ல வியாஹாவின் அழுகை நின்றது.

"சித்தா, நீங்க ஏன் ஒன் வீக்கா என்ன பார்க்க வரவே இல்ல, சித்தியும் வரவே இல்ல... உங்களுக்கு ஃபோன் பண்ணக்கூடாதுன்னு அம்மா சொல்லிட்டாங்க" தேம்பியடியே கூற, விக்னேஷும் கௌசியும் ஒருசேர ஒரு மதியைப் பார்த்தனர்.

மதி கௌசியிடம், "இல்ல நீங்க இரண்டுபேரும் பிசியா இருப்பீங்கன்னு தான்..." என்று இழுக்க,

"மதி... நீ, ஜீ மாமா அளவுக்கு பிசியா இருக்க முடியாது" என்று மதி காதில் கௌசி கிசுகிசுக்க மதி, "போ கௌசி... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல" என்றாள் வெட்கத்தோடு. அவர்கள் பேச பேச விக்னேஷ் வியாஹாவை தூக்கிக்கொண்டு வெளியே சென்றான்.

"அதே மாதிரிதான் இங்கேயும் மதி... ஒன்னும் இல்ல" என்றாள் கௌசி. மதிக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், இருவரையும் உள்ளே நுழையும் போதே பார்த்தவளுக்கு மனம் நிறைந்து இருந்தது.

வியாஹாவிற்கு நிறைய சாக்லெட்ஸ் வாங்கிக்கொண்டு சித்தப்பாவும் மகளும் வர, தூங்கிக் கொண்டிருந்த சந்தியாவும் எழுந்து வந்தாள். சிறிதுநேரம் பேசிவிட்டு கிளம்ப, "வியா குட்டி... சித்தா சித்தி கூட வர்றீங்களா?" என்று கேட்க குஷியான வியா கௌசியிடம் வந்து தூக்கு என்பது போலக் கையைத் தூக்கினாள்.

வியாஹாவைத் தூக்கியவள், "மதி, வியா ட்ரெஸ் மூனு செட் பாக் பண்ணிட்டு வா" என்று கௌசி சொல்ல,

"சரிங்க மேடம்ஸ்" என்று மதி செல்ல, குஷியான வியா தன் சித்தியின் கன்னத்தில் முத்தத்தைப் பதித்து கடித்தும் வைத்தாள்.

விக்னேஷ் கௌசியின் கன்னத்தையே பார்க்க அவன் அருகில் வந்த சந்தியா, "ம்ஹூம்" என்று தொண்டையைச் செருமினாள்.

தங்கையின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவன், "என்ன சந்தியா? என்ன கேட்ட?" என்று விக்னேஷ் கேட்க, "நான் எதுமே இன்னும் கேக்கலையே?" என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

"சொந்தப் பொண்டாட்டியவே சைட் அடிக்கறயே அண்ணா" என்று சிரித்தாள். அவன் பதில் அளிப்பதற்குள் மதி, வியாஹாவின் மிக்கி மௌஸ் பேக்கில் எல்லாம் எடுத்து வந்தாள்.

"அம்மு! சித்தி சித்தாவை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது" என்று வியா குட்டியிடம் பொறுமையாகச் சொல்ல, "அட சாமி மதி... என்ன விடலாம் ஒன்னும் குறும்பு இவ இல்ல... நீ பேக்கை தா" என்ற கௌசி மதியிடம் இருந்து வியாஹாவின் பேக்கை வாங்கினாள்.

வீட்டிற்குச் செல்ல வியாஹாவும் கௌசியும் பேசிக்கொண்டே வந்தனர். இரண்டுபேரும் ஒன்றாக பேசுகிறேன் என்று அனத்திக்கொண்டே வர விக்னேஷிற்கு சிரிப்புதான் வந்தது. வீடு வந்து சேர வியாஹா அனைவரிடமும் சென்று வாய் அடித்துக் கொண்டு இருந்தாள்.

"அட வாய் பேசாம சாப்பிடு கண்ணு" என்று சுமதி, கௌசி ஊட்டிவிட்டபடி பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த வியாஹாவிடம் சொன்னார்.

"இந்த சுமதி பாட்டி, ஜெயா பாட்டி எப்ப பார்த்தாலும் பேச வேண்டாம்னு சொல்றாங்க..." என்று தலையை சிலுப்பியவள், "எனக்கு பேசாம இருந்தால் தூக்கமா வருது பாட்டி" என்று சொல்ல அனைவரும் சிரித்தனர்.

தங்கள் அறைக்கு வியாஹாவை விக்னேஷ் தூக்க, "ஏன்பா... என் கூட பாப்பா இருக்கட்டுமே" என்று சுமதி சொன்னார்.

அவர் சொன்னதின் அர்த்தம் புரிந்தவன், "இல்லமா... இரண்டு நாள் தானே... எங்க கூடயே இருக்கட்டும்" என்று வியாஹாவுடன் விளையாடிக் கொண்டே உள்ளே சென்றான்.

உள்ளே பெட்ஷீட்டை விரித்துக் கொண்டிருந்த கௌசி, வியாஹாவை வாங்கி விளையாடியபடியே அவளுடன் படுக்கையில் விழ விக்னேஷ் இன்னொரு பக்கம் படுத்தான். ஏனோ வியாஹாவை நடுவில் போட்டு படுத்த இருவரின் பார்வையும் காரணம் தெரியாமல் சந்தித்து மீண்டது.

"சித்தா... கதை" என்றாள் வியாஹா.

"என்னக் கதை வேணும் குட்டிக்கு?" என்றான் ஒரு பக்கமாகத் திரும்பி தலையை கைக்குக் கொடுத்த படி.

"எனக்கு ஏஞ்சல் ஸ்டோரி வேணும் சித்தா" என்றாள் குஷியாக வியாஹா.
ஏஞ்சல் வார்த்தையைக் கேட்டவுடன் ஒரு நிமிடம் கௌசியைப் பார்த்த விக்னேஷ், "என்னோட ஏஞ்சல் கதை சொல்லட்டா?" என்று வியாஹாவிடம் கேட்டான்.

"சொல்லுங்க சொல்லுங்க" என்று கை கால்களை உதைத்தபடி வியாஹா ஒன்றும் தெரியாமல் குஷியானாள்.

"என்னோட ஏஞ்சல் பேரு கௌசிக்..." என்று சொல்ல வியாஹா புரிந்தும் புரியாமல் திரும்பி கௌசியைப் பார்த்தாள். கௌசியோ வியாஹாவை பார்த்து புன்னகைத்தாள்.

விக்னேஷ் தொடர்ந்தான். "கௌசிக் வந்து ரொம்ப சுட்டிப்பொண்ணு, நம்ம வியாகுட்டி மாதிரி. பெரிய கண்ணு, குட்டிரோஸ் மாதிரி வாய், துருதுருன்னு எப்போ பாத்தாலும் எல்லோரையும் சிரிக்க வச்சிட்டே இருப்பா, புடிச்சா என்ன வேண்டுமானாலும் பண்ணுவா, அந்த ஏஞ்சலோட ஹீரோக்கு ஏஞ்சல ரொம்ப பிடிக்கும்..." என்று விக்னேஷ் சொல்லிக்கொண்டே போக கௌசி மறுபக்கம் திரும்பிப் படுத்தாள். கௌசியின் கண்களில் கண்ணீர் சுரக்க, விக்னேஷ் மேலே தொடர்ந்தான்.

"ஏஞ்சலுக்கு ஹீரோ மேல பொசஸிவ்னஸ்ஸும் அதிகம். ஆனால், அவளை விட ஹீரோக்கு பொசஸிவ்னஸ் அதிகம்" என்று சொல்ல சொல்ல கௌசிக்கு கண்ணீர் கண்களில் வழிந்தோடியது.

"சித்தா பொசஸிவ்னஸ்னா என்ன?" என்று அரைத் தூக்கத்திலேயே கேட்டாள் வியாஹா.

"அது..." என்று யோசித்தவன், "உனக்கு சித்தா, உன் ப்ரண்ட்ஸ் யாரையாவது கொஞ்சுனா புடிக்குமா?" என்று கேட்க,

விக்னேஷை அந்தத் தூக்கத்திலும் அவசரமாகக் கட்டிப்பிடித்தவள், "நோ சித்தா... என்ன மட்டும் கொஞ்சுங்க" என்று விக்னேஷிடம் ஒன்ற, "இதான் தங்கம் பொசஸிவ்னஸ்" என்று சொல்லித் தலையை நீவ வியாஹா தூங்க ஆரம்பித்தாள்.

கண்ணீரை உதிர்த்த கௌசிக்கு அவன் காதல் புரிந்தது. ஆனால், இந்தக் காதல் எப்படி திடீரென வந்தது என்று யோசித்தாள் கௌசி. அதுதான் விக்னேஷிடம் இருந்து அவள் விலகி நிற்க காரணமும்கூட. யோசித்து தலைவலியை இழுத்துக் கொள்ள வேண்டாம் என்று எண்ணியவள் கண்களை மூடினாள்.

அடுத்தநாள் காலை ஆறு மணிக்கே எழுந்த விக்னேஷ், கௌசியைத் தேடி மாடிக்குப் போனான். மாடிக்குச் சென்றவன் அப்படியே நின்றான். கௌசி தனது இடதுகரத்தால் வளைந்து வலது காலைத் தொட்டுக் கொண்டு இருந்தாள். அவளின் இடுப்பின் வளைவைப் போலவே தன் தலையை வலமாகச் சாய்த்தவன் ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாயைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு இருந்தான். சில நிமிடங்களில் நிமிர்ந்த கௌசி திரும்ப தலையைச் சாய்த்து நின்று கொண்டிருந்த விக்னேஷைக் கண்டு திடுக்கிட்டாள்.
டக்கென்று சுதாரித்தவன், "துண்டு எடுக்க வந்தேன்" என்று காயாத துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு சென்றான்.
 
  • Haha
Reactions: Malar

Yaazhini Madhumitha

Administrator
Staff member
Jul 9, 2024
26
33
13
Gobichettipalayam
அத்தியாயம்-24

கீழே கௌசி வர வியாஹாவும் எழுந்து விக்னேஷின் மடியில் உட்கார்ந்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தாள். சுமதி காஃபியைக் கொண்டு வர, "கௌசி, நீ இன்னிக்கு ஸ்டுடியோ வர வேண்டாம், வியா கூட இரு" என்று சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி.

நாட்கள் கடந்து வேகமாக நகர்ந்தது. சந்தியாவிற்குக் குழந்தையும் பிறந்தது. போய் பார்க்கச் சென்றபோது விக்னேஷ் குழந்தையை ஆசையாகப் பார்த்ததை கௌசி கவனித்தாள். ஏனோ குற்றவுணர்வு வந்தது அவளுக்கு.

வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள், "உனக்கு குழந்தைனா புடிக்குமா டா?" என்று கேட்டாள்.

"யாருக்குதான்டி புடிக்காது... எனக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம வியாகுட்டி பிறந்தப்போ கூட ரொம்ப க்யூட் தெரியுமா?" என்றவன் அப்போது தான் இவள் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டாள் என்று யோசித்து கௌசியிடம் திரும்பினான்.

அவள் கண்களோ கலங்கி இருக்க, "ஸாரிடா" என்றாள் குற்றவுணர்வில்.

"ஏய், எதுக்குடி அழறே? எதுக்கு ஸாரி?" என்று வினவியவன் அவளருகில் வந்தான்.

"வந்து... எனக்கு உன்ன புடிச்சிருக்குடா. ஆனா, என்னால ஏதோ முழு மனசா இருக்க முடியல... ஏதோ ஒன்னு தடுக்குது" என்றவளை அணைத்தான் விக்னேஷ்.

"லூசு, இதுக்கு எதுக்குடி அழறே? நமக்கு என்ன அறுபது வயசா ஆச்சா... இன்னும் வயசு இருக்கு, நான் வெயிட் பண்றேன். இல்லைனாலும் கடைசிவரை இப்படியே இருந்து விடலாம்" என்றவனின் சொற்கள் அவளை உருக்கியது. அவளது குற்றவுணர்வுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது அன்று வியா வந்த அன்று நடந்த ஒன்று.

வழக்கம் போல ஸ்டுடியோவில் இருந்து ஏழுமணிக்கு வரும் விக்னேஷ் அன்று ஐந்திற்கே வந்தான். வியாஹா ஹாலில் உட்கார்ந்து அவள் பாட்டுக்கு ஏதோ ஒரு நோட்டில் வரைந்து கொண்டிருந்தாள்.

விக்னேஷ் உள்ளே நுழைய, "ஹாலிலேயே உட்காருடா... பெட்ரூம் போகாதே இப்போதுதான் துடச்சு விட்டிருக்கேன்" கௌசி சொல்ல,"ம்ம், சரி" என்றவன் மாலைமலரை எடுத்தான். ஆனால், அவனை நல்லபிள்ளையாக இருக்க விடாமல் கௌசியின் சேலை வேலையைக் காட்டியது. சேலையை லேசாக தூக்கி இடுப்பில் சொறுகியபடி கௌசி மாப்பில் ஹாலைத் துடைக்க அவள் இடுப்பின் பகுதி இடதுபக்கம் முழுதும் அவனுக்குக் காட்சி அளித்தது.
கண்களைத் திருப்ப முடியாமல் அவன் பார்க்க, வியா அருகில் இருப்பதை உணர்ந்தவன் நியூஸ் பேப்பரை நன்றாக விரித்து வைத்து அதில் மூழ்க முயற்சித்தான். ஆனால், முடியவில்லை.

‘ஐயோ குஷி பட விஜய் நிலைமை இப்போதான் புரியுதுடா சாமி’ என்று கண்களை இறுக மூடினான்.

தன்னோடு வாதாடித் தோற்றவன் லேசாக நியூஸ் பேப்பரை இறக்கி கௌசியை, இல்லை இல்லை அவளின் இடையைக் கவனித்தான். அவ்வப்போது வியாவையும் பார்த்தான், வியா தன்னை கவனிக்கிறாளா என்று. வியாவோ கர்மமே கண்ணாக நோட்டில் ஒரு சூரியனை வரைந்து கொண்டிருந்தாள். பின் தைரியம் வந்தவனாக கண்களை தனக்கு இஷ்டமான இடத்திற்கு கொண்டு சென்றான்.

கௌசி ஹாலை துடைத்து முடித்துவிட்டு சமையலறைக்குள் செல்ல, தன்னை மீறி எழுந்தவன் வியாஹாவைப் பார்த்தான். அவள் சூரியனுக்குக் கீழே வீடு வரைய ஆரம்பித்திருந்தாள். பின் மெதுவாக சமையல் அறைக்குள் நுழைந்தவன் கௌசியின் பின் சென்றான்.

அவளோ எதையோ எடுத்து கிட்சன் சின்ங்கில் வைத்துக் கொண்டிருந்தாள். விக்னேஷிற்கு வேர்க்கத் துவங்கி நெற்றியில் இருந்து வழிந்தது. மோகப்பிடியில் இருந்தவன் கௌசியின் பின் சென்று அவளை பின் இருந்துஅணைத்துவிட்டான்.

திடுக்கிட்ட கௌசி திரும்ப ஒரு நிமிடம் அவளிடம் இருந்து விலகிய விக்னேஷ் மீண்டும் அவளை இறுக முன்னால் இருந்து அணைத்தான். ஒரு காலத்தில் இதை எல்லாம் நினைத்துக் கனவு கண்டவள் தான். ஆனால், அவள் மனதில் இருந்த கேள்வி அவளைத் தடுத்தது. ஆமாம், விக்னேஷிற்கு திடீரென எங்கிருந்து வந்தது இந்தக் காதல் என்று. மேலும் அவள் உடல் தன்னை அறியாமல் நடுங்கியது.

அவளை அணைத்திருந்த விக்னேஷின் கரங்கள் அவள் இடைப் பகுதிக்குச் செல்ல அவன் கையைப் பிடித்தவள், "பயமா இருக்குடா... ப்ளீஸ்" என்றவள் அவன் மார்பிலேயே புதைந்து அழ ஆரம்பித்தாள்.

கௌசியின் பேச்சையும் அழுகையையும் உணர்ந்தவன், 'ச்ச! என்ன பண்ணிட்டு இருக்கேன்' என்று தன்னைத்தானே கடிந்தவனுக்கு அவள் அழுகை வேறு ஏதோ செய்தது.

"கௌசி... ஸாரிடி, ஏதோ தெரியாம, ச்சு... ஸாரிடி... இனிமேல் இப்படி நடக்காது. ப்ராமிஸ்" என்று கெஞ்சினான் அவள் அழுகையை நிறுத்த.

"நான் இதுக்குதான்டா சொன்னேன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோன்னு... இப்போ பாரு, என்னால உனக்கும்தானே கஷ்டம்" என்று கௌசி பேச விக்னேஷிற்கு கோபம் வந்தது.

"ஏய்! என்னை என்னன்னு நினைச்சுட்ட, வெறும் உடம்புக்கு அலையுறவன்னா... இங்க பாரு இப்போ நடந்தது என் தப்புதான். அதுக்குன்னு நீ வேண்டாம்ன்னு சொன்ன அப்புறமும் உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன். நானும் மனுஷன்தான்டி... இப்படி எல்லாம் நீ பேசறது என்னை அசிங்கப்படுத்தற மாதிரி இருக்கு கௌசி" என்று அவளிடம் ஆதங்கப்பட்டான்.

"அடுத்தவளை கல்யாணம் பண்ணச் சொல்றவ நேத்து ஏன்டி கௌசிகா விக்னேஷ்வரன்னு அவ்ளோ கர்வமா சொன்னே?" என்று கேட்டவன், "காரணம் உனக்குள்ளும் காதல் இருக்கு, ஆனா என்கிட்ட நெருங்க தானே தயக்கம். எல்லாம் சரி ஆகிவிடும்ன்னு நம்பிக்கை வைடி" என்று அவளை சமாதானம் செய்தான்.

"இனி நீயே என்கிட்ட வர வரைக்கும் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்டி" என்று அவளுக்கு வாக்களித்தவன் வெளியே வர. சுமதி பக்கத்தில் இருந்த கோவிலுக்கு சென்றுவிட்டு வந்து உள்ளே நுழைந்து கொண்டு இருந்தார். தான் அவனது உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இருந்ததில் வருந்தினாள் கௌசி.

அந்தக் குற்ற உணர்வில் இருந்தவளுக்கு இப்போது சந்தியா குழந்தையைப் பார்த்து வந்த பிறகு அது தலை தூக்கியது. விக்னேஷிற்குமே அது வருத்தமாக இருந்தாலும் கௌசியின் முன் அவனுக்கு எதுவும் பெரிதாகப் படவில்லை.

ஒருவழியாகக் கௌசியைச் சமாதானம் செய்தவன், "கௌசி நான் இன்னிக்கு நைட் லேட்டாகத்தான் வருவேன்" என்றான் விக்னேஷ்.

கௌசி, "ஏதாவது வேலையா?"

"இல்லை நம்ம மகாலிங்கம் தாத்தா வீட்டிற்குதான். ஒரு குட்டி பார்ட்டி... நான், தாத்தா, விக்ரம், ஜீவா" என்றான் விக்னேஷ்.

கௌசியின் பார்வையை உணர்ந்த விக்னேஷ், "நீ நினைக்கற மாதிரி இல்லைடி... லைட்டாதான்" என்று சொல்ல கௌசி ஆரம்பித்தாள்.

"சரி. ஆனா, ஜீவா ட்ரிங்க் பண்ணிட்டு சிட்டிக்குள்ளே போகவேண்டாம், முடிச்சிட்டு அவனை இங்கேயே கூட்டிட்டு வந்திடு... காலைல போகட்டும்" என்று சொல்லத் தலையை ஆட்டினான்.

அன்று இரவு பத்து மணிக்கு எல்லோரும் மகாலிங்கம் அய்யா வீட்டில் கூத்தடிக்கத் தயாராக இருந்தனர். மகாலிங்கம் அய்யா கூட டிசர்ட் முட்டிகால் வரை இருந்த நைட்பேண்ட் போட்டிருந்தார்.

மகாலிங்கமும் விக்னேஷும் தயாராக இருக்க, விக்ரமும் ஜீவாவும் பாட்டில்களோடு வருகை தந்தனர். "என்னடா இவ்ளோ... எவ்வளவு ஆச்சு?" என்று வழக்கத்திற்கு மேல் அதிகமாக இருந்த சரக்கை பார்த்த விக்னேஷ் கேட்டான்.

"இன்னிக்கு ஷேர் இல்லடா... என்னுடைய ட்ரீட் தான்" என்று ஜீவா சொல்ல,

"என்ன மாமா ஆனதுக்கா?" என்று மாடிப்படி ஏறியபடியே விக்னேஷ் கேட்டான்.

"இல்ல" என்பதைப் போலத் தலை நிமிர்ந்து அசைத்தான் ஜீவா.

விக்னேஷ், "அப்புறம்...?"

நான்கு பேரும் ரவுண்டாக உட்கார்ந்த பின்னர் ஜீவா மூவரையும் பார்த்து, "வியாஹா குட்டிக்கு, குட்டிபாப்பா வரப்போகுது" என்றான் ஜீவா வெட்கத்தோடும் கம்பீரத்தோடும்.

எல்லோரும் வாழ்த்துகளைத் தெரிவிக்க, "இன்று எல்லாம் என் ட்ரீட் தான்... ஸோ, நோ ஷேர்" என்று விஸ்கியை எடுத்து எல்லோருக்கும் ஊற்றினான் ஜீவா.

வழக்கம் போல தனக்கு ஒரு கிளாஸை ஊத்திக்கொண்டு உறிய ஆரம்பித்தார் மகாலிங்கம். அவருக்கு அவ்வளவு தான். அதற்கு மேல் உள்ளே போகாது. விக்ரம்தான் சில சமயம் மொடாக் குடிகாரனாகக் குடித்துவிட்டு மகாலிங்கம் வீட்டிலேயே கிடப்பான். விக்னேஷும் ஜீவாவும் அளவுதான் எப்பவும்.

என்னதான் ஜீவாவிற்கு வாழ்த்து தெரிவித்தாலும், விக்னேஷின் மனம் முழுதும் கௌசியிடமே இருந்தது. அவனுக்கும் குழந்தை ஆசை பிறந்தது. அதற்கு என்று கௌசியை கஷ்டப்படுத்தவும் மனம் வரவில்லை. ஒருவித இயலாமையுடன் உட்கார்ந்து மதுவை அருந்திக் கொண்டிருந்தவனிடம் விக்ரம் வாயை விட்டான்.

"நீ எப்போடா விக்னேஷ் குட் நியூஸ் சொல்லப்போறே?" என்று விக்ரம் விக்னேஷிடம் கேட்டான்.

"இவன் இன்னும் இரண்டு மாசத்துல சொல்லிடுவான்" என்று ஜீவா சிரிக்க,

"நீங்க வேற இன்னும் ஒரு மாசம் போதும். இரண்டு பேரு என்னம்மா பேசிக்கறாங்க... ஒருத்தர ஒருத்தர் பாத்துக்காறாங்க" என்றான் விக்ரம். (அவங்க இரண்டு பேரும் பாத்துட்டு மட்டும் தான இருக்காங்க)

"டேய்... அப்படியா, சொல்லவே இல்ல?" என்று ஜீவா கேட்க, விஸ்கி பாட்டிலை எடுத்தவன் பாதி பாட்டிலை முழுதாகக் குடித்து உள்ளே இறக்கினான்.

"டேய், டேய்! என்னடா பண்ணற?" என்று ஜீவாவும் விக்ரமும் மாறிமாறி அவனிடம் கத்தினர்.

பாதி பாட்டிலை குடித்து முடித்து கீழே வைக்க அவனுக்கு மேல் இருந்து கீழ் வரை போதை ஏறியது. கண்கள் எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. அரை ட்ரௌசர் டி-சர்ட் போட்டிருந்தவன் தள்ளாடியபடியே எழ, "எங்கடா போற?" என்று பிடிக்க வந்தான் ஜீவா.

"ஜீ... ஐ லவ் யூ டா" என்று போதையில் பேசியவன் அவனது கன்னத்தில் முத்தத்தைத் தர,

"டேய்! என்னடா பண்ணற?" என்று ஜீவா தன் கன்னத்தைத் தடவி பார்த்தபடியே கேட்டான்.

"அப்போ என் மேல உனக்கு பாசம் இல்லையா... நான் உனக்கு முத்தம் தர கூடாதா?" என்று போதையில் தள்ளாடியவன் ஜீவாவையும் பிடித்து தள்ளாட வைக்க அவனுடன் சேர்ந்து எட்டு போட்டுக் கொண்டிருந்தான் ஜீவா.

விக்ரம் அருகில் வர, "மச்சா! உனக்கும் ஐ லவ் யூ" என்று இருவரையும் இரண்டு கைகளால் இருபக்கம் பிடித்தவன் நன்றாகத் தள்ளாடினான். விக்ரமிற்கும் ஜீவாவிற்கும் சிரிப்பு வர இருவரும் ஒரே நேரத்தில், "லவ் யூ டா விக்னேஷ்" என்று பிடித்து தங்களின் நட்பையும் பாசத்தையும் அவனிடம் கொட்டினர்.

"தாத்தா!" என்று மகாலிங்கம் அய்யா அருகில் சென்றவன் அவரையும் விட்டு வைக்காமல், "ஐ லவ் யூ தாத்தா" என்று ஒரு முத்தத்தைத் தந்து அவரிடம் உட்கார, "விக்ரம், இவனை நான் கூட்டிட்டு போறேன்" என்று ஜீவா, விக்னேஷை அழைத்துக்கொண்டு சென்றான்.

வீட்டிற்கு வந்து காலிங்பெல்லை அடிக்க, அவர்கள் வருவார்கள் என்று காத்திருந்த கௌசிகா வந்து கதவைத் திறந்தாள். விக்னேஷைப் பார்த்து அதிர்ந்தவள், "கௌசி எப்பவுமே இப்படி ஆகாது... இன்னிக்குதான் இப்படி குடிச்சிட்டான்" என்று சொல்ல அவர்களுக்கு வழியை விட்டு நகர்ந்து நின்றாள் கௌசி.

உள்ளே நுழைந்த விக்னேஷ் பொறுப்பான பிள்ளையாக, "இருடா... கதவைப் பூட்டணும்" என்று கௌசிக்கு முன்னால் சென்று ஷோபாவின் பக்கத்தில் இருந்த சாவியை எடுத்தவன் கதவைப் பூட்ட வந்தான்.

ஆனால், கண்கள் வேறு மங்கலாகத் தெரிய அவனால் சாவி துவாரத்தில் சாவியை நுழைக்க முடியவில்லை. சாவி துவாரத்தில் வைக்க முடியாமல் அவன் கை அதை சுற்றியது.

சாவியை விக்னேஷிடம் இருந்து பிடுங்கியவள், "நீ இதுக்கு ஆரத்தி எடுத்தது போதும்... போ போய் தூங்கு" என்றாள் கௌசி கோபமாக.

விக்னேஷ் உள்ளே சென்றுவிட எதார்த்தமாக ஜீவா, மகாலிங்கம் அய்யா வீட்டில் நடந்ததைச் சொன்னான். கௌசிக்கு முதலில் வந்த சிரிப்பு தன்னால் நின்றது. ஜீவாவிற்கு வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தவளுக்கு அவன் ஏன் இப்படிக் குடித்தான் என்று தெரிந்துவிட்டது. தண்ணியைக் குடித்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக ஹாலிற்கு வர, ஜீவா தான் மொட்டை மாடி அறைக்கு செல்வதாக கூறிச் சென்று விட்டான்.

கௌசி அறைக்குள் நுழைய விக்னேஷ் எதையோ கப்போர்டில் தேடிக் கொண்டிருந்தான். அவனைப் பிடித்து கௌசி இழுக்க, அவன் அவளின் திடீர் செயலில் கௌசி மேல் விழ இருவரும் பெட்டில் விழுந்தனர். கௌசி மேல் விழுந்தவன் அவளின் கழுத்தில் புதைந்தான்.

அவனுக்கு எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. "நீ இப்படிலாம் கஷ்டப்படாதடா, ப்ளீஸ்... எனக்கு இப்போ எந்த ப்ராப்ளமும் இல்லை... எனக்கு ஓகே" என்று கௌசி சொல்ல விக்னேஷ் அவளிடம் இருந்து நகர்ந்து மறுபக்கம் படுத்தான்.

கௌசி அவனைப் பார்க்க, "இப்படிலாம் எனக்கு எதுவும் வேண்டாம்டி... உன்னோட அது மட்டும் எனக்கு வேண்டாம். ஐ நீட் யூ வித் யுவர் லவ்... நான் வெயிட் பண்ணறேன்" என்றவன்,

"ஐ லவ் யூ கௌசிக்" என்று மறக்காமல் அவளுக்கும் கன்னம், நெற்றி என முத்தத்தைத் தந்து அவளை அணைத்தபடியே தூங்கிவிட்டான். கௌசி அவனின் பேச்சில் அதாவது இந்த போதையிலும் அவன் பேசியது அவள் மேல் இருந்த காதலை பறைசாற்ற அவனை அணைத்தபடியே தூங்கிப் போனாள்.

காலையில் கௌசிக்கு முன்னால் கண் விழித்தவன் தன்மேல் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த கௌசியைக் காண்டான். அவள் தூக்கம் கலையாமல் அவளை விட்டு விலகி எழுந்தவன், அவளை ஒரு தரம் பார்த்துவிட்டு முகத்தைக் கழுவினான். நேற்று அடித்த சரக்கு இன்னும் இறங்காமலேதான் இருந்தது அவனுக்கு.

எப்படியும் ஜாக்கிங் போக முடியாது என்று நினைத்தவன் பேசாமல் மாடிக்குப் போய் காலைநேரத் தென்றலை அனுபவிக்கலாம் என்று சென்றான். நேற்று நடந்தது ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தது அவனிற்கு. பாட்டிலை வாயில் கவிழ்த்தது, வீட்டிற்கு வந்தது, கௌசி ரூமில் பேசியது என அனைத்தும் கண்முன் வந்து நின்றது. 'அவளை எப்படி மாத்தலாம்' என்று யோசித்தவனுக்கு விடை தெரியவில்லை.

மேல் அறையின் கதவு சத்தம் கேட்டு விக்னேஷ் திரும்ப ஜீவா நின்றிருந்தான். "என்னடா ஜாக்கிங் போகலையா நீ?" என்று கொட்டாவியை வெளிவிட்டபடி ஜீவா வந்தான்.

"இல்லைடா... நேத்து அடிச்சதே தெளியாத மாதிரி இருக்கு" என்றவனிடம்,
"என்னடா விக்கி? என்ன காலங்காத்தால இவ்வளவு யோசனை?" என்று வினவினான்.

விக்னேஷ், "ஒன்றுமில்லைடா... வேலை விஷயமாக டா"

"எதையும் யோசிக்காதே அதிகமா... வீணா குழப்பம் தான் மிஞ்சும். அது போக்குல விட்ரு" என்று ஜீவா சொல்ல, அது ஏதோ தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கே சொன்ன மாதிரி இருந்தது இவனிற்கு.

"ம்ம்" என்றவன் பேச்சை வேறு திசைக்கு மாற்றினான். இருவரும் கீழே வர படியின் கைப்பிடியை பிடித்தபடி இருவரையும் முறைத்துத் கொண்டு நின்றாள் கௌசிகா. இவளைப் பார்த்த இருவரும் தலையைக் குனிந்துகொண்டு கீழே வர, முதல்படிக்கு அருகில் நின்று அவர்களை மறைத்தவள், "ஏன்டா, உங்க இரண்டு பேருக்கும் அறிவே இல்லையா?" என்று திட்டினாள்.

"இரண்டு பேரும் நைட் வந்தீங்க சரி... வீட்டுக்கு என்னத்த எடுத்துட்டு வந்திருக்கீங்க பாருங்க?" என்று வீட்டின் முன் கூட்டிச் சென்றவள், காலணி விடும் இடத்தைக் காண்பித்தாள்.

நேற்று விக்னேஷ் வரும்போது காலி பாட்டிலையும் கையில் எடுத்திருந்தான். அதை ஜீவாவும் கவனிக்கவில்லை. வந்தவன் காலணியை விடும்போது பாட்டிலையும் அழகாக இரண்டு செருப்பிற்கு நடுவில் வைத்துவிட்டான் விக்னேஷ்.

"பாரு... இவன் செருப்புக்கு அவார்டு மாதிரி வச்சிருக்கான்" என்று திட்டியவள்,
"இந்தக் கருமத்தை எடுத்து வெளிய போடுங்கடா" என்று திட்டிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ள விக்னேஷ் பாட்டிலை எடுத்து வெளியே வீசிவிட்டு வந்தான்.

அவன் காலத்தின் மீது நம்பிக்கை வைக்கலாம் என்று முடிவு செய்ய விதியே அவர்களை சேர்க்க முன் வந்தது.
 
  • Love
Reactions: Malar